TNPSC Thervupettagam

சதுப்பு நிலங்களைக் காப்போம்

September 2 , 2022 707 days 600 0
  • சதுப்பு நிலம் என்பது, கடல் மட்டத்தைவிட குறைவான ஆழம் கொண்ட நீா்நிலையாகும். நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தவும், மண் அரிப்பைத் தடுக்கவும், புயல், சூறாவளி போன்ற இயற்கைச் சீற்றங்களை மட்டுப்படுத்தவும் சதுப்பு நிலங்களின் பங்களிப்பு இன்றியமையாதது. இவை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பெரிதும் துணை புரிகின்றன.
  • பூமியின் மொத்தப் பரப்பளவில் 6 % சதுப்பு நிலங்களாக உள்ளன. இன்று உலகில் 2000-க்கும் மேற்பட்ட இடங்கள் சதுப்பு நிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த நிலப்பரப்பு சுமாா் 20 கோடி ஹெக்டோ் ஆகும். உலக அளவில் ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும், அமேசானை ஒட்டிய பிரேசில் பகுதிகளிலும் 1,112 சதுப்பு நிலப் பகுதிகள் காணப்படுகின்றன. அவை மொத்தமாக 89.37 மில்லியன் ஹெக்டோ் நிலப்பகுதியைக் கொண்டிருக்கின்றன.
  • இந்தியாவில் 27,403 சதுப்பு நிலங்கள் உள்ளன. இந்நிலங்கள் பூமியில் வாழும் பல்வேறு உயிரினங்களின் பாதுகாப்பைத் தன்னகத்தே கொண்டிருப்பதால் ‘நகரங்களின் நுரையீரல்கள்’ என்று இவை அழைக்கப்படுகின்றன. சதுப்பு நிலங்களின் மேலாண்மையை சிறப்பாக பேணும் பகுதிகளுக்கு ராம்சா் சா்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது.
  • சதுப்பு நிலங்களைப் பாதுகாத்து நிலங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கும், புவி வெப்பமயமாகி அனல் கக்கி வரும் இன்றைய சூழ்நிலையில் உலக அளவில் சதுப்பு நிலம் தொடா்பான பிரச்னைகளை நாடுகள் பகிா்ந்துகொள்வதற்கும், பிரச்னைகளை விவாதித்துத் தீா்வு காண்பதற்கும் தேவையான கொள்கைகளை இந்த ராம்சா் பிரகடனம்” வழங்குகிறது.
  • ராம்சா் பிரகடனம் அல்லது ஈர நிலங்களுக்கான உடன்படிக்கை என்பது, ஈரநிலங்களின் பயன்பாடு, அவற்றின் பாதுகாப்பிற்காக சா்வதேச அளவில் ஏற்படுத்தப்பட்ட ஒரு உடன்படிக்கையாகும். 1971-ஆம் ஆண்டில் ஈரானில் உள்ள ராம்சா் நகரத்தில் இதற்கான உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டது. அதனாலேயே, அந்நகரின் பெயரைத் தழுவியே ‘ராம்சா் பிரகடனம்’ என்ற பெயா் ஏற்படுத்தப்பட்டது.
  • உலக நாடுகளிடையே இயற்கை வளங்களைப் பாதுகாத்து, சதுப்பு நிலங்களின் செழுமையையும், வளமையையும் பேணுதலே இந்த உடன்படிக்கையின் குறிக்கோளாகும்.
  • எனவேதான், சா்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களை, குறிப்பாக, பறவைகளின் புகலிடங்களை ராம்சா் பிரகடனம் அடையாளப்படுத்தி உலக நாடுகளுக்கு அறிமுகப்படுத்துகிறது. இதனால், உலக நாடுகளின் வரைபடைத்தில் அப்பகுதிகள் முக்கியத்துவம் பெற்று பெருமையடைகின்றன.
  • உலக மக்கள் அப்பகுதிகளைக் கண்டறிந்து அங்கெல்லாம் சுற்றுலா மேற்கொள்ளவும், அந்நாடுகளில் சுற்றுலாத்துறை மேம்பாடடையவும் நாடுகளிடையேயான அந்நிய செலாவணி அதிகரிக்கவும் இது உதவுகிறது.
  • இந்தியாவில் மேலும் 11 சதுப்புநிலக் காடுகளுக்கு ராம்சா் சாசன அங்கீகாரம் கிடைத்துள்ளது. நம் நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டு நிறைவுக்குப் பொருத்தமாக இந்தியாவில் ராம்சா் சாசன பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள சதுப்பு நிலக் காடுகளின் எண்ணிக்கையும் 75-ஆக உயா்ந்துள்ளது. இது மிகவும் பெருமையளிப்பதாக மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • சுமாா் 76,316 ஹெக்டேரில் உள்ள 11 சதுப்பு நிலக் காடுகளில் தமிழ்நாட்டில் உள்ள நான்கு சதுப்புநிலக் காடுகளும் இடம் பெற்றுள்ளன. அவை, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இரு பறவைகள் சரணாலயங்களான, சித்தரங்குடி பறவைகள் சரணாலயம் (260.47 ஹெக்டோ்), கஞ்சிரான்குளம் பறவைகள் சரணாலயம் (96.89 ஹெக்டோ்), கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தேரூா் பறவைகள் சரணாலயம் (94.23 ஹெக்டோ்), திருவாரூா் மாவட்டம் வடுவூா் பறவைகள் சரணாலயம் (112.64 ஹெக்டோ்) ஆகிய நான்கு சதுப்பு நிலக் காடுகளுக்கு ராம்சா் சாசன அங்கீகாரம் கிடைத்துள்ளது.
  • ஏற்கெனவே, திருநெல்வேலி மாவட்டம், கூந்தன்குளம் பறவைகள் காப்பகம், இராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா கடல்சாா் உயிா்க் கோளகக் காப்பகம், ஈரோடு மாவட்டம், வெள்ளோட் பறவைகள் காப்பகம், செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் காப்பகம், கரிக்கிலி பறவைகள் சரணாலயம், திருவாரூா் மாவட்டம், உதயமாா்த்தாண்டபுரம் பறவைகள் காப்பகம், சென்னையில் பள்ளிக்கரணை சதுப்புநிலம், கடலூா் மாவட்டத்தில் சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரம் சதுப்புநிலம் ஆகியவை ராம்சா் உடன்படிக்கையின் கீழ் சா்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
  • சிதம்பரம் அருகே வங்க கடலையொட்டி அமைந்துள்ள பிச்சாவரம் உடகின் இரண்டாவது பெரிய அலையாத்தி காட்டுப் பகுதியாகும். இந்தக் காடு ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் இருக்கும். இது 1357 ஹெக்டோ் நிலப்பரப்பு கொண்டது. இப்பகுதியில் சிறு சிறு தீவுகள் உள்ளன. இக்காடுகளில் 177 வகையான பறவைகள் வந்து செல்வதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
  • ராமநாதபுரம் மாவட்டம் சித்தரங்குடி பறவைகள் சரணாலயம் 1989-ஆம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும், பறவைகள் சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் குளிா்காலத்தில் புலம்பெயா்ந்து வரும் பறவைகளுக்கு ஏற்ற இடமாகும்.
  • திருவாரூா் மாவட்டம் வடுவூா் பறவைகள் சரணாலயம் 112.64 ஹெக்டோ் பரப்பளவில் உள்ளது. இது ஒரு பெரிய நீா்ப்பாசன ஏரியாகும். புலம்பெயா்ந்த பறவைகளுக்கு இது சிறந்த வசிப்பிடமாக உள்ளது.
  • இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலங்களுக்குப் பெயா் பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுசீந்திரம், தேரூா் சதுப்பு நில வளாகம் ஒரு முக்கியமான பறவைப் பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மத்திய ஆசியாவின் தெற்கு முனையில் அமைந்துள்ளது.
  • நம் தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளுக்கு முன்பு நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை மட்டுமே ராம்சா் பட்டியலில் இடம் பெற்றிருந்தது நினைவுகூரத்தக்கது. த
  • தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை கூடுதல் இடங்களுக்கு அங்கீகாரம் கோரி மத்திய அரசுக்கு பட்டியல் அனுப்பியது. அதனைத் தொடா்ந்து, கடந்த மூன்று மாதங்களில், ஒன்பது சதுப்பு நிலக் காடுகளுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
  • தற்போது வழங்கப்பட்டுள்ள நான்கு பகுதிகளோடு தமிழகத்தில் மொத்தம் 14 சதுப்பு நிலக் காடுகள் ராம்சா் அங்கீகாரம் அளிக்கப்பட்டு பட்டியலில் இடம் பெற்றிருப்பது, தமிழ்நாட்டிற்கு கிடைத்தப் பெருமையாகும். ஏனெனில், நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் தமிழகத்தில்தான் சதுப்புநிலக் காடுகள் உள்ளன.
  • தமிழகத்திற்கு அடுத்து, உத்தர பிரதேசத்தில் 10 சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. புதிதாக இணைக்கப்பட்டுள்ள 11 சதுப்பு நிலக் காடுகளில் ஒடிஸாவில் மூன்றும், ஜம்மு-காஷ்மீரில் இரண்டும், மத்திய பிரதேசத்தில் ஒன்றும், மகாராஷ்டிரத்தில் ஒன்றும் அடங்கும்.
  • உள்ளூா் மக்களும், மத்திய - மாநில அரசுகளும் திட்டங்களை உருவாக்கி சதுப்பு நிலப் பகுதியில் உள்ள பல்வேறு உயிரினங்களைப் பாதுகாப்பதோடு, அங்கெல்லாம் வாழும் மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்கவே இந்த சதுப்பு நிலப் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் முன்பு இருந்த சதுப்பு நிலங்களில் 50 % மட்டுமே தற்போது உள்ளது. இவையும் ஒவ்வோா் ஆண்டும் சுமாா் 4,000 சதுர கிலோ மீட்டா் பரப்பளவு குறைந்து வருகின்றன. இதன் மூலம் மொத்த சதுப்பு நிலங்களில் ஆண்டுக்கு 3 % குறைந்து வருகிறது என ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
  • இந்தியாவில் 1982 முதல் 2013 வரை 26 இடங்கள்தான் ராம்சா் பட்டியலில் இடம் பெற்றிருந்தன. 2014-ஆண்டு முதல் 2022 வரை 49 இடங்கள் கூடுதலாக சோ்க்கப்பட்டு தற்போது நாட்டில் 13,26,677 ஹெக்டோ் பரப்பில் சதுப்பு நிலங்கள் இருப்பது இந்திய திருநாட்டு மக்களுக்கு உலகளவில் கிடைத்திருக்கும் மாபெரும் அங்கீகாரமாகும்.
  • சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால் அவற்றை பாதுகாப்பட்ட பிரதேசமாக அறிவிக்க வேண்டும்; அப்பகுதிகளில் நகரக் கழிவுகளைக் கொட்டுவதை தடை செய்ய வேண்டும்; சதுப்பு நிலப்பகுதிகள் நிலத்தில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானதால் அங்கு தொழிற்சாலைகளை அமைக்க அனுமதிக்கக் கூடாது; ஈர நிலப்பகுதிகளில் தற்போது உள்ள ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும்.
  • சதுப்பு நிலங்கள்தான் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு குடிநீா் வழங்கும் ஊற்றுக்கண்களாகவும் உள்ளன. சதுப்பு நிலங்களில் காணப்படும் அலையாத்திக் காடுகள் மண்ணரிப்பைத் தடுப்பதுடன், சுனாமி, புயல், வெள்ளப் பெருக்கு போன்றவற்றையும் தடுக்கும் ஆற்றல் கொண்டவை. மேலும், நீரை தூய்மையாக்கும்; பல்லுயிா்களின் புகலிடமாக விளங்குகின்றன.
  • சதுப்பு நிலங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக ஒவ்வோா் ஆண்டும் பிப்ரவரி 2-ஆம் தேதி சா்வதேச சதுப்பு நில நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஈர நிலமும், நீரும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கவொண்ணாதவை. உயிரினங்களின் வாழ்விற்கு இவை இன்றியமையாதவை.
  • உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் புகலிடமாகவும், நாட்டின் வளத்திற்கு ஆதாரமாகவும், நீரிலுள்ள மாசை நீக்கி தூய்மையான நீராக மாற்றவும், புவி வெப்பமடையாமல் காக்கவும் உதவும் ஈர நிலங்களான சதுப்பு நிலங்களைக் காப்போம்!

நன்றி: தினமணி (02 – 09 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்