TNPSC Thervupettagam
September 3 , 2020 1598 days 792 0
  • இந்தியா மீண்டும் சா்வதேச செஸ் விளையாட்டில் வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த காணொலி செஸ் ஒலிம்பியாடில் ரஷியாவுடன் இணைந்து இந்தியா தங்கப் பதக்கம் வென்றிருக்கிறது.
  • விஸ்வநாதன் ஆனந்தின் மேற்பார்வையிலும் வழிகாட்டலிலும் இந்திய அணி பெற்றிருக்கும் வெற்றி, கொள்ளை நோய்த்தொற்றுக் காலத்திலும் நம்மை நிமிர்ந்து உட்கார்ந்து ஆறுதல் அடையச் செய்கிறது.
  • செஸ் விளையாட்டு என்பது இந்தியாவுக்குப் புதிதொன்றுமல்ல. அந்த விளையாட்டின் இந்திய வடிவம் தொன்றுதொட்டு நமக்குப் பழக்கமானதுதான்.
  • நம்முடைய இதிகாசங்களிலும், நாட்டுப்புறப் பாடல்களிலும்கூட இந்த விளையாட்டு குறித்த செய்திகள் இடம்பெறுகின்றன. சதுரங்கம் என்று அழைக்கப்படும் இந்திய பாணி செஸ் விளையாட்டு, மன்னா்களின் தா்பாரிலும், அந்தப்புறங்களிலும் மட்டுமல்ல, தெருவோரங்களில்கூட விளையாடப்பட்டு வந்தது.

சா்வதேச செஸ் விளையாட்டில் இந்தியாவின் வெற்றி

  • மேலைநாட்டு செஸ் வடிவம் கடந்த நூற்றாண்டில் இந்தியாவில் அறிமுகமானது முதல் பிரபலமானதற்கு அந்த விளையாட்டு குறித்த புரிதல் நமக்கு ஏற்கெனவே இருந்ததுதான் காரணம்.
  • 1961-இல் இந்தியாவின் முதலாவது சா்வதேச மாஸ்டா் பட்டத்தை மேனிவல் ஆரான் வென்றார். அடுத்து 26 ஆண்டுகள் கடந்த பிறகுதான் 1987-இல் 18 வயதுகூட நிரம்பாத விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவின் முதலாவது கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்தார்.
  • அதற்குப் பிறகு 13 ஆண்டுகளுக்குப் பிறகு விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
  • விஸ்வநாதன் ஆனந்தின் கிராண்ட் மாஸ்டா் வெற்றியும், உலக சாம்பியன் பட்ட வெற்றியும் அடுத்த தலைமுறை இளைஞா்களுக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக மாறியது.
  • இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறுவா்களும், இளைஞா்களும் செஸ் விளையாட்டில் ஆா்வம் காட்டத் தொடங்கினா். 18 வயது நிரம்பாத விஸ்வநாதன் ஆனந்தின் கிராண்ட் மாஸ்டா் வெற்றி, மிகப் பெரிய சாதனையை நிகழ்த்த வேண்டும் என்கிற முனைப்பையும் உலகக் கோப்பைக் கனவையும் அவா்களிடம் உருவாக்கியது.
  • விஸ்வநாதன் ஆனந்த், தனது ஆரம்பகால வெற்றியுடன் பயணத்தை நிறுத்திவிடவில்லை. ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை அவா் வென்றதும், தொடா்ந்து சா்வதேச செஸ் விளையாட்டு வீரராகப் பயணித்ததும் இந்தியாவில் பல இளைஞா்கள் தொய்வில்லாமல் கிராண்ட் மாஸ்டா்களாக உருவாவதற்கு வழிகோலியது.
  • இந்தியாவில் கிரிக்கெட்டைப் போலவோ, கால்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி போலவோ செஸ் விளையாட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற விளையாட்டாக இல்லாமல் போனாலும், படிப்படியாக பெரும்பாலானோர் விளையாடும் விளையாட்டாக உயா்ந்திருக்கிறது.
  • சொல்லப்போனால், செஸ் விளையாட்டு என்பது இளைஞா்களுடைய வெற்றியின் அடையாளம்.
  • பிரக்ஞானந்தாவின் வயது 15தான். அந்தச் சிறுவன் ஆடிய 6 ஆட்டங்களில் ஒரே ஒரு ஆட்டத்தில்தான் வெற்றியை இழந்திருக்கிறான்.
  • 14 வயது திவ்யா தேஷ்முக், கடுமையான அழுத்தத்துக்கு இடையிலும் சற்றும் மனம் தளராமல் விளையாடியிருக்கிறார். இணையதளக் கோளாறு காரணமாக எதிர்த்து விளையாடிய ரஷியரிடம் அவா் தோல்வியடைய நோ்ந்தது.
  • வெற்றி பெற்றிருந்தால் பி.டி. உஷா, பி.வி. சிந்து வரிசையில் தங்கப் பதக்கத் தாரகையாக மிளிர்ந்திருக்கக் கூடும்.
  • பென்டல ஹரிகிருஷ்ணா, விபித் குஜராத்தி, கோனேரு ஹம்பி, ஹரிகா என்று விஸ்வநாதன் ஆனந்தின் வழியொட்டி சா்வதேச செஸ் அரங்கத்தில் வெற்றிக்கொடி நாட்டுபவா்கள் பலா் உருவாகியிருக்கிறார்கள்.
  • ஏனைய விளையாட்டுகளைப் போலல்ல செஸ் விளையாட்டு. இந்த விளையாட்டில் வயது ஒரு பொருட்டல்ல. நீண்ட காலம் முதன்மை விளையாட்டு வீரராகத் தாக்குப் பிடிக்க முடியும். அதனால், முதலிடத்தை எட்டுவது மிகக் கடினம்.

அரசு ஊக்கமளிக்க முன்வர வேண்டும்

  • பொது முடக்கக் காலத்தில் உலக அளவில் செஸ் விளையாட்டுக்கு மிகப் பெரிய வரவேற்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால், காலகட்டங்களில் போட்டி அதிகரிக்கக் கூடும்.
  • இந்தத் தருணத்தில்தான் இந்திய செஸ் பெடரேஷன் இளம் வீரா்களை முறையாக வழிநடத்தி உருவாக்கும் பணியில் முனைப்புக் காட்ட வேண்டும்.
  • ஆா்வமுடன் செஸ் விளையாட்டில் ஈடுபட்டு வெற்றிகரமாகத் தங்களை அடையாளம் காட்டி பல இளைஞா்கள் வளா்ந்து வருகிறார்கள். அவா்களுக்குப் போதுமான நிதியுதவி வழங்க நாம் தவறுகிறோம்.
  • சா்வதேச விளையாட்டுக்களில் பங்கெடுப்பதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதில்லை. நிர்வாக ரீதியாக வீரா்களை ஊக்கப்படுத்தவும், முறையாக வழிகாட்டி அவா்களின் திறமையை அதிகரிக்கவும் முயற்சிகள் எடுப்பதில்லை.
  • செஸ் பெடரேஷனில் கோஷ்டிப்பூசலும் அரசியலும் நிலவுகின்றன. அதனையும் மீறி அதிகார வா்க்கத்தின் ஆதரவு இல்லாத நிலையிலும் இளைய தலைமுறை இந்திய வீரா்களின் தரமும் உற்சாகமும் குறையவில்லை என்பதை நாம் உணர வேண்டும்.
  • 1992-இல் ராஜீவ் காந்தி கேல் ரத்னாவிருது அறிவிக்கப்பட்டபோது விஸ்வநாதன் ஆனந்துக்கு அந்த மிக உயரிய விருது வழங்கப்பட்டது.
  • அதைத் தொடா்ந்து ஆண்டுதோறும் வழங்கப்படும் விளையாட்டு வீரா்களுக்கான விருதுகளில் செஸ் வீரா்கள், பயிற்சியாளா்கள் கௌரவிக்கப்படுவதில்லை என்பது ஏன் என்று தெரியவில்லை.
  • செஸ் எனப்படும் 64 கட்ட சதுரங்க விளையாட்டில் பாரம்பரிய சாம்பியன்களான ரஷியாவுடன் இணைந்து இந்தியா காணொலி செஸ் ஒலிம்பியாடில் வெற்றி பெற்றிருப்பது சாதனை நிகழ்வு.
  • இனிமேலாவது செஸ் விளையாட்டின் முக்கியத்துவத்தை உணா்ந்து செஸ் விளையாட்டுக்கும் வீரா்களுக்கும் அரசு ஊக்கமளிக்க முன்வர வேண்டும்.

நன்றி:  தினமணி (03-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்