TNPSC Thervupettagam

சத்தியத்தின் வடிவம் கைராட்டை

November 2 , 2023 437 days 296 0
  • மகாத்மா காந்தியின் மறைவுக்குப் பிறகு கைராட்டை சுழல்வது நின்றுவிட்டது. காந்தி அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் பொருளாக கைராட்டை மாறிவிட்டது.
  • எல்லாத் துறைகளிலும் சுதேசியமே இருக்க வேண்டும் என்கிற காந்தியின் வாழ்க்கைத் தத்துவத்தை நிறைவேற்றும் உபகரணங்களாகக் கதரும் கைராட்டினமும் திகழ்ந்தன. இயந்திர நாகரிகத்தை எதிர்த்து நிற்கக் கைராட்டை சிறந்த ஆயுதமாக இருந்தது.
  • இந்தியாவின் லட்சக்கணக்கான கிராம மக்கள் ஏழ்மையில் இருந்தனர். இவர்களுக்கு வேலையில்லாத ஆறு மாத காலத்துக்குச் சுயதொழில் மூலம் சம்பாதிக்க வகை செய்யக்கூடியது கைராட்டை ஒன்றுதான் என்று உணர்ந்தார் காந்தி. ஆகவே, கைராட்டையை ‘காமதேனு’ என்றே குறிப்பிட்டுவந்தார்.
  • 1908ஆம் ஆண்டில் ‘இந்திய சுயராஜ்யம்’ என்கிற நூலில் இந்தியாவின் வறுமைப் பிணிக்கு ராட்டை ஒன்றுதான் மருந்து என்று காந்தி எழுதினார். ஆனால், அப்போது அவர் ராட்டினத்தைப் பார்த்ததுகூட இல்லை.

கண்டார் கைராட்டையை

  • காந்தி பீஜப்பூரில் ராட்டினத்தைக் கண்டறிந்தார். அவ்வூரில் பல வீடுகளில் ராட்டினங்கள் பரண்களில் போடப்பட்டிருந்தன. பஞ்சுத்திரி கொடுத்தால் நூல் நூற்றுத் தருவதாக அந்த ஊரிலிருந்த பெண்கள் தெரிவித்தனர். ஆசிரமத்திலேயே பஞ்சுத்திரி செய்து, பீஜப்பூரில் நெசவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. பீஜப்பூர் கதர் பொது மக்கள் மத்தியில் பவனி வரத் தொடங்கியது.
  • சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையிலிருந்து சர்க்கா என்கிற புதிய படைப்புகள் கதர் நூலுக்காகக் கண்டறியப்பட்டன. சபர்மதி ஆசிரமத்தில் முதல் கதர்த்துணி நெய்யப்பட்டு காந்தியிடம் கொடுக்கப்பட்டது. அன்றிலிருந்து கதர் தவிர வேறு துணி ஏதும் அணியும் அவசியம் காந்திக்கு இல்லாது போயிற்று.

கைராட்டை இசைக்கருவி

  • செய்தியாளர் கூட்ட மொன்றில், “இசையில் ஏன் உங்களுக்கு நாட்டம் இல்லை?” என்று கேட்டதற்கு காந்தி, “யார் சொன்னது? கைராட்டை சுழலும்போது கேட்கும் ஓசை எனக்குப் பிடித்த இசை!” என்றார்.
  • எங்கள் வீட்டிலும் கைராட்டை இசை கேட்ட காலம் இருந்தது. அப்பா இருந்தவரை அதைப் பராமரித்தும் பயன்படுத்தியும் வந்தார். அவர் மறைவுக்குப்பின் ஒரு மூலையில் தூசிபடிந்து இருந்தது. பிறகு காணாமல் போய்விட்டது.
  • அப்பாவுக்குக் கோபம் வந்துவிட்டால், கைராட்டையில் நூல் நூற்க உட்கார்ந்து விடுவார். அவர் கோபத்தின் தன்மைக்கு ஏற்ப ராட்டையின் பெரிய தட்டும் சிறிய தட்டும் வேகமாகச் சுழலும். பஞ்சிலிருந்து ‘விர்… விர்…’ என்று நூல் வெளிப்படும். பின் ஒரே பாய்ச்சலில் கீழிறங்கி தக்ளியில் சுற்றிக் கொண்டு பதுங்கிவிடும். தன்னுடைய கோபத்தை எல்லாம் அப்படியே சிட்டைகளாக்கி வைத்துவிடுவார்.
  • தெற்கு வீதியில் இருந்த காதிபவனில் அவற்றை எல்லாம் கொண்டு போய்க் கொடுத்து, கதர்ச்சட்டை வாங்கிப் போட்டுக்கொள்வார்.
  • ராட்டை சுற்றும்போது அதிலிருந்து தேங்காய் எண்ணெய்யும் பஞ்சும் கலந்த ஒரு வாசனை வரும். மிகவும் சுத்தமாக நம்மை உணரவைக்கும் வாசனை. சத்தியத்துக்கு ஒரு வாசனை உண்டென்றால் அதுவே அந்த வாசனை. சத்தியத்துக்கு ஒரு வடிவம் உண்டென்றால் அதுவே கைராட்டை.
  • ராட்டையில் நூல் நூற்க அப்படியே உட்கார்ந்துவிடக் கூடாது. முதலில் கைகால்களைச் சுத்தம் செய்து கொண்டு உட்கார வேண்டும். அப்புறம் ராட்டையை அதற்காக உள்ள சிறு துணியால் துடைக்க வேண்டும். ராட்டை சுழலும் பகுதியில் இரண்டு சொட்டுத் தேங்காய் எண்ணெய் விடவேண்டும். அவசரமின்றிப் பஞ்சுத் திரியை இழுத்து, கையைப் பின்னோக்கிக் கொண்டுசெல்ல வேண்டும். நூல் சீராக வந்து தக்ளியில் சுற்றும்.
  • அப்பாவுக்குக் கோபம் வந்தால் ராட்டையைச் சுற்ற உட்கார்ந்துவிடுவார்.
  • “கோபம் வந்தால் ஏன் நூல் நூற்க உட்கார்ந்துடறீங்க?” என்று கேட்டேன்.
  • “நூல் நூற்றால் கோபம் போகும். மனசு ஒருமுகப்படும். இதுதான் காந்தி சொன்ன கைராட்டைத் தத்துவம்” என்றார்.
  • அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை வந்துவிட்டால், “சண்டை வேண்டாம்ப்பா” என்று கைராட்டையை அவருக்கு முன்னால் நாங்களே கொண்டுவந்து வைப்போம்.
  • அப்பா சிரித்துவிடுவார்.
  • அப்பாவிடம் காந்தி கதை கேட்போம். அவர் பலமுறை சொன்னதுதான். ஆனால், எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது.
  • “ரயிலில் இருந்து காந்தி வெளியே வந்து படிக்கட்டில் நின்றார். அவர் உடம்பின் மீது சூரியக் கதிர்கள் பட்டுத் தங்கம்போல் ஜொலித்தார். கூட்டம் முண்டியடித்தது. கைராட்டையில் நூற்ற சிட்டைகளுடன் வந்தவர்கள் காந்தியை நெருங்க அனுமதித்தார்கள். நான் கையோடு கொண்டுபோன கதர்சிட்டைக் கொடுத்து வணங்கினேன். புன்னகை செய்தார். அந்தப் புன்னகையின் மீது துப்பாக்கியால் சுட கோட்சேக்கு எப்படி மனசு வந்ததோ?”
  • அப்பாவின் கைராட்டையில் இருந்து எழுந்த மெல்லிய ரீங்காரம் ராட்டையின் அழுகைபோல் இருந்தது.

களியாம்பூண்டியும் கைராட்டையும்

  • உத்திரமேரூர் அருகே காந்திய நெறிகளின்படி நடத்தப்படும் ‘சைல்டு ஹெவன்’ என்கிற குழந்தைகள் காப்பகம் இருக்கிறது. அண்மையில் இந்தக் காப்பகத்துக்குப் பறை இசையை அறிமுகப்படுத்த வந்த எடிட்டர் பி. லெனின், தன் நண்பர் டி.கே. சந்திரனையும் அழைத்து வந்தார்.
  • மதுரையில் பல ஆண்டுகளுக்கு முன், ‘கஸ்தூரிபா காதி வஸ்திராலயம்’ என்கிற சிறிய கதர்க் கடையைத் தொடங்கிய டி.கே. சந்திரனின் விடாமுயற்சியும் காந்தியப்பற்றும் தன்னம்பிக்கையும் இன்று ‘சென்னை சில்க்ஸ்’ நிறுவனமாக உயர்ந்திருக்கிறது. களியாம்பூண்டி குழந்தைகள் காப்பகத்துக்குக் கைராட்டைகள் வழங்கவிருக்கும் டி.கே. சந்திரன், தாமே கைராட்டினத்தில் நூல் நூற்கக் கற்றுத் தரப்போவதாகவும் தெரிவித்தார்.
  • விரைவில் கைராட்டைகள் வரவிருக்கின்றன. பறை இசை மட்டுமன்றி கைராட்டை இசையும் இனி களியாம்பூண்டியில் ஒலிக்கும். கைராட்டைகள் சுழலட்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 11 - 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்