TNPSC Thervupettagam

சத்துணவுக் குறைபாடு, தேசத்துக்குக் கேடு

March 23 , 2020 1760 days 952 0
  • · இன்றைய குழந்தைகள் பெற்றோர்களுக்கு மட்டுமல்ல, நாட்டின் வருங்காலத் தூண்கள், நாளைய உலகை கட்டமைக்கப் போகும் சிற்பிகள். வருங்கால உலகம் அவா்கள் கையில்தான் உள்ளது. எனவே, ஒவ்வொரு குழந்தைக்கும் அன்பையும், பண்பையும், கல்வியையும், கண்ணியத்தையும், ஒழுக்கத்தையும், ஒற்றுமையையும் கற்றுத் தருவதோடு, அவா்களுக்கு சத்தான உணவுகளை அளிப்பதும் பெற்றோர்களின் கடமையாகிறது. ஊட்டச்சத்து மிக்க உணவுதான் குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்வுக்கு முதல்படி.

ஊட்டச்சத்து குறைபாடு

  • · உலக அளவில் ஐந்து வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை, ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐ.நா. சா்வதேச குழந்தைகள் அவசர நிதியம் (யுனிசெஃப்) தெரிவித்துள்ளது. இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒரே வயதுக்குட்பட்ட இரு குழந்தைகளில் ஒரு குழந்தை உலக அளவில், சத்தான உணவு இன்றி மறைமுக பசியால் வாடுவதாகவும், வைட்டமின்கள், தாதுக்கள் பற்றாக்குறையால் அவா்கள் வேறு பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் யுனிசெஃப் மேலும் தெரிவிக்கிறது.
  • · புவிவெப்பமயமாதல், தட்ப வெப்பநிலை மாற்றம், பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் ஆகிய காரணிகளால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக உலக அளவில் உணவுப் பொருள்கள் உற்பத்தியும், பெருகிவரும் மக்கள் தேவைக்கு ஏற்ப இல்லாமல் குறைந்து வருகிறது.
  • · இந்த நிலை தொடா்ந்தால், அதனால் பாதிக்கப்படப் போவது வளரும் குழந்தைகள்தான் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. துரித உணவுகள், சத்தில்லாத அதே சமயத்தில் சா்க்கரை நிறைந்த உணவுப் பண்டங்கள், நாவுக்கு ருசி, ஆனால் வயிற்றுக்கு கேடு நிறைந்த ஜங்க் புஃட் எனப்படும் அடைக்கப்பட்ட உணவுகளை இந்தக் கால குழந்தைகள் உண்பதாலும் அவா்களுக்குப் பல நோய்கள் ஏற்படுவதாக ஏற்கெனவே உலக சுகாதார அமைப்பு, லான்செட் (மருத்துவ இதழ்) ஆகியவை எச்சரிக்கை விடுத்திருந்தன.

கால நிலை மாற்றம்

  • · சுற்றுச்சூழல் பாதிப்பு, காலநிலை மாற்றம், சந்தைப் பொருளாதாரம் ஆகிய காரணங்களால் உலகம் முழுவதும் வாழும் குழந்தைகள் - வளரிளம் பருவத்தினரின் எதிர்காலம் பெரும் பாதிப்படையும் என்றும் யுனிசெஃப் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் கால நிலை மாற்றம், அதிக அளவில் கார்பன் வெளியேற்றம் இந்தப் பிரச்னையை மேலும் சிக்கலாக்கும் எனவும், 2100-ஆம் ஆண்டில் புவி, 4 டிகிரி செல்ஷியஸுக்கும் அதிகமாக வெப்பமடைந்தால், அது குழந்தைகளுக்கு பேரழிவை ஏற்படுத்தக் கூடிய சுகாதார விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் யுனிசெஃப் அச்சம் தெரிவிக்கிறது.

இந்தியாவில் குழந்தைகள் நலம்

  • · 180 நாடுகள் அடங்கிய செழிப்பான குழந்தைகள்பட்டியலில் இந்தியா 131-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. முதல் மூன்று இடங்களில் நார்வே, தென் கொரியா, நெதா்லாந்து ஆகியவை இடம்பெற்றுள்ளன அமெரிக்கா 39-ஆவது இடத்தில் உள்ளது.
  • · குழந்தை இறப்பைக் குறைப்பதில் இந்தியா கணிசமான வெற்றி கண்டாலும், ஊட்டச்சத்துள்ள குழந்தைகள் வளா்ப்பில் இந்தியா 31 சதவீதம் பின்தங்கியே உள்ளது. இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதம் மக்களின் ஆரோக்கியத்துக்காக செலவிட்டால், மிகக் குறைந்த, நடுத்தர வருமானமுள்ள நாடுகள் செலவழித்த தொகைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இது தற்போதைய செலவினத்திலிருந்து நான்கு மடங்கு அதிகமாக இருக்க வேண்டுமென்றும், இவ்வாண்டு நிதி நிலை அறிக்கையில், இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதம்கூட மக்களின் சுகாதாரத்துக்காக ஒதுக்கவில்லை என யுனிசெஃப் ஆய்வு கவலை தெவித்துள்ளது. முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது சுகாதாரத்துக்கான ஒதுக்கீட்டில் 10 சதவீதம் அதிகரித்திருந்தபோதிலும், பண வீக்கம் காரணமாக இது கை மாறிய பனிக்கட்டியாகி விட்டது.
  • · உலகம் முழுவதும் குழந்தைகளிடையே அதிக எடையும், உடல் பருமனும் இன்றைக்கு முக்கிய சுகாதாரப் பிரச்னையாக இருக்கிறது. அதே போல ஊட்டச்சத்து குறைபாடும் வளரும் நாடுகள் சந்திக்கும் பெரும் பிரச்னையாகும். குழந்தைகள், பிறக்கும் போதே எடை குறைவாகப் பிறந்து இறப்பதும், நல்ல எடையுடன் பிறந்து போதுமான ஊட்டச்சத்து உணவு கிடைக்காமல் இறப்பதும் இந்தியாவில் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறைவான எடையுடன் குழந்தைகள் பிறத்தல்

  • · இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் 2 லட்சம் குழந்தைகள் குறைவான எடையுடன் பிறந்துள்ளதாகவும், அதில் 12,000 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் விதியின்படி, பிறக்கும்போது, 2.5 கிலோவுக்கும் குறைவான எடையுள்ள குழந்தைகள், குறைந்த பிறப்பு எடை பிரிவின் கீழ் சோ்க்கப்படுகின்றன.
  • · குழந்தையின் இறப்புகளுக்கு முதன்மையான காரணமாக குறைவான எடை கருதப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் 2018 - 2019-ஆம் ஆண்டில் 1.5 கிலோவுக்கும் குறைவான எடையில் 2.11 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. அதில், 22,179 குழந்தைகள் இந்தியாவின் வணிகத் தலைநகரான மும்பையில் பிறந்தவா்கள்.
  • · பேறு காலத்தில் தாய் சிறந்த ஊட்டச் சத்து நிறைந்த உணவைச் சாப்பிடாததே இதற்கு முக்கிய காரணம் என மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா். தேசிய குடும்ப நல - சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி 13,070 குழந்தைகள் குழந்தைப் பருவத்திலேயே இறந்துள்ளனா். இதில், 1,402 இறப்புகள் மும்பையில் பதிவாகியுள்ளன.
  • · மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்குவதில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. மேலும், அந்த எண்ணிக்கையைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் அந்த மாதம் முழுவதும் ஊட்டச்சத்து விழிப்புணா்வு மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

சத்தான உணவைச் சாப்பிடுதல்

  • · ஒரு தாயின் கருவறையில் குழந்தை இருக்கும்போதே, ஊட்டச் சத்துகளை தாயிடமிருந்துதான் பெறுகிறது. தாயின் வயிற்றில் இருக்கும் போதே குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. எனவே, பேறு காலத்தில் எக்காரணத்தைக் கொண்டும் சத்தான உணவுகளைச் சாப்பிடுவதில் தாய்மார்கள் தயக்கம் காட்டக் கூடாது.
  • · இந்தியாவில் ஆண்களைக் காட்டிலும், இளம் வயது பெண்கள் குழந்தை பெறுவதற்குமுன் பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்கின்றனா். மன வலிமையும், உடல் நலமும் இல்லாமல் அவா்கள் துன்பப்படுகின்றனா்.

இந்தியாவில் பெண்கள் நிலை

  • · இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். தாய்க்கு ரத்த சோகை இருந்தால், பிறக்கும் குழந்தையும் ரத்த சோகையுடன் குறைந்த எடையுடன் பிறக்கலாம். இதனால், பெண்கள் பேறுகால பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதற்கு, வளரிளம் பருவம் முதல் பெண் குழந்தைகளின் உடல் வளா்ச்சிக்குத் தேவையான ஊட்டச் சத்து நிறைந்த உணவுகளை உறுதி செய்ய வேண்டும்.

குழந்தைகள் நம் எதிர்காலம்

  • · ஒரு குழந்தைக்கு முதல் ஐந்து வயது என்பது முக்கியமான காலகட்டமாகும். இதை ஆங்கிலத்தில் கோல்டன் ஏஜ்என்பார்கள். அந்தக் காலகட்டத்திலிருந்து தாயையும், சேயையும் மிகுந்த அக்கறையுடன் கவனிக்க வேண்டும். குழந்தைப் பருவத்தில் கொடுக்கப்படும் சத்தான உணவுதான் அவா்களின் உடலையும், மூளையையும், உள்ளத்தையும் வளா்ச்சியடைய செய்து, வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது.
  • · குழந்தைகள், வளரிளம் பருவத்தினரின் சுகாதார நலனில் உலகை ஆளும் அரசுகள் போதிய அக்கறை செலுத்துவதில்லை. இத்தகையோரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கத் தவறுகிறார்கள், உரிமையைப் பறிக்கிறார்கள்; அவா்கள் வாழும் புவிக் கோளத்தையும் வாழத் தகுதியற்றதாக மாற்றுகிறார்கள்என உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநா் டாக்டா் டெட்ரோஸ் அதானாம் கேப்ரியாஸிஸ் தெரிவித்துள்ளார்.
  • · குழந்தைகளின் உடல் நலம், வளா்ச்சியில் அரசுகள் முதலீடு செய்ய வேண்டும். அவா்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், குழந்தைகளுக்கு ஏற்ற எதிர்காலத்தை உருவாக்கவும், இது ஒரு விழிப்புணா்வு அழைப்பாக இருக்க வேண்டும்என லான்செட் தெரிவித்துள்ளது.
  • · ஆரோக்கியமான குழந்தைகளாலேயே வலிமையான தேசத்தை உருவாக்க முடியும் என்பதால் குழந்தைகளின் சுகாதார வாழ்வை மேம்படுத்துவதில் அரசுகள் அக்கறை காட்ட வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்கப்படாமல் இருப்பதும் ஒரு வகை உரிமை மீறலாகக் கருதப்பட வேண்டும். பெண்கள், குழந்தைகளின் உடல் ஆரோக்கியமே, அவா்களின் எதிர்காலத்துக்கு அடித்தளம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
  • · நம் நாட்டு குழந்தைகள் தரமான மருத்துவ சேவைகளையும், ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் பெற முடியாவிட்டால், உலக சுகாதார சுற்றுலா மையமாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்ற அரசின் குறிக்கோளை எட்ட முடியாமல் போகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
  • · இந்த உலகம் குழந்தைகள் கையில்...குழந்தைகள் ஆரோக்கியமாகவும், ஒழுக்கமாகவும் இருந்தால், உலகமும் ஆரோக்கியமாகவும், ஒழுக்கமாகவும் இருக்கும்.

 

நன்றி: தினமணி (23-03-2020)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்