TNPSC Thervupettagam

சந்திரயான் வெற்றி | இந்தியா என்ன செய்ய வேண்டும்

September 29 , 2023 471 days 324 0
  • ஒன்றை அதிவேகமாகவும் முதலிலும் செய்து முடிப்பவர் யார் என்று சாதிக்கத் துடிப்பது மனித இயல்பு. போட்டிபோட்டு முந்துவதும் மனித உயிர்த் தூண்டலே. ஓர் இடத்துக்கு பிற நாட்டினர் சென்று சேர்வதற்குள் தன் தேசத்துக் கொடியை நாட்டுவது மனித இயல்பூக்கம் என்பதைவிட, ஒருவகை அரசியல் தூண்டல் எனலாம்.

துருவங்களை நோக்கி

  • 1910-12 காலகட்டத்தில் பிரிட்டன் கடற்படை அதிகாரி ராபர்ட் ஸ்காட், புவியின் தென் துருவத்தை அடையும் துணிச்சலான கடற்பயணத்தில் இறங்கினார். அதேவேளையில், நார்வே நாட்டினரான ரோல்டு அமுண்ட்சன் வட துருவத்தை வெற்றிகொள்ளும் சாகசப் பயணத்தில் இருந்தார்.
  • வட துருவத்தை அடைந்துவிட்டதாக பெடரிக் காக், ராபர்ட் பியரி என்கிற அமெரிக்கர்களின் நம்பகத்தன்மையற்ற ஆரவாரத்தைக் கேட்டு நொந்த அமுண்ட்சன், அதை முதலில் அடைந்தபோதும் அதிகம் ஆர்ப்பரிக்கவில்லை. வட துருவம் வெற்றிகொள்ளப்பட்டது. ஆனால், தென் துருவத்தில் மனிதக் காலடி படவில்லை.
  • ஸ்காட், அமுண்ட்சன் இருவருக்குமே அது சவாலாக இருந்தது; தென் துருவத்தில் மனிதக் காலடியைப் பதிக்கும் போட்டி அவ்வளவு எளிதல்ல என்பதை அறிந்தும் அவர்கள் அதில் ஈடுபட்டனர். ஸ்காட் தனது சகாக்கள், நாய்கள்-குதிரைகளோடும், அமுண்ட்சன் அவரது நாய்களும், பனிச்சறுக்கு வண்டிகளுமாகக் களம் இறங்கியிருந்தனர்.
  • 1911 டிசம்பர் 14 அன்று அமுண்ட்சனும் அவரது ஐந்து சகாக்களும் ஸ்காட் அணி வந்திறங்குவதற்கு 34 நாள்களுக்கு முன் தென் துருவமான அண்டார்க்டிகாவை அடைந்தனர். நார்வே நாட்டுக் கொடியை அங்கே நட்டதோடு, அமுண்ட்சன் மனநிறைவு அடைந்தார்.
  • தென் துருவ நார்ஸ்க் முகாமுக்கு ‘போல்ஹிம்’ (துருவ இல்லம்) எனப் பெயரிட்டார். அண்டார்க்டிகா பள்ளத்தாக்குக்கு, ‘மன்னர் ஏழாம் ஹாக்கான் பள்ளத்தாக்கு’ என நார்வே மன்னரின் பெயரைச் சூட்டினார். அதேவேளை, ஸ்காட்டும் அவரது குழுவும் அப்பகுதியின் மிகக் கொடுமையான தட்பவெப்பத்தில் சிக்கி மாண்டுபோயினர்.
  • தென் துருவத்தை முதலில் அடைந்ததற்காக அமுண்ட்சன் வரலாற்றில் போற்றப்பட்டாலும் சாகசத்தின் நாயகனாகப் புராணீக உயரத்தில் வைத்து உலகம் ஸ்காட்டை அவரது நார்வே போட்டியாளரைவிட அதிகம் கொண்டாடுகிறது.

புவியின் தென்துருவ ஒப்பந்தம்

  • 1939இல், ‘மாவ்டு லாண்டு’ (Queen Maud Land) என்ற தங்கள் மகாராணியின் பெயரில் (மன்னர் ஹாக்கானின் மனைவி) அண்டார்க்டிகாவின் பெரும் பகுதியை நார்வே சொந்தம் கொண்டாடியது; இப்பகுதி அண்டார்க்டிகாவின் மொத்தப் பரப்பில் ஆறில் ஒரு பங்கு. மேலும், அண்டார்க்டிகா தீபகற்பத்திலிருந்து 450 கி.மீ. மேற்கே அமைந்த பீட்டர் தீவையும் நார்வே சொந்தம் கொண்டாடியது.
  • தென் துருவத்தை ஆக்கிரமிப்பதில் பிரிட்டனை நார்வே முந்திக்கொண்டது. ஆனால், பிரிட்டனால் அண்டார்க்டிகாவில் தனது உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது; மற்ற நாடுகளாலும் முடியாது. அண்டார்க்டிகாவில் இதெல்லாம் எங்களது பிரதேசம் என்று மார்தட்டும் ஐந்து பிற நாடுகளும் உண்டு.
  • ஏழு நாடுகளின் கொடிகள் பறக்கும் இடமாகப் பிரித்து நாம் அண்டார்க்டிகாவைப் பார்க்கிறோம். உலகை ஆக்கிரமித்த காலனியாதிக்கப் பகுதிபோல இவை இல்லை. சுதந்திரம் மறுக்கப்பட்ட அடிமை மனிதர்கள் அங்கே இல்லை. வாழும் தகுதியற்ற ஓர் இடத்தில் ஏழு நாடுகள் கொடிநாட்ட வேண்டிய அவசியம் என்ன?
  • 1958ஆம் ஆண்டினை சர்வதேசப் புவி இயற்பியல் ஆண்டாக (International Geo-Physical Year) ஐ.நா. அறிவித்தபோது, சோவியத்-அமெரிக்க பனிப்போர் பலவகை உச்சங்களைத் தொட்டிருந்த சூழலில், அப்போதைய அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர், 1959இல் அண்டார்க்டிகாவில் பெரிய அளவில் சுறுசுறுப்பாக இயங்கிய 12 நாடுகளை உள்ளடக்கி, அண்டார்க்டிகா உச்சி மாநாட்டைக் கூட்டினார்.
  • அண்டார்க்டிகாவில் அணுகுண்டு சோதனைகள் நடத்துவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று அர்ஜென்டினா தீர்மானம் கொண்டுவந்தபோது, அதை அமெரிக்கா எதிர்த்தது. சோவியத் ஒன்றியமும் சீலேவும் அர்ஜென்டினாவின் தீர்மானத்தை ஆதரித்தபோது, அதை ஏற்று அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது.

இன்றைய கண்காணிப்பும் புரிதலும்

  • இன்றைக்கு அண்டார்க் டிகாவில் சந்தேகத்துக்கு இடமாக என்ன நடந்தாலும் செயற்கைக்கோள் மூலம் அறிந்து உடனே தடுத்துவிட முடியும். இப்படி ‘வான்-விழி’களைப் புவி சாதிக்கும் முன்பே ஆரம்பத்தில் அங்கே சென்றுவிட்ட ‘அண்டார்க்டிகர்’கள் தங்களது நிலைப்பாட்டை உறுதிசெய்யப் பலரோடு தங்களது இடத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டியதாயிற்று.
  • சோவியத் ஒன்றியம், பிரிட்டன், அமெரிக்கா, அர்ஜென்டினா என 12 நாடுகள் அண்டார்க்டிகாவில் 55 ஆய்வு நிலையங்களை அதே சர்வதேசப் புவி இயற்பியல் ஆண்டில் அமைத்து, இரண்டு குறிக்கோள்களை முழுமையாக ஏற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன: 1. அறிவியல் ஆய்வுகளுக்கான சுதந்திரம்; 2. அண்டார்க்டிகாவை அமைதி வழிகளுக்கு மட்டுமே பயன்படுத்துதல். இன்று அந்த ஒப்பந்தத்தில் 54 நாடுகள் உள்ளன. ராணி மாவ்டு தீவில் தனக்கென்று சொந்தமாக ஆய்வுக்கூடம் வைத்திருப்பதோடு 29 ஆலோசனை நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா உள்ளது.
  • மனித இனத்தின் மேன்மைக்கான ஒருங்கிணைந்த முயற்சி என்றாலும், புவியின் காலநிலை மாறுதல் உள்பட இன்றைய சூழலியல் சிக்கல்கள் குறித்த உண்மையான ஆய்வுகள் அங்கே நடக்கின்றனவா என்பது ஆய்வுக்குரியது. ஆனால், இந்தக் கட்டுரை புவியின் தென் துருவம் பற்றியது மட்டுமே அல்ல. புவியின் கடல்கள், பனிக்கட்டிகள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டால், விண்வெளி முற்றிலும் வேறானது. ஆனால், அண்டார்க்டிகா மாதிரியான போட்டி, விண்வெளியை அடைவதிலும் உள்ள நிலையில், விண்வெளியை ஆயுதப் போருக்குப் பயன்படுத்திவிடக் கூடாதே என்கிற பதற்றமும் உள்ளது.

முக்கிய ஒப்பந்தம்

  • புவியின் தென் துருவம் அமுண்ட்சனையும் ஸ்காட்டையும் ஈர்த்தது போலவே நிலவின் தென் துருவம் ரஷ்யாவையும் (லூனா-25) இந்தியாவையும் (சந்திரயான்-3) ஈர்த்தது. இந்தியாவின் விக்ரம் தரையிறங்கி இலக்கை அடைந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக ரஷ்யாவின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அண்டார்க்டிகா ஒப்பந்தம் போலவே 1979இல் ஐ.நா. அவை 34/68 (விண்வெளி ஒப்பந்தத்தின் பல ஷரத்துக்களை விரிவாக்கி) நிலவு ஒப்பந்தம் என்கிற ஒன்றை ஏற்றது. இதன்படி சந்திரனின் நிலப்பரப்பு உலக அமைதி நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அதன் சுற்றுசூழல் பாதிக்கப்படக் கூடாது என்றும் ஏற்கப்பட்டது. அங்கு எந்த ஆய்வு முகாம் ஏற்படுத்தப்பட்டாலும் ஐ.நா. அவைக்கு முறைப்படி தகவல் தெரிவிக்க வேண்டும். சந்திரனும் அதில் கிடைக்கும் இயற்கை வளங்களும் ஒட்டுமொத்த மனித இனத்தின் பாரம்பரியச் சொத்து என்று ஒப்பந்தம் கூறுகிறது. அப்படி அதன் இயற்கை வளத்தை பயன்படுத்தும் நிலை எப்போதாவது ஏற்பட்டால், ஒரு சர்வதேச அரசு ஏற்படுத்தப்பட்டு அதைக் கண்காணிக்க வேண்டும்.

இந்தியாவின் கடப்பாடுகள்

  • பெருமைக்கும் உற்சாகமாய் கொண்டாடுவதற்கும் உரிய சந்திரயான்-3 எனும் பிரம்மாண்ட சாதனை, இந்தியாவின் பொறுப்பும் முதிர்ச்சியும் மிக்க புவிசார்ந்த நிலவின் எதிர்கால அணுகுமுறை பற்றிய கொள்கைப் பிரகடனமாக உருவெடுக்க வேண்டும். புவியின் நிலவு குறித்த நோக்கம், புவியின் துணைக்கோளாக நிலவின் எதிர்காலம் ஆகியவை குறித்த முதல் சர்வதேசப் பிரத்யேகக் கொள்கை ஒன்றை முழுப் புரிதலோடும் நடைமுறைச் சாத்தியங்களுடனும் உடனடியாக உருவாக்கி, நிலவில் விண்கலத்தை இறக்கிய முன்னோடியான இந்தியா, உலகுக்கு வழிகாட்ட வேண்டும். சர்வதேச நிலவு ஒப்பந்தம் அடுத்த படிநிலைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
  • சந்திரயான்-3இன் வெற்றி, இந்தியாவின் வெற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் வெற்றி’ என்ற பிரதமர் மோடியின் கூற்று வரவேற்கத்தக்க, பொறுப்புமிக்க கூற்றாகும். அதன் தொடர்ச்சியாக அவர் உலகளவிலான விண்வெளி ஆய்வுகளுக்கான பங்களிப்பையும் செய்ய வேண்டும்.
  • அவர் விண்வெளியில் அனைத்து நாடுகளுக்குமான அடிப்படை உரிமை குறித்த பிரகடனத்தை முன்மொழிய வேண்டும். இதன்மூலம் விண்வெளியில் மனிதர்களின் பொறுப்பு, கடமை, செயல்பாடுகளில் இணக்கம், அதிலும் குறிப்பாக விண்வெளிக் கழிவுகளை அகற்றுதல் உள்பட நெறிமுறைகளை வகுத்தளிக்கலாம்.
  • மேலாதிக்கத்தைச் செலுத்தும் போலி கெளரவத்துக்காக விண்வெளியைத் தொற்றி ஏறுகின்ற பிறரைப் போல இந்தியாவால் இவ்விஷயத்தை அணுக முடியாது. விண்வெளி மானுடத்தின் பொதுச் சொத்து என்பதற்காக மட்டுமல்ல; இந்தப் பிரபஞ்சத்தின் முழு நலனையும் அமைதியையும் மனதில் கொள்ள வேண்டிய கடமையும் நமக்கு உண்டு.

நன்றி: தி இந்து (29 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்