TNPSC Thervupettagam

சந்திரயான் 3 தொடங்கும் புதிய வரலாறு

August 26 , 2023 504 days 296 0
  • இந்திய விண்வெளி ஆய்வின் புதிய உச்சமாக, சந்திரயான் 3விக்ரம்தரையிறங்கிக் கலம், திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23 அன்று வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி இருக்கிறது. இதன்மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) விஞ்ஞானிகளின் அசாத்திய உழைப்புக்குக் கிடைத்த இந்த வெற்றி, இந்தியர்கள் அனைவரையும் பெருமிதமடைய வைத்திருக்கிறது; விண்வெளி ஆய்வில் புதிய வாசல்களையும் திறந்து விட்டிருக்கிறது.
  • இதற்கு முன்னர் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நிலவுக்கு வெற்றிகரமாக விண்கலங்களை அனுப்பியிருக்கும் நிலையில், இந்தப் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்திருக்கிறது. குறிப்பாக, நிலவின் தென் துருவத்தை அடைவதில் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி, இந்திய விண்வெளி ஆய்வை நோக்கிய உலக நாடுகளின் கவனத்தைக் கூர்மைப்படுத்தியிருக்கிறது.
  • நிலவைச் சுற்றிவரும் சுற்றுப்பாதைத் திட்டமான சந்திரயான் 1’, 2008இல் வெற்றிபெற்றது. 2019இல் செலுத்தப்பட்ட சந்திரயான் 2சுற்றுப்பாதைக் கலம், தரையிறங்கிக் கலம், உலாவி ஆகிய மூன்றையும் ஒருசேர நிலவை நோக்கி அனுப்ப முயன்றது. அதன் சுற்றுப்பாதைக் கலம் வெற்றிகரமாக நிலவைச் சுற்றி வந்துகொண்டிருக்கிறது; ஆனால், தரையிறங்கும் முயற்சி கடைசி நொடியில் தோல்வியில் முடிந்தது. விட்ட இடத்தில் தொடங்கி, மென்மையாகத் தரையிறங்கும் கலத்தையும், நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து ஆய்வுசெய்ய உலாவியையும் அனுப்பிச் சோதனை செய்வதுதான் சந்திரயான் 3திட்டம்.
  • செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தையும் உள்ளடக்கிய பல்வேறு மேம்பாடுகளுடன் கூடிய சந்திரயான் 3 விண்கலத்தை, ரூ.615 கோடி என்கிற மிகக் குறைவான மதிப்பீட்டில் இஸ்ரோ வடிவமைத்தது. சுமார் 1,000 இஸ்ரோ விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் பங்களித்துள்ள சந்திரயான் 3இன் திட்ட இயக்குநர் பி.வீரமுத்துவேல், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளிடமும் ஐரோப்பிய நாடுகளிடமும் இருப்பதுபோல நிலவுக்கு விரைவாகச் செல்லும் அதிஆற்றல் வாய்ந்த ஏவூர்தி இந்தியாவிடம் இல்லை; அமெரிக்காவின் அப்போலோ விண்கலம் மூன்று நாள்களிலும் சீன விண்கலம் ஐந்து நாள்களிலும் நிலவை அடைந்தன.
  • இந்தப் பின்னணியில், எல்விஎம் 3 ஏவூர்தி மூலம் ஜூலை 14 அன்று விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள 3.84 லட்சம் கி.மீ. தூரத்தை 41 நாட்களில் சென்றடைந்துள்ளது. இந்திய நேரப்படி, ஆகஸ்ட் 23 மாலை 6.03 மணிக்கு நிகழ்ந்த தரையிறக்கத்தை, சுமார் 80 லட்சத்து 60 ஆயிரம் பேர் யூடியூப்-இல் நேரலையில் பார்வையிட்டனர்; மிக அதிகம் பேர் பார்வையிட்ட யூடியூப் நேரலையாக இது வரலாற்றில் பதிவானது.
  • நிலவில் ஹீலியம் போன்ற வாயு மூலக்கூறுகள், நிலவு உருவான விதம், பனிக்கட்டிகளின் நிலை, தனிமங்கள் பற்றிய தகவல்களை ஆய்வுசெய்வது சந்திரயான் 3 திட்டத்தின் முக்கியப் பணி.
  • சந்திரயான் 3 இன் வெற்றிகரமான தரையிறக்கம், வயது வேறுபாடின்றி எல்லாத் தரப்பினரிடமும் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டிவிட்டிருக்கிறது. சுதந்திர இந்தியாவின் முன்னோடிகள், அறிவியல் மனோபாவத்துடன் முன்னெடுத்த தொலைநோக்குத் திட்டங்களின் மேம்பட்ட பலன்களைத்தான் இப்போது நாம் அறுவடை செய்து கொண்டிருக்கிறோம். அந்த அறிவியல் மனோபாவத்தைத் தக்கவைப்பதன் மூலம், அனைவருக்குமான சமத்துவ வாழ்க்கையை உறுதிசெய்ய வேண்டியது இந்தியாவின் இன்றைய, நாளைய தலைவர்களின் தலையாய கடமையாகும்!

நன்றி : இந்து தமிழ் திசை (26 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்