TNPSC Thervupettagam

சமத்துவ ஒலிம்பிக்

July 28 , 2024 168 days 148 0
  • பண்டைய கிரேக்கத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளை நவீனப்படுத்த நினைத்த ஃபிரெஞ்சு கல்வியாளர் பியர் தெ கூபர்டின், 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தை நிறுவினார். விளையாட்டு நவீனமயமானபோதும் பெண்களின் விளையாட்டுத்திறன் குறித்த பலரது பிற்போக்குச் சிந்தனையில் பெரிய மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்திருக்கவில்லை. ஏதென்ஸ் நகரில் 1896இல் முதல் நவீன ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றபோது போட்டியாளர்களில் ஒருவர்கூடப் பெண்ணில்லை.
  • நவீன ஒலிம்பிக் போட்டியை உருவாக்கிய பியர் தெ கூபர்டின், விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் பங்கேற்பதை விரும்ப வில்லை. ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் பங்கேற்பது, ‘ஒழுங் கற்ற, நடைமுறைக்கு உதவாத, சுவாரசிய மற்ற, அசிங்கமான’ செயல் எனக் கருதினார். அவர் உயிரோடு இருந்த வரைக்கும் பெண்களின் ஒலிம்பிக்கின் பங்கேற்பை எதிர்த்துவந்தார்.
  • ஆனால், அவர் இருந்தபோதே பெண் கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினர். 1900ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் ஐந்து போட்டிகள் மனமுவந்து பெண்களுக்கென்று ஒதுக்கப் பட்டன. அவையும் ‘பெண்தன்மை’ கொண்ட போட்டிகள் என்று ‘வர்ணிக்கப்பட்டன’. நூறாண்டுகளுக்கு முன் பாரிஸில் 1924இல் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பங்கேற்ற 3,089 போட்டியாளர்களில் 134 பேர் மட்டுமே பெண்கள். 44 நாடுகள் பங்கேற்ற அந்த ஒலிம்பிக்கில் பெண்களின் பங்களிப்பு 4.4 சதவீதமாக மட்டுமே இருந்தது. 1976 வரை அது 20 சதவீதத்தைத் தாண்டவில்லை.

நம்பிக்கை தரும் முன்னேற்றம்

  • பெண்களுக்கு இடமே இல்லாத முதல் ஒலிம்பிக்கில் தொடங்கி தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் பங்கேற்கும் நிலையை ஒலிம்பிக் போட்டிகள் எட்டியிருப்பது பாலினச் சமத்துவத்தை நோக்கிய பயணத்தின் முக்கியமான மைல்கல். அந்த வகையில் பாலினச் சமத்துவத்தை உறுதிசெய்யும் மிகப்பெரிய உலகளாவிய விளையாட்டுப் போட்டி இது எனலாம். #Genderequalolympic என்கிற ஹேஷ்டேகுடன் இந்தப் போட்டியைச் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவித்திருக்கிறது.
  • ஒலிம்பிக்கில் பாலினச் சமத்துவத்தை உறுதிசெய்வதற்காகக் கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு விஷயங்களை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் நடைமுறைப் படுத்திவருகிறது. அதன் விளைவுதான் 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் 34 சதவீதமாக இருந்த பெண்களின் பங்களிப்பு 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் 48 சதவீதமாக உயர்ந்தது. போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளின் கொடியைத் தொடக்க விழாவில் ஒரு வீராங்கனையும் ஒரு வீரரும் இணைந்து ஏந்தி வர வேண்டும் என்கிற விதிமுறை டோக்கியோ ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. 91 சதவீத நாடுகளின் கொடிகளை வீராங்கனைகளே ஏந்திவந்து தொடக்க விழாவை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாற்றினர்.
  • பெண்களுக்கான போட்டிகளை அதிகரிப்பதும் அவர்களின் பங்களிப்பை உறுதிசெய்யும் என்பதால் பெண்களுக்கான போட்டிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆண்களும் பெண்களும் இணைந்து விளையாடும் கலப்புப் போட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2016 ஒலிம்பிக்கோடு ஒப்பிடுகையில் கலப்புப் போட்டிகள் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளன.

விதிகளில் மாற்றம் வேண்டும்

  • ஒலிம்பிக் போட்டிகள், வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்திப் பதக்கம் வெல்லும் விளையாட்டுப் போட்டிகள் மட்டுமல்ல. அவை சர்வதேச அளவில் நாடு களுக்கு இடையேயான ஒருமைப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தும் களமாகவும் இருக்கின்றன. அடுத்த கட்டமாகச் சமூக ஒருமைப்பாட்டை நோக்கி நாம் நகர வேண்டியதன் அவசியத்தைப் பலரும் உணரத் தொடங்கியுள்ளனர். சமூகச் சமத்துவத்தில் உலகின் சரிபாதி சமூகமான பெண்களை மையப்படுத்திய பாலினச் சமத்துவமும் முக்கியமானது. அதை நிறைவேற்றும் வகையில் இந்த ஆண்டு ஆண்களுக்கு நிகரான எண்ணிக்கையில் பெண்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்பது வரவேற்கத்தக்கது.
  • உலகின் பெரும்பான்மை நாடுகள் பங்கேற்கும் உலகளாவிய விளையாட்டுப் போட்டியான ஒலிம்பிக், ஒடுக்கப்படும் நாடுகளைச் சேர்ந்தவர்கள், போரால் பாதிக்கப்பட்ட நாடுகள், அகதிகள், சிறுபான்மையினர், பால் புதுமையர் என அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய தாக இருக்கிறபோது அது அனைத்துத் தளங்களிலும் சமத்துவத்தை நோக்கிய முன்னகர்வாக அமையும். சமூகப் பிரச்சினைகளைத் தனிமனிதர்களின் பிரச்சினைகளாகச் சுருக்கிப் பார்ப்பதன் மூலம் அதிகாரத்தில் இருக்கும் பலர் தங்களது பொறுப்பைத் தட்டிக்கழிக் கின்றனர். அந்தப் பொதுப்புத்தியிலிருந்து விலகி, பாலினச் சமத்துவத்தை எல்லா நிலைகளிலும் அடைவதற்கான விதிகளை வடிவமைக்க வேண்டியது அவசியம் என்பதையே 2024 பாரிஸ் ஒலிம்பிக் உணர்த்தியிருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (28 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்