TNPSC Thervupettagam
October 19 , 2020 1378 days 619 0
  • ஐநாவின் உலக உணவுத் திட்டம்’ (டபிள்யு.எஃப்.பி.) அமைப்புக்குச் சமாதானத்துக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டிருப்பது பல வகைகளில் வரவேற்க வேண்டிய ஒன்றாகிறது.
  • நாடுகளுக்கிடையே சகோதரத்துவத்தை அதிகரிக்கவும் ராணுவச் செயல்பாடுகளைக் குறைக்கவும் அமைதிக்கான அமைப்புகளை முன்னெடுக்கவும் பணிபுரிந்த மனிதர்களையும் அமைப்புகளையும் நோபல் அங்கீகரித்துவருவதன் தொடர்ச்சிதான் இது என்றாலும், பட்டினி ஒழிப்புக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த அங்கீகாரமானது, மனிதகுலம் இதில் கூடுதல் கவனம் செலுத்த வழிவகுக்கும்.
  • யேமன், காங்கோ, நைஜீரியா, தெற்கு சூடான், பர்க்கினா ஃபஸோ போன்ற நாடுகளில் பட்டினியால் விளையவிருந்த பேரழிவுகளைத் தடுத்து நிறுத்தியதில், ‘உலக உணவுத் திட்டம்பெரும் பங்காற்றியிருப்பதைப் பெருந்தொற்று ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் இந்த ஆண்டில், நோபல் பரிசுக் குழு சரியாகவே இனம்கண்டு அங்கீகரித்திருக்கிறது.
  • போர்கள், உள்நாட்டுப் பிரச்சினைகள், இயற்கைப் பேரிடர்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு, உணவு கிடைக்காமல் அல்லாடிக்கொண்டிருந்த மக்களுக்கு விமானங்கள், லாரிகள் என்று பல்வேறு வாகனங்களில் உயிருக்கு ஆபத்தான தருணங்களையும் பொருட்படுத்தாமல், உணவு கொண்டுபோய்ச் சேர்த்த நிவாரணப் பணியாளர்களுக்கு முறையான அங்கீகாரமாக இந்த நோபல் பரிசைக் கருதலாம்.
  • சமாதானத்தை வெறும் வயிற்றுடன் நாம் வென்றெடுக்க முடியாதுஎன்பது 1949-ல் சமாதானத்துக்காக நோபல் பரிசு வென்ற லார்டு ஜான் பாய்டு ஓரின் கூற்று. அதைப் பிரதிபலிக்கும் விதமாகவே தற்போதைய விருது அமைந்திருக்கிறது.
  • இந்த அறிவுரை உலக நாடுகள் அனைத்தின் செவியிலும் விழ வேண்டும். ஏனெனில், உலகின் பட்டினியைப் போக்குவதற்கான உலக உணவுத் திட்டத்தின் பட்ஜெட்டில் ரூ.30 ஆயிரம் கோடி பற்றாக்குறை நிலவுகிறது.
  • உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கினர் ஊட்டச்சத்துக் குறைவு எனும் பேராபத்தை எதிர்நோக்கியுள்ளனர்; உள்நாட்டுப் போர்களால் பீடிக்கப்பட்டிருக்கும் சிரியாவில் மட்டும் கிட்டத்தட்ட 46 லட்சம் மக்கள் உணவு உதவியை நம்பியே வாழ்கிறார்கள்.
  • பட்டினி ஒழிப்பு என்பது மனிதகுலம் அடைய முடியாத இலக்கு அல்ல. 2030-க்குள் பட்டினியை முற்றிலும் ஒழிப்பது என்கிற இலக்கையும் நாம் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்.
  • ஆனால், இந்த இலக்கை அடைய போர்களுக்கும் வன்முறைகளுக்கும் உலகம் முற்றுப்புள்ளி வைப்பது முக்கியம். செல்வம் கொண்ட சமூகங்கள், வறிய சமூகங்கள் இடையேயான இணைப்புப் பாலம் முக்கியம்.
  • நோபல் பரிசுக் குழு ஓரிடத்தில் சுட்டிக்காட்டியபடி, சர்வதேச நாடுகளின் ஒற்றுமையும் பலதரப்புக் கூட்டுறவும் முன்னெப்போதையும் விட இப்போது அதிகமாகத் தேவைப்படுகிறது.
  • சரிசமமான உணவுப் பகிர்மானம் நடைபெற்று, அதன் மூலம் பட்டினியை ஒழிப்பதற்கு ஏதுவாக உலகம் முழுவதுமே ஜனநாயகம் வலுப்படுத்தப்பட வேண்டும். தன் வயிறு, தன் வாழ்க்கை என்ற குறுகிய வட்டத்தை ஒட்டுமொத்த உலகமும் அழித்திட வேண்டும்.

நன்றி: தி இந்து (19-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்