(For English version to this please click here)
54. காவல் கரங்கள் திட்டம்
தொடங்கப்பட்ட தினம்:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- சென்னைப் பெருநகர காவல்துறை.
நோக்கம்:
- காவலர் கரங்கள் திட்டத்தின் நோக்கம் என்பது, பாதிக்கப்படக் கூடிய குழுக்களை, குறிப்பாக முதியோர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் மனநலம் குன்றிய நபர்கள் மற்றும் தெருக்களில் அலைந்து திரிபவர்களை மீட்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதன் மூலம் பொதுப் பாதுகாப்பை மேம்படுத்துவதாகும்.
- இந்தத் திட்டமானது தனிநபர்கள் அவர்களுக்குத் தேவையான கவனிப்பையும் ஆதரவையும் பெறுவதை உறுதி செய்து, பல்வேறு சாத்தியமான ஆபத்துகள் அல்லது சுரண்டலை அவர்கள் எதிர்கொள்வதைத் தடுக்கிறது.
பயனாளிகள்:
- முதியவர்கள்
- பெண்கள்
- குழந்தைகள்
- மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள்
தகுதி:
- இத்திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கான தகுதியானது தெருக்களில் இருக்கும் நபர்களின் இருப்பு மற்றும் நிலை ஆகியவற்றால் தீர்மானிக்கப் படுகிறது.
- எந்த முதியவர், பெண், குழந்தை அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட நபர் அலைந்து திரிந்து உதவி தேவைப்படும் நிலையில் உள்ளவர்கள் இத்திட்டத்திற்குத் தகுதி பெறுகின்றனர்.
கூடுதல் தகவல்கள்:
- எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கில் ஒரு முறையான நிகழ்ச்சியுடன் இத்திட்டமானது தொடங்கப் பட்டது.
- இந்தத் திட்டம் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பின் மூலம், காவல் கரங்கள் குழு மற்றும் தன்னார்வலர்களுக்கான ஆதரவாக மீட்பு வாகனங்கள் மற்றும் முதலுதவி உபகரணங்களுடன் பொருத்தப்பட்ட வாகனங்களைக் கொண்டது.
- அவசர அழைப்பு எண்கள் 1091 (பெண்கள் உதவி எண்), 1098 (குழந்தைகள் உதவி எண்), 1253 மற்றும் 100 (காவல் கட்டுப்பாட்டு அறை) ஆகியவை ஒருங்கிணைந்து கட்டுப்பாட்டு அறை மூலம் இத்திட்டமானது செயல்படுத்தப் படுகிறது என்ற நிலையில் இது அந்தத் திட்டத்துடன் தொடர்புடைய சிக்கலான அழைப்புகளுக்கு விரைவான பதிலை உறுதி செய்கிறது.
55. கலைஞரின் கனவு இல்லத் திட்டம்
தொடங்கப்பட்ட தினம்:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை.
நோக்கம்:
- "கலைஞரின் கனவு இல்லம்" என்ற திட்டத்தின் நோக்கம், தற்போது குடிசை குடியிருப்புகளில் வசிக்கும் தனிநபர்களுக்கு நிரந்தர, பாதுகாப்பான மற்றும் கான்கிரீட் வீடுகளை வழங்குவதன் மூலம் வீடற்றவர்களுக்கு வீடு அளிப்பதன் மூலம், கிராமப்புறங்களில் அவர்களது வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவது ஆகும்.
- தமிழ்நாட்டைக் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றவும், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் இந்தத் திட்டமானது முயல்கிறது.
பயனாளிகள்:
- இத்திட்டத்தின் பயனாளிகள் தமிழகத்தின் கிராமப்புறங்களில் வசிக்கும் வீடற்ற தனிநபர்கள் ஆவர்.
- குறிப்பாக, குடிசை குடியிருப்புகளில் வசிப்பவர்கள் என கணக்கெடுப்புகள் மூலம் அடையாளம் காணப்பட்டவர்கள்.
தகுதி:
- உள்ளூர் அதிகாரிகள், பொறியாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் அடங்கிய சிறப்புக் குழுவால் தகுதி தீர்மானிக்கப்படுகிறது.
- இந்தக் குழு கிராம சபைக் கூட்டங்களில் தகுதியான குடிசை குடியிருப்புகளின் பட்டியலை மதிப்பீடு செய்து அங்கீகரிக்கிறது.
- இது மிகவும் தகுதியான தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள், இந்த வீட்டினைப் பெறுவதை உறுதி செய்கிறது.
கூடுதல் தகவல்கள்:
- 2024-25 ஆம் ஆண்டில் முதல் கட்டமாக 100,000 வீடுகள் கட்டப்படுவதை இலக்காகக் கொண்டு, 2030 ஆம் ஆண்டிற்குள் 800,000 வீடுகளை கட்டுவதை இந்தத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.
- ஒவ்வொரு வீட்டிற்கும் தோராயமாக 350,000 ரூபாய் செலவாகிறது.
- நிலம் இல்லாத பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்படுகிறது.
- வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்வதற்காக கட்டுமானத்திற்கான நிதி நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப் படுகிறது.
- திட்ட மதிப்பீட்டை விட அதிகமான வீடுகளை கட்டப் பயனாளிகள் விரும்பினால் கூட்டுறவு வங்கிகளில் அவர்கள் கடன் பெறலாம்.
- ஒவ்வொரு வீடும் குறைந்தபட்சம் 360 சதுர அடியில் இருக்க வேண்டும் என்பதோடு அவை 300 சதுர அடியில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் கூரை (RCC) மற்றும் 60 சதுர அடியில் எரியாத பொருட்களால் கட்டப்பட்டிருக்க வேண்டும்.
56. ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம்
- இத்திட்டம் 2024 ஆம் ஆண்டின் விவசாய பட்ஜெட்டின் போது அறிமுகப் படுத்தப்பட்டது.
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- தமிழ்நாடு வேளாண்மைத் துறை.
நோக்கம்:
- "ஒரு கிராமம் ஒரு பயிர்" திட்டத்தின் நோக்கம், ஒவ்வொரு கிராமத்தின் மண்ணின் தன்மைக்கு ஏற்ற பயிர்களைச் சாகுபடி செய்வதன் மூலம் விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்தச் செய்வதாகும்.
- இந்த அணுகுமுறை இலக்கானது விளைச்சலை அதிகரிக்கவும், மண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மற்றும் விவசாய நடவடிக்கைகளின் லாபத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
பயனாளிகள்:
- தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் முதன்மை பயனாளிகள் ஆவர்.
தகுதி:
- கிராமத்தில் உள்ள மண்ணின் தன்மையை அடிப்படையாகக் கொண்டது.
- 5 முதல் 10 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய, ஏற்ற பயிர்களைக் கண்டறிந்து உரிய மண் பரிசோதனை மூலம் கிராமங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.
கூடுதல் தகவல்கள்:
- தானியங்கள் (அரிசி, ராகி, தினை, மக்காச்சோளம்), சிறுதானியங்கள் (குதிரைவாலி தினை), எண்ணெய் வித்துக்கள் (சூரியகாந்தி, எள்), பருப்பு வகைகள் (உளுந்துப் பயறு, பச்சைப் பயறு) உள்ளிட்ட தானிய வகைகளுடன், மண்ணின் தன்மையின் அடிப்படையில் பயிர்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றன.
- பணப்பயிர்கள் (பருத்தி, கரும்பு).
- தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் கடன் உதவி, பயிர்க் காப்பீடு மற்றும் பூச்சி மேலாண்மைத் தீர்வுகள் போன்ற ஆதரவைப் பெறுகிறார்கள்.
- விவசாய நடைமுறைகளை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு அரசு பயிற்சி அளிக்கிறது.
- மண் பரிசோதனையானது தகுந்த உரங்களைப் பயன்படுத்துதல், பயிர் உற்பத்தித்திறன் மற்றும் மண் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் ஆகியவை மூலம் பரிசோதிக்கப் படுகிறது.
57. வீரா மீட்பு வாகனம்
தொடங்கப்பட்ட தினம்:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- சென்னைப் போக்குவரத்து காவல் துறை.
நோக்கம்:
- VEERA (விபத்துக்களிலிருந்துக் காப்பதற்கான வாகனம் மற்றும் அவசர மீட்பு) முயற்சியானது, விபத்தில் சேதமடைந்த வாகனங்களில் சிக்கியுள்ள நபர்களை மீட்க, நன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு மீட்பு வாகனத்தை வழங்குவதன் மூலம் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த முன்முயற்சியானது சாலை விபத்து இறப்புகளைக் குறைக்கவும், அவசர காலப் பதிலளிப்பு நேரத்தை மேம்படுத்தவும் முயல்கிறது.
பயனாளிகள்:
- இதன் முதன்மைப் பயனாளிகள் - சாலை விபத்துக்களில் ஈடுபடும் நபர்கள், சேதமடைந்த வாகனங்களில் இருந்து உடனடியாக மீட்பு தேவைப்படும் நபர்கள்.
தகுதி:
- சாலை விபத்து நிகழ்வதன் மூலம் தகுதி தீர்மானிக்கப்படுகிறது.
- வீரா வாகனம், தனி நபர்கள் சிக்கிக் கொள்ளும் விபத்துச் சம்பவங்களுக்குப் பதிலளிக்கிறது மற்றும் அவர்களைப் பாதுகாப்பாக மீட்க உதவுகிறது.
கூடுதல் தகவல்:
- VEERA வாகனமானது சென்னைப் போக்குவரத்து காவல்துறை, ஹூண்டாய் க்ளோவிஸ் மற்றும் இசுஸு மோட்டார்ஸ் தனியார் நிறுவனம் ஆகியவற்றின் ஒரு கூட்டுச் சமூகப் பொறுப்புணர்வு முயற்சியின் ஒரு பகுதியாகும்.
- இந்த வாகனத்தில் மேம்படுத்தப் பட்ட கருவிகள் பொருத்தப்பட்டு, மீட்புப் பணிகளைத் திறம்பட மேற்கொள்வதற்காக வேண்டி பயிற்சி பெற்றக் காவல் குழுவினால் பணியாளர்கள் பணியில் ஈடுபடுகிறார்கள்.
- இந்த முன்முயற்சியானது சென்னையில் சாலைப் பாதுகாப்பு மற்றும் அவசரகாலப் பதிலளிப்பு திறன்களை மேம்படுத்துவதற்கான முன்முயற்சியாகப் பிரதிபலிக்கிறது.
58. மணற்கேணி செயலி
தொடங்கப்பட்ட தினம்:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை.
நோக்கம்:
- மணற்கேணி செயலியானது தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு அணுகக் கூடிய மற்றும் உயர்தர வகையிலான காணொளிப் பாடங்களை வழங்குவதன் மூலம் கல்வியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- அனைத்து மாணவர்களும் உயர்கல்வியைத் தொடர முடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டி, புதுமையான கற்றல் முறைகளை இந்தச் செயலி வழங்குகிறது.
பயனாளிகள்:
- முதன்மைப் பயனாளிகள் தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்கள், குறிப்பாக 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள்.
தகுதி:
- 6, 7, 8, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான காணொளி உள்ளடக்கத்துடன், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் இதனைப் பயன்படுத்த தகுதியுடையவர்கள் ஆவர்.
கூடுதல் தகவல்கள்:
- இந்தப் பயன்பாட்டில் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் கருவிகளாக காணொளிப் பாடங்கள் உள்ளன.
- கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மாநில ஆராய்ச்சிக் குழுவால் (SCERT) உருவாக்கப்பட்ட இது அறிவியல், கணிதம், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் போன்ற பாடங்களை உள்ளடக்கியதாகும்.
- மாணவர்கள் பாடக் கருத்துகளை நன்கு புரிந்து கொள்ளவும் மற்றும் அதனைத் தக்க வைக்கவும் உதவிட வேண்டி இது 2D மற்றும் 3D இயங்கு படங்கள் போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
- ஒவ்வொரு காணொளிப் பாடமும் மாணவர்களின் புரிதலை மதிப்பிடுவதற்கான வினாடி வினாவுடன் முடிவடைகிறது.
- காணொளிகள் மற்றும் வினாடி வினாக்கள் எந்தத் தடையும் இல்லாமல் பதிவிறக்கம் செய்யப் படலாம் என்ற நிலையில் இதன் மூலம் தொடர்ச்சியான கற்றலானது உறுதி செய்யப்படுகிறது.
- இச்செயலியானது 200,000 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதோடு இப்போது மணற்கேணி இணைய தளம் வழியாகவும் காணொளிகளை அணுக முடியும்.
59. குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டம்
தொடங்கப்பட்ட தினம்:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- தமிழ்நாடு வேளாண்மைத் துறை.
நோக்கம்:
- குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டமானது காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடியை அதிக அளவில் சாகுபடி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தத் திட்டம் விவசாயச் செலவுகளைக் குறைத்து, விளைச்சலை அதிகரிக்கச் செய்து, இந்தப் பிராந்தியங்களில் ஒட்டு மொத்த விவசாய உற்பத்தித் திறனுக்கும் பயனளிக்கிறது.
பயனாளிகள்:
- தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களிலும், கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களின் டெல்டா பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் முதன்மைப் பயனாளிகள் ஆவர்.
தகுதி:
- குறிப்பிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகளை மையமாக வைத்து, விவசாயிகளின் புவியியல் இருப்பிடத்தின் அடிப்படையில் இந்தத் தகுதியானது தீர்மானிக்கப் படுகிறது.
கூடுதல் தகவல்கள்:
- இந்தத் தொகுப்பில் உரங்களுக்கு முழு மானியமும், நெல் விதைகள், பசுந்தாள் உர விதைகள், இயந்திரக் கலப்பைகள் மற்றும் இயந்திர முறையில் களை எடுக்கும் கருவிகளுக்கு 50% மானியமும் வழங்கப் படுகிறது.
- இத்திட்டத்தின் மூலம் 600,000 விவசாயிகள் பயனடைகின்றனர்.
- இந்தத் திட்டத்தில் 30,000 டன் உரங்கள் 100% மானியத்திலும் மற்றும் 2,478 டன் நெல் விதைகள் 50% மானியத்திலும் வழங்கப் படுகின்றன.
- மேலும், மாற்றுப் பயிர் விதைகள் மற்றும் பசுந்தாள் உர விதைகள் 50% மானியத்துடன் வழங்கப் படுகின்றன.
60. 'மீண்டும் மஞ்சப்பை' திட்டம்
தொடங்கப்பட்ட தினம்:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை.
நோக்கம்:
- நெகிழி மாசுபாட்டை எதிர்த்து மீண்டும் பயன்படுத்தக் கூடிய துணிப் பைகளின் பயன்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பயன்பாட்டைக் குறைத்தல் ஆகியவை இதன் நோக்கங்களாகும்.
பயனாளிகள்:
- தமிழ்நாட்டின் உள்ள ஒட்டுமொத்த மக்கள், குறிப்பாக நெகிழிப் பைகளை அன்றாட வாழ்வில் பயன்படுத்துபவர்கள்.
தகுதி:
- இத்திட்டத்தில் தமிழக மக்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
கூடுதல் தகவல்கள்:
- ஒரு நெகிழிப் பையை மக்கள் பயன்படுத்தும் சராசரி நேரம் வெறும் 20 நிமிடங்கள் தான், ஆனால் அவை சிதைவதற்குப் பல நூறு ஆண்டுகள் ஆகும்.
- இந்த அதிகப்படியான நெகிழி மாசுபாடு நமது புவிக் கிரகத்தைக் கடுமையாகப் பாதித்து, நமது சுற்றுச்சூழலுக்கும், கடல்வாழ் உயிரினங்கள் உட்பட, நமது குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியத்திற்கும் பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது.
- இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு முன்பு ஒருமுறை, மக்கள் பயன்படுத்தும் 14 வகையான நெகிழிப் பொருட்களுக்கு தடை விதித்து கடுமையான நடவடிக்கையை அமல்படுத்தியது.
- இருப்பினும், COVID-19 தொற்றுநோய் காரணமாக இந்தத் தடையை அமல்படுத்துவது இடை நிறுத்தம் செய்யப் பட்டது.
- இந்தத் தடையை மீண்டும் அமல்படுத்த தற்போதைய தமிழக அரசு, தற்போது மிகவும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
- "மீண்டும் மஞ்சப்பை" பிரச்சாரத்தின் நோக்கம் என்பது நெகிழிப் பைகள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பொது மக்களிடையே மாற்றுத் துணிப் பைகளைப் பயன்படுத்தும் பழக்கத்தை ஊக்குவிப்பதும் ஆகும்.
-------------------------------------