TNPSC Thervupettagam

சமீபத்திய தமிழ்நாடு அரசுத் திட்டங்கள் – பகுதி I

June 15 , 2024 15 days 3227 0

(For English version to this please click here)

1. மிஷன் இயற்கை திட்டம்

தொடங்கப்பட்ட நாள்: நவம்பர் 28, 2022.

துறை: தமிழ்நாடு கல்வித்துறை

நோக்கம்:

  • 'மிஷன் இயற்கை' திட்டமானது, அரசு பள்ளிகள், வீடுகள் மற்றும் சமூகங்களில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டம் காய்கறித் தோட்டங்கள், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், கழிவு மேலாண்மை, நெகிழி ஒழிப்பு, விழிப்புணர்வுப் பேரணிகள் போன்ற நடைமுறையில் உள்ள சுற்றுச்சூழல் திட்டங்களில் கவனம் செலுத்துகிறது.

தலைமை முகமை:

  • இத்திட்டம் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையால், இயற்கை இந்தியாவிற்கான உலகளாவிய நிதியத்துடன் இணைந்து நிர்வகிக்கப்படுகிறது.

பயனாளிகள்:

  • இத்திட்டத்தின் முதன்மைப் பயனாளிகள் மேம்பட்ட தொழில்நுட்ப ஆய்வகங்களைக் கொண்ட 6,029 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர்.
  • இந்த மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையில் நடைமுறை அனுபவத்தையும், அறிவையும் பெறுவார்கள்.

தகுதி:

  • இத்திட்டத்தில் மேம்பட்ட தொழில்நுட்ப ஆய்வகங்களைக் கொண்ட அரசுப் பள்ளிகள் பங்கேற்க தகுதியுடையவை.
  • இந்தத் தகுதியுள்ள பள்ளிகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆசிரியர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும்.
  • மேலும் பங்கேற்கும் ஒவ்வொரு பள்ளியும் இந்தத் திட்டத்தில் ஈடுபட ஐந்து மாணவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

செயல்பாடுகள்:

  • இதில் பங்கேற்கும் பள்ளிகள் பல்வேறு சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில் ஈடுபடும். அவை பின்வருமாறு:
  • காய்கறித் தோட்டங்கள் அமைத்தல்
  • மழைநீர்ச் சேகரிப்பு முறைகளைச் செயல்படுத்துதல்
  • கழிவுகளைத் திறம்பட மேலாண்மை செய்தல்
  • நெகிழிப் பயன்பாட்டை ஒழித்தல்
  • விழிப்புணர்வு பேரணிகளை நடத்துதல்
  • இந்த நடவடிக்கைகள் காணொளிகள் மூலம் ஆவணப்படுத்தப்படும்.

விருதுகள்:

  • இத்திட்டத்தில் சிறப்பாகச் செயல்படும் ஐந்து பள்ளிகளும், 25 மாணவர்களும் பங்கேற்பு மற்றும் செயல்திறனின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கப்படும்.

 

2.கலைஞர் பெண்கள் உரிமைத் திட்டம்

தொடங்கப்பட்ட தினம்:

  • இந்தத் திட்டம் செப்டம்பர் 15, 2023 அன்று C.N.அண்ணாதுரையின் பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் தொடங்கப்பட்டது.

நோக்கம்:

  • தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைகள் மானியத் திட்டம் பெண்களுக்கு நிதியுதவி மற்றும் அதிகாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • குடும்பத் தலைவர்களாக அங்கீகரிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அதன் மூலம் சமூகத்தில் பாலினச் சமத்துவத்தையும், கண்ணியத்தையும் மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

அமைச்சகம்/துறை:

  • முதல்வர் மு.க. ஸ்டாலின், தலைமையிலான இத்திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டது.

பயனாளிகள்:

  • முதன்மைப் பயனாளிகள்: குடும்பத் தலைவராக அங்கீகரிக்கப் பட்ட பெண்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட பெண் பயனாளிகளை உள்ளடக்கியதாகும்.
  • இரண்டாம் நிலைப் பயனாளிகள்: திருமணமாகாத பெண்கள், விதவைகள் மற்றும் திருநங்கைகளாக குடும்பம் நடத்துபவர்கள் இரண்டாம் நிலைப் பயனாளிகளாவர்.

தகுதி வரம்பு:

  • இத்திட்டத்திற்குத் தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:
  • வயது: பெண்கள் 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு முன் பிறந்தவர்களாகவும், 21 வயது பூர்த்தியடைந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
  • குடும்ப நிலை: குடும்ப (ரேஷன்) அட்டையில் குடும்பத் தலைவராக அங்கீகரிக்கப்பட்டவர்கள், ஒரு வேளை அவ்வாறு வெளிப்படையாக இல்லையெனில் குடும்ப அட்டையில் பட்டியலிடப் பட்டுள்ள எந்தப் பெண்ணும் அதாவது 21 வயதுக்கு மேற்பட்ட எந்தப் பெண்ணும் இதற்குப் பரிசீலிக்கப் படலாம்.
  • பொருளாதார அளவுகோல்கள்: குடும்பம் பின்வரும் பொருளாதார நிலைமைகளை கொண்டிருக்க வேண்டும்:
  • ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
  • ஐந்து ஏக்கருக்கும் குறைவான நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கர் புன்செய் நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்.
  • ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கும் குறைவான மின்சாரத்தை வீட்டு உபயோகத்திற்காகப் பயன்படுத்த வேண்டும்.

முக்கிய அம்சங்கள்:

  • மாதாந்திர அடிப்படை வருமானம்: தகுதியுள்ள 10.6 மில்லியன் பெண்களுக்கு அடிப்படை வருமானமாக மாதத்திற்கு ₹1,000 வழங்கப்படுகிறது.
  • ஆண்டு மானியம்: வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, தகுதியுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண்டுக்கு ₹12,000 கூடுதலாக வழங்கப் படுகிறது.
  • அங்கீகாரம் மற்றும் உரிமைகள்: இத்திட்டம் குடும்ப நலன்களில் பெண்களின் சம அந்தஸ்தை மேம்படுத்தி, குடும்ப மற்றும் சமூகப் பொறுப்புகளில் பெண்களின் ஒரு குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை அங்கீகரிக்கிறது.

செயல்படுத்தல்:

  • விண்ணப்பத்திற்கு தனி வருமானச் சான்றிதழ்களோ, நிலப் பதிவேடுகளோ தேவையில்லை.

 

3. பசுமைத் தமிழ்நாடு திட்டம்

தொடங்கப்பட்ட தினம்: நவம்பர் 28, 2022 வண்டலூர், செங்கல்பட்டு.

நோக்கம்:

  • பசுமைத் தமிழ்நாடு இயக்கம் தமிழகத்தின் காடு மற்றும் மரங்களின் பரப்பை மாநிலத்தின் நிலப்பரப்பில் 33% ஆக கணிசமாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, காலநிலை மாற்றத்தைத் தணித்தல் மற்றும் மிகப் பெரிய அளவிலான மரம் நடும் முயற்சிகள் மூலம் பல்லுயிர்ப் பெருக்கத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

அமைச்சகம்/துறை:

  • இது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் தொடங்கப்பட்டு மேற்பார்வையிடப் படுகிறது.

பயனாளிகள்:

  • சுற்றுச்சூழல் மற்றும் சமூகம்: அதிகரித்த வனப்பகுதியின் காரணமாக மேம்படுத்தப்பட்ட காற்றின் தரம், நீர்வளம், மண் வளம் மற்றும் பருவநிலையைத் தாங்கும் தன்மை ஆகியவற்றால் தமிழகத்தின் ஒட்டு மொத்த மக்களும் இதில் பயனடைகின்றனர்.
  • உள்ளூர்ச் சமூகங்கள்: பழங்குடியினர், விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்கள், நிலையான வனவியல் நடைமுறைகள் மற்றும் பொருளாதார ரீதியாக மதிப்புமிக்க மர வகைகளை வளர்ப்பதன் மூலம் பொருளாதார ரீதியாக பயனடைகிறார்கள்.

தகுதி வரம்பு:

  • இந்தத் திட்டமானது தமிழகம் முழுவதும் உள்ள அரசு துறைகள், பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்கள் உட்பட பல்வேறு துறைகளின் பங்கேற்பை உள்ளடக்கியது.

முக்கிய அம்சங்கள்:

  • மரம் நடுதல்: இது முதல் கட்டத்தில் 28 மில்லியன் அளவிற்கு மரக்கன்றுகளை நடுவதை நோக்கமாகக் கொண்டதோடு, அடுத்த ஒரு தசாப்தம் வரையிலும் மரக்கன்றுகள் நடுவதைத் தொடர்கிறது, மேலும் இது பூர்வீக மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மர வகைகள் நடுவதை மையமாகயும் கொண்டது.
  • பொருளாதார வலுவூட்டல்: இது சந்தனம், செம்பருத்தி, தேக்கு போன்ற உயர் மதிப்புமிக்க மரங்களை வளர்க்க விவசாயிகளை ஊக்குவிக்கிறது, அதன் மூலம் உள்ளூர்ச் சமூகங்களுக்கு வருமான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்கிறது.
  • சுற்றுச்சூழல் நன்மைகள்: காலநிலை மாற்றப் பாதிப்புகள், இயற்கைப் பேரழிவு தணிப்பு ஆகியன மேம்படுத்தப்பட்ட வனப்பகுதி மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தின் மூலம் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பிற்கு வழிவகுக்கிறது.
  • தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு: புவி-குறியிடல் போன்ற டிஜிட்டல் கருவிகளானது, மரக்கன்று நடுதல் மற்றும் உயிர்வாழும் விகிதங்களைக் கண்காணிக்க பிரத்தியேக இணைய தளத்தினை (www.greentnmission.com)  பயன்படுத்துகிறது.

செயல்படுத்தல்:

  • கூட்டாண்மை: நிதி திரட்டலுக்கு வேண்டி அரசாங்கத் துறைகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனியார் நாற்று வளர்ப்பு நிறுவனங்கள் மற்றும் ஹூண்டாய் இந்தியா மோட்டார் மற்றும் மணலி தொழில்துறை தொழில்முனைவோர் சங்கம் போன்ற பெரு நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்புடன் இது செயல்படுகிறது.
  • பொது ஈடுபாடு: கல்விக் கண்காட்சிகள் மற்றும் சமூக ஈடுபாடு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பசுமையாக்கும் முயற்சிகளில் தீவிரமாகப் பங்கேற்பதை ஊக்குவிக்கிறது.
  • அங்கீகாரம்: பரந்த அளவிலான சமூக ஈடுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் மரம் வளர்ப்பு மற்றும் பசுமையாக்கும் நடவடிக்கைகளில் சிறந்து விளங்கும் தனிநபர்கள் மற்றும் விவசாயிகளை அங்கீகரித்து வெகுமதி அளிக்கிறது.

 

4.முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்

தொடங்கப்பட்ட தினம்: பிப்ரவரி 19, 2024.

நோக்கம்:

  • முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஏறக்குறைய 500,000 மிகவும் ஏழ்மையான குடும்பங்களை விரைவாக வறுமையிலிருந்து மீட்டெடுக்க, அனைத்து வகையான அரசாங்க உதவிகளையும் ஒருங்கிணைத்து, நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் அனைவரும் ஆதரவற்றோர், தனித்து வாழும் மூதாட்டிகள், ஒற்றை பெற்றோரைக் கொண்ட குடும்பங்கள், ஆதரவற்ற குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நிதி சிக்கலில் உள்ளவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய 5 லட்சம் குடிமக்களுக்கு நிவாரணம் மற்றும் நிதியுதவி வழங்குதல்.
  • இந்தத் திட்டத்தின் நோக்கம் மேற்கூறிய அந்த நபர்களை வறுமையிலிருந்து வெளியேறச் செய்வது, அவர்களை மிகவும் எளிதாக வாழத் தேவைப்படும் உதவியை வழங்குவது மற்றும் தன்னம்பிக்கை அடையச் செய்வது ஆகியனவாகும்.

அமைச்சகம்/துறை:

  • முதல்வரின் தலைமையிலும், வழிகாட்டுதலின் படியும் இது தமிழக அரசால் செயல்படுத்தப் படுகிறது.
  • இத்திட்டத்திற்காக மொத்தம் 27922 கோடி ரூபாய் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.

பயனாளிகள்:

  • மிகவும் ஏழ்மையான குடும்பங்கள்: NITI ஆயோக் அறிக்கையின்படி, இம்மாநிலத்தின் மக்கள் தொகையில் சுமார் 2.2% அளவை உள்ளடக்கிய சுமார் 500,000 குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வசிப்பதாக அடையாளம் காணப் பட்டுள்ளது.

இலக்குக் குழுக்கள்

  • ஆதரவற்ற தனிநபர்கள்
  • தனித்து வாழும் மூதாட்டிகள்
  • ஒற்றைப் பெற்றோரைக் கொண்டுள்ள குடும்பங்கள்
  • ஆதரவற்ற குழந்தைகள்
  • மாற்றுத் திறனாளிகள்

தகுதி வரம்பு:

  • குறிப்பிட்ட சமூகப் பொருளாதாரக் குறிகாட்டிகள் மற்றும் நிதி ஆயோக் நிர்ணயித்த வறுமைக் கோட்டு அளவுகோல்களின் அடிப்படையில் மிகவும் ஏழ்மையான குடும்பங்களை இலக்காகக் கொண்டுள்ளது.
  • வசிப்பிடம்: விண்ணப்பதாரர் தமிழ்நாட்டின் நிரந்தரக் குடியுரிமையாளர் ஆக இருக்க வேண்டும்.
  • குழுக்கள்: விண்ணப்பதாரர் கீழ்க்காணும் குழுக்களில் ஏதேனும் ஒன்றில் சேர்ந்திருக்க வேண்டும்:
  • ஆதரவற்றோர்
  • மூதாட்டிகள்
  • ஆதரவற்ற குழந்தைகள்
  • ஒற்றைப் பெற்றோரைக் கொண்டுள்ள குடும்பங்கள்
  • மாற்றுத் திறனாளிகள்

நன்மைகள்

  • நிதியுதவி: தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நிதியுதவியானது வழங்கப்படும்.
  • வாழ்க்கைத் தரம்: இந்தத் திட்டம் தமிழ்நாட்டின் மிகவும் ஏழ்மையில் உள்ள குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எண்ணுகிறது.
  • வறுமைக் குறைப்பு: இந்தத் திட்டத்தின் மூலம் 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் வறுமையைக் கணிசமாகக் குறைப்பதே அரசின் நோக்கம் ஆகும்.
  • பயனாளர்கள்: இந்தத் திட்டம் மூலம் 5 லட்சம் நபர்கள் நன்மைகளைப் பெறுவார்கள்.

முக்கிய அம்சங்கள்:

  • உதவி ஒருங்கிணைப்பு: வறுமை ஒழிப்புக்கான விரிவான ஆதரவை உறுதி செய்வதற்காக பல்வேறு அரசு நலத்திட்டங்கள் மற்றும் பலன்களை ஒருங்கிணைத்து வழங்குகிறது.
  • துரித வாழ்க்கை மேம்பாடு: அடையாளம் காணப்பட்ட விளிம்பு நிலை குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் சமூக-பொருளாதார நிலைமைகளை விரைவாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கவனம் செலுத்தும் அணுகுமுறை: பலன்களை அதிகரிக்கவும், திறம்பட வறுமைக் குறைப்பை உறுதி செய்யவும் மிகவும் ஏழ்மையான குடும்பங்களைக் குறி வைக்கிறது.

செயல்படுத்தல்:

  • அடையாளம் காணும் செயல்முறை: தகுதியான குடும்பங்களைத் துல்லியமாக அடையாளம் காண NITI ஆயோக் அறிக்கை மற்றும் பிற தொடர்புடைய ஆதாரங்களில் இருந்து தரவைப் பயன்படுத்துகிறது.
  • விரிவான ஆதரவு: நிதி உதவி, சமூக நலத் திட்டங்கள், திறன் மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் அடிப்படை வசதிகளுக்கான அணுகல் உள்ளிட்ட பல்வேறு ஆதரவு நடவடிக்கைகளை வழங்குகிறது.
  • கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு: வறுமை ஒழிப்பு இலக்குகளைத் திறம்பட செயல்படுத்துதல் மற்றும் இலக்குகளை அடைவதை உறுதி செய்வதற்கான இதன் முன்னேற்றம் மற்றும் இதன் பயன்பாடு பற்றிய வழக்கமான மதிப்பீடுகளை இது கண்காணிக்கிறது.

 

5. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

தொடங்கப்பட்ட தினம்: 15-09-2022, தமிழக அரசால் மதுரையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அதிகாரப் பூர்வமாகத் தொடங்கப்பட்டது.

நோக்கம்:

  • முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளி நாட்களிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குச் சத்தான காலை உணவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அமைச்சகம்/துறை:

  • மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டது.
  • இது சமூக நலத் துறை மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது.

பயனாளிகள்:

  • தொடக்கப் பள்ளி மாணவர்கள்: தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் குறிப்பாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இதில் பயன் பெறுவார்கள்.

தகுதி வரம்பு:

  • இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சத்தான காலை உணவை அரசுப் பள்ளிகளில் பயிலும் தொடக்கப் பள்ளி மாணவர்கள் அனைவரும் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.

முக்கிய அம்சங்கள்:

  • ஊட்டச் சத்து மிகுந்த காலை உணவு: பள்ளிக் குழந்தைகளின் ஊட்டச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்க, சமச்சீர் மற்றும் உள்ளூர் உணவுகளை வழங்குகிறது.
  • இலக்கு விநியோகம்: இது அதிக இரத்த சோகை விகிதங்களைக் கொண்ட மாவட்டங்கள், மாநில சமச்சீரான வளர்ச்சி நிதி (SBGF) தரவு மூலம் அடையாளம் காணப்பட்ட தொலைதூர கிராமப் பகுதிகள் மற்றும் குறிப்பிடத்தக்க அளவில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆரம்பத்தில் செயல்படுத்தப்பட்டது.
  • உடல் ஆரோக்கிய நன்மைகள்: மேம்பட்ட ஆரோக்கியம் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சிக்கு பெரும் பங்களிக்கிற வகையில் ஒவ்வொரு காலை உணவிலும் ஆற்றல், புரதம், கொழுப்பு, இரும்பு மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

  • பட்ஜெட் ஒதுக்கீடு: சத்தான உணவுகளை நீடித்த மற்றும் நிலையான முறையில் வழங்குவதை உறுதி செய்வதற்காக இத்திட்டத்தைச் செயல்படுத்த ₹33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

செயல்படுத்தல்:

  • படிப்படியான அமலாக்கம்: சுகாதார குறிகாட்டிகள் மற்றும் மக்கள்தொகை தரவு போன்ற குறிப்பிட்ட அளவுகோல்களின் அடிப்படையில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பள்ளிகள் முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக இது செயல்படுத்தப்படுகிறது.
  • உணவுப் பட்டியலின் பன்முகத் தன்மை: உணவுப் பன்முகத்தன்மை மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கு வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களுக்கு உள்ளூரில் கிடைக்கும் சிறுதானிய வகைகளைப் பயன்படுத்துவதை இது வலியுறுத்துகிறது.
  • கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு: மாணவர்களின் உடல்நலம் மற்றும் கல்விச் செயல்திறனில், தரம் அடைய மற்றும் பயன்பாட்டு மதிப்பீட்டை உறுதி செய்வதற்காக வேண்டி இதன் மீதான அமலாக்கத்தின் வழக்கமான கண்காணிப்பைச் செயல்படுத்துகிறது.

காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கம்

தொடங்கப்பட்ட தினம்: 25.08.2023

நோக்கம்:

  • தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையிலான தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு சத்தான காலை உணவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப் பட்டுள்ளது.

அமைச்சகம்/துறை:

  • மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமையிலான தமிழக அரசால் செயல்படுத்தப் பட்டது.
  • இது சமூக நலத் துறை மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது.

பயனாளிகள்:

  • தொடக்கப் பள்ளி மாணவர்கள்: தமிழகம் முழுவதும் 31,000 அரசுப் பள்ளிகளில் சுமார் 1.7 மில்லியன் மாணவர்கள் படிக்கின்றனர்.

விரிவாக்கத்தின் முக்கிய அம்சங்கள்:

  • அதிகரித்த விரிவாக்கம்: ஆரம்பக் கட்டத்துடன் ஒப்பிடும் போது, ​​அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தின் பலன்களை விரிவுபடுத்துகிறது.
  • அனைவருக்குமான உள்ளடக்கம்: தமிழ்நாட்டின் பல்வேறு பின்னணிகள் மற்றும் பரந்துபட்ட புவியியல் இடங்களைச் சேர்ந்த மாணவர்கள் அனைத்துப் பள்ளி நாட்களிலும் சத்தான காலை உணவைப் பெறுவதை உறுதி செய்கிறது.
  • மேம்படுத்தப் பட்ட ஊட்டச்சத்து ஆதரவு: ஊட்டச்சத்து உட்கொள்ளலை மேம்படுத்தவும், சுகாதாரச் சவால்களை எதிர்கொள்ளவும் உள்ளூரில் கிடைக்கும் சிறுதானியங்கள் உள்ளிட்ட சமச்சீர் உணவைத் தொடர்ந்து வழங்குகிறது.
  • சமூகத்தின் மீதான தாக்கம்: இது மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே சுகாதார விழிப்புணர்வு மற்றும் உணவுப் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கிறது, மேலும் இது ஒட்டு மொத்த சமூக ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்குப் பங்களிக்கிறது.

செயல்படுத்துதல் விவரங்கள்:

  • துவக்கம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் வரலாற்றுச் சிறப்பை வலியுறுத்தி இத்திட்டத்தின் விரிவாக்கப் பணியைத் தொடங்கி வைத்தார்.
  • பள்ளிகள் பங்கேற்பு: இந்த விரிவாக்கம் 31,000 அரசுப் பள்ளிகளை உள்ளடக்கியது என்பதோடு, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து ஆதரவைச் சமமாக அணுகச் செய்வதை உறுதி செய்கிறது.
  • தொடர்ச்சியான அர்ப்பணிப்பு: நிலையான மற்றும் உள்ளடக்கிய கல்விக் கொள்கைகள் மூலம் பள்ளி மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதில் அரசாங்கத்தின் தற்போதைய உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்