TNPSC Thervupettagam

சமூகத்திற்குப் பயன்தரும் மனிதவளம்

June 1 , 2023 591 days 318 0
  • அண்மையில் ஓர்நாள் புதுவையிலிருந்து நாகப்பட்டினம் நோக்கி மகிழுந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். வழிநெடுகிலும் சாலை பராமரிப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பல இடங்களிலும் "மாற்றுப் பாதையில் செல்லவும்' "கவனம் ஆட்கள் வேலை செய்கிறார்கள்' என்ற பதாகைகள் இருந்தன.
  • ஆட்கள் வேலை செய்வது கண்களால் காணக்கூடிய காட்சிதானே, இதற்கு ஏன் அறிவிப்பு? இங்கு ஆட்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் மீது மோதி அவர்களுக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதே அந்த அறிவிப்பின் நோக்கம். வேகமாகச் செல்லக்கூடிய வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்வதற்காக வேகத்தைக் குறைப்பதோடு மிகவும் கவனமாகவும் அந்த இடத்தைக் கடக்கவேண்டும் என்பதே நோக்கம்.
  • உடல் உழைப்பு சார்ந்த பணிகள் நிறைவடைந்தவுடன் வெளிப்படும் விளைவு போல மூளை உழைப்பு சார்ந்த இடங்களில் வெளிப்படுவதில்லை. குறிப்பாக கல்வியின் பயன் வெளிப்பட பல்லாண்டு ஆகிறது. அரசு அலுவலகங்களிலோ, குறைவான மனிதவளத்தைக் கொண்டு பணிகளை விரைவாக நிறைவு செய்ய இயல்வதில்லை.
  • அரசு அலுவலகங்களில் பெரும்பாலான பணிகள் இணையமயமான பிறகு ஓரளவுக்கு ஒரு நிறுவனத்தில் என்னென்ன சேவைகள் உள்ளன, அந்த சேவைகளைப் பெற எவ்வாறு விண்ணப்பிக்கவேண்டும், விண்ணப்பத்தின் தற்போதைய நிலை என்ன போன்றவை வெளிப்படையாகத் தெரிகின்றன. இதிலும் இன்னும் மேம்படவேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. இவ்வாறான சேவைகளை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்த போதுமான மனிதவளம் இல்லை என்பதும் உண்மையே.
  • கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் பணிகள் நடைபெற மின்னணுமயமாக்கம் உதவியாக இருந்தது என்பதை மறுக்க இயலாது. இன்னொரு பக்கம் நமது நாட்டின் மக்கள்தொகைப் பெருக்கத்தினை தொலைநோக்குப் பார்வையோடு அணுகி திட்டமிடவேண்டிய தேவையும் உள்ளது. அந்த திசையில் மக்களுக்குக் கிடைக்கும் சேவைகளை மேலும் மின்னணுமயமாக்குவதும் ஊழியர்களை அதற்காக மேலும் நியமிப்பதும் அவசர அவசியம்.
  • மக்களின் வறுமை நிலையைக் கணக்கில் கொண்டு "நூறுநாள் வேலைத் திட்டம்' எனப்படும் "மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்' நடைமுறப்படுத்தப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் பயணிப்போருக்கு இந்தத் திட்டத்தின் செயல்பாட்டைக் காணும் வாய்ப்பு கிடைக்கும். இத்திட்டத்தில் முன்பிருந்த நிலைமைக்கு இப்போது பல சீர்திருத்தங்கள் வந்துள்ளன. காலையில் குறித்த நேரத்தில் பணிகளைத் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான புகைப்படங்களையும் உள்ளீடு செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.
  • இதனால் பணிகள் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன. குறித்த நேரத்தில் பல பணிகளும் நிறைவடைகின்றன. மரம் நடுவது, அதனைப் பராமரிப்பது போன்ற பணிகளிலும் பணியாளர்கள் ஈடுபடுத்தப் படுகின்றனர்.
  • இந்த திட்டத்தில் ஈடுவோர் பொதுவாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை நிறைவு செய்த பின்னர் ஓய்வெடுக்கின்றனர். பணிகளை முழுமையாக நிறைவுசெய்த பிறகு அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று வேறு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
  • அவ்வாறு இல்லாமல் குறிப்பிட்ட நேரம் அவர்கள் அங்கேயே தங்கியிருந்துதான் செல்லவேண்டும் என முடிவு செய்யப்படுமானால், அவர்கள் ஓய்வாக இருக்கும் நேரத்தினை மேலும் நேர்த்தியாகப் பயன்படுத்தத் திட்டமிடலாம். வேலையின்மை காரணமாக பட்டதாரிகளும் போதிய கல்வித்தகுதியுடையோரும் இது போன்ற குழுக்களில் உள்ளனர். கல்வித் தகுதியுடையோர் உடலுழைப்பைக் கொடுக்க முன்வருவது ஆரோக்கியமானதே. ஆனால் இவர்களில் விருப்பமுள்ளவர்களை கிராம நிர்மாணப் பணிகளில் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட வேண்டும்.
  • திட்டமிடல் இல்லாவிடில், பெரும்பாலும் இவ்வாறான நேரம், முதல்நாள் தாங்கள் பார்த்த தொலைக்காட்சித் தொடர் குறித்த விவாதங்களிலோ அல்லது வேறு பயனற்ற விவாதங்களிலோ செலவாகிறது. இதற்கு பதிலாக படித்த இளம் பட்டதாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை அளிக்கலாம். சுகாதாரத் துறையுடன் இணைந்து தொற்று நோய்கள், தொற்றாநோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
  • நூலகத் துறையுடன் இணைந்து வாசிப்பு நிகழ்வுகளை நடத்தலாம். அன்றாடம் செய்தித்தாளில் வெளியாகியுள்ள செய்திகளை ஒருவர் உரக்க வாசிக்க மற்றவர்களைக் கேட்கச் செய்யலாம். தங்களுக்குத் தெரிந்த பாரம்பரியக் கலைகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கலாம். அவர்கள், தங்களிடமிருக்கும் விடுகதைகள், சொலவடைகள், கதைகள் போன்றவற்றைப் பகிர்வதற்கு வாய்ப்பளிக்கலாம். இளம் வயதில் பல்வேறு சூழல்களால் கல்வியை இழந்தவர்களுக்கு எழுத்தறிவு திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம்.
  • குழந்தைகளின் உரிமைகள், கல்வி குறித்த உரையாடல்களை மேற்கொள்ளலாம். கிராமப்புறங்களில் மேற்கொள்ள வேண்டிய நீர் மேலாண்மை, கழிவு மேலாண்மை குறித்த விவாதங்களை நடத்தலாம். கிராமப்புற வளங்களை எவ்வாறு மேலும் சிறந்த முறையில் பயன்படுத்தலாம் எனவும் திட்டமிடலாம்.
  • இவ்வாறு திட்டமிடும்போது, அந்தந்த பகுதிகளின் தேவை, முன்னுரிமை அடிப்படையில் விவாதங்கள் நடத்தி மக்கள் பங்கேற்போடு திட்டமிட்டால் பலன் கண்டிப்பாகக் கிடைக்கும். மக்களின் விருப்பத்திற்கேற்ப திட்டமிடும்போது பலரும் பணியிடத்தில் தங்கியிருக்கும் நேரத்தை தங்கள் முன்னேற்றத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் பயன்படுத்த வாய்ப்பும் கிடைக்கும்.
  • ஒவ்வொருவரும் தனது தனிமனித வளத்தைப் பயன்படுத்தி ஏதாவது ஒரு வகையில் சமூகத்திற்குப் பயன் தரும் செயலில் ஈடுபடவேண்டும். குழுவாக இருக்கும்போது வீணாகும் நேரத்தினைப் பயனுள்ளதாகப் பயன்படுத்திக் கொள்ளவும் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இவ்வாறான திட்டமிடுதல் முதலில் கடினமாகத் தோன்றினாலும், அதன் விளைவாக அவர்களுக்குக் கிடைக்கும் ஆளுமைத் திறன் அவர்களைப் புதுப்புது செயல்பாடுகளில் ஈடுபட உந்து சக்தியாக அமையும்.

நன்றி: தினமணி (01 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்