சமூக ஊடகத்தை ஆக்கிரமிக்கும் நட்சத்திரச் செல்வாக்கு!
- யூடியூபில் தனது சொந்த அலைவரிசையைத் தொடங்கிய 90 நிமிடங்களுக்குள் 10 லட்சம் சந்தாதாரர்களைப் பெற்றிருக்கிறார் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. மிக வேகமாக இந்த எண்ணிக்கையை அடைந்த அலைவரிசை என்னும் பெருமை அவரது அலைவரிசைக்குக் கிடைத்திருக்கிறது.
- அதேவேளையில், இந்தச் சாதனையின் பின்னணியில் ரொனால்டோவின் புகழ் வட்டம் முக்கியப் பங்குவகிப்பதுதான் கவனிக்கத்தக்க விஷயம். ரொனால்டோ ரசிகர்கள் அவரை யூடியூபில் வரவேற்க விரும்பியதன் விளைவுதான் சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் நிகழ்ந்திருக்கும் இந்தச் சாதனை.
- சமூக ஊடகம் என்பது பயனாளிகளை மையமாகக் கொண்ட இணைய சேவை எனப் புரிந்துவைத்துள்ள மனது, நிஜ உலகின் நட்சத்திரச் செல்வாக்கு சமூக ஊடக வெளியிலும் பிரதிபலிப்பதை எப்படிப் புரிந்துகொள்வது எனப் புரியாமல் தடுமாறுகிறது. சமூக ஊடகத்தில் சராசரிப் பயனாளிகள் கணிசமான பின்தொடர்பாளர்கள் அல்லது சந்தாதாரர்களைப் பெறுவதற்குப் பெரிதும் மெனக்கெட வேண்டியிருக்கும் நிலையில், நட்சத்திர அந்தஸ்து மிக்கவர்கள் சமூக ஊடக வெளிக்கு வரும்போது, அவர்களுக்கான ஆதரவு தங்கத்தட்டில் வைத்து வழங்கப்படுவது குறித்து நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
- நட்சத்திரங்கள் நன்கு அறியப்பட்டவர்களாக இருப்பதால், அவர்களுக்கான சமூக ஊடக ஆதரவும் அதிகமாக இருப்பது இயல்பானது என இதற்குப் பதில் அளிக்கப்படலாம். ஆனால், இந்த ஒப்பீடு எண்ணிக்கை அடிப்படையிலானது அல்ல: மாறாக, சமூக ஊடகத்திலும் எண்ணிக்கை சார்ந்த அளவுகோலுக்கு ஏன் நாம் மாறிவிட்டோம் என்பதுதான் கேள்வி. நிஜ உலகில் செல்வாக்கை அளவிடுவதுபோலவே, சமூக ஊடக வெளியிலும் ஏன் செல்வாக்கை நாம் கணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறோம்?
பயனர்கள் வெளி:
- சமூக ஊடக வெளி என்பது உரையாடல் பரப்பு என்று சொல்லப்படுவதில்லையா? அங்கு கருத்துப் பரிமாற்றம்தானே முக்கியம். அதைவிட முக்கியமாக, இந்தப் பரப்பு பயனர்களுக்கானது அல்லவா? காரணம், பயனர்கள் உள்ளடக்கத்தை உருவாக்கிப் பகிர்வதன் மூலம், தங்களுக்குள் தொடர்புகொள்ளப் பயன்படுத்தும் இணைய சேவைகளே சமூக ஊடகம் என வரையறுக்கப்படுகின்றன.
- சமூக ஊடகம் பயனர் வெளி என்பதால், இங்கு பிரபலங்களோ, நட்சத்திரங்களோ வரக் கூடாது என்பதல்ல: அவர்கள் வரட்டும், வர வேண்டும். ஆனால், நட்சத்திரங்களாக அல்ல, நண்பர்களாக, பயனர்களாக!
- உண்மையில், நட்சத்திரங்கள் அல்லது பிரபலங்கள் ரசிகர்களோடு நேரடியாகத் தொடர்புகொள்ள வழிவகுக்கும் என்பதே சமூக ஊடகத்தின் பலன்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தத் தொடர்புகொள்ளுதல் உரையாடலுக்கும், இன்னும் நெருக்கமான புரிதலுக்கும் வழிவகுக்கும். மாறாக, நட்சத்திரங்களின் சமூக ஊடகப் பிரவேசத்திலும் பயன்பாட்டிலும் இப்போது நிகழ்வது வெற்றுக் கொண்டாட்டமாகவே இருக்கிறது.
- இந்தக் கொண்டாட்டத்தின் வணிக நோக்கிலான பிரதிபலிப்பாகச் சமூக ஊடகப் புள்ளிவிவரங்கள் அல்லது எண்ணிக்கைகள் அமைகின்றன. சமூக ஊடகம் என்னும் பயனர் வெளி வணிகமயமாக்கப்பட்டிருப்பதன் விளைவு இது. சமூக ஊடகச் சேவைகள் உரையாடலுக்கான கருவியாக அல்லாமல், விளம்பர நோக்கில், அதற்கான உத்திகளோடு பயன்படுத்தப்படுவதால், இதில் செல்வாக்கும் வீச்சும் முக்கியமாகி, எண்ணிக்கை விளையாட்டாக மாறிவிடுகிறது.
விளம்பர நோக்கம்:
- பதிவுகளும் பகிர்வுகளும் ஒரு தொழில்முறைத்தன்மையோடு, திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றன. எல்லாவற்றிலுமே மேற்பூச்சும் அலங்காரமும் மட்டுமே மின்னுகின்றன. மனம் திறந்த உரையாடலுக்குப் பதிலாக எழுதித் தயார் செய்யப்பட்டு, ஒத்திகை பார்க்கப்பட்ட பதிவுகள் தொழில்முறை வல்லுநர்களின் மேற்பார்வையில், விளம்பரக் கலைஞர்களின் உதவியோடு பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.
- சமூக ஊடக வெளியிலும், நட்சத்திரங்கள் புகழ் மகுடங்களோடு மட்டுமே வலம்வருகின்றனர். பயனர்களோ ரசிகர்களாகிக் கைத்தட்டலைத் தொடர்கின்றனர். சமூக ஊடகத்தின் நெடிய வரலாற்றில் நாம் வந்தடைந்திருக்கும் கட்டம் இதுதான்.
- அதேநேரம், சமூக ஊடகம் என்பது பாரம்பரிய ஊடகங்களில் இருந்து வேறுபட்ட தன்மை கொண்டது எனச் சொல்லப்படுவதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதுவரையான வெகுமக்கள் ஊடகங்கள், மேலிருந்து கீழே தகவல் அளிக்கும் வகையில் செயல்படும் இயல்பு கொண்டவை. ஓரிடத்தில் இருந்து எண்ணற்றவர்களுக்குத் தகவல் அளிக்கும் செயல்முறையைக் கொண்டவை.
- வெகுமக்கள் ஊடகத்தின் - ஒன்றில் இருந்து பலருக்கான (one-to-many) தகவல் கடத்தும் முறைக்கு மாறாக, ஒரே நேரத்தில் பலர் பலரோடு (many-to-many) தொடர்புகொள்ள வழி செய்வதே சமூக ஊடகத்தின் தனித்தன்மைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால், மேற்கண்டதில் நிகழ்வது கடத்துதல் அல்ல பகிர்வு என்பது கவனிக்கத்தக்கது.
- அதோடு சமூக ஊடகத்தின் மற்றொரு ஆதார அம்சமாகச் சொல்லப்படுவது அதன் பங்கேற்புத்தன்மை. பயனர்கள் இதில் கருத்துத் தெரிவிக்கலாம், உரையாடலாம், வாதிடலாம், புதிதாக உருவாக்கவும் செய்யலாம். பயனர்கள் ஒத்த கருத்துகளாலும், ஒருமித்த ஆர்வத்தாலும், ஒன்றுதிரண்டு தங்களுக்கான சமூகத்தை அமைத்துக்கொள்ள வழிவகுப்பதே சமூக ஊடகத்தின் மற்றொரு முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.
பயனர்களே கேளுங்கள்!
- இந்தப் பயனர் சமூகங்களின் செல்வாக்கை உணர்ந்தே ரசிகர்களுடன் உரையாடச் சமூக ஊடக வெளிக்கு, அவர்கள் முன் தங்கள் இருப்பை உணர்த்த பிரபலங்கள் வருவதாகக் கொள்ளலாம். இந்த இடத்தில், வலுவான இணையச் சமூகங்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘ரெட்டிட்’(Reddit) தளத்தில், அடிக்கடி நிகழ்த்தப்படும் ‘ஆஸ்க் மீ எனிதிங்’ (AMA) இணையச் சந்திப்புகளை நினைத்துப் பார்ப்பதும் பொருத்தமாக இருக்கும்.
- பிரபலங்களும் நட்சத்திரங்களும் எந்த முன்நிபந்தனையும் இல்லாமல், திறந்தமனதோடு, ரசிகர்கள் (பயனர்கள்) கேட்கும் எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்கத் தயார் எனும் மனநிலையில் வந்து நிற்பதே இந்த இணைய உரையாடலின் முக்கிய அம்சம். அமெரிக்க அதிபர் உள்ளிட்ட தலைவர்களும், முன்னணித் தொழில் முனைவோரும் ரெட்டிட் சமூகத்தின் முன்னால் ‘உங்கள் கேள்விகளைக் கேளுங்கள்’ என வந்து பதில் சொன்னது உண்டு.
- இப்படிப் பயனர்களை மையமாகக் கொண்ட சமூக ஊடக வெளி, மெல்ல வணிக நோக்கம் மேலோங்கும் ஊடக வெளியாக மாற்றப்பட்டிருக்கிறது. இதில் நட்சத்திரங்களும் பிரபலங்களும் வர்த்தக எதிர்பார்ப்புடன், வணிக உத்திகளோடு வருவது கவலைகொள்ள வைக்கிறது.
- நட்சத்திரங்கள் வருகை மட்டும் அல்ல, முன்னணி இயக்குநர்கள் அல்லது நடிகர்களின் படங்களுக்கான முன்னோட்டக் காட்சிகள் வெளியானால்கூடச் சில மணி நேரத்தில் இத்தனை பார்வைகள் என எண்ணிக்கைக் கணக்கு கொண்டு பார்ப்பது வணிக நோக்கம்தானே. இந்தப் பார்வை குவிவதில் சமூக ஊடக மேடைகளின் அல்காரிதம்கள் பங்களிப்பும் இயல்பான ஒன்றுதானா?
உரையாடல் எங்கே?
- ஒரு கிரிக்கெட் வீரர் யூடியூப் அலைவரிசை மூலம் ரசிகர்களைச் சந்திக்கும்போது, அவரது புகழையும் செல்வாக்கையும்விட, கிரிக்கெட் கள அனுபவங்களையும், வல்லுநர் பார்வையையும் நேரடியாகப் பகிர்ந்துகொள்ள வருகிறார் என்பதைத்தானே முக்கியமாகக் கருத வேண்டும். அவர் பகிர்ந்துகொள்ளும் கருத்துதான் முதன்மையானதே தவிர, அவருடைய பகிர்வுகளுக்கான பார்வையாளர் எண்ணிக்கை அல்ல; அதோடு, ரசிகர்களின் கருத்துகளுக்கு அவர் பதில் கருத்து அளித்து உரையாடுவதுதான் இன்னும் முக்கியம்.
நிற்க, இந்த அலசல் ரொனால்டோ யூடியூப் சாதனை தொடர்பானது அல்ல:
- ரொனால்டோவுக்கு முன்னரே எண்ணற்ற நட்சத்திரங்களை நாம் சமூக ஊடகத்தில் எண்ணிக்கை கொண்டு அளவிட்டு மகிழ்ந்திருக்கிறோம். இதை முன்னெடுப்பதிலும், ஊக்குவிப்பதிலும் முன்னணிச் சமூக ஊடக சேவைகளுக்குப் பங்கிருக்கிறது. விளம்பர நோக்கமும் லாப வேட்கையுமே அவற்றின் இலக்காக இருக்கலாம். அதற்கு அல்காரிதம்கள் துணைநிற்கலாம்.
- இது சமூக ஊடகத்தின் ஆதாரத்தன்மை மாறி, அவற்றின் வளர்ச்சிப் பாதை தடம்மாறுவதன் அடையாளமாகவும் அமைகிறது. மக்கள் போராட்டங்களுக்கு வழிவகுத்த சமூக ஊடகங்கள், இப்போது அரசியல் கட்சிகளின் பிரச்சாரக் கருவிகளாக மாற்றப்பட்டு வருவதையும் இங்கு பொருத்திப்பார்க்க வேண்டும். மற்றொரு பக்கம் இன்னும் பலரால், துவேஷம் சார்ந்த கொள்கைகளையும், சதிக் கோட்பாடுகளையும் முன்னெடுக்கப் பயன்படுத்தப்படுவது இன்னொரு வேதனை.
- எல்லாப் பயனாளிகளும் சமூக ஊடகங்களில் புழங்குவதால்தான் நட்சத்திரங்களும், அரசியல் தலைவர்களும், இன்னும் பிறரும் அவர்களைத் தேடிச் சமூக ஊடகங்களுக்கு வருகை தருகின்றனர். ஆனால், அவர்கள் பயனர்களை வென்றெடுப்பதை எண்ணிக்கைக் கண்கொண்டு பார்க்கப் பழகுவதால், புதிய ஊடகத்தின் தன்மையோடு அறிமுகமான சமூக ஊடகத்தின் ஆற்றலைப் பயனர்கள் கைநழுவ விட்டுக்கொண்டிருக்கின்றனர் என்கிற பெருவருத்தமே மேலிடுகிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (24 – 09 – 2024)