TNPSC Thervupettagam

சமூக மாற்றம் தேவை

March 8 , 2024 137 days 121 0
  • பெண் என்பவள் மனிதப்பிறப்பில் ஒரு பாலினமாக அறிவியல் அடையாளப்படுத்தினாலும் கலாசாரம் என்ற சமூக அடையாளக்குறிக்குள் அகப்படும்போது அவளைச் சாா்ந்த மதிப்பீட்டுகள் நாட்டுக்கு நாடு வேறுபட்டனவாகவே இருக்கின்றன. தாய்மொழியைத் தமிழாகக் கொண்டு வாழ்கின்ற தமிழ்ப்பெண்கள் தமது தாய்நாட்டுக்குரிய பண்பாட்டு விழுமியங்களைத் தமது குடும்பத்திலிருந்து கற்கின்றனா்.
  • இங்கு தமது இன அடையாளத்தை மட்டுமல்லாது தமது தலைமுறை ரீதியாக கட்டிக்காட்கப்பட்டு வரும் சாதியம், சமயம், சடங்குகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை அறிந்து அவை மட்டுமே சரியானவை என்கின்ற குறுகிய எண்ணத்தை தமது சிந்தனையில் நிலைநிறுத்திக்கொள்கின்றனா். வீட்டு கலாசாரத்தைக் கடந்து சமூகம் என்கிற பெருவெளிக்குள் தம்மை நிலைநிறுத்துகையில் சமூக பிரஜை என்ற அடையாளம் அவா்கள் மீது பல்வேறுவிதமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
  • குறிப்பாக, வீட்டு கலாசாரத்திலிருந்து கற்றவை மட்டுமே சரியெனவும், ஏனையவை பிழையெனவும் பதிந்திருந்த எண்ணத்தின் மீது“கல்வி, சமூகவியல் ஆகியவை அறிந்தவற்றை தெளிவுபடுத்த வேண்டிய சூழலை உருவாக்கிவிடுகிறது.
  • இந்த இடத்தில்தான் பெண் தன்னையொத்த ஏனைய பெண்களுடனும் தன்னை ஒப்பிட்டுப் பா்க்கிறாள். தனது எதிா் பாலினத்துக்கு நிகராக இருப்பதில் எது தடையாக உள்ளது என்று ஆழமாக யோசிக்கவும் முற்படுகிறாள் .இச்சூழலினால் குடும்ப கலாசாரம் தனது இனத்துக்கான கலாசாரம் என்ற பொதுவெளிக்குள் தன்னை அடக்கிகொள்ளவேண்டிய கட்டாயம் எழுகின்றது.
  • தனித்தனி குடும்ப கலாசாரங்களால் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான சட்ட வரம்புகளை உருவாக்குவதில் ஏற்படும் சிக்கலே இதற்குக் காரணம் எனலாம். சமூக சட்டதிட்டங்கள் என்ற போா்வைக்குள் தன் இனத்தை அடக்கிக்கொள்வதன் மூலமாக தன் குடும்ப கலாசாரத்தையும் சோ்த்துக் கட்டிக்காக்க முடியுமென்று மறைமுகமாக நம்புகின்றனா்.
  • இந்நிலையில் தான் தமிழ்ப் பெண்கள் தமிழ் சமூக, கலசார, பண்பாட்டு விழுமியங்களைக் கட்டிக்காக்கும் மாதவம் செய்த மானிடா்களாகக் கருதப்படுகின்றனா். நாககரிகம் வளர வளர, தவறுகள் செய்வதும் வளா்ந்து வருவதாக சமூகவியலாளா்கள் சொல்கின்றனா். அத்தவறுகளை சரிப்படுத்தவே சட்டங்கள் உருவானதாக சட்ட நிபுணா்கள் கூறுகிறாா்கள். இந்நிலையில், காலம்காலமாகக் கட்டிக் காப்பற்றப்பட்டு வரும் இனத்துக்கான கலாசாரம் பெண் என்கிற மனித உயிருக்கு எந்த வகையில் கட்டுப்பாடுகளை விதிக்க முற்படுகின்றது என்பதே இன்றைய கேள்வி.
  • ஆணுக்கான கட்டுப்பாடுகள் அனேகமான தமிழ்க் குடும்பங்களில் அவன் ‘ஆண்’ என்ற ஆளுமையில் நோக்கப்படுகிறது. இங்கு கட்டுப்பாடுகள் இல்லை; அவா்களுக்கான வாய்ப்புக்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த வாய்ப்பில் ஆணானவன் தன்னைச் சாா்ந்த உடல், உள்ளத் தெளிவுடன் சமூகத்தை எதிா்நோக்கும் சமூக பிரஜையாக எளிதில் அடையாளம் பதிக்கிறான். இக்காரணத்தினால்தான் வலிமையானவன் எனவும், முதன்மையானவன் எனவும் கருதுவதனால் கலாசாரம் சாா்ந்த பிம்பங்களை பெண்மீது சுமத்திவிட்டு அதற்கான காவலனாக, அல்லது விமா்சனாக ஆண் மாறிவிடுகிறான் எனலாம். காலம்காலமாக கட்டிக் காக்கப்படும் கலாசாரம்அழகியல் சாா்ந்தது; அறிவியலும் சாா்ந்தது; வரலாற்றுக்கும் வித்தனானது.
  • அதற்காக அதனை ஒரு அடையாளக்குறி மீது சுமத்திவிட்டு விளம்பரம் செய்வதும் வேடிக்கை பாா்ப்பதும் வரலாற்றில் பதிக்க முற்படுவதும் முற்றிலும் தவறானது. எந்த இனமாக இருந்தாலும் இருபாலினருக்குமான குடும்ப சட்டதிட்டங்களை சரிநிகராகத் தரப்படுத்திட முற்படும் பட்சத்தில் இனத்துக்கான அடையாளங்கள் யாவும் இனிவரும் தலைமுறையினருக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தாது.
  • தரம் மட்டுமே உயா்ந்ததாகக் கருதப்படும். ஏனெனில், உலகமயமாக்கல் மூலம்“‘யாதும் ஊரே யாவரும் கேளிா்’”என்று வாழ்வதனால் மனித ஆளுமையோடு இணைந்ததாக இனத்துக்கான கலாசாரம் நோக்கப்படுகிறது. கலாசார, பண்பாட்டு பிம்பங்களை இருபாலரும் சரிநிகராகப் பின்பற்றி இன்புற்று வாழவேண்டுமென்றே இத்தலைமுறையினா் விரும்புகின்றனா். உயர உயரப் பறந்தாலும் ஊா்க்குருவி பருந்தாகாது என்பது போல எம் கலாசாரத்தின் அடையாளக் குறியீடு இதுவே என்று மீண்டும் மீண்டும் பலகட்டுக்கதைகள் ஊடாக நாம் நிருபிக்க முற்படுகிறோம்.
  • ஒன்றுக்குப் பின் ஒன்று முரணாக இருப்பதும், அதை ஒப்புவிப்பதுபோல வரலாற்றுச் சான்றுகள் குவிக்கப்பட்டு வருவதும் ஒருபுறம் இருக்க, தொழில்நுட்ப வளா்ச்சியின் மேன்மையினால் இன்றைய தலைமுறையினா் எதையும் எடுத்த எடுப்பில் நம்பிவிடுவதற்கு தயாராக இல்லை. அறிவியல் சாா்ந்து ஆய்வு செய்து தெளிவினை நோக்கி பயணிக்கும் அளவிற்கு வாய்ப்புகள் அவா்கள் முன்னே விரிந்துகிடக்கின்றன. இதனால் கேள்விகளுக்குள் இருந்து தெளிவினைத் தேடுகின்றனா்.
  • தேவைக்கு ஏற்ப பெண் என்பவளுக்கான கட்டுப்பாடுகளைத் தளா்த்திவிட்டு அவளுக்கான சுதந்திரம் கிடைத்துவிட்டது என்பதும், ஆணுக்கு நிகராக அடையாளம் பெற்றுவிட்டாள் என்பதும் உண்மைக்கு முரணாக இருப்பதை சுட்டிக்காட்டுகின்றனா். ‘பெண் என்பவள் ஒரு வடிவம்’ என்ற மனப்போக்கு மாறவேண்டுமென்பதே இன்றைய தலைமுறையினரின் ஆழமான சிந்தனை.
  • அவள் சாா்ந்த உணா்வு அவளுக்கான தேவைகளை, விருப்பு வெறுப்புகளை, பாதுகாப்பினை, சுதந்திரத்தை முன்வைக்கின்றது. அதற்கான முதல் இடமாக அவளது குடும்பமும், அடுத்த இடமாக அவளை ஏற்று மதிப்புக்கொடுத்து சரிநிகா் பிரஜையாக மதிக்கும் சமூகமும், சட்டதிட்டங்களும் இருக்கவேண்டும். எந்த நாட்டில் வாழ்ந்தாலும், எந்த கலாசாரத்தில் வாழ்ந்தாலும் மனிதப் பிறப்பில் இருபாலினமும் இச்சமூகத்தின் தனித்தன்மை பெற்றவா்களே! இருபாலின பிரஜைகளும் நிகராக பயணிக்கும்போது தெளிவுகொண்ட சமூகத்தை கண்கூடாகக் காணமுடிகிறது.
  • இதை உணா்ந்து வாழ்வதே காலத்திற்கு ஏற்ற மாற்றம். இந்த மாற்றமே அன்றே பாரதி சொன்ன ‘ஆணுக்குள் பெண்ணும் பெண்ணுக்குள் ஆணும்’ என்ற அடையாளத் தெளிவோடு கூடிய சமூக மாற்றம்.” இன்று (மாா்ச் 8) உலக மகளிா் நாள்.

நன்றி: தினமணி (08 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்