- டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அலங்கார ஊர்திகள் அணிவகுப்புக்குத் தமிழ்நாட்டின் சார்பில் முன்மொழியப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவ மாதிரிகள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், அவ்வீரர்களின் உருவங்களுடன் கூடிய ஊர்திகள் சென்னையில் நடைபெறும் விழாவில் அணிவகுக்க உள்ளன.
- இந்த ஊர்தி, தமிழ்நாடு முழுவதும் மக்களின் பார்வைக்காக அனுப்பிவைக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- டெல்லி அணிவகுப்பில் தமிழ்நாட்டின் ஊர்தி பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படாததால், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்புக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்ற வருத்தமும் எழுந்துள்ளது.
- இந்தியாவின் வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டத்தில் முன்னோடிகளாகத் தங்களது உயிரைத் தியாகம் செய்தவர்கள் தமிழர்கள். ஆனால், அவர்களின் தியாகங்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே பரவலாகப் பேசப்படுவதில்லை.
- தமிழ்நாட்டுக்குள் பேசப்படுவதிலும்கூடத் தயக்கங்கள் உண்டு. அதுவே, விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மற்ற மாநிலங்களைச் சேர்ந்த இந்தியச் சகோதரர்களுக்கு முழுமையாகத் தெரியாமல் போனதற்கும் காரணம்.
- ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய இந்தியாவின் முதல் ராணி வேலுநாச்சியார், அவருக்கு ஆதரவாகக் களத்தில் நின்ற மருது பாண்டியர்கள், சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி நடத்திய வ.உ.சிதம்பரனார், தனது எழுத்துகளால் விடுதலைத் தீ மூட்டிய பாரதி என்று எல்லோரின் மீதும் இங்கு சாதியச் சாயங்களைப் பூசி வைத்திருக்கிறோம்.
- ஒவ்வொரு சமூகத்தவரும் தங்களைச் சேர்ந்த தலைவர்களின் பெயர்களை மட்டுமே நினைவுகூரும் வழக்கமானது சாதி, மதங்களைக் கடந்த நிலையில் தமிழர்கள் நடத்திய விடுதலைப் போராட்டங்களைத் தேசிய அளவில் கவனம்பெறாமல் செய்துவிட்டன.
- வேலுநாச்சியாரின் உருவம் என்பது அவரையும் அவர் சார்ந்த சமூகத்தவரையும் மட்டுமே குறிப்பது அன்று.
- அவரின் தலைமையை ஏற்றுப் போராடிய சகலரின் தியாகங்களையும் நினைவில் நிறுத்துவது. வேலுநாச்சியாரை அடுத்து சிவகங்கையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற வேங்கை பெரிய உடையணத் தேவரே, ஆங்கிலேயர்களால் நாடுகடத்தப்பட்ட இந்தியாவின் முதல் அரசர்.
- 1857-ல் நடந்த சுதந்திரப் போராட்டத்தின்போது அரை மனதோடு அரசராக முடி சூடிக் கொண்ட இரண்டாம் பகதூர் ஷா ரங்கூனுக்கு நாடுகடத்தப்பட்டது இந்திய வரலாற்றில் இன்றும் பேசப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டு அரசர் நாடுகடத்தப்பட்டது சொந்த மண்ணிலேயே முக்கியத்துவம் பெறவில்லை.
- அவரோடு பினாங்குத் தீவுக்கு நாடுகடத்தப்பட்ட எழுபத்து மூவரில் அமல்தாரர் ஜெகந்நாத அய்யரும் உண்டு, கத்தோலிக்கக் கிறிஸ்தவரான மணக்காடு சாமியும் உண்டு, திண்டுக்கல் ஷேக் உசேனும் உண்டு.
- தமிழர்களின் தேசிய உணர்வுக்கு சாதியும் மதமும் என்றுமே தடையாக இருந்ததில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சார்புநிலைகள் இல்லாமல் சரித்திரத்தை அணுக வேண்டும்.
- புகைப்படக் காட்சிகளும் அலங்கார ஊர்தியும் தமிழ்நாட்டு மக்களிடம் தேசப்பற்றை உருவாக்கும் அதே வேளையில், தமிழ்நாட்டின் பங்களிப்புகள் குறித்த வரலாற்று ஆய்வுகளையும் ஆவணங்களையும் ஆங்கிலத்தில் மட்டுமின்றி பிற இந்திய மொழிகளுக்குக் கொண்டுசெல்வதற்கான முயற்சிகளையும் தொடங்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (26 - 01 - 2022)