- நரேந்திர மோடி அரசு, 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டப் பயனாளிகளுக்கான உணவு தானியம் வழங்கும் திட்டத்தை மாற்றி அமைத்துள்ளது. இந்த முடிவை ஒட்டி பல குழப்பங்கள் உருவாகியுள்ளன.
- இந்த மாற்றம் இரண்டு திட்டங்களை, புத்திசாலித்தனமாக ஒன்றிணைக்கிறது. முதலாவது, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி, பயனாளிகள், மிகக் குறைந்த தொகையைச் செலுத்தி உணவு தானியங்கள் பெறும் முறை, அடுத்த ஒரு வருடத்துக்கு இலவசம் ஆக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது மாற்றம் மிக முக்கியமானது. பிரதமரியின் வறுமை மேம்பாட்டு உணவு தானியத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
முதலாவது மாற்றம்
- முதலாவது மாற்றத்தினால் பெரும் விளைவுகள் எதுவும் இல்லை. தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டப் பயனாளிகள், மாதம் 5 கிலோ உணவு தானியத்தைக் குறைந்த விலையில் பெறத் தகுதியானவர்கள். இன்று வரை கோதுமை ரூ.2, அரிசி ரூ.3 என ஒரு கிலோவுக்கு இத்தொகையைக் கொடுத்துப் பெற்றுக்கொண்டிருந்தனர். ஒரு வருடத்துக்கு, அந்தப் பணம் கொடுக்கத் தேவை இல்லை என அரசு அறிவித்துள்ளது. இது ஒவ்வொரு பயனாளிக்கும் மாதம் ரூ.10 - ரூ.15 தொகையை மிச்சப்படுத்தும். இதனால் பயனாளிகளுக்குப் பெரும் பயன் ஏதும் இல்லை. ஒன்றிய அரசுக்கு, வருடம் ரூ.15,000 கோடி வரை கூடுதல் நிதிச்சுமை; ஆனால், இது பெரும் செலவினம் அல்ல.
- ஆக, மக்களுக்கும் அரசுக்கும் மேற்கண்ட முடிவு பெரிய விளைவுகள் எதையும் தரப்போவதில்லை. ஆனால், அரசியல் ஆதாயத்தைத் தரும் புத்திசாலித்தனமான நகர்வு இது. இந்த இனிப்பைப் பூசி, இன்னொரு திட்டமான பிரதமரின் வறுமை ஒழிப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தானியத்தை நிறுத்துவது என்னும் கசப்பு முடிவைக் கொடுக்க இதுவும் உதவும்.
- இதனால், உணவு தானியம், பிரதமரின் கனிவினால் மக்களுக்கு விலையில்லாமல் கிடைக்கிறது என்னும் ஒரு பிம்பம் உருவாகும். ஆனால், உண்மை என்னவெனில், ஏற்கெனவே இருக்கும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை, ஒரு சிறு மானியத்துடன் வழங்குகிறார். அவ்வளவே! இலவச உணவு என்பது மக்கள் மனத்தில் பெரும் கனவுகளை உருவாக்க வல்லது.
இரண்டாவது மாற்றம்
- பொருளாதாரரீதியாக, இரண்டாவது முடிவுதான் முக்கியமானது. பிரதமரின் வறுமை ஒழிப்பு மேம்பாட்டு தானிய வழங்கும் திட்டமானது 2020 ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இது தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டப் பயனாளிகளுக்கும், அந்த்யோதயா திட்டப் பயனாளிகளுக்கும் இலவசமாக வழங்கப்பட்டுவந்தது. இது ஏழைக் குடும்பங்களுக்கு மிகப் பெரும் பொருளாதார ஆதரவாகவும், அரசுக்கு மிகப் பெரும் செலவினமாகவும் இருந்ததுவந்தது. தற்போது, இந்த முடிவினால், அரசுக்குப் பெரும் பணம் மிச்சமாகிறது.
- பிரதமரின், இந்தத் தானிய வழங்கும் திட்டம் இவ்வளவு விரைவாக நிறுத்தப்படுவதை, அண்மைக்கால உணவு தானியக் கொள்முதல் மற்றும் விநியோகப் போக்குகளின் பின்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும். 2013ஆம் ஆண்டில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர், தேவைக்கு அதிகமாக உணவு தானியக் கொள்முதல் செய்யும் போக்கு தொடங்கியது.
- உணவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் பொது விநியோகத் திட்டங்களுக்கு வருடம் 6 கோடி டன் உணவு தானியங்கள் தேவை. ஆனால், அரசின் கொள்முதல், அதைவிட அதிகமாகத் தொடங்கி, அரசின் தானிய இருப்பு இரண்டு ஆண்டுகள் முன்பு வரை தொடர்ந்து அதிகரித்துவந்தன.
- பிரதமரியின் ஏழை மக்கள் மேம்பாட்டு தானிய திட்டம் இந்த நிலையை முழுவதுமாக மாற்றியது. பொது விநியோகத் தேவைகள் இரு மடங்காக அதிகரித்தன. அதன் விளைவாக, அரசிடம் இருந்த தானிய அளவு வெகுவாகக் குறைந்தது. 2022ஆம் ஆண்டு அரசின் கொள்முதல் குறைந்தது, அரசின் கையிருப்பை மேலும் பாதித்தது. பிரதமரின் திட்டம் தொடர்ந்திருந்து, கொள்முதல் அதிகரிக்காமல் இருந்திருந்தால், அரசின் உணவு தானியக் கையிருப்பு அபாயகரமான அளவை எட்டியிருக்கும். கொள்முதல் அதிகரிக்கப்படாமல் போனால், இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவதே சிரமமாக மாறியிருக்கும்.
- ஆனால், அப்படி இந்தத் திட்டத்தைத் தொடர்வதும், ஏழைக் குடும்பங்களை ஆதரிக்கச் சிறந்த வழியல்ல. இதன் காரணங்கள் இரண்டு. முதலாவது, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் பிரதமரின் ஏழைகள் மேம்பாட்டுத் தானியத் திட்டம் இரண்டும் சேர்ந்து, ஏழைகளுக்கு மாதம் 10 கிலோ உணவு தானியத்தை வழங்குகின்றன. இது சராசரி மனிதருக்கு மாதம் 12 கிலோ தேவை என்னும் இந்திய மனித வள மேம்பாட்டு ஆய்வறிக்கை நிர்ணயித்த அளவைவிடக் கொஞ்சமே குறைவு.
சத்தீஸ்கரின் அணுகுமுறை
- தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பயனாளிகள் பலரும், தங்கள் தானியத் தேவைகளை உள்ளூரில் வேளாண் பணி செய்வதன் மூலமும் பெற்றுக்கொள்கிறார்கள். எனவே, பொது விநியோகத் திட்டத்தின் வழியே அதிகமான உணவு தானியங்களைப் பயனாளிகளுக்கு வழங்குவது செயல் திறன் குறைவான வழியாகும்.
- இங்கே, சத்தீஸ்கர் மாநிலம் மிகவும் நல்லதொரு அணுகுமுறையை முன்னெடுத்துள்ளதை நாம் கவனிக்க வேண்டும். தனிநபர் ஒருவருக்கு 7 கிலோ உணவு தானியத்தை வழங்கிவிட்டு, அத்துடன் பருப்பு, சமையல் எண்ணெய் என மற்ற உணவுப் பொருட்களையும் கூடுதலாக வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் கூடுதல் பயனாளிகளையும் சேர்த்துள்ளது.
- பிரதமரின் வறுமை ஒழிப்பு மேம்பட்டு உணவு தானியத் திட்டத்தில், ஜார்க்கண்ட் போன்ற சில மாநிலங்களில், பெருமளவு ஊழல் நடக்கிறது. இதற்கான பல சந்தர்ப்ப சாட்சியங்கள் உள்ளன. இதற்கு முக்கிய காரணம், பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய பயன்கள் என்னவென்று தெரியாமல் இருப்பதாகும். இந்த அறியாமையைப் பயன்படுத்தி, ஊழல் நடக்கிறது.
- சுருங்கச் சொல்வதனால், பிரதமரியின் வறுமை ஒழிப்பு மேம்பாட்டுத் திட்டம் மீளாய்வு செய்யப்பட வேண்டுமே தவிர, மாற்று திட்டங்கள் எதுவும் தீட்டப்படாமல் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டிய ஒன்று இல்லை. ஏழைக் குடும்பங்கள், கரோனா காலத்தின் பொருளாதார எதிர்மறை விளைவுகளில் இருந்து இன்னும் விடுபடாத நிலையில், இத்திட்டம் மிக உதவிகரமாக இருந்தது என்பதை மறுக்க முடியாது. எனவே, இத்திட்டம் நிறுத்தப்பட்டால், அதனால் மிச்சமாகும் ரூ.1.8 லட்சம் கோடி நிதியானது மீண்டும் வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் முதலீடு செய்யப்பட வேண்டும்.
பொருளாதார அறிஞர்களின் கடிதம்
- எடுத்துக்காட்டாக, இந்தத் திட்டத்தினால் மிச்சமாகும் பணத்தை, பொது விநியோக முறையில் கூடுதல் பயனாளிகளைச் சேர்த்து விரிவாக்கலாம். பிரதமரின் இத்திட்டம், 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்தக் காலாவதியான புள்ளிவிவரங்களால், கிட்டத்தட்ட 10 கோடி ஏழைகள் இத்திட்டத்தின் பயன்களைப் பெற முடியாமல் போகிறது.
- இதில் 10 கோடி கூடுதல் பயனாளிகளுக்கு, பிரதமரின் திட்டத்தில் நபருக்கு 5 கிலோ வழங்க அரசுக்கு 60 லட்சம் டன்கள் உணவு தானியம் தேவைப்படும். இது அரசால் தொடர்ந்து செய்ய முடிகிற காரியம்தான். இத்திட்டத்தை நிறுத்த அரசு முடிவெடுத்தால், தொடர்ந்து அரசு தானியக் கிடங்குகளில், தானிய இருப்பு வெகு விரைவாக அதிகரிக்கும் நிலை உருவாகும் ஆபத்து உருவாகும்.
- அண்மையில், நாட்டு மக்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என 51 பொருளாதார அறிஞர்கள் இந்திய நிதியமைச்சருக்கு ஒரு பகிரங்கக் கடிதத்தை அனுப்பியிருந்தார்கள். பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் போன்ற திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு கடந்த 8 ஆண்டுகளில் குறைக்கப்பட்டுவருவதை அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். அதேபோல, பாரபட்சமான, சட்டத்துக்குப் புறம்பான மகளிர் நலப் பாதுகாப்பு சட்டத்தைச் சீர்திருத்திப் பரவலாக்கவும், ஒரு குழந்தைக்கு ரூ.6,000 என்னும் நிதியை அதிகரிக்கவும் அரசு முன்வர வேண்டும் என்பதும் ஒரு முக்கியமான தேவை.
மோடி அரசின் சுணக்கம்
- மேற்சொன்ன சீர்திருத்தங்களைச் செய்ய, இந்த ஆண்டு வரவிருக்கும் பட்ஜெட் ஒரு நல்ல வாய்ப்பாகும். அப்படிச் செய்தால், பிரதமர் ஏழைகள் மேம்பாட்டுத் தானிய உதவித் திட்டத்தை நிறுத்துவதனால், உருவாகும் பின்னடைவுகளைச் சரிசெய்துவிட முடியும். ஆனால், கரோனாவின் பின்விளைவுகளால் உருவான பொருளாதாரப் பிரச்சினைகள் முடிந்துவிட்டன. எனவே, இத்திட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்று அரசு முடிவெடுக்கும் சாத்தியங்கள்தான் அதிகம் எனத் தோன்றுகிறது.
- மோடி அரசு பதவிக்கு வந்து சமூகப் பாதுகாப்புச் சட்ட நிறைவேற்றங்களில் சுணக்கம் காட்டுவதற்கு முன்பு, இந்தியச் சமூகத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்ட உருவாக்கம் மற்றும் அணுகுமுறைகளில் மிகப் பெரும் மாற்றங்கள் உருவாகத் தொடங்கியிருந்தன. ஆனால், பொதுமக்களிடையே அவை பற்றிய அறிதல் மிகக் குறைவாக உள்ளது.
- வெகு சில வளரும் நாடுகளில்தான் இந்தியாபோல அனைவருக்குமான இலவச உணவு, முதியோர் உதவித் தொகை, பள்ளிகளில் உணவு, ஊரக வேலைவாய்ப்பு போன்ற ஒரு முழுமையான சமூகப் பாதுகாப்பு உள்ளது. தற்போது அவற்றின் மூலமாகக் கிடைக்கும் உதவி போதாது எனினும், காலப்போக்கில், அவற்றை உயர்த்திக்கொள்ள முடியும்.
- சமூகப் பாதுகாப்பு என்பது தங்களைக் குழுக்களாகக் கட்டமைத்துக்கொண்ட முறைசார் தொழிலாளர்களுக்கு மட்டுமே உரியதல்ல, அது அனைத்துக் குடிநபர்களின் அடிப்படை உரிமை என்னும் அணுகுமுறையில்தான் இந்தியாவின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உருவாகிவந்துள்ளன. துரதிருஷ்டவசமாக, இன்று குடிநபர்கள், அடிப்படை உரிமைகளை விட்டுக்கொடுத்துவிட்டு, தங்கள் கடமைகளை மட்டும் நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வலிந்து முன்னெடுக்கும் இந்த அணுகுமுறை, மக்களாட்சி நலிவதற்கே வழிவகுக்கும்.
நன்றி: அருஞ்சொல் (26 – 01 – 2023)