சர்க்கரையில் தேவை அக்கறை
- இதய நோய்களை மேளம் கொட்டி வரவேற்கும் ரத்தக் கொதிப்பு குறித்து விரிவாகப் பார்த்தோம். இப்போது அதற்கு இணையான ஒரு நோய் பற்றி அலசுவோம். அதுதான் சர்க்கரை நோய். பல மாதங்களாகக் காலில் புண் ஆறவில்லை என்று சிகிச்சைக்கு வந்தார் 30 வயதுள்ள கிராமத்து விவசாயி. அவரைச் சர்க்கரை நோய் கடுமையாகப் பாதித்திருந்தது. காலுக்கு ரத்தம் போக வழியில்லை. பாதத்தை அகற்ற வேண்டிய நிர்ப்பந்தம். ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தத் தவறியதால் வந்த விபரீதம் இது.
- அவருடைய சிகிச்சை வரலாற்றைக் கவனித்தேன். “உங்களுக்குச் சர்க்கரை நோய் வரச் சாத்தியம் இருக்கிறது; உணவில் கவனம் தேவை. உடற்பயிற்சி முக்கியம்” என்று ஆறு வருடங்களுக்கு முன்பே அவரை எச்சரித்திருக்கிறேன். அவர் அதைக் காதில் போட்டுக்கொள்ள வில்லை. “இந்த வயசிலேயே சர்க்கரை நோய் வருமா, டாக்டர்? காட்டிலும் மேட்டிலும் ராத்திரி பகலா உழைக்கிற உடம்புக்கு இந்த நோய் வராதுன்னு நெனச்சேன்” என்றார் அப்பாவியாக.
அதிகரிக்கும் சர்க்கரை நோய்:
- முன்பு நகரவாசிகளின் எதிரியாகப் பார்க்கப்பட்ட சர்க்கரை நோய் இப்போது கிராமத்தில் வசிப்பவர்களுக்கும் பொதுவாகிவிட்டது. நம் தாத்தா காலத்தில் 60 வயதுக்காரர்களை அவதிப்பட வைத்த இந்த நோய், தற்போது 30 வயதுக்காரர்களையும் பயமுறுத்துகிறது. இந்தியாவில் பன்னாட்டு உணவுச் சந்தைக்கு இடம்கொடுத்த பிறகு சர்க்கரை நோயின் ஆதிக்கம் வருடந்தோறும் அதிகரித்துள்ளது.
- தற்போது இந்தியாவில் 10 கோடி பேருக்குச் சர்க்கரை நோய் இருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 13.6 கோடி பேருக்குப் புதிதாகச் சர்க்கரை நோய் வருவதற்குச் (Pre-diabetic) சாத்தியம் இருக்கிறது. பெருநகரங்களில் உள்ளவர்களில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களில் கால்வாசிப் பேருக்கும் 50 வயதைக் கடந்தவர்களில் பாதிப் பேருக்கும் இந்த நோய் இருக்கிறது. இதே நிலை நீடித்தால், தனி மனித ஆரோக்கியம் கெடுவது மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதார பலமும் வீழ்ச்சி அடையும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) சொல்லும் புள்ளிவிவரம் இது.
என்ன காரணம்?
- நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக இறக்குமதி செய்யப் பட்ட இயந்திரங்களும், பயண வசதிக்காக வாங்கப்பட்ட வாகனங்களும், அதிவேக நகரமயமாக்கலும் நம் உடலுழைப்பைக் குறைத்துவிட்டன. உணவுக் கலாச்சாரமும் மாறிவிட்டது. மைதா, சர்க்கரை, உப்பு இந்த மூன்று வெள்ளை உணவு வகைகளும், நிறை கொழுப்பும் (Saturated fats) அதிக எண்ணெய்யும் கூடிய துரித உணவுகளும், ஊடுகொழுப்பு (Trans fat) மிதக்கிற பேக்கரி பண்டங்களும் சிறுவர் முதல் பெரியவர் வரை அடிமைப்படுத்திவிட்டன.
- வாழ்வதற்குப் பொருளீட்டுவது என்பது மாறிப் பொருளீட்டுவதே வாழ்க்கை என்றாகிவிட்டது. அதன் விளைவால், மன அமைதி காணாமல் போனது. மாணவர்களுக்கு உடல் – மனம் சார்ந்த பயிற்சிகளைக் கற்றுத்தர வேண்டிய வகுப்பறைகளோ தேர்வுச் சுமையைத் தூக்கச் சொல்லும் பயிற்சிப் பட்டறைகளாக மாறிவிட்டன. படிப்படியாக ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் உடல் பருமன், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், மாரடைப்பு, புற்றுநோய் எனத் தொற்றாநோய்க் கூட்டத்துக்கு வழிவிட்டன. இந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகிக்கிறது சர்க்கரை நோய்.
ஆரோக்கிய நெருக்கடிகள்:
- சர்க்கரை நோய் நமக்குத் தரும் ஆரோக்கிய நெருக்கடிகள் கொஞ்சநஞ்சமல்ல. சர்க்கரை நோய் உள்ளவர்களில் 100இல் 76 பேருக்கு உயர் ரத்த அழுத்தம், 35 பேருக்குச் சிறுநீரகப் பாதிப்பு, 30 பேருக்கு இதயப் பாதிப்பு, 27 பேருக்கு விழித்திரை பாதிப்பு, 28 பேருக்குப் புறநரம்புப் பாதிப்பு, 4 பேருக்குக் காலில் ரத்தக்குழாய் பாதிப்பு என இதன் நெருக்கடிப் பட்டியல் நீள்கிறது. இந்த எச்சரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டாலும் நாம்தான் இன்னும் விழித்துக்கொள்ளவில்லை; சர்க்கரையில் அக்கறை இல்லாமல் இருக்கிறோம்.
யாருக்குக் கவனம் தேவை?
- பரம்பரையில் சர்க்கரை நோய் உள்ளவர்கள், நாளும் ஹோட்டல் சாப்பாடே கதி என்று இருப்பவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், மன அழுத்தம் மிகுந்தவர்கள், 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகியோருக்குச் சர்க்கரை நோய் வர சாத்தியம் அதிகம். இவர்கள் வருடத்துக்கு இரண்டு முறை ரத்தச் சர்க்கரை அளவைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் முகம் காட்டினால், உடனே சிகிச்சையைத் தொடங்கிவிட வேண்டும்.
இதயத்துடன் தொடர்பு:
- சர்க்கரை நோயாளிகள் என்னிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருக்கின்றன. சர்க்கரை நோய் இதயத்தை எப்படிப் பாதிக்கிறது? திடீர் மாரடைப்புக்கு இதுவும் காரணமா? சர்க்கரை நோய் இருந்தால், வலி இல்லாத மாரடைப்பு ஏற்படும் என்கிறார்களே, உண்மையா? முக்கியமான இந்தக் கேள்விகளுக்கு முதலில் பதில் தருவோம். ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுதலாகும்போதுதான் சர்க்கரை நோய் வருகிறது.
- இந்தச் சர்க்கரை சும்மா இருப்பதில்லையே! வீட்டுக்குள் நுழைந்த விஷத் தேனீ வரவேற்பறையில் கூடு கட்டினால் எப்படி இருக்கும்? எப்போது வேண்டுமானாலும் நம்மை அது கொட்டிவிடலாம் அல்லவா? இந்த நிலைமைதான் சர்க்கரை நோயாளிக்கும் உண்டாகிறது.
- ரத்தச் சர்க்கரை அளவு கூடக்கூட அது ரத்தக் குழாய்களை அரித்துப் புண்ணாக்கி, அவற்றின் நெகிழ்வுத்தன்மையைக் கெடுத்துவிடுகிறது. இதனால், ரத்தக் குழாய் முழுவதும் கடினமாகிவிடுகிறது; அதன் உள் விட்டம் சுருங்கிவிடுகிறது. ரத்தம் செல்வது தடைபடுகிறது. இந்தச் சிக்கல்கள் இதயத் தமனிகளில் (Coronary arteries) ஏற்பட்டால் மாரடைப்பு வருகிறது. மற்றவர்களைவிடச் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் சாத்தியம் இரண்டு மடங்கு அதிகம் என்றால் அதற்கு இதுதான் காரணம்.
வலி இல்லாத மாரடைப்பு:
- உடலில் வலி தெரிய வேண்டுமானால், நரம்புகள் சரியாக வேலை செய்ய வேண்டும். கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோயாளிகளுக்கு நரம்புகள் பாதிக்கப்படும். அப்போது, இதய நரம்புகளும் தப்பிக்க முடியாது. அங்குள்ள தானியங்கு நரம்புகள் (Autonomic neuropathy) பாதிக்கப்படும். இந்த வகைப் பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு மாரடைப்பு வருமானால், நெஞ்சுவலியை இவர்களால் உணர முடியாது; மாரடைப்பைத் தடுக்கக்கூடிய தற்காப்பு சிகிச்சைகளை எடுப்பதற்கான வாய்ப்பு குறைந்துவிடும்.
- இது திடீர் மாரடைப்புக்கு வழி செய்கிறது. சர்க்கரை நோயாளிகள் பலரும் வலி இல்லாத மாரடைப்பினால் (Silent Heart Attack) உயிரிழப்பது இப்படித்தான். அதேநேரத்தில், சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கு மாரடைப்பு வந்தால், அவர்களுக்கு நெஞ்சில் வலி தெரிவதால், முன்னெச்சரிக்கையாக மருத்துவரிடம் காண்பித்து, தகுந்த சிகிச்சை பெற்று, உயிருக்கு வரும் ஆபத்திலிருந்து தப்பித்து விடுகிறார்கள்.
இதய நரம்பு பாதிப்பை அறிய….
- வலி இல்லாத மாரடைப்பு சர்க்கரை நோயாளிகள் அனைவருக்கும் வருமா என்று கேட்டால் இல்லை என்பதுதான் பதில். அப்படியானால், யாருக்கு வரும்? நிற்கும்போது கிறுகிறுப்பு, மயக்கம் ஏற்படுவது, சிறு உடற்பயிற்சிகூடக் கடினமாகத் தெரிவது, சிறுநீர் பிரிவதில் சிக்கல் உண்டாவது, அடிக்கடி செரிமானப் பிரச்சினை ஏற்படுவது, அதிகமாக வியர்ப்பது அல்லது கோடையிலும் உடல் வியர்க்காமல் இருப்பது, பாலுறவில் வேகம் குறைவது போன்றவை (தானியங்கு) நரம்பு பாதிப்பைத் தெரிவிக்கும் அறிகுறிகள். இந்த அறிகுறிகள் உள்ளவர்கள்தான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (23 – 11 – 2024)