- கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்வது என்கிற ஒற்றை முனைப்புடன் தமிழக அரசு செயல்படுகிறது என்பதில் யாருக்கும் ஐயப்பாடில்லை. போர்க்கால நடவடிக்கையுடன் மருத்துவர்களும், அதிகாரிகளும், அமைச்சர்களும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றனர்.
- நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பொது முடக்கத்தைத் தவிர்க்க இயலாது என்பதை உணர்ந்து, கெளரவம் பார்க்காமல் பொது முடக்கத்துக்கு உத்தரவிட்டிருப்பதும், அதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து கூடுமானவரை அடித்தட்டு மக்களைப் பாதுகாக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருப்பதும், தமிழக அரசின் வரவேற்கக்கூடிய செயல்பாடுகள்.
- அமைச்சர்களே நேரிடையாகக் களம் இறங்கி, ஆய்வு செய்ய முற்பட்டிருப்பது என்பது சரியான அணுகுமுறை, இது தொடர வேண்டும்.
- தமிழகத்தில் கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்ள சட்டப்பேரவைக் குழு ஒன்று முதல்வர் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
- மாவட்டங்களில் நடவடிக்கைகளைக் கண்காணிக்க 20 அமைச்சர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. இவையெல்லாமே ஆக்கபூர்வமான, அறிவுபூர்வமான அணுகுமுறைகள்.
ஆக்சிஜன் தட்டுப்பாடு
- தமிழகத்தில் மட்டுமல்ல, பரவலாக இந்தியா முழுவதுமே ஆக்சிஜன் தட்டுப்பாடு காணப் படுகிறது.
- ஆக்சிஜன் உற்பத்தித் தொழிற்சாலைகள் பரவலாக எல்லா மாநிலங்களிலும் அமையாமல் குறிப்பிட்ட சில மாநிலங்களில் அதிகமாக தொடங்கப்பட்டதுதான், ஆக்சிஜன் மிகை நாடான இந்தியாவில் மருத்துவ ஆக்சிஜனுக்கு இப்படியொரு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதற்குக் காரணம்.
- இந்த அளவுக்குக் கொள்ளை நோய்த்தொற்று பரவும் என்றும், ஆக்சிஜன் தேவை பல நூறு மடங்கு அதிகரிக்கும் என்பதும் யாருமே எதிர்பார்த்திருக்க முடியாத ஒன்று.
- ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, ஆக்சிஜன் உருளை மற்றும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்திட தமிழகத்தில் முதலீடு செய்யும் உற்பத்தியாளர்களுக்கு 30% முதலீட்டு மானியம் இரண்டு சம ஆண்டு தவணைகளாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
- கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று என்பது நிரந்தரமாக இருக்கப் போவதில்லை. நோய்த்தொற்று அடங்கிவிட்டால், மருத்துவ ஆக்சிஜனாக இருந்தாலும், தொழிற்சாலைகளுக்குத் தேவையான ஆக்சிஜனாக இருந்தாலும் அவற்றுக்கான தேவை குறைந்துவிடும்.
- அந்த நிலையில் அந்தத் தொழிற்சாலைகள் நலிவடையும் வாய்ப்பு இருப்பதை அரசு உணர்ந்திருக்கிறதா என்று தெரியவில்லை.
- இப்போதைய ஆக்சிஜன் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள இடைக்கால நிலையில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பதில்தான் அரசு கவனம் செலுத்த வேண்டுமே தவிர, தேவைக்கு அதிகமாக ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கும் விதத்திலான திட்டமிடல் தேவையற்றது.
- தமிழகத்தில் உள்ள எல்லா பெரிய அரசு மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு வழிகோலினாலே போதும், தமிழகத்தில் தட்டுப்பாடில்லாமல் ஆக்சிஜன் கிடைப்பதை உறுதிப்படுத்திவிடலாம்.
- அரசு மருத்துவமனைகளில் ஏற்கெனவே உள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் பெரும்பாலும் செயலிழப்பதும், அதைக் காரணம் காட்டி தனியாரிடமிருந்து ஆக்சிஜன் வாங்குவதும், அதில் கையூட்டுப் பெறுவதும் நடைமுறையில் இருப்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.
இடைக்கால ஏற்பாடுகள் போதும்
- அரசு உண்மையில் கவனம் செலுத்த வேண்டியது, தடுப்பூசித் தயாரிப்பில்தானே தவிர, ஆக்சிஜன் உற்பத்தியில் அல்ல.
- ஒரு காலத்தில் தடுப்பூசி மருந்து ஆராய்ச்சி, தயாரிப்பு இரண்டிலும் தமிழகம்தான் இந்தியாவில் முதன்மை பெற்றிருந்தது என்கிற வரலாறு பலருக்கும் மறந்துவிட்டது.
- கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டும், குன்னூரில் உள்ள பாஸ்ட்டர் ஆய்வகமும் நாய் கடிக்கும், அம்மை நோய்க்குமான தடுப்பூசி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த நிறுவனங்கள்.
- காலப்போக்கில் அந்த நிறுவனங்கள் முக்கியத்துவம் இழந்தன. தடுப்பூசி ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதால், அந்த நிறுவனங்கள் சோர்ந்து போய் முடங்கி விட்டன.
- செங்கல்பட்டு அருகில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் "இந்துஸ்தான் பயோடெக்' என்கிற நிறுவனம் தொடங்குவதற்கு 2012-ஆம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டது.
- அங்கே "ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம்' கட்டுவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதற்காக, ரூ.594 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2013-இல் கட்டுமானப் பணியும் தொடங்கியது.
- காலதாமதத்தால் இப்போது அதற்கான மதிப்பீடு சுமார் ரூ.900 கோடியாக உயர்ந்திருக்கிறது. இன்னும் சில கோடிகளில் பணிகள் முடிந்துவிட்டால், உலகத் தரம் வாய்ந்த தடுப்பூசித் தயாரிப்பு மையம் தமிழகத்தில் செயல்படத் தொடங்கிவிடும்.
- ஆண்டொன்றுக்கு சுமார் 60 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கும் திறன்கொண்ட செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோடெக் நிறுவனம் தனது உற்பத்தியைத் தொடங்குவதற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதும், தமிழகத்தில் மருந்துத் தயாரிப்பு, குறிப்பாக, தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிப்பதும்தான் அரசின் முனைப்பாக இருக்க வேண்டும்.
- அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துதல், கிராமப்புறங்கள் வரை உருவாக்கப்பட்டிருக்கும் சுகாதாரக் கட்டமைப்பை சீரமைத்தல், கொள்ளை நோய்த்தொற்று மட்டுமல்லாமல் ஏனைய தொற்றுக்களையும் எதிர்கொள்ளும் வகையிலான மருத்துவத் திட்டமிடல் போன்றவைதான் அவசியமே தவிர, இடைக்காலப் பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு நீண்டநாள் திட்டங்களைத் தீட்டுவது அவசியமில்லை என்று தோன்றுகிறது.
நன்றி: தினமணி (17 – 05 - 2021)