TNPSC Thervupettagam

சவாலும் எதிர்பார்ப்பும்!

July 5 , 2019 1947 days 964 0
  • இந்திய வரலாற்றில் முதல் முறையாக முழுநேர நிதியமைச்சராக  ஒரு பெண்மணி இன்று நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய இருக்கிறார். 2014-இல் நரேந்திர மோடி தலைமையில் முந்தைய ஆட்சி அமைந்தபோது இருந்த சூழலே வேறு. சர்வதேசப் பொருளாதாரம், கச்சா எண்ணெய் விலை, இந்தியாவின் வளர்ச்சி விகிதம் என்று அனைத்துமே சாதகமாக இருந்த நேரம் அது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முந்தைய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்குக் கிடைத்த வாய்ப்பைப் போன்றதல்ல, இப்போது இரண்டாவது முறையாக நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைத்திருக்கும் நிலையில் நிர்மலா சீதாராமனுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு.
முதல் நிதிநிலை அறிக்கை
  • நிர்மலா சீதாராமனின் முதல் நிதிநிலை அறிக்கை பற்றாக்குறை அறிக்கையாக இருக்கப் போகிறதா என்றால், எந்தவித ஐயப்பாடும் இல்லாமல் அது ஒரு பற்றாக்குறை நிதிநிலை அறிக்கையாகத்தான் இருக்கும். பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது தவறு என்று கூறிவிட முடியாது. 1949, 1950-ஆம் ஆண்டுகளைத் தவிர, சுதந்திர இந்தியாவில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அத்தனை நிதிநிலை அறிக்கையுமே பற்றாக்குறை அறிக்கைதான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
  • செலவினத்தைவிட வருவாய் அதிகமாக இருந்தால், அது உபரி நிதிநிலை அறிக்கை. பொருளாதாரம் உச்சகட்ட வளர்ச்சியில் இருந்து, வேலைவாய்ப்பு அதிகரித்துக் காணப்பட்டால், வரி வருவாய் அதிகரிக்கும். நிதிநிலை உபரியாக இருக்கும். விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசில நாடுகள் மட்டும்தான் உபரி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கின்றன.
  • வருமானத்தைவிட செலவினங்கள் அதிகரிக்கும்போது, பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. பொருளாதாரம் சற்று பலவீனமாக இருந்து, வேலைவாய்ப்பின்மை அதிகமாகக் காணப்படும். வளரும் பொருளாதார நாடுகளில் பற்றாக்குறை நிதிநிலை அறிக்கைதான் தாக்கல் செய்யப்படும். வளர்ச்சிப் பணிகளுக்காகவும், கட்டமைப்பு வசதிகளுக்காகவும், மக்கள் நல்வாழ்வுக்காகவும் கடன் வாங்கித்தான், அதிக பற்றாக்குறையை ஈடுகட்ட முடியும்.
மிகப் பெரிய பொருளாதாரம்
  • இந்தியா மட்டுமல்ல, உலகின் பெரும்பாலான நாடுகளில் பற்றாக்குறை நிதிநிலை அறிக்கைதான் தாக்கல் செய்யப்படுகின்றன. உலகின் மிகப் பெரிய பொருளாதாரம் என்று கருதப்படும் அமெரிக்காவையே எடுத்துக்கொள்வோம். 20 டிரில்லியன் டாலர் பொருளாதாரமான அமெரிக்காவின் நிதிப் பற்றாக்குறை 22 டிரில்லியன் டாலர். இந்தப் பின்னணியில்தான், நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்ய இருக்கும் அவரது முதல் நிதிநிலை அறிக்கையை நாம் பார்க்க வேண்டும்.
  • நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கிடைத்திருக்கும் அவகாசம் வெறும் ஒரு மாதம் மட்டும்தான். இந்தக் குறுகிய இடைவெளியில் அவரால் ரசவாத வித்தையா காட்டிவிட முடியும்? இந்தியாவின் பொருளாதாரமும், நிதிநிலையும் அவருக்குச் சாதகமாக இல்லாத சூழலில் தனது முதலாவது நிதிநிலை அறிக்கையை எந்த அளவுக்கு சாதுர்யமாகத் தயாரித்து அவர் சமாளிக்கப் போகிறார் என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.
  • பொருளாதாரத்தை முடுக்கிவிட அவர் சில ஊக்க நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். அப்படிச் செய்ய முற்படும்போது, நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாது. வரி வருவாய் சாதகமாகவோ, உதவியாகவோ இல்லாத சூழலில், சுணக்கத்தில் இருக்கும் பொருளாதாரத்தை அவர் எப்படி முடுக்கிவிட்டு சுறுசுறுப்பாக்கப் போகிறார் என்பதில்தான் அவரது நிதிநிலை அறிக்கையின் வெற்றி அடங்கி இருக்கிறது. வேலைவாய்ப்பின்மை மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. ஊபர், ஓலா ஓட்டுநர்களாகவும், ஸ்விகி, ùஸாமட்டோ, உணவு விநியோக நிறுவன ஊழியர்களாகவும், பல்பொருள் அங்காடித் தொழிலாளர்களாகவும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்று கருதுவது சிறுபிள்ளைத்தனம். உத்தரவாதமுள்ள, பாதுகாப்பான வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதுதான் அரசின் கடமை. அதை உடனடியாக சாதித்துவிட முடியாது என்றாலும், அதற்கான இலக்கை நோக்கிய திட்டமிடல் நிதிநிலை அறிக்கையில் இருக்க வேண்டும்.
துறைகள்
  • மோட்டார் வாகனம், மனை வணிகம் மற்றும் குடியிருப்புக் கட்டுமானம், சில்லறை வணிகம், தகவல் தொலைத்தொடர்பு, விவசாயம் ஆகிய துறைகள் முடங்கிப்போய்க் கிடக்கின்றன. சிறு, குறு தொழிற்சாலைகள் நாணய மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. அறிமுகத்தால் பாதிக்கப்பட்டன, இன்னும் மீண்டெழுந்தபாடில்லை.
  • இந்தத் துறைகள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் நிதிநிலை அறிக்கையில் எந்த அளவுக்கு முன்னுரிமை பெறுகின்றன என்பதைப் பொருத்துத்தான் இந்தியப் பொருளாதாரத்தின் எழுச்சியும், அவரது நிதிநிலை அறிக்கையின் வெற்றியும் இருக்கும்.
  • இந்தியாவின் ஜிடிபியில் 5% முதல் 6%  வரை பங்களிப்பு நல்கும் குடியிருப்புத் துறைக்கு ஊக்கம் அளிப்பதன் மூலம், அதிக அளவில் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும். 2013-இல் தொடங்கப்பட்ட 6 லட்சம் தொழில்கள் நின்று போயிருக்கின்றன.
  • அவற்றுக்கு ஊக்கமளித்து உயிர்ப்பிப்பதன் மூலம், வேலைவாய்ப்புச் சந்தைக்கு ஆண்டுதோறும் வரும் எழுபது லட்சம் இளைஞர்களில் கணிசமானவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும்.
  • நிர்மலா சீதாராமனின் முதல் நிதிநிலை அறிக்கையில் மிகப் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கவில்லை. ஆனால், பொருளாதாரத்தில் காணப்படும் மந்த நிலையை மாற்றுவதற்கான முயற்சியும், அடுத்த ஐந்தாண்டு காலத்துக்கான தொலைநோக்குத் திட்டமிடலும் இருந்தாலே போதும், அவர் வெற்றி அடைந்ததாகக் கருதலாம்.

நன்றி: தினமணி (05-07-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்