TNPSC Thervupettagam

சவால் நிறைந்த உளவுப் பணி

October 31 , 2022 649 days 384 0
  • நம் மாநிலத்தில் நிகழும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஒவ்வொன்றுக்கும் உளவுத்துறையின் தோல்விதான் காரணம் என்ற குற்றச்சாட்டை அரசியல் கட்சியினர் சிலர் வெளிப்படுத்துவதும், இது குறித்த விவாதங்கள் சமூக ஊடகங்களில் நடைபெறுவதும் அதிகரித்து வருகின்றன.
  • தூத்துக்குடி துப்பாக்கி சூடு, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள், அண்மையில் கோவை கோட்டைமேடு பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் போன்ற நிகழ்வுகள் அனைத்துக்கும் உளவுத்துறையின் தோல்விதான் காரணம் என்று கூறப்படுகிறது.
  • மாநில உளவுத்துறையின் கட்டமைப்பு என்ன? உளவுத் தகவல்கள் எப்படி திரட்டப்படுகின்றனஉளவுத் தகவல் சேகரிப்பதில் உளவுத்துறையினர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன? களப்பணியில் ஈடுபடும் காவல்துறையினர் உளவுத்தகவலை எப்படி மதிப்பீடு செய்கின்றனர்சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கும்போது நிகழும் தோல்விகளுக்கு உளவுத்துறையின் மெத்தனப்போக்கு மட்டும்தான் காரணமா?
  • மனிதர்கள் குழுக்களாக ஒருங்கிணைந்து வாழத் தொடங்கிய காலம் முதல் "உளவறிதல்' நடைபெற்றுவருகிறது. அரசர்களின் ராஜ பரிபாலனத்தில் ஒற்றர்களின் செயல்பாடுகள் முக்கியம் வாய்ந்தவை. குடிமக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும், அண்டை நாட்டு அரசனின் படையெடுப்பை முன்னுணர்ந்து, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒவ்வொரு அரசரும் நம்பிக்கைக்குரிய ஒற்றர்களை வைத்திருந்தனர்.
  • இந்தியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்திய ஆங்கிலேயர்கள், தங்களின் வர்த்தகம் தங்குதடையின்றி நடைபெற "காவல் அமைப்பு' ஒன்றை இந்தியாவில் ஏற்படுத்தி, அதற்கான சட்டத்தை 1861-ஆம் ஆண்டில் கொண்டுவந்தனர்.
  • அதைத் தொடர்ந்து, இந்திய காவல் அமைப்பு செயல்படுவதற்கான வழிகாட்டு நெறிகள் அடங்கிய "காவல் நிலை ஆணைகள்' இயற்றப்பட்டன. காவல் அமைப்பை ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஏற்படுத்திய காலம் முதல் "சி.ஐ.டி' என்றழைக்கப்படும் உளவுத்துறையும் காவல்துறையின் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது.
  • மாநில அளவில் உளவுத் தகவல்களைத் திரட்டுவதற்காக இரு முக்கிய பிரிவுகள் காவல்துறையில் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட எஸ்.பி.யின் நேரடிக்கட்டுப்பாட்டில் "தனிப்பிரிவு' என்ற அமைப்பு மாவட்ட அளவிலான உளவுத் தகவல்களைத் திரட்டும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது.
  • மாநிலம் முழுவதிலும் உளவுத் தகவலகள் திரட்டும் பணியை "எஸ்.பி.சி.ஐ.டி' என்ற பிரிவு செய்துவருகிறது. இந்;த எஸ்.பி.சி.ஐ.டி பிரிவை "மாநில உளவுத்துறை' என்று அழைக்கப்படுகிறது. தீவிரவாத செயல்பாடுகளைக் கண்காணித்து, உளவறியும் பிரிவும் மாநில உளவுத்துறையின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிறது.
  • மாநில உளவுத்துறையின் தலைமையிடம் சென்னையாக இருந்தாலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்.பி.சி.ஐ.டி உளவுப்பிரிவுக்காக தனியாக அலுவலகம் உள்ளது. உளவறிந்து வர காவல்துறையினரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
  • மாநிலத்தில் பொது அமைதியை சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள், சட்டம் - ஒழுங்கைப் பேணுதல் தொடர்பான தகவல்களை உளவுத்துறையின் தலைமையிடத்திற்குத் தெரியப்படுத்தும் பணியை மாவட்டங்களில் உள்ள எஸ்.பி.சி.ஐ.டி. பிரிவு கவனித்து வருகிறது.
  • மாநிலம் முழுவதிலும் இருந்து திரட்டப்பட்ட தகவல்களை வகைப்படுத்தி, மாநில அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வது, மாவட்டங்களில் சட்டம் - ஒழுங்கு பணியைக் கவனித்துவரும் காவல் கண்காணிப்பாளர்களுக்கும், காவல் உயரதிகாரிகளுக்கும் உடனுக்குடன் தெரியப்படுத்துவது ஆகிய பணிகளை உளவுத்துறை தலைமையகம் செய்து வருகிறது. மாநில உளவுத்துறை, முக்கிய உளவுத் தகவல்களை மத்திய உளவுத்துறையின் கவனத்திற்கும் கொண்டு செல்கிறது.
  • மாநில காவல்துறையில் பணிபுரியும் அதிகாரிகள், காவலர்களில் தகுதியானவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு உளவு சேகரித்தல் தொடர்பாக குறுகிய காலப் பயிற்சி வழங்கி, பின்னர் அவர்களை மாவட்ட தனிப்பிரிவு, மாநில உளவுத்துறையில் பணியமர்த்த வேண்டும். அவர்களின் அன்றாடப் பணிகளை மேலதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
  • "உளவுத்துறை அதன் கடமையைச் செய்யத் தவறிவிட்டது' என்ற கருத்தை வெளிப்படுத்தும் பலருக்கும் உளவுத் தகவல்களை உளவுத்துறையினர் எப்படி திரட்டுகின்றனர் என்பது குறித்த புரிதல் இருப்பதில்லை. புத்தகத்தைப் புரட்டிப்பார்த்தோ, இணையம் வழியாகவோ உளவுத் தகவல்களைத் திரட்ட முடியாது.
  • இரவு - பகல் என்று பார்க்காமல், படித்தவர் - படிக்காதவர் என்று பார்க்காமல், நல்லவர் - கெட்டவர் என்று பார்க்காமல் யாரிடம் அணுகினால் தேவைப்படும் உளவுத் தகவல் கிடைக்கும் என்பதை உளவுத்துறையினர் கணிப்பார்கள். அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்களைத் தனித்தனியாக அணுகி, நயந்து பேசி, அவர்களிடமிருந்து தேவையான தகவல்களைப் பெற முயல்வார்கள்.
  • இந்த முயற்சி எல்லா நேரங்களிலும் பலனளிக்காது. திரட்டப்பட்ட தகவலை முழுமையாக நம்பிவிடவும் முடியாது. அத்தகவலை உறுதிப்படுத்திய பின்னர்தான், களப்பணியில் இருக்கும் காவல்துறையினருக்குத் தெரியப்படுத்துவார்கள்.
  • தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பதன் மூலம்  உளவுத்துறையினர் தகவல்களைத் தெரிந்து கொள்கின்றனர் என்ற கருத்து பொதுவாக நிலவிவருகிறது. தேசத்தின் பாதுகாப்புக்காக, சட்ட விதிகளுக்கு உட்பட்டு, சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளிடம் அனுமதி பெற்று, ஒரு சில தொலைபேசி எண்களின் உரையாடல்கள் ஒட்டுக்கேட்கும் நடைமுறை இருந்தாலும், இன்றைய காலகட்ட்தில் இம்முறை உளவுத்துறைக்குப் பெரிதாகப் பலனளிப்பதில்லை. காரணம், வாட்ஸ்ஆப் மூலமாக பலர் தொலைபேசி உரையாடல்களைத் தற்பொழுது நிகழ்த்தி வருகின்றனர்.
  • குற்ற நிகழ்வுகளைத் தடுப்பதிலும், நிகழ்ந்த குற்றங்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டறிவதிலும், முக்கிய வழக்குகளில் குற்றவாளிகளைக் கைது செய்வதிலும், சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கத் தீட்டப்படும் சதித்திட்டங்களை முன்னறிந்து தெரிவிப்பதிலும் உளவுத்துறையினரின் பங்களிப்பைக் குறைத்து மிதிப்பிட்டுவிட முடியாது.
  • உளவுத் தகவல்களை களப்பணியாற்றும் காவல்துறையினர் உதாசீனப்படுத்தியதன் விளைவாக மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்ட சம்பவங்களும் உண்டு. சான்றாக, 1998-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கோவை நகரில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு நிகழ்வைக் கூறலாம்.
  • இச்சம்பவத்திற்கு சில தினங்களுக்கு முன்பு, கோவை நகரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வெடிகுண்டுகளும், வெடிபொருட்களும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன என்று கொடுக்கப்பட்ட உளவுத் தகவலை உதாசீனப்படுத்தியதன் விளைவுதான் 58 பேர் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்வில் உயிரிழக்கக் காரணமாக அமைந்தது.
  • அதே சமயம், உளவுத்துறையினருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் எவ்விதமான உளவுத் தகவலும் இன்றி, மிகப்பெரிய சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுகள் நம்நாடு மட்டுமின்றி, வல்லரசு நாடுகள் சிலவற்றிலும் கடந்த காலத்தில் நிகழ்ந்துள்ளன. இன்றைய கணினி யுகத்தில், இணையத்தின் ஆதிக்கம் சமுதாயத்தில் மிகுந்திருக்கின்ற நிலையில், சட்டம் - ஒழுங்கு சீர்கெடுவதைத் தடுத்து நிறுத்த உளவுத் தகவல்களைத் திரட்டுவது என்பது சவால்கள் நிறைந்த பணியாகும்.
  • உளவுத்துறையினர் சிரத்தையுடன் உளவுத்தகவல்களைத் திரட்டாமல், மேலோட்டமாக "உளவு எச்சரிக்கை' என தகவல் அனுப்புகின்றனர் என்ற எண்ணமும், இதனால் களப்பணியாற்றும் காவல்துறையினர் தேவையில்லாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர் என்ற கருத்தும் களப்பணியாற்றும் காவல்துறையினரிடம் உள்ளன.
  • நேர்மையும், திறமையும் உடைய காவலர்களும் காவல் அதிகாரிகளும் பணியாற்றும் இடமாக இருந்து வந்த மாவட்ட தனிப்பிரிவும், மாநில உளவுப்பிரிவும், தற்பொழுது காவல் அதிகாரிகளையும், காவலர்களையும் தேர்வு செய்வதில் தனது கொள்கையைச் சற்று தளர்த்தியிருப்பதைக் காணமுடிகிறது. அதிகார மையத்தின் பரிந்துரை, தனிப்பட்ட செல்வாக்கு ஆகியவை மூலம் தகுதியற்ற சிலர் உளவுப்பிரிவில் இடம் பெற்று வருகின்றனர்.
  • கையூட்டுப் பெறுவதில் கைதேர்ந்தவர்களும், சமூகத்தைச் சீரழிக்கும் குற்றச் செயல்களான போதைப்பொருள் விற்பனை, மணல் கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருப்பவர்களும் மாவட்ட தனிப்பிரிவிலும், மாநில உளவுப்பிரிவிலும் இடம் பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.
  • மேலும், பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக உளவுப்பிரிவில் ஒரே இடத்தில் பணியாற்றும் காவலர்களும், அதிகாரிகளும் தாங்கள் பணியாற்றும் இடங்களில் தனிப்பட்ட விருப்பு - வெறுப்புகளை ஏற்படுத்திக் கொண்டு, உண்மையான உளவுத் தகவல்களை உளவுத்துறையின் தலைமையிடத்திற்குத் தெரியப்படுத்தாத நிலையும் நிலவிவருகிறது.
  • உளவறிதல் தொடர்பான அடிப்படைப் பயிற்சி பெறாத சிலர் மாவட்ட தனிப்பிரிவில் பணிபுரிந்து வருகின்றனர்.  காலத்திற்கேற்ப மாறிவரும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் தொடர்பாக உளவறியும் வழிமுறைகள் குறித்த பணியிடைப் பயிற்சி பெறாதவர்களும் உளவுப்பிரிவுகளில் இடம் பெற்றிருக்கும் நிலையைக் காணமுடிகிறது.
  • உளவுத்துறையினரின் எண்ணிக்கையையும், உளவறியத் தேவையான உபகரணங்களையும் அதிகப்படுத்துவதோடு மட்டுமின்றி, அவர்களுக்கு முறையான அடிப்படைப் பயிற்சியும், பணியிடைப் பயிற்சியும் வழங்குவதே உளவுத்துறையின் திறன் மேம்பட பெரிதும் துணைபுரியும்.

நன்றி: தினமணி (31 – 10 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்