TNPSC Thervupettagam

சாகசக் கலை காப்பாற்றப்படுமா?

August 16 , 2019 1969 days 896 0
  • அந்தரத்தில் உயிரைப் பணயம் வைத்து விளையாடி,  ஆயிரக்கணக்கான கண்களை அதிசயிக்க வைத்து,  இனிமையாக நேரத்தை கழிக்க வைக்கும் சாகசக் கலைஞர்களின் வாழ்க்கை அந்தரத்தில்தான் நிற்கிறது. அழிந்துவரும் சாகசக் கலையைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமையாகும்.
    தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்கள் வருவதற்கு முன்னதாக,  ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் ஊரில் சர்க்கஸ் காட்சி நடக்கிறதென்றால்,  அங்கு திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். ஓரிரு மாதங்கள் சர்க்கஸ் காட்சிகளில் ஹவுஸ் புல்  அட்டைகள் இருக்கும்.
பகுதிகள்
  • சர்க்கஸ் நடக்கும் பகுதிகளில்  திரையரங்குகளில் மக்கள் கூட்டம் வெறிச்சோடிக் காணப்படும். அந்த அளவுக்கு இருந்த தாக்கம் இப்போது மாறிவிட்டது.   அந்தரத்தில் ஆடும் சர்க்கஸ் கலைஞர்களைப் போல்தான்,  சர்க்கஸ்களின் நிலையும் இருந்துவருகிறது.
  • சாகசக் கலைஞர்களின் நிலையும்,  அவர்களின் வேலையும் பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது.   அண்மைக் காலமாக சாகசக் கலையைக் கற்க புதிதாகக் கலைஞர்களும் வருவதில்லை. இதனால்,  சாகசக் கலை இப்போது மெல்ல மெல்ல அழியும் நிலை உருவாகி வருகிறது.
சாகசக் கலைஞர்கள்
  • இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள சாகசக் கலைஞர்கள் மட்டுமின்றி,  நேபாளம், சீனா, வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 5,000-த்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் சர்க்கஸ்களில் இருக்கின்றனர்.
    இவர்கள் குழுக்களாக ஒரு  குடும்பம் போல சர்க்கஸ்  குழுவில் அங்கம் வகித்து,   பல்வேறு மாநிலங்களுக்கும் இடம்பெயர்ந்து சர்க்கஸ் காட்சிகளை நடத்தி, தங்களது வாழ்க்கையை நடத்திவருகின்றனர்.   சொந்த ஊரில் குழந்தைகளைப் படிக்க வைத்து, நாடோடிகளாக வாழும் இவர்களின் நிலையோ பரிதாபம்தான்.
  • இவர்கள் செய்யும் சாகசக் கலைக்கு ஏற்ப இவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000  முதல் அவரவர் தகுதிக்கேற்ப ஊதியம் வழங்கப்படுகிறது.  ஒரு சர்க்கஸ் குழுவில் குறைந்தது 50 பேர் முதல் 100 பேர் வரை இருக்கின்றனர்.  இவர்களுக்கான ஊதியம், நாள்தோறும் உணவு,  இதர செலவினங்கள்,   போக்குவரத்து, தங்குமிடம் போன்ற செலவாக மாதம்தோறும் ரூ.50 லட்சம் வரை ஆகிறது.  கடந்த சில ஆண்டுகளாக இந்த அளவுக்கு வருவாயை ஈட்ட முடியாத காரணத்தால்,  பல சர்க்கஸ் குழுக்கள் கலைக்கப்பட்டுள்ளன. 
  • நாட்டில் 300-க்கும் மேற்பட்ட சர்க்கஸ் குழுவினர் இருந்தனர்.  கடந்த 10 ஆண்டுகளில் இந்தக் குழுக்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து 100 ஆகியுள்ளது.
அண்மைக் காலங்களில்
  • அண்மைக் காலமாக சர்க்கஸ்களை காண மக்கள் பெருமளவு திரளாததற்கு  பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.   மத்திய அரசால் சில ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட மிருகவதை தடுப்புச்  சட்டத்தால்,  சிறுவர்களை மகிழ்வித்தும், காணக் கிடைக்காத அரிய பல மிருகங்களான சிங்கம்,  புலி, கரடி போன்ற வனவிலங்குகள் இப்போது சர்க்கஸ் காட்சிகளில் முழுமையாக இடம்பெறவில்லை.  முழுக்க, முழுக்க மனிதர்களால் நடத்தப்படும் சாகசக் காட்சிகளே அரங்கேறுகின்றன.
  • இதனால், வன விலங்குகளைக் காட்சிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு,   சர்க்கஸ் காட்சிகள் பொலிவிழந்ததால் பெருமளவு கூட்டம் வருவதில்லை.
    இது தவிர   வன விலங்குகளைக் காட்சிப்படுத்தியே செயல்படும் மிருகங்களுக்கான பிரத்யேக தொலைக்காட்சிகளில்,  24 மணி நேரமும் விலங்குகளின் காட்சிகள் இடம்பெற்றுவிடுகின்றன.  போதாக்குறைக்கு இணையதளங்கள் வேறு.  
  • இது மட்டுமின்றி,  இப்போது தொழில் நசிந்துவருவதால்  தங்களது வாரிசுகளைக் கூட இந்தத் தொழிலில் சாகசக் கலைஞர்களும் உட்படுத்துவதில்லை. புதியதாக சாகசக் கலையைக் கற்றுகொள்ளவும் எவரும் முன்வருவதில்லை.  இதுபோன்ற பல காரணங்களால், சர்க்கஸ் காட்சிகளும்  பொலிவிழந்துள்ளன.
  • இந்த நிலையில்,  சர்க்கஸை பொலிவுபடுத்த மத்திய,  மாநில அரசுகள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றே சாகசக் கலைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.  இதற்காக பெரிய அளவுக்கு உதவிகள் புரியத் தேவையில்லை. சிறிதளவு சலுகைகள் வழங்கினால்கூட,  தங்களால் கலையைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு மேலோங்கியுள்ளது.
  • அதாவது,   ஓரிரு மாதங்கள் ஓர் ஊரில் சர்க்கஸ் முகாமிடும்.  சில நாள்கள் இடைவெளியில் அடுத்த ஊருக்கு இடமாற்றம் செய்ய போக்குவரத்துக்காக சில நாள்களாகும்.  ஓரிரு மாதங்கள் ஓர் ஊரில் காட்சிகள் நடத்த,  உள்ளாட்சி அமைப்புகள், காவல்,  தீயணைப்புத் துறைகள் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளிடம் அனுமதி பெறவே ஒவ்வொரு இடத்திலும் சில லட்சம் ரூபாய் அளவுக்கு செலவினம் ஏற்படுகிறது.  
  • இந்தச் செலவினத்தைக் குறைக்கும் வகையில்,  அரசுக்குச் சொந்தமான இடங்களில் சர்க்கஸ் காட்சிகள் நடத்த இலவச அனுமதியை வழங்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும்,   சாகசக் கலையை பாடத் திட்டமாக அறிவித்து கல்லூரிகளில் பயிற்றுவிக்க வேண்டும். 
உதவித் தொகை
  • நடமாடும் சர்க்கஸ் தொழில்களில் ஈடுபட்டுள்ளோர்,  சாகசக் கலைஞர்களையும்  அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் சேர்த்து உதவித் தொகைகள்,  நலத் திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.
    விளையாட்டு, யோகா, உடற்பயிற்சி ஆகிய கலைகள் ஒன்றிணைந்ததுதான் சாகசக் கலை என்பர்.  விளையாட்டுக்கும்,  யோகாவுக்கும் முக்கியத்துவம் அளித்துவரும் மத்திய அரசு, சாகசக் கலையைக் காப்பாற்றவும் முயற்சிக்க வேண்டும். சாகசக் கலையில் ஆர்வம் கொண்டவர்களைக் கண்டறிந்து,  அவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  
  • இது தவிர,  உடற்கல்வி கல்லூரிகள்,  பல்கலைக்கழகங்களில் சாகசக் கலையையும் பாடத் திட்டமாக சேர்த்து அது அழியாமல் இருக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
    நல்ல கலையை அழிந்துவிடாமல் பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு.   சிறிய அளவில் உதவிகளைச் செய்து பெரிய கலையைக் காப்பாற்ற அரசுகள் முன்வருமா?

நன்றி: தினமணி(16-08-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்