TNPSC Thervupettagam

சாட்-ஜிபிடியிடம் கேட்கக் கூடாத ‘ஒரு’ கேள்வி!

October 29 , 2024 70 days 114 0

சாட்-ஜிபிடியிடம் கேட்கக் கூடாத ‘ஒரு’ கேள்வி!

  • சாட்-ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாட்பாட்களிடம் கேட்கக் கூடாத கேள்விகள் என்று ஒரு பட்டியல் இருக்கிறது. அதில் முதலில் வருவது, ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட விவரங்களைக் கேட்கக் கூடாது என்பதுதான். அதே போல, சாட்-ஜிபிடியிடம் சட்ட விரோத செயல்களுக்கான வழிகள் பற்றியும், நிதி ஆலோசனைகள், மருத்துவ ஆலோசனைகள் ஆகியவற்றையும் கேட்கக் கூடாது என்கின்றனர் தொழில்நுட்ப நிபுணர்கள்.
  • இப்படி, அண்மையில் சாட்-ஜிபியிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும், அதன் பதிலும் இணையத்தில் வைரலானது. “நாம் இதுவரை உரையாடியதை வைத்து, என்னைப் பற்றி எனக்குத் தெரியாத ஓர் அம்சம் என்ன என்பதை உன்னால் சொல்ல முடியுமா?” என்று பயனர் ஒருவர் சாட்-ஜிபிடியிடம் கேட்டிருக்கிறார். (சாட்பாட் அகராதியில் பயனர் உள்ளீடு செய்யும் கேள்வி, பதில் எதுவாயினும் அது ‘பிராம்ப்ட்’ எனப்படுகிறது).
  • டாம் மார்கன் எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனர் ஒருவர் இந்தக் கேள்வியை சாட்-ஜிபிடியிடம் கேட்டதன் அனுபவத்தைத் தனது ‘எக்ஸ்’ தளத்தில் முதலில் பதிவிட்டார். இதைப் பார்த்து சாட்-ஜிபிடியின் தாய் நிறுவனமான ‘ஓபன் ஏ.ஐ’யின் நிறுவனர் சாம் ஆல்ட்மேனே, தனது கருத்துகளைப் பதிவிட்டார். அதைத் தொடர்ந்து, உலகெங்கிலும் இருந்து பயனர்கள் இந்தக் கேள்வியை சாட்-ஜிபிடியிடம் கேட்கத் தொடங்கினர்.
  • ஆனால், சாட்பாட்களோடு உரையாடும்போது கேள்விக்கான சரியான பதிலைப் பெற வேண்டுமெனில், தொடர்ந்து பொருத்தமான துணைக்கேள்விகளைக் கேட்க வேண்டும். சாட்-ஜிபிடி மட்டுமல்ல, கூகுளின் ‘ஜெமினி’யிடமும் இந்தக் கேள்வியைக் கேட்டுப் பார்க்கலாம்.
  • இதைப் படிக்கும் உங்களுக்கும் சாட்-ஜிபிடியிடம் உங்களைப் பற்றிய கருத்தைக் கேட்க வேண்டும் என்கிற விருப்பம் ஏற்படலாம். ஆனால், அதற்கு தயாராகும் முன்பு, இரண்டு விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். முதலில், இந்த வசதி ‘சாட்-ஜிபிடி பிளஸ்’ சேவையில் மட்டுமே சாத்தியம். கட்டணம் செலுத்திப் பயன்படுத்தக்கூடிய ‘சாட்-ஜிபிடி பிளஸ்’ சேவையில் மட்டுமே பயனர் உடனான பழைய உரையாடல் சேமித்து வைக்கப்படுகிறது. எனவே, கட்டணமின்றி வழங்கப்படும் சேவையில் இந்தக் கேள்விக்கு பதில் பெற முடியாது.
  • இரண்டாவது, இந்தக் கேள்விக்கான பதிலை நீங்கள் உண்மை என எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில், சாட்-ஜிபிடி அளிக்கும் பதில் என்பது உரையாடல் அடிப்படையில் வழங்கப்படும் தொகுப்புதான். சைமன் வில்சன் எனும் ஏ.ஐ ஆய்வாளர், “சாட்-ஜிபிடியிடம் உங்களைப் பற்றி கேட்கும் போக்கைப் பின்பற்றி முட்டாளாக வேண்டாம்” என அவர் கருத்து தெரிவித்திருந்ததை இங்கே நினைவில் கொள்வது நல்லது.
  • ஆம், சாட்பாட்கள் அளிக்கும் தகவல்களை முழுமையாக நம்பிவிடக் கூடாது எனச் சொல்லப்படும் நிலையில், ஒருவரைப் பற்றி சாட்பாட் சொல்லும் கருத்து ஆர்வத்தை ஏற்படுத்தலாம். ஆனால், அதை அப்படியே ஏற்றுக்கொள்வது சிக்கலை உண்டாக்கும். ஒருவரைப் பற்றி இன்னொருவர் கொண்டிருக்கும் எண்ணத்தைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புவது மனித இயல்பாக இருக்கலாம். ஆனால், அதை சாட்பாட்டிடம் எதிர்பார்ப்பது சரியல்ல.
  • அதுமட்டுமின்றி, சாட்-ஜிபிடி சொல்வது உண்மையோ இல்லையோ. ஆனால், ஒருவரைப் பற்றிய கருத்து என்பதால் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு சாட்-ஜிபிடியைப் புத்திசாலியென நினைக்கவும் வாய்ப்புண்டு. முதல் சாட்பாட்டான ‘எலிசா’விடம் இப்படிதான் பலரும் ஏமாற்றம் அடைந்தனர். இது ‘எலிசா விளைவு’ (ELIZA effect) என்றழைக்கப்பட்டது.

நன்றி: இந்து தமிழ் திசை (29 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்