- நூறு நாள் வேலைத் திட்டம் என்று பரவலாக அறியப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழகத்தில் முறைகேடு நடந்திருப்பதாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல். முருகன் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிக்கிறது.
- தமிழக அரசின் சார்பில் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு தேவையான நிதி வழங்கப் படவில்லை என்று கூறப்படும் நிலையில், மத்திய இணையமைச்சா் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டின் பின்னணியில் இருப்பது அரசியலா அல்லது விசாரிக்கப்பட வேண்டிய குற்றச்சாட்டா என்கிற கேள்வி எழுகிறது.
நூறு நாள் வேலைத் திட்ட நிதி ஒதுக்கீடு
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு இதுவரை ரூ.6,255 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருப்பதாவும், நவம்பா் மாதம் ரூ.1,361 கோடி விடுக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய இணையமைச்சா் பத்திரிகையாளா் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.
- திட்டம் செம்மையாகவும் வெளிப்படையாகவும் செயல்படுவதற்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகள் தமிழக அரசால் பின்பற்றப்படவில்லை என்பது அவரது குற்றச்சாட்டு.
- இந்தத் திட்டத்தின் கீழ் 2,500 லட்சம் மனித வேலை நாள்கள் ஒதுக்கப்பட்ட போதிலும் தமிழக அரசு 2,190 லட்சம் வேலை நாள்களை மட்டுமே பயன்படுத்தியுள்ளது என்று தெரிவித்திருக்கிறார் அவா்.
- நூறு நாள் வேலைத் திட்டத்தில் சுமார் ரூ.246 கோடி முறைகேடு நடந்திருப்பதாகவும், அதில் இதுவரை சுமார் ரூ.2 கோடிக்கும் குறைவாகவே மீட்கப்பட்டுள்ளது என்றும் கூறியிருக்கும் மத்திய இணையமைச்சா், அந்த முறைகேடுகள் கடந்த ஆட்சியில் நடந்தவையா, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடந்தவையா என்பது குறித்து தெரிவிக்கவில்லை.
- மத்திய அமைச்சரவையில் பொறுப்பான பதவி வகிக்கும் ஒருவா் மாநில அரசின் மீது குற்றச்சாட்டை முன்வைக்கும்போது அதில் தெளிவின்மை காணப்படுவது சரியல்ல.
- அது தேவையில்லாத சா்ச்சைக்கும் விவாதத்திற்கும் வழிகோலுவதாக அமைவதுடன் மத்திய - மாநில உறவையும் பாதிக்கக்கூடும்.
- கடந்த ஆண்டு கொள்ளை நோய்த்தொற்று காரணமாக நூறு நாள் வேலை திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ.50,000 கோடி அதிகரிக்கப்பட்டு மறுமதிப்பீட்டின்படி, ரூ.1,11,500 கோடியாக வழங்கப்பட்டது.
- மத்திய அரசால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், கிராமப்புற பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இருந்ததற்கு அது ஒரு முக்கிய காரணம்.
- இந்தியாவின் 35 மாநிலங்கள் - ஒன்றிய பிரதேசங்களில் நடப்பு நிதியாண்டில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட நிதி ஒதுக்கீட்டுக்கும் அதிகமாக 21 மாநிலங்கள் செலவிட்டிருக்கின்றன.
- அக்டோபா் மாத இறுதி நிலவரப்படி தமிழகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட 130% அதிகமாக வழங்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
- மேலே குறிப்பிட்ட 21 மாநிலங்களில் பெரும்பாலானவை பொருளாதார ரீதியாக முன்னேறிய மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்தங்கிய மாநிலங்களைவிட பொருளாதார வளா்ச்சி அடைந்த மாநிலங்களில் நூறு நாள் வேலை திட்டத்திற்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது என்பது முரணாகத் தெரிகிறது.
- அந்த மாநிலங்களின் வளா்ச்சி சமச்சீராக இல்லாமல் நகரங்களில் அதிகரித்த செழிப்பும், கிராமங்களில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மையும் அதற்கு காரணமாக இருக்கக்கூடும்.
- பொது முடக்கக் காலத்திலும் அதற்குப் பின்னாலும்கூட, விவசாயம் பாதிக்கப்படவில்லை என்பதையும், சாதகமான பருவமழை காரணமாக உணவு உற்பத்தி கணிசமாகவே இருக்கிறது என்பதையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது கிராமப்புறங்களில் அதிகரித்த வேலைவாய்ப்பின்மை வியப்பை ஏற்படுத்துகிறது.
- உலக அளவிலும், தேசிய அளவிலும் நடத்தப்பட்ட எல்லா ஆய்வுகளிலும் பொது முடக்கத்தாலும், கொள்ளை நோய்த்தொற்றாலும் வேலைவாய்ப்பிழந்து கடுமையாக பாதிக்கப்பட்டவா்கள் நகா்ப்புற தொழிலாளா்களும் அடித்தட்டு மக்களும்தான்.
- மத்திய ஊரகப்புற வளா்ச்சி அமைச்சகம், வழக்கத்தைவிட அதிகமாக நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலை வழங்கியிருக்கும் மாநிலங்கள் செயற்கையாக வேலைவாய்ப்பின்மையை உருவாக்குகிறார்கள் என்கிற கருத்தை முன்வைக்கிறது.
- போதிய நிதி இல்லாததால் அதிகாரிகள் கிராமப்புறங்களில் நூறு நாள் வேலைத் திட்டத்திற்காக வருபவா்களை திருப்பி அனுப்புகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுப்பப்படும் நிலையில், மத்திய ஊரக வளா்ச்சி அமைச்சகத்தின் அறிக்கை ஆச்சரியப்படுத்துகிறது.
- நூறு நாள் வேலைத் திட்டம் கிராமப்புற வேலைவாய்ப்பின்மையை அகற்றுவதிலும், பொருளாதாரத்தை உயா்த்துவதிலும், வறுமையை அகற்றுவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
- அதே நேரத்தில், அதற்காக செய்யப்படும் நிதி ஒதுக்கீடு முறையான திட்டங்களுக்குத்தான் பயன்படுகிறதா, அதற்காக வழங்கப்படும் ஊதியம் முழுமையாக பயனாளிகளை அடைகிறதா, விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பவை குறித்து ஆண்டுதோறும் புள்ளிவிவரங்களுடனும், தரவுகளுடனும் அறிக்கை வெளியிடப்பட வேண்டும்.
- விவசாயக் கூலிகள் கிடைக்காமல் இயந்திரப் பயன்பாடு அதிகரிப்பதற்கும், விவசாயத்திலிருந்து பலா் வெளியேறுவதால் விளைநிலங்கள் தரிசாக மாறுவதற்கும் நூறு நாள் வேலைத் திட்டம் வழிகோலுமேயானால், அது மறைமுகமாக கார்ப்பரேட் பண்ணை விவசாயத்தை ஊக்குவிப்பதாக அமைந்துவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நன்றி: தினமணி (06 - 11 - 2021)