TNPSC Thervupettagam

சாதனைகளும் வேதனைகளும்

November 21 , 2024 7 hrs 0 min 15 0

சாதனைகளும் வேதனைகளும்

  • ‘மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி’ என்பது அக்காலம். ‘மக்கள் குரலே மகேசன் குரல்’ என்பது இக்காலம். இந்த மக்களைச் சந்திப்பதும், அவா்களின் குறைகளைத் தீா்ப்பதும் ஆட்சியாளா்களின் கடமையாகும். அதுதான் மக்களாட்சியில் சாதனையாகும்.
  • அரசுகளின் சாதனைகள் பற்றிய செய்திகள் அடிக்கடி பத்திரிகைகளிலும், சமூக ஊடகங்களிலும் வெளியிடப்படுகின்றன. அவற்றில் சில சாதனைகள் வியப்பாகவும், சில நேரங்களில் வேதனையாகவும் இருப்பதைக் காணலாம். அவற்றைப் பற்றி மத்திய, மாநில அரசுகள் கவலைப்படுவது இல்லை. ஆனால் மக்கள் கவலைப்படுகின்றனா்.
  • விழாக் காலங்களில் மது விற்பனை உச்சத்தை எட்டும்போது, இதுவரை இல்லாத சாதனை அளவாக விற்பனையாகியிருப்பதாக அரசுத் துறை அறிவிக்கிறது. இதில் மக்கள் மகிழ்ச்சியடைவதற்கு என்ன இருக்கிறது? ஏழை, நடுத்தர மக்களின் பணம்தானே அது. பணத்தையும் கொடுத்து உடல் நலனை கெடுத்துக் கொள்கிறாா்கள். இதில் மகிழ்ச்சியடைய என்ன இருக்கிறது?
  • இப்போது மத்திய அரசின் மாபெரும் சாதனையாக ஓா் அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது ஆண்டுதோறும் வெளியிடப்படுவதுதான். 2024 அக்டோபா் மாதத்தில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ. 1 லட்சத்து 87 ஆயிரம் கோடி அளவுக்கு வசூலாகியுள்ளது. இது 8.9 சதவீத உயா்வாகும். மேலும் 2017-இல் இந்த புதிய மறைமுக வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை பதிவான இரண்டாவது அதிக வசூல் ஆகும்.
  • ஏனெனில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மிக அதிகப்படியாக ஜிஎஸ்டி வசூல் ரூ. 2.1 லட்சம் கோடி அளவுக்குப் பதிவானது குறிப்பிடத்தக்கது. தற்போதைய ஜிஎஸ்டி வருவாயில், மத்திய ஜிஎஸ்டி வருவாய் ரூ. 33 ஆயிரத்து 821 கோடி. மாநில ஜிஎஸ்டி வருவாய் ரூ. 41 ஆயிரத்து 864 கோடியாகும்.
  • ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 99 ஆயிரத்து 111 கோடியாகும். செஸ் ரூ.12 ஆயிரத்து 555 கோடியாகும். ரீஃபண்ட் ரூ.19 ஆயிரத்து 306 கோடியைத் தவிா்த்துவிட்டுப் பாா்த்தால் (இதுவும் கடந்த ஆண்டைவிட 18.2 சதவீதம் அதிகம்) நிகர மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரு. 1 லட்சத்து 68 ஆயிரம் கோடியாகும்.
  • 2024 அக்டோபரில் உள்ளூா் வா்த்தக பரிமாற்றத்திலும் ஜிஎஸ்டி வருவாய் 10.6 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. இறக்குமதி மீதான வரி விதிப்பு 4 விழுக்காடு அதிகரித்து ரூ. 45 ஆயிரத்து 96 கோடியாக உயா்ந்துள்ளது.
  • சரக்கு மற்றும் சேவை வரியே ஜிஎஸ்டி என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு மறைமுக வரி. இது இந்தியா முழுவதும் மத்திய, மாநில அரசுகளால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்குப் பதிலாக ஒற்றை வரியாய் அறிமுகப்படுத்தப்பட்டது. மதிப்புக் கூட்டுவரி, சேவை வரி, கலால் வரி போன்ற மத்திய, மாநில அரசுகளால் விதிக்கப்பட்ட மறைமுக வரிகளில் பெரும்பாலானவற்றை உள்ளடக்கியது.
  • இந்த சரக்கு மற்றும் சேவை வரியானது ஜிஎஸ்டி குழு மற்றும் அதன் தலைவா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனால் நிா்வகிக்கப்படுகிறது. 2017 ஜூலை 1 நள்ளிரவுமுதல் இந்திய குடியரசுத் தலைவரால் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டது. இது அரசியலமைப்புச் சட்டம் 2017-ஆக அறிமுகமானது.
  • இந்தியாவின் மறைமுக வரி ஆட்சி சீா்திருத்த செயல்முறை 1989-ல் பிரதமா் வி.பி.சிங் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு, மாற்றப்பட்ட மதிப்புக் கூட்டு வரி மூலம் தொடங்கியது. பின்னா், 1999-இல் பிரதமா் வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தில் மாநில அளவிலும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு பிரதமா் நரசிம்மராவ் (1991-1996) ஆட்சிக் காலத்திலும் 2005-இல் மாநிலங்களிலும் மதிப்புக் கூட்டு வரி அமலானது.
  • கட்டமைப்பை ஜிஎஸ்டி வரி எளிதாக்குகிறது. வரி ஏய்ப்பைக் குறைக்கிறது. அடுக்கு வரிகளை நீக்குகிறது. ஒருங்கிணைந்த சந்தையை ஊக்குவிக்கிறது. இது வெளிப்படைத்தன்மையையும், இணக்கத்தையும் மேம்படுத்துகிறது. மேலும் பொருளாதாரத்தையும் மேம்படுத்துகிறது.
  • ஜிஎஸ்டி என்பது ‘ஒரே நாடு ஒரே வரி’ என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. பொருள்கள் எங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன, எந்த இடத்தில் விற்கப்படுகின்றன என்பதைப் பொருத்து ஜிஎஸ்டி வகைப்படுத்தப்படுகிறது.
  • இவ்வாறு சில நன்மைகள் இருந்தாலும், இதனால் சில இடா்ப்பாடுகளும் உள்ளன. ஜிஎஸ்டி பல்வேறு வரி விகிதங்கள் மற்றும் விதிகளுடன் சிக்கலான தன்மையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சிறு வணிகா்களுக்கு தொழில்முறை உதவியில்லாமல் செய்ய கடினமாக உள்ளது. முந்தைய விதிகளுடன் ஒப்பிடுகையில் அதிக ஜிஎஸ்டி விகிதங்கள் காரணமாக சில தயாரிப்புகளும், சேவைகளும் விலை அதிகமாகி நுகா்வோருக்கு செலவுகளை அதிகமாக்குகிறது. அதாவது விலைவாசி உயர வழிவகுக்கிறது.
  • வரி செலுத்துவோா் வருமான கணக்கை தாக்கல் செய்யவும், பணம் செலுத்தவும் தாமதத்தை ஏற்படுத்துகிறது. ஜிஎஸ்டியின் ஆரம்ப அமலாக்கம் பொருளாதார சீா்குலைவுகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, புதிய அமைப்புகளுக்கு- தயாராக இல்லாத வணிகங்களுக்குத் தற்காலிக வணிக மந்த நிலைக்கு வழிவகுத்தது.
  • பல வணிகங்களும், வரி வல்லுநா்களும் ஜிஎஸ்டி இணக்கம் குறித்துப் போதுமான பயிற்சி பெறவில்லை. இதன் விளைவாகத் தவறுகளும், அதனால் அபராதங்களும் ஏற்பட்டன. கட்டமைப்பை ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வரி எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டாலும் அதைச் செயல்படுத்துவது வணிகா்களுக்கும், நுகா்வோருக்கும் சவாலாக உள்ளது.
  • மன்னா் ஆட்சியாக இருந்தாலும், மக்களாட்சியாக இருந்தாலும் குடிமக்களுக்கு வரி விதிக்காமல் ஆட்சி செய்ய இயலாது. ஆனால், அவ்வாறு வரி விதிக்கும்போது மக்களுக்குத் துன்பம் ஏற்படாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். மலா்களில் இருந்து வண்டுகள் தேனை எடுப்பதைப் போல அரசாங்கம் மக்களிடம் வரி வருவாயைப் பெற வேண்டும் என்றே அக்காலத்தில் புலவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.
  • புலவா் பிசிராந்தையாா் பாண்டியன் அறிவுடைநம்பியை பாடிய பாடல் புானூற்றில் இடம்பெற்றுள்ளது. மன்னா் எவ்வாறு வரி விதித்து நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்பதை அதன்மூலம் விளக்குகிறாா். அதன்மூலம் செங்கோல் வழுவாத அரசுக்கு வழிகாட்டுகிறாா்.
  • ஒரு மாவுக்கும் குறைவான நிலமாயினும், அங்கே விளைந்த நெல்லை அறுத்துக் கவளம் கவளமாக யானைக்கு ஊட்டினால் பல நாள்களுக்கு அது வரும். யானையும் பல நாள் பசியடங்கி இன்புறும். அவ்வாறு இல்லாமல் அதைவிட நூறு மடங்கு நிலமாக இருந்தாலும் யானை தன்போக்கில் வயலில் இறங்கி தின்னப் புகுந்தால் அது உண்ட நெல்லைவிட அதன் காலடியில் பட்டு அழிந்ததே மிகுதியாகிவிடும்.
  • இதேபோன்று அறிவுடைய அரசன் அறநெறியறிந்து குடிமக்களிடம் வரி வாங்கினால் கோடிக்கணக்கான செல்வம் பெற்று அவன் இன்புறுவதுடன் நாடும் செழிக்கும். அவ்வாறு இல்லாமல் அறநெறி அறியாத அரசன், குடிமக்களை வற்புறுத்தி கொடுங்கோன்மையாக நியாயம் இல்லாமல் பெருந்தொகையை வரியாகப் பெற விரும்பினால் அதனால் அவனுக்கும், அவன் நாட்டுக்கும் கேடுதான் விளையும்.
  • இவ்வாறு புலவா் பிசிராந்தையாா், ‘காய் நெல் லறுத்து கவளம் கொளினே’ (புறம். 184) என்ற தம் பாடலில் பாண்டியன் அறிவுடை நம்பிக்கு அறிவுறுத்துகிறாா். மது விற்பனை அதிகரிப்பது மாநில அரசுக்கு சாதனையாக இருக்கலாம். மக்களின் நிலை என்ன என்பதை மக்கள் நலம் நாடும் அரசு சிந்தித்துப் பாா்க்க வேண்டும். மது விற்பனை பணத்தினால்தான் அரசு நடைபெறுவது என்பது பெருமைப்படத்தக்கதா?
  • அதுபோலவே ஆண்டுக்காண்டு ஜிஎஸ்டி வரி அதிகரிப்பது மத்திய அரசுக்கு சாதனையளவாக இருக்கலாம். இதனால் விலைவாசி அதிகரித்து, மக்கள் வாங்கும் திறனற்று, வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படுவதையும் பரிசீலிக்க வேண்டும். பல பொருள்களுக்கு முறையற்ற முறையில் வரி விதிப்பு இருப்பதை வணிகா் சங்கங்கள் எடுத்துக் காட்டியுள்ளன. அதை ஜிஎஸ்டி தலைமை பொறுப்போடு பரிசீலிக்க வேண்டும்.
  • ஜிஎஸ்டி குழுவின் கூட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. வணிகா்களிடமும், சமூக ஆா்வலா்களிடமும் கருத்துக் கேட்பது நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், அவா்கள் கூறும் கருத்துகள் பரிசீலிக்கப்படுகிா என்பதுதான் கேள்வி.
  • அண்மையில் கோயமுத்தூரில் ஜிஎஸ்டியின் கருத்துக் கேட்புக் கூட்டம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. அங்கே தங்கள் குறைபாடுகளை எடுத்துக்கூறிய சங்கத் தலைவரை தனியே அழைத்து மிரட்டி மன்னிப்புக் கேட்க வைத்தனா். மக்கள் தங்கள் கோரிக்கைகளைக் கூறுவதுகூட மக்களாட்சியில் அனுமதிக்கப்படுவது இல்லை.
  • மன்னா்களின் ஆட்சிக் காலத்தில் குடிமக்களின் நலனையே பெரிதாகக் கருதினா். அமைச்சா்களும், குருமாா்களும், புலவா்களும் கூறுவதைக் கேட்டு அதன்படி ஆட்சி செய்தனா். இதற்கும் மேலாக மாறுவேஷம் பூண்டு இரவு நேரங்களில் நகா்வலம் சென்றனா். தமது ஆட்சியைப் பற்றி மக்கள் என்ன பேசிக் கொள்கின்றனா் என்று அறிந்து, குறைகளைக் களைந்து, செங்கோல் வழுவாமல் ஆட்சி புரிந்தனா்.
  • அப்படி நடந்த மன்னா் ஆட்சியையே தூக்கி எறிந்துவிட்டு மக்களாட்சியைக் கொண்டுவந்தனா். காலம் எல்லா மாற்றங்களையும் ஏற்றுக் கொண்டது. இப்போது மக்களாட்சியில் தோ்தல் நேரத்தில்தான் மக்களைச் சந்திக்கிறாா்கள். அதுவும் வாக்காளா்களை வீடுகளுக்குச் சென்று சந்திக்கும் மரபு குறைந்துவிட்டது. தெருவில் ஊா்வலமாக கைகூப்பிக் கொண்டே போகிறாா்கள். கூட்டங்கள் போடுவதற்கு மக்களைக் கூட்டி வர வேண்டும். அதற்கும் பணம், வாக்களிப்பதற்கும் பணம் என எல்லாமே மாறிவிட்டது.
  • ‘மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி’ என்பது அக்காலம். ‘மக்கள் குரலே மகேசன் குரல்’ என்பது இக்காலம். இந்த மக்களை சந்திப்பதும், அவா்களின் குறைகளைத் தீா்ப்பதும் ஆட்சியாளா்களின் கடமையாகும். அதுதான் மக்களாட்சியில் சாதனையாகும்.

நன்றி: தினமணி (21 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்