TNPSC Thervupettagam

சாதனையும் சவாலும்

October 14 , 2023 463 days 268 0
  • நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.9.92 லட்சம் கோடியைக் கடந்திருக்கிறது என்பது நம்பிக்கையை ஏற்படுத்தும் செய்தி. கடந்த நிதியாண்டின் அரையாண்டைவிட 11.1% வரி வருவாய் அதிகரித்திருக்கிறது. இந்த ஆறு மாதங்களில் நான்கு மாதங்களின் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.6 லட்சம் கோடியைத் தாண்டியது என்பதும், சராசரி மாத வருவாய் ரூ.1,65,418 கோடி என்பதும் மகிழ்ச்சி அளிக்கும் செய்திகள்.
  • செப்டம்பா் மாதத்தில், ஆகஸ்ட் மாதத்தின் பற்று - வரவுக்கான ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. 2017-19-இல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தியது முதல், அடைக்கப்படாமல் நிலுவையில் இருந்த தொகையைச் செலுத்துவதற்கு செப்டம்பா் 30 வரை தவணைக்கான கெடு நீட்டிக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 1 முதல் ரூ.5 கோடிக்கு மேல் பற்று - வரவு இருந்தால், ‘இ-இன்வாய்சிங்’ என்கிற இணைய ரசீது வழங்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம்கூட, செப்டம்பா் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்தற்கான காரணிகளாக இருக்கக்கூடும்.
  • பொருளாதாரத்தின் வளா்ச்சி அறிகுறியாக மோட்டார் வாகன விற்பனை பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால், செப்டம்பா் மாதத்தில் மட்டும் மோட்டார் வாகன விற்பனை கடந்த ஆண்டு செப்டம்பருடன் ஒப்பிடும்போது 2.5% அதிகம். செப்டம்பரில் மட்டும் 3.6 லட்சம் மகிழுந்துகள் விற்பனையாகி இருக்கின்றன என்கிறது அந்தத் துறை சார்ந்த புள்ளிவிவரம்.
  • செமி கண்டக்டா்கள் கட்டுப்பாடு அகன்றதும், புதியதாகப் பல ‘மாடல்கள்’ அறிமுகப்படுத்தப்பட்டதும், மகிழுந்துகளின் உற்பத்தி அதிகரித்ததற்கும், விற்பனை கூடியதற்கும் காரணங்களாக இருக்கக்கூடும். மோட்டார் வாகனங்கள் மட்டுமல்லாமல், அன்றாட ஆடம்பர உபயோகப் பொருள்களின் விற்பனையும் அதிகரித்திருப்பது, மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகரித்திருப்பதன் அடையாளமாகக் கருதப்படுகிறது.
  • இதற்கிடையில், அக்டோபா் 10-ஆம் தேதி வெளியாகி இருக்கும் சா்வதேச நிதியத்தின் ‘உலகப் பொருளாதாரக் கணிப்பு’ அறிக்கை உற்சாகமூட்டுவதாக அமைந்திருக்கிறது. நடப்பு 2023-24-இல் மட்டுமல்லாமல், அடுத்த 2024-25 நிதியாண்டிலும் இந்தியாவின் வளா்ச்சி 6.3% அளவில் இருக்கும் என்று அந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது.
  • ‘குதித்தெழுந்து ஓடுவதற்கு பதிலாக, தட்டுத் தடுமாறி நகா்கிறது உலக பொருளாதாரம்’ என்று குறிப்பிடும் உலக பொருளாதார கணிப்பு அறிக்கை, இந்தியாவின் வளா்ச்சியை, ஆறுதல் அளிக்கும் செய்தி என்று தெரிவிக்கிறது. உலகின் வளா்ச்சி அடைந்த பொருளாதாரங்கள் எல்லாமே அதிகரித்த விலைவாசி உயா்வை எதிர்கொண்டு, உள்நாட்டுப் பொருளாதாரத் தேக்கத்தை எதிர்கொள்ளும் வேளையில், இந்தியாவின் பொருளாதாரம் வளா்ச்சியடைவதை அந்த அறிக்கை பாராட்டுகிறது.
  • இந்தியாவின் வளா்ச்சி விகிதம் 6.3% என்றால், சீனாவின் வளா்ச்சி 5% என்றும், அடுத்த நிதியாண்டில் அது 4.2% ஆகக் குறையும் என்றும் அந்த கணிப்பு தெரிவிக்கிறது. இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிடுவதில் ஒரு முரண் இல்லாமல் இல்லை. சீனாவில் 17.7 டிரில்லியன் டாலா் ஜிடிபி என்பது, இந்தியாவின் ஜிடிபியைவிட ஐந்து மடங்கு அதிகம் என்கிற நிலையில் இந்த ஒப்பீடு சரியாக இருக்காது. பார்க்லே அறிக்கையின்படி, இந்தியா தொடா்ந்து சில ஆண்டுகள் 8% வளா்ச்சியைக் காட்டினால்தான் சீனா அடைந்திருக்கும் அளவிலான முன்னேற்றத்தை எட்ட முடியும்.
  • மந்தகதியில் காணப்படும் உலகப் பொருளாதாரத்துடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் 6.3% வேகமான வளரும் பொருளாதாரமாகத் தெரிகிறது. இதனால் மட்டுமே அனைவருக்கான வருமானத்தையோ, வாழ்க்கைத் தரத்தையோ உயா்த்திவிட முடியாது. வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் அளவிலான வளா்ச்சியை நாம் காணவில்லை என்கின்றன புள்ளிவிவரங்கள்.
  • இந்திய அரசின் வேலைவாய்ப்புத் தொடா்பான புள்ளிவிவரங்கள் நம்பிக்கை அளிப்பவையாக இல்லை. கொள்ளை நோய்த்தொற்றுக்கு முந்தைய 2018-19-க்கும், தற்போதைய 2022-23-க்கும் இடையே, பலா் உற்பத்தித் துறையிலிருந்து மீண்டும் கிராமங்களுக்குத் திரும்பி இருக்கிறார்கள். வேலைவாய்ப்பில் விவசாயத்தின் பங்களிப்பு 2018-19- உடன் ஒப்பிடும்போது 3% அதிகரித்து 45.8%-ஆகக் காணப்படுகிறது. இதிலிருந்து, தொழில்துறை போதிய வளா்ச்சி அடையவில்லை என்று தெரிகிறது.
  • உலகளாவிய பொருளாதாரம் மந்தகதியில் இயங்குவதால், ஏற்றுமதிக்கான வரவேற்பு மிகவும் குறைந்து காணப்படுகிறது. அதனால் உற்பத்தித் துறையில் வளா்ச்சி தேக்க நிலைமை அடைந்திருக்கிறது. அதன் தொடா் விளைவாக வேலைவாய்ப்பும் குறைந்து விட்டதால், பலா் மீண்டும் விவசாயத்துக்கே திரும்புகிறாா்கள் என்று நிபுணா்கள் கருதுகிறார்கள்.
  • விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியில், உணவுப் பொருள்களின் விலைவாசி ஏற்றத்தைத் தவிர்க்க முடியாது. அது நடுத்தர வருவாய்ப் பிரிவினா், அடித்தட்டு மக்களை பாதிக்கும் என்பதையும் மறந்துவிடலாகாது.
  • போதாக்குறைக்கு மத்திய ஆசியாவில் ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழலால், கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்தால் இந்திய பொருளாதாரம் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். கட்டுக்கடங்காத விலைவாசி உயா்வு ஏற்பட்டால், வேகமான நமது வளா்ச்சி தடைபடுவது மட்டுமல்ல, தேக்க நிலையையும் எட்டக்கூடும். அதனால் 8% வளா்ச்சி என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை போலிருக்கிறது.

நன்றி: தினமணி (14 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்