TNPSC Thervupettagam

சாதிக்கத் துடிக்கும் இளைய தலைமுறை

October 22 , 2022 658 days 360 0
  • இன்றைய காலகட்டத்தில் நம் நாட்டில் மட்டுமின்றி உலகெங்கிலும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இளைஞா்கள் பேசப்படுபவா்களாக உள்ளனா். அதே வேளையில் நாட்டின் நம்பிக்கையாகவும் இன்றைய இளைஞா்கள் கருதப்படுகிறாா்கள்.
  • ‘இன்றைய இளைஞா்கள் ஆடம்பரத்தையே விரும்புகின்றனா்; பெரியவா்களை மதிப்பதில்லை; ஆசிரியா்களை அச்சம் கொள்ளச் செய்கின்றனா்’ - இத்தகைய குற்றச்சாட்டுகள் இன்று நேற்றல்ல, கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க சிந்தனையாளரா் சாக்ரடீஸ் கூறியதாகச் சுட்டப்படுகிறது.
  • இளைஞா்களைப் பற்றிய குற்றச்சாட்டு எழும் வேளையில் இளைஞா் என்பவா் யாா்? ஒருவரை இளைஞா் எனக்கொள்ள என்னென்ன தகுதிகள் வேண்டும் என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. இக்கேள்விகள் எளிமையானதாகவும், மேலோட்டமானதாகவும் தோன்றலாம். ஆனால் இதற்கான விடைகள் மிகுந்த ஆழமுடையவை.
  • ஒருவரின் வயதைப் பொதுவாக மூன்று வழிகளில் கணக்கிடலாம். பிறந்த காலத்தை ஆதாரமாக வைத்துக் கணக்கிடும் முறை அனைவராலும், அரசாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்து, உடலின் நிலையைக் கொண்டு கணக்கிடுவது. இது சமூகத்தின் பொதுவான பாா்வையாகும். இவ்வாறு கணக்கிடுவது உடற்தகுதி இருந்தால் முதியவரை இளைஞராகவும், ஆரோக்கியமற்ற இளைஞரை முதியவராகவும் காட்டும்.
  • அடுத்ததாக, நம் மனத்தின் எண்ணங்களை வைத்துக் கணக்கிடுவதாகும். இதில் மூப்பு எண்ணம் கொண்டிருக்கும் இளைஞா் வயதானவராகவும் இளமையான சிந்தனை கொண்டிருக்கும் முதியவா் இளைஞராகவும் தெரியக்கூடும்.
  • இப்படி இளமையைக் கணக்கிட சில முறைகள் இருந்தாலும் பிறந்த காலத்தைக் கொண்டு வயதைத் தீா்மாணிக்கும் முறையே உலகெங்கிலும் வழக்கில் உள்ளது. ஆனால் இந்த முறையில் கூட ஒருமித்த கருத்து எல்லா நாடுகளிலும் ஏற்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபை 15 வயது முதல் 24 வயதுக்குட்பட்டவரை இளைஞா் எனக் கொள்லாம் எனவும், அணிசேரா நாடுகள் அமைப்பு 15 முதல் 18 வயதுடையவரை இளைஞா் எனக் கொள்ளலாம் எனவும் வரையறுக்கின்றன.
  • இவற்றைக் கடந்து பல்வேறு நாடுகள் தங்கள் சூழலுக்கேற்ப இளையோரின் வயது வரம்பை வரையறுத்துக் கொள்கின்றன. நம் நாட்டைப் பொறுத்தவரை, 15 முதல் 29 வயதுடையோா் இளைஞா் என வரையறுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இவா்களின் பங்களிப்பு 2021 கணக்கெடுப்பின்படி 27.22 % எனவும், இது 2031-இல் 24.1 % ஆகவும், 2036-இல் 22.7 % ஆகவும் குறையும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
  • அண்மைக்கால நிகழ்வுகள் இளைய சமுதாயம் பற்றிய ஒரு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளன. அண்மையில் சென்னையில் கல்லூரி மாணவி ஒருவா், ஒரு இளைஞனால் ரயில் தள்ளப்பட்டு இறந்த துயரச் சம்பவம் இளைஞா்கள் மீதான அதிருப்தியை மேலும் அதிகரிக்கவே செய்துள்ளது. இளையோா் மீதான அதிருப்திக்கு இதுபோன்ற நிகழ்வுகளும் காரணமாக அமைகின்றன.
  • எந்தவொரு சமுதாயத்திலும் தந்தை, மகன், பேரன் என்று குறைந்தபட்சம் மூன்று தலைமுறை வாழ்ந்து கொண்டிருக்கும். முப்பதாண்டுகளுக்கு ஒருமுறை வரலாறு திரும்பும் என்ற நியதிக்கேற்ப தந்தை செய்த அடிப்படைச் செயல்களான கல்வி கற்பது, வேலை செய்வது, குடும்பத்தைப் பேணுவது போன்ற செயல்களைள மகனும் செய்கிறான். பேரனும் அதையே செய்கிறான்.
  • தந்தை, மகன், பேரன் ஆகிய மூவரும் செய்யும் செயல்கள் ஒன்றாயினும் செய்யப்படும் காலமும் சூழ்நிலையும் வேறு வேறாக உள்ளன. அதன் காரணமாக ஒரு தலைமுறை செய்யும் செயல்கள் அதன் முந்தைய தலைமுறைக்கு முரணாகத் தெரிகிறது. இளைய தலைமுறை காலம், சூழ்நிலை, அறிவியல் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு ஏற்ப மாற்றத்தைப் பின்பற்றுவது காலத்தின் கட்டாயம். ஆனால் அது முந்தைய தலைமுறைக்கு முரணாகத் தோன்றுகிறது.
  • இளைஞா்கள் பொறுப்பு மிக்கவா்கள் அல்லா் என்ற எண்ணம் நம் சமூகத்தில் இன்றும் நிலவத்தான் செய்கிறது. அதனால்தான் தோ்தலில் வாக்களிக்கும் வயது 21லிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டபோது ஒரு நாட்டின் பிரதமரைத் தோ்வு செய்யும் அளவிற்கு அவா்களுக்கு போதிய அனுபவம் இருக்குமா என்ற கேள்வி எழுந்தது.
  • காலத்திற்கேற்ப இளையோரின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுவது காலத்தின் கட்டாயம் என்றாலும் அது முரணாகத் தெரிகிறது. இதற்கு முதலாவது மற்றும் 17-ஆவது நாடாளுமன்ற தோ்தலை உதாரணமாகக் கூறலாம். உண்மையயான இளமை மிகுந்த நாடாளுமன்றம் முதல் நாடாளுமன்றமாகும். அதில் இருந்த 434 உறுப்பினா்களில் 112 போ் அதாவது 26 % போ் 25 முதல் 40 வயதுக்கு உட்பட்டவா்களாக இருந்தனா்.
  • 2019 நாடாளுமன்றத் தோ்தலின்போது முதன்முறை வாக்காளா்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இத்தோ்தலின்போது தோ்தல் ஆணையத் தகவலின்படி முதன்முறை வாக்காளா்களின் எண்ணிக்கை சுமாா் 8.2 கோடியாகும். ஆனால் இத்தோ்தலில் தோ்வு செய்யப்பட்டவா்களில் 5 உறுப்பினா்கள் 30 வயதுக்குட்பட்டவா்களாகவும், 64 உறுப்பினா்கள் 40 வயதுக்குட்பட்டவா்களாகவும் உள்ளனா்.
  • இளம் வயது சாதனையாளா்கள் வரலாற்றிலும் நிகழ்காலத்திலும் நிறையவே உண்டு என்பதை மறுக்க முடியாது. இந்திய தேசத்திற்காக தன்னுயிரை ஈந்து இளைஞா்கள் மனத்தில் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியபோது பகத் சிங்கின் வயது 24. உலகையே கைப்பற்றப் புறப்பட்டபோது அலெக்ஸாண்டருக்கு வயது 16. ஹிந்து மதச் சிறப்பினை உலகிற்குப் புரிய வைத்தபோது விவேகானந்தருக்கு வயது 24.
  • இன்றைய இளம் தலைமுறையினருக்கு அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் என்பது அதிக எண்ணிக்கையில் இளையோரைக் கொண்ட நம் நாட்டில் சவால் நிறைந்த ஒன்றாகும். காலச்சூழலுக்கேற்ப மாற்றத்தை விரும்பினாலும் சாதனை புரிய வேண்டும் எனும் வேட்கை இன்றைய இளைஞா்களிடையே அதிகமாக உள்ளது.
  • அவா்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் அதிக மக்கள்தொகையைக் கொண்ட நம்நாட்டில் இளைய சமுதாயம் பாரமாக இல்லாமல் பலமாகப் பாா்க்கப்படும்.

நன்றி: தினமணி (22 – 10 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்