- சாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் நியமித்துள்ளார் முதல்வர் கே.பழனிசாமி. தமிழ்நாட்டில் சாதிரீதியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளின் நீண்ட நாள் கோரிக்கை.
- இந்தியாவில் 1931-ல் கடைசியாக சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர், 2011-ல்ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஒப்புதல் தந்தது. என்றாலும், தற்போது அந்தப் பிரச்சினை தீவிரப்பட்டிருக்கிறது.
- சாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டால்தான், சமூகத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கையைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு அமையும்.
- அப்போதுதான் அவர்களுக்குத் தேவையான அரசு நலத்திட்டங்களைக் கொண்டுசேர்க்க முடியும். பிரத்யேகமாகப் புதிய திட்டங்களையும் தீட்ட முடியும். மிக முக்கியமாக, இடஒதுக்கீட்டின் அவசியத்தையும் தேவையையும் பங்கையும் உறுதிப்படுத்த முடியும்.
ஏன் வேண்டும் இடஒதுக்கீடு?
- நமது அரசமைப்புச் சட்டம் மக்களிடையே சமத்துவத்தை வலியுறுத்துகிறது. சாதிகளால் ஆன நமது சமூகத்தில் அனைத்துச் சாதியினருக்கும் நீதி வழங்குகிறபோதுதான் சமத்துவத்துக்கான பாதை செம்மையுறும். அது சமூகநீதி, கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவதன் மூலமே சமன்படுகிறது. ஆனால், 50%-க்கு மேற்கொண்டு இடஒதுக்கீடு இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தொடர்ந்து தனது கருத்தை வெளிப்படுத்திவருகிறது.
- தமிழகத்தின் 69% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கைச் சரியான முறையில் எதிர்கொள்வதற்கு, சாதியக் கணக்கெடுப்பின் மூலமாக முழுமையான புள்ளிவிவரங்கள் தேவைப்படுகின்றன. சாதிவாரியாகத் தற்போதைய நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களைச் சேகரித்து, உரிய தரவுகளை அறிக்கையின் மூலம் பெறுவதற்காகவே பிரத்யேக ஆணையத்தை அமைத்திருக்கிறார் தமிழக முதல்வர்.
- இந்திய அளவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆராய 1979-ல் மண்டல் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, 1983-ல் அறிக்கை வழங்கப்பட்டாலும், வி.பி.சிங் பிரதமரான போதுதான் அந்த ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று 50% இடஒதுக்கீட்டை நிலைநாட்டினார்.
- இந்தியாவின் பிற மாநிலங்கள் இன்னமும்கூட 50%-க்குள்ளாகவே இடஒதுக்கீட்டைப் பின்பற்றிவரும் நிலையில், தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டுவருகிறது. ஆகவேதான், தமிழகத்தில் தற்போது இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராகப் பல்வேறு தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுவருகின்றன.
150 ஆண்டு கால வரலாறு
- தமிழகத்தின் சமூகநீதி அரசியல் 150 ஆண்டு கால வரலாறு கொண்டது. 1891-ல் விகிதாச்சார உரிமை என்ற சமூகநீதிக் கருத்தைத் தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி பண்டித அயோத்திதாசர் முன்வைத்தார்.
- கிராம அலுவலர் உட்பட பல அரசாங்கப் பணிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு செய்வதன் மூலம் அவர்களுடைய பொருளாதாரத்தை உயர்த்துமாறு கோரிக்கை விடுத்தார்.
- நீதிக் கட்சித் தலைவர்களான தியாகராயரும் டி.எம்.நாயரும் சி.நடேசனாரும் சமூகநீதியைப் பிரதானமான ஒன்றாகக் கருதினர். இந்திய நிதியமைச்சராக இருந்த ஆர்.கே.சண்முகம், பாரிஸ்டர் ரங்கராமானுஜம் ஆகியோரும் இந்த உரிமைப் போராட்டத்தில் முக்கியப் பங்களித்துள்ளனர்.
- இந்தியாவில் பல மாநிலங்களில் சுதந்திரத்துக்குப் பிறகும், இன்று வரை சரியாகக் கிடைக்க வேண்டிய கல்வி, சமூகநீதி, சமூக நலத்திட்டங்கள் ஆகியவை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே குறைந்த அதிகாரம் கொண்ட மாண்டேகு செம்ஸ்போர்டு திட்ட இரட்டை ஆட்சி முறையிலேயே சாத்தியப்படுத்திக் காட்டியது அன்றைய சென்னை மாகாணம். பெரியாரும் திரு.வி.க.வும் நீதிக் கட்சியின் வகுப்புரிமையை காங்கிரஸ் கட்சி ஏற்க வேண்டும் என வலியுறுத்தினர். இடஒதுக்கீட்டு முறை நடைமுறையில் இருந்தாலும், ஏற்றத்தாழ்வு என்னும் நச்சுமரத்தை வீழ்த்த ‘கம்யூனல் ஜிஓ’ ஆணை வந்த பிறகுதான் பல போராட்டங்கள் தொடங்கின. ஆகவேதான், அன்றைய காலகட்டத்திலேயே சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் குரல் எழுந்தது.
அரசமைப்பில் முதல் திருத்தம்
- இந்திய அளவில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதால், சமூகத்தில் சாதி மத வேறுபாடுகளால் ஒடுக்கப்பட்டோர் மெல்ல மெல்ல மேலெழுந்துவருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை, 1920-களில் இருந்தே நீதிக் கட்சி ஆட்சியின் பலனாக இடஒதுக்கீட்டு முறை நடைமுறைக்கு வந்துவிட்டது. திராவிட இயக்க ஆட்சியில் இடஒதுக்கீட்டு முறை பல்வேறு படிநிலைகளைக் கடந்துவந்திருக்கிறது. பிறப்பின் அடிப்படையில் கற்பிக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகச் சமூக விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி கண்ட மாநிலம் தமிழ்நாடு.
- இந்திய ஒன்றியக் குடியரசின் முதலாவது சட்டத் திருத்தத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் திருத்தமும் ஒன்று. அதற்கு முழுமுதல் காரணம் தமிழகத்தில் உருவான கிளர்ச்சிதான்.
- 1951-ல் முதலாவது சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டபோது, சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு பொருளாதாரத்திலும் பின்தங்கியவர்கள் என்ற சொல்லைச் சேர்க்க வேண்டும் என்று ஜனசங்கத்தைச் சேர்ந்த எஸ்.பி.முகர்ஜி வலியுறுத்தினார். அதை அம்பேத்கரும் ஜவாஹர்லால் நேருவும் பெரும்பான்மை உறுப்பினர்களும் மறுத்துவிட்டனர்.
அதிமுகவின் பங்களிப்பு
- அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும் சமூகநீதியை அடிப்படையாகக் கொண்டு பயணிக்கும் தமிழகத்தில் சமூக அரசியலிலும் வாக்கு அரசியலிலும் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
- இந்த சமூகநீதிப் பாதையினாலேதான், தமிழகம் பிற மாநிலங்களை ஒப்பிடும்போது கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் வளர்ந்து செழித்து நிற்பதாகப் பொருளியலாளர்கள் அமார்த்திய சென், ழீன் தெரசே இணைந்து எழுதிய ‘நிச்சயமற்ற பெருமை - இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்’ நூலில் குறிப்பிட்டுள்ளனர்.
- வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், விகிதாச்சார உரிமை, இடஒதுக்கீடு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் சமூகநீதிதான் ஜனநாயகத்தின் ஆணிவேர். இதில் பெரியார், அண்ணா, மு.கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பங்களிப்பு மிகப் பெரியது.
- பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டைத் திரும்பப் பெற்று இடஒதுக்கீட்டின் அளவை 68% ஆக உயர்த்தினார் எம்ஜிஆர். பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடும் 31%-லிருந்து 50% ஆக உயர்த்தப்பட்டது.
- அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகக் கிராம நிர்வாக அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்படவும், அதன் மூலமாகத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அந்தப் பொறுப்புக்கு வரவும் செய்தார் எம்ஜிஆர்.
- தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டை மீட்டுத்தந்தவர் ஜெயலலிதா. அரசின் கொள்கை முடிவு என்று சட்டமன்றத்தில் அறிவித்ததோடு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று, நாடாளுமன்றத்தின் வாயிலாக அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளவும் காரணமாக இருந்தார்.
- அவர் மீட்டுத்தந்த விகிதாச்சார உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்றால், தற்போது சாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியமான ஒன்று.
நன்றி: இந்து தமிழ்திசை (17/12/2020)