TNPSC Thervupettagam

சாதி வன்மத்தை வேரறுக்கும் வழிகள்

August 23 , 2023 506 days 317 0
  • வேங்கைவயல், மேல்பாதியில் நிகழ்ந்த சாதிய இழிவுகளைத் தொடர்ந்து நாங்குநேரி சம்பவம் இன்னும் அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னவை இரண்டும் ஒரு வகை சாதி இழிவும் ஒதுக்குதலும் என்றால் நாங்குநேரி சம்பவமானது வன்மம், குரூரம், மனச்சிதைவு ஆகியவை மீதூரப்பெற்றதாக உள்ளது.

கல்வியின் இலக்கு

  • நடத்தை மாற்றம் (Behavioural change) என்பதுதான் கல்வியியலின் அடிப்படை. ஆனால், இங்கே அது நெறிபிறழ்வைத்தான் ஏற்படுத்தி இருக்கிறது. பயன்பாடு கருதிய கல்வி என்பது மேலையக் கல்வி முறை; பண்பாடு தழுவிய கல்வி என்பதுதான் கீழையக் கல்வி முறை. ஆனால், கல்வி என்பது அறிவு பெறுதல், அறிவை விரிவாக்குதல் என்பதைக் கடந்து வேலைக்கான, அடையாள வில்லையாகச் சுருங்கியதன் விளைவுதான் இத்தகைய நடத்தைக் கேடுகள்.
  • தன் முன்னேற்றம் ஒன்றையே இலக்காக்கி, தனியன்களாக உருவாக்கப்படும், உருவாகும் குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்? மனிதன் ஓர் சமூக உயிரி என்ற அடிப்படை இன்று யாருக்கும் புரியவில்லை. குழந்தைகளைச் ‘சமூகமய’மாக உருவாக்குவதில் கல்விக் கூடங்களுக்குத் தான் அதிகப்பங்கு உண்டு. அவர்கள் அதிக நேரம் செலவிடுவது அங்குதான். நாட்டு விடுதலைக்குப் பின் சில பத்தாண்டுகள் கல்விக் கலைத்திட்டத்தில் பல முக்கியக் கூறுகள் இடம்பெற்றன.

அருகிப்போன நல்ல அம்சங்கள்

  • குழந்தைமையின் மேம்பாட்டுக்கு இரண்டு அடிப்படைகள் உண்டு. ஒன்று மனப்பயிற்சி; மற்றது உடற்பயிற்சி. மனப்பயிற்சியில் சேர்ந்து உரக்கச் சொல்லும் பாடல்கள், கூட்டாகக் கதை நிகழ்த்துதல், கூட்டுச் செயல்பாடுகளாக அமையும் சொல் விளையாட்டுகள் ஆகியன ‘நீதி போதனை’ வகுப்புகளாக இடம்பெற்றன. உடற்பயிற்சிக்கு மாலை நேரத் திறந்தவெளி கூட்டுப் பயிற்சிகள், விளையாட்டுகள் நிகழ்வுற்றன. இந்த இரண்டையும் இணைக்கும் விதமாகக்கலைப்பயிற்சி, தோட்ட வேலை, கைத்தொழில் வகுப்புகளும் இடம்பெற்றன.
  • இவை பரஸ்பர அன்பை, உறவை வளர்த்தன. கூட்டுறவு மனப்பாங்கு, விட்டுக்கொடுத்தல், நிதானம், பொறுமை, நுட்பம் ஆகிய இயல்புகளை வளர்த்தன. இளம் பருவத்திலேயே உழைப்புக்கும் அறிவுக்குமான தொடர்புறவை மறைமுகமாகப் போதித்து இடை வெளியைக் குறைத்தன.
  • இன்றைய மதிப்பெண் மையச் சூழலில் இவை காணாமல் போய்விட்டன. குழந்தைகள் பொது அறிவையும் பகிர்ந்துகொள்ளும் பண்பையும் வளர்த்த சுற்றுலாக்கள், களப்பயணங்கள் இன்றைக்கு அருகிவிட்டன. அறிவியல் மனப்பாங்கை நாம் வளர்த்துக்கொள்ள வில்லை.
  • அது குழந்தைகளிடமிருந்து தொடங்கப்பட வேண்டும். அதற்கு அறிவியல் சார்ந்த சமூகவியல்தான் வாய்ப்பு. முதலில் உலகம் தோன்றியது எப்படி, உயிர்கள் தோன்றியது எப்படி என்கிற உண்மையைச் சொல்லியாக வேண்டும். பின்னர் சமயங்கள், சாதிகள், ஆண்-பெண் பிரிவினை ஆகிய இம்மூன்றும் குறித்த அறிவியல் அடிப்படையிலான சமூகவியலை அவசியம் கற்பிக்க வேண்டும்.

பரப்பப்படும் வன்மம்

  • சில தவறான புரிதல்கள் திட்டமிட்டுச் சுயநலமிகளால் பரப்பப்படுகின்றன. அதில் முக்கியமானது இடஒதுக்கீட்டு முறை. இது ஏதோ பட்டியல் சாதியினருக்கு மட்டுமானது என்ற கருத்து தீய வடிவில் வலம்வருகிறது. இடஒதுக்கீட்டு முறையால் பிற்படுத்தப்பட்டவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும்தான் அதிகம் பயன்பெற்றுள்ளனர் என்கிற உண்மை மறைக்கப்படுகிறது.
  • அது மட்டுமல்ல, புத்தாயிரம் ஆண்டுக்குப் பிறகு அரசு வேலை என்பதே கானல் நீராகிவிட்டது. வேலையின்மை, விலைவாசி உயர்வு எனப் பல பிரச்சினைகள். இவை அனைவரும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டியவை. இதிலிருந்து திசை திருப்பவே சாதி வன்மம் விதைக்கப்படுகிறது. ஏற்றத்தாழ்வுள்ள சமூக அமைப்பில், எல்லாவற்றையும் சமமாகப் பாவிக்க முடியாது. பட்டியல் சாதியினரின் சங்கங்கள், அமைப்புகளுக்கும் பிற சாதி அமைப்புகளின் செயல்பாடுகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
  • சாதி என்பது கற்பிதம் என்பதை உணர்த்த வேண்டும். அதற்குக் கருத்தியல் தயாரிப்பு முக்கியம். விடுதலைப் போராட்டக் காலத்தில் அதை மையமிட்டு மாணவர்களும் இளைஞர்களும் இணைந்தார்கள். பின்னர் மொழியுரிமை சார்ந்து அது நிகழ்ந்தது. எண்பதுகளுக்குப் பின்னர் உலகமய, நுகர்விய அலை குறிக்கோளற்ற சமூகத்தைப் பிரசவித்து விட்டது. இன்றைய இளைஞர்கள், மாணவர்களுக்கு இலக்குகள் இல்லை.
  • ஊர்ப்புறங்களில் இருந்த பொதுச் சேவை மன்றங்கள், பொது நல அமைப்புகள் யாவும் காணாமல் ஆகிவிட்டன. மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நம்பிக்கையளிக்கும் கட்சிகள் இல்லை. தலைவர்கள் இல்லை. கொள்கைகள் இல்லை. படித்தால் வேலைவாய்ப்பு இல்லை. இந்நிலையில் சாதி இவர்களை அபகரித்துவிடுகிறது.

எங்கும் பரவிய சாதி

  • திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதிப் பள்ளிகளில் தொண்ணூறுகளில் பிள்ளைகள் கைகளில் கயிறுகள் முளைத்தன. பின்னர் எங்கும் அது பரவியது. இது விநாயகர் ஊர்வலங்களை முன்னிட்டு உருவானது. சாதி அமைப்புகளின் தலைமைகள் உயிர்ப்பு பெற்றபோது சமயக் கயிறுகள் சாதிக் கயிறுகளாக மாறின.
  • பள்ளி, கல்லூரிகள், கழிப்பிடங்கள், சுற்றுச்சுவர்களில் எழுதுதல் தொடங்கி, மிதிவண்டி, இருசக்கர வாகனங்களில் ‘குறியீட்டுப் பெயர்’கள் எழுதுவதுவரை இது நீடிக்கிறது.
  • தமிழ்நாட்டில் பெயர்களுக்குப் பின் சாதிப் பட்டங்கள் போட்டுக்கொள்வது எப்போதோ குறைந்து விட்டது. சமூக நீதி இயக்கத்தின் கொடை இது. ஆனால், இன்று ஒரு சில பகுதிகளில் குழந்தைகளுக்குக்கூடப் பின்னொட்டாகப் பட்டப் பெயர்கள் வால் போல் உறுத்துகின்றன. சாதி என்பது ஆயிரமாண்டுகளின் அழுக்கு. ஒரே துடைப்பத்தால் நீக்கிவிட முடியாது.
  • சுயசாதி அபிமானம் ஒழிப்பது, சாதியைக் கடக்க மனத்தயாரிப்பு செய்வது அவசியம். அதற்கு ‘சாதி’யாக இருப்பவர்களுக்கும் ‘சனநாயக’மாக இருப்பவர்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை உணர்வது அவசியம்.

தீர்வுக்கான வழிகள்

  • சாதியின் ஆணிவேர் அகமணத் திருமண முறையில் இருக்கிறது. எனவேதான் ஆணவக் கொலைகள் நிகழ்கின்றன. பாலினச் சமத்துவத்தோடு, சமூகச் சமத்துவத்தையும் சேர்த்தே பேச வேண்டியிருக்கிறது. சாதி நடைமுறையும், சாதி இழிவும், இதன் வழிப்பட்ட சாதி வன்முறைகளும் நாகரிகச் சமூகத்துக்கான சவால். இவற்றை முடிவுக்குக் கொண்டுவர, முறையான, உறுதியான சட்டநடவடிக்கையும், தண்டனையும் அவசியம். தேர்தல் அரசியலில் சாதி சார்ந்த தேர்வுகளைப் பெரிய அரசியல் கட்சிகள் கைவிட வேண்டும்.
  • திருவிழாக்களில் சாதி, உள்ளூர் பஞ்சாயத்து முறைமையைப் படிப்படியாக நீக்குதல்; வாகனங்களில் பதிவெண் விவரங்களைத் தவிர வேறு எதுவும் எழுதக் கூடாது என அறிவித்தல்; பள்ளி, கல்லூரிகளில் கயிறு போன்ற அடையாளங்களைக் கைவிடச் செய்தல் போன்றவை அவசியம்.
  • சாதிப் பின்னொட்டுகளைப் பயன்படுத்துவதைச் சட்ட அடிப்படையில் தடுக்க வேண்டும். சாதி, பட்டப் பெயர்கள் இடம்பெறும் நிகழ்வுகளில் அரசு நிர்வாகப் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள் பங்கேற்கக் கூடாது. சமூக ஊடகங்களே சாதி வன்மத்தை உருவாக்குவதில், பரப்புவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
  • பள்ளி, கல்லூரிகளில் இலக்கிய மன்றங்கள், நூலக விழாக்கள், விளையாட்டு விழாக்கள், பண்பாட்டுத் திருவிழாக்களைக் கூட்டுப்பங்கேற்புடன் நிகழ்த்துதல், அரசு சார்பில் முன்னெடுக்கப் படும் நிகழ்வுகளில் தொழில்முறைப் பேச்சாளர்களைத் தவிர்த்து, சமூகப் பயன்மிக்க ஆளுமைகளைப் பங்கேற்கச் செய்தல், பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும் சாதி, பாலினப் பாகுபாட்டுக்கு எதிரான, உறுதியான நடவடிக்கைகள் போன்றவை முன்னெடுக்கப்பட வேண்டும்.
  • விரிவான வாசிப்பு, இலக்கியங்கள், கலை வெளிப் பாடுகள், களப்பயணங்கள், கூட்டு ஒன்று கூடல் உள்ளிட்ட பண்பாட்டு நிகழ்வுகளை எல்லா அலகுகளிலும் அறிமுகப்படுத்தலாம். தெளிவான சிந்தனையும் திட்டமிடலும் இருந்தால், சாதி அரக்கனின் கரங்களிலிருந்து இளம் தலைமுறையைப் படிப்படியாக மீட்டெடுக்கலாம்!

நன்றி : இந்து தமிழ் திசை (23  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்