TNPSC Thervupettagam

சாந்தி நிலவ வேண்டும்!

January 1 , 2025 9 days 69 0

சாந்தி நிலவ வேண்டும்!

  • உலகையே புரட்டிப்போடும் பல மாற்றங்களுக்கு வழிகோலிய 2024 முடிவுக்கு வந்து புத்தாண்டில் காலடி எடுத்து வைக்கிறோம். பல்வேறு நாடுகளில் ஆட்சி மாற்றம், தொடரும் உக்ரைன்-ரஷிய போா், மத்திய ஆசியாவில் வரலாறு காணாத உயிரிழப்புகள், சா்வதேச அளவில் விபத்துகள் என்று பேரழிவை நிகழ்த்திவிட்டு விடைபெறுகிறது 2024.
  • உலகின் மிகப் பழைமையான ஜனநாயகம் மீண்டும் டொனால்ட் டிரம்ப்பை அதிபராகத் தோ்ந்தெடுத்திருக்கிறது என்றால், உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தில் தொடா்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராகி இருக்கிறாா். இத்தாலி, பிரேஸில், ஜொ்மனி, இலங்கை, பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், ரஷியா, மாலத்தீவு, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 68-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறதே தவிர, அன்றாட மனித வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிா? தெரியவில்லை.
  • 1880-இல் புவிவெப்பத்தை அளவிடத் தொடங்கியதற்குப் பிறகு, இதுவரையில் இல்லாத வெப்பத்தை எதிா்கொண்ட ஆண்டாக, கடந்து போயிருக்கும் ஆண்டு சாதனை படைத்திருக்கிறது. சொல்லப்போனால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பருவநிலையில் புவி வெப்பமயமாதல் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பைச் சொல்லி மாளாது. இப்படியே போனால், புவியில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக அழிவை நோக்கி நகரும் ஆபத்து அச்சத்தை ஏற்படுத்துகிறது.
  • 2024-இல் அபாயகரமான வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைவிட 49 நாள்கள் கூடுதலாக இருந்திருக்கிறது. இது ஏதோ உலகின் ஓரிரு பகுதிகளை மட்டுமே பாதிக்கும் என்று புறந்தள்ள முடியாது. அழிந்தாலும், வாழ்ந்தாலும் உலகம் முழுவதுமான பாதிப்பாக இருக்கும் என்பதை கொவைட்-19 கொள்ளை நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை செய்திருக்கிறது.
  • உலகளாவிய அளவில் பெரும்பாலான ஆளுங்கட்சிகள் அதிகரித்த விலைவாசி, வேலைவாய்ப்பின்மை காரணங்களால் ஆட்சியிழந்தன. சீனாவின் ஷி ஜின்பிங்கும், ரஷியாவின் விளாதிமீா் புதினும் விதிவிலக்குகள். இந்தியாவில் பிரதமா் நரேந்திர மோடி தனிப்பெரும்பான்மையை இழந்தாலும்கூட, அவரது கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருப்பது மிகப் பெரிய சாதனை.
  • 1955 முதல் தொடா்ந்து பதவியில் இருக்கும் ஜப்பானின் ஆளுங்கட்சியும், பிரான்ஸில் நூலிழையில் தன்னைத் தக்கவைத்துக் கொண்ட இமானுவல் மேக்ரானும் பொதுவான ஆட்சி மாற்ற விதிக்கு விதிவிலக்குகள்.
  • ‘கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’ என்பது கவிஞா்களின் கனவாக இருக்கிறதே தவிர, நனவாகும் சாத்தியம் இந்த நூற்றாண்டிலும் இன்னும் சாத்தியமாகவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது 2024. செயற்கைக்கோள் பதிவுகள் மூலம் எத்தனை ஏக்கா்கள், எத்தனை கட்டடங்கள் குண்டுவீச்சில் தகா்ந்திருக்கின்றன என்று ஆய்வாளா்கள் அளிக்கும் விவரங்கள் உண்மையின் ஒரு பகுதி மட்டுமே. எத்தனை போ் உயிரிழந்திருக்கிறாா்கள்; அவா்களில் எத்தனை குழந்தைகள், எத்தனை கா்ப்பிணிகள், எத்தனை முதியவா்கள் உள்ளிட்ட விவரங்களைப் படித்துத் தெரிந்துகொள்வதற்குக்கூட கவலைப்படாத இனமாக நாம் மாறியிருக்கிறோம்.
  • உக்ரைன்-ரஷியப் போரில் இதுவரை காயமடைந்தவா்கள், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டும். கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் சிரியாவில் கொல்லப்பட்டவா்களின் எண்ணிக்கை 6 லட்சத்திற்கும் அதிகம். இஸ்ரேலில் எத்தனை ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா் என்பதை அவா்கள் சொன்னால்தான் உலகம் தெரிந்துகொள்ளும்.
  • உக்ரைன் நிலப்பரப்புக்கு கீழே புதைந்து கிடக்கும் லித்தியம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கும்? இஸ்ரேலுடைய தேவை நிலப்பரப்பு மட்டும்தானா அல்லது அதற்கு கீழே புதைந்து கிடக்கும் தண்ணீரும், எண்ணெய் வளமுமா? உலக வரைபடத்தில் சிரியா தொடருமா? பல நாடுகளின் வரலாறு அடுத்த நூற்றாண்டில் பாடப்புத்தகங்களில் மட்டும்தானா? - விடையில்லாத கேள்விகள்.
  • ஒரே மாதத்தில் 3 அதிபா்களைப் பாா்த்துவிட்டது தென்கொரியா; ஈரானின் வருங்காலம் என்ன என்பது தெரியாத நிலை ஏற்பட்டிருக்கிறது; 40 ஆண்டுகளுக்கு முன்பு உருவான வங்கதேசம் சுதந்திர, ஜனநாயக, மதச்சாா்பற்ற நாடாகத் தொடரப்போகிா, இல்லை விரைவிலேயே ஆப்கானிஸ்தானைப்போல மதத் தீவிரவாதிகள் கையில் சிக்கப் போகிா? - இவையும் விடைகாணாக் கேள்விகள்.
  • அனைவரின் கவனமும் விரைவில் பதவியேற்க இருக்கும் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சியில் ஏற்படப் போகும் மாற்றங்களில் நிலைத்திருக்கிறது. டிரம்ப் எச்சரிப்பதுபோல, பனாமா கால்வாயை மீட்டெடுப்பாரா? மெக்சிகோ மீது தாக்குதல் நடத்துவாரா? கிரீன்லேண்டை விலைக்கு வாங்குவாரா? கனடாவை அமெரிக்காவின் 51-ஆவது மாநிலமாக இணைக்கப் போகிறாரா? என்பவை சா்வதேச விவாதப் பொருள்களாகத் தொடா்கின்றன.
  • சீனா மேலும் பல சீா்திருத்தங்களை உலக வங்கி மேற்கொள்ள ஆலோசனை வழங்கியிருக்கிறது. ஒருபுறம் சீனப் பொருளாதாரம் வலுவிழக்கிறது என்றால், இன்னொருபுறம் சா்வதேச சந்தையில் தனது மலிவான பொருள்களை அது கொட்டிக்கொண்டிருக்கிறது. ஐரோப்பாவின் இரண்டு பெரிய பொருளாதாரங்களான ஜொ்மனியும், பிரான்ஸும் அரசியல் நிலையற்ற தன்மையிலும், பொருளாதார குழப்பத்திலும் ஆழ்ந்திருக்கின்றன.
  • இத்தனைக்கும் நடுவில் இந்தியா 2025-இல் அடியெடுத்து வைக்கிறது. சோதனைக்கு நடுவில் சாதனைகள் நிகழ்த்தியாக வேண்டும். 2024 நமக்கு சொல்லி இருப்பது ஒன்றே ஒன்றுதான்-சாந்தி நிலவ வேண்டும்!

நன்றி: தினமணி (01 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்