TNPSC Thervupettagam

சாமானியர்களிடமிருந்து பிரிக்கப்படும் ரயில்...

June 25 , 2020 1491 days 622 0
  • உலகின் பெரிய ரயில்வே வலைப்பின்னலைக் கொண்டதில் ஒன்றான இந்திய ரயில்வே நிறுவனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக எளிய மக்களின் வாழ்க்கையிலிருந்து பிரித்துவிடும்போல இருக்கிறது பாஜக அரசு.
  • ஒட்டுமொத்த இந்தியாவும் கொள்ளைநோயால் ஸ்தம்பித்திருக்கும் இந்த நாட்களிலும் அடுத்தடுத்து இந்திய ரயில்வே எடுத்திருக்கும் இரு முடிவுகள் மோசமானவை.
  • முதலாவது, 200 கிமீ தொலைவுக்கும் கூடுதலாக இயங்கும் பயணிகள் ரயில்கள் அனைத்தும் விரைவு ரயில்களாக மாற்றப்பட வேண்டும் என்பதாகும்.
  • இரண்டாவது, வணிகரீதியாகப் பெரிய லாபம் தராத தடங்களில் இயக்கப்படும் ரயில்களை, அதாவது குறைவான பயணிகளுடன் இயங்கும் ரயில்களைப் படிப்படியாக நிறுத்திவிடுவது என்பதாகும்.
  • இந்த இரு முடிவுகளும் இந்திய ரயில்வேயின் புதிய பயணத் திசையை அப்பட்டமாகவே சொல்கின்றன:
  • ரயில்வே ஒரு சேவை என்கிற நிலையிலிருந்து முழுக்க வியாபாரம் என்ற நிலை நோக்கிப் பயணப்படுகிறது.

ரயில்வேயின் எதிர்காலம்

  • இந்திய ரயில்வே என்பது வெறும் போக்கு வரத்துக் கட்டமைப்பு மட்டுமல்ல; உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தைக் குறுக்கும் நெடுக்குமாக அனைத்து முனைகளுடனும் பிணைப்பது.
  • உலகிலேயே அதிகத் தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களில் இந்திய ரயில்வேயும் ஒன்று; 12.3 லட்சம் பேர் பணிபுரிகிறார்கள்.
  • ஒப்பந்தத் தொழிலாளர்களின் கணக்கு தனி. இவர்களையும் இவர்களின் குடும்பத்தினரையும் சேர்த்தால் ஏறத்தாழ 50 லட்சம் பேர் நேரடியாக இந்திய ரயில்வேயை நம்பியிருக்கிறார்கள்.
  • தினமும் காலையில் காய்கறி மூட்டைகளைத் தூக்கிக்கொண்டு ரயிலேறி, பக்கத்தில் உள்ள சிறுநகரத்துக்குச் சென்று விற்றுவிட்டு ஊர் திரும்புபவர்கள் ஏராளம்.
  • கிராமங்களிலிருந்து தினமும் ரயிலைப் பிடித்துப் பள்ளி, கல்லூரிகளுக்கு லட்சக் கணக்கான மாணவர்கள் செல்கிறார்கள்.
  • இப்படிப்பட்ட கட்டமைப்பைச் சமீப வருடங்களாக அரசு கையாண்டுவரும் விதம், ரயில்வே துறையின் எதிர்காலம் குறித்த அச்சத்தையே ஏற்படுத்துகிறது.
  • கடந்த பத்து ஆண்டுகளில் ரயில்வே துறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முதலீடுகள் கணிசமாகக் குறைந்திருக்கின்றன.
  • 2018-க்கான நிதி அறிக்கையில் ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை 2013-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது 50% குறைவு.
  • 1952-ல் 89% சரக்குப் போக்குவரத்தைத் தன்வசம் வைத்திருந்த ரயில்வே, 2012-ல் 47% இழந்திருக்கிறது.
  • அதாவது, பிற தனியார் தளவாடத் துறை அடைந்த வளர்ச்சிக்கு ஏற்ப ரயில்வே துறை வளர்த்தெடுக்கப்படவில்லை.
  • புதிய ரயில் பாதைகள் அமைப்பதிலும் சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியா பல மடங்கு பின்தங்கியிருக்கிறது. இந்திய ரயில்வே துறையில் போதிய சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது, முதலீடு செய்யாதது, புதிய மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ளாதது எனப் பல்வேறு நிர்வாகக் குறைபாடுகளால் இழந்தது ஏராளம்.
  • இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது என்னவென்றால், உலகின் பல்வேறு நாடுகளிலும் ரயில்வே துறை நஷ்டத்தில்தான் இயங்குகிறது.
  • மக்களின் அன்றாட வாழ்வில் மிக முக்கியமான அங்கமாகிவிட்ட ரயில்களை லாப நோக்கில் பார்க்க முடியாது என்பதுதான் அந்நாடுகளின் நிலைப்பாடு.
  • இந்தியாவிலோ அதற்கு நேர்மாறாக நடந்துவருகிறது. லாபம் இல்லை என்ற காரணம் காட்டி ரயில்வேயையும் தனியார்மயமாக்கும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.
  • பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக ஆக்கும் முயற்சியை அதன் ஒரு படியாகத்தான் பார்க்க முடியும்.
  • இதன்படி, விரைவு ரயில்களாக மாற்றப்பட்டிருக்கும் 502 பயணிகள் ரயில்களில் 24 ரயில்கள் தமிழ்நாட்டில் இயக்கப்படுபவை; இந்த ரயில்கள் இனி குறிப்பிட்ட சில நிலையங்களில் மட்டுமே நின்றுசெல்லும்.
  • மேலும், இவற்றின் கட்டணமும் உயரும். விழுப்புரத்திலிருந்து சுமார் 300 கிமீ தொலைவிலுள்ள மதுரைக்குப் பயணிகள் ரயிலில் இன்று ரூ.65-ல் சென்றுவிட முடியும்.
  • இனி, விரைவு ரயிலில் இது ரூ.250-க்கும் மேல் ஆகும்.

என்னென்ன பின்விளைவுகள்?

  • இந்தியச் சமூகத்துக்கு, குறிப்பாக அடித்தட்டு மக்களின் வாழ்க்கைக்கு ரயில்கள் ஆற்றிவரும் பங்களிப்பைப் புரிந்துணர்ந்த ஒருவர்தான் இந்திய ரயில்வேயின் முழுப் பரிமாணத்தையும் உணர முடியும்.
  • தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கத் தலைவர்களில் ஒருவரான ஆர்.இளங்கோவனிடம் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தேன்.
  • அவர் சொன்னார், “ஒவ்வொரு சிற்றூரிலும் ரயில் நிலையம் கொண்டுவரப்பட்டதன் பின்னணியில் எத்தனையோ போராட்டங்கள் இருக்கின்றன.
  • கிராமப்புற மக்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களைப் பக்கத்தில் உள்ள நகரங்களுக்குக் கொண்டுசென்று விற்பார்கள். அவர்களுக்கு மார்க்கெட் சீசன் டிக்கெட்கூட உண்டு. கட்டணம் ரொம்பவும் குறைவு. பயணிகள் ரயிலில் 64% பேர் சீசன் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள்தான். முக்கியமாக, மாணவிகள் என்றால் அவர்களுக்குப் பட்டப்படிப்பு வரை விலையில்லா சீசன் டிக்கெட். மாணவர்கள் என்றால் 12-ம் வகுப்பு வரை. அவர்களைக் கல்வியை நோக்கி உந்தித்தள்ள இது எவ்வளவு பெரிய உந்துசக்தி!
  • சரி, இப்படியே போய் ரயில்கள் தனியார்மயமானால் என்னவாகும்? தாம்பரத்திலிருந்து எழும்பூருக்குச் செல்ல இன்று ரூ.10 கட்டணம் என்றால், தனியாரிடம் செல்லும்போது இது ரூ.70 ஆகும்.
  • ஏற்கெனவே மெட்ரோ ரயில்களின் கட்டணம் கிட்டத்தட்ட அப்படித்தானே இருக்கிறது! ஒருகட்டத்தில் இது என்னவாகும் என்றால், மக்களை ரயில்களிலிருந்து அகற்றும்.
  • பேருந்து, தனிநபர் போக்குவரத்து போன்றவற்றை மக்கள் நாடும்போது, விபத்துகள் அதிகரிப்பதுடன் சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படும்.

முக்கியமான ஒரு கேள்வி

  • இதையெல்லாம் தாண்டி ஒரு கேள்வி இருக்கிறது. ரயில்களை வெறுமனே வியாபாரமாகப் பார்க்க முடியுமா?
  • அப்படியென்றால், சீனா, பாகிஸ்தான் எல்லைகளில் ரயில் பாதைகளை அமைக்கிறோமே, அது எதற்காக?
  • போக்குவரத்தின் வழியே நாட்டின் பாதுகாப்புக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதுதானே நோக்கம்?
  • அப்படியென்றால், போக்குவரத்தின் வழியே நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதை மட்டும் எப்படி வெறும் வியாபாரமாகப் பார்க்க முடியும்?

நன்றி: தி இந்து (25-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்