- ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்படும்போது அனைத்துத் தரப்பினரும் தங்களுக்கென்று தனியாக வரிச் சலுகை அல்லது வரி விலக்கு, புதிய திட்டங்கள், மானிய உதவிகள் அறிவிக்கப்படாதா என்று எதிர்பார்க்கின்றனர். இதற்குக் காரணம் ‘வளரும் நாடு’ என்று நாம் கௌரவமாக அழைத்துக்கொண்டாலும், வறியவர்களின் நாடாகவே இருக்கிறோம். வசதி படைத்தவர்களுடைய எண்ணிக்கை மொத்த மக்கள்தொகையில் ஒரு சதவீதம் அளவுக்குக்கூட இருக்காது.
- இருந்தாலும் ஆக்ஸ்ஃபாம் உள்ளிட்ட அமைப்புகளின் அறிக்கைகள், நாட்டின் செல்வ வளத்தில் சரிபாதிக்கும் மேலும், வருமானத்தில் 70 சதவீதத்துக்கும் மேலும் மிகச் சிலருக்கே செல்வதாகவும் மக்கள் மேலும் ஏழைகளாவதாகவும் எச்சரிக்கின்றன. பணக்காரர்களின் வருமானம், லாபத்தைக் கட்டுப்படுத்த மட்டுமல்ல, ஏழைகளுக்கு – தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் அளிக்கும் கொள்கைகூட இன்னமும் வகுக்கப்படாதது வேதனை தருவது.
- பாஜக அரசு இடதுசாரி அரசு அல்ல. எனவே பணக்காரர்கள் மீது தனி வரிகளோ, புதிய வரிகளோ விதிப்பார்கள் என்று யாரும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை. அதேவேளையில், பெருந்தொழில் நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் கேட்கும் சலுகைகளில் சில ஏற்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். அந்தச் சலுகைகள் அவர்களுக்கு மட்டும் பயன்படாமல் மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பு, வருமானம் கிடைப்பதாக இருக்குமாறு பார்த்துக்கொள்வது முக்கியம்.
முக்கியக் கடமைகள்
- இந்த அரசுக்கு சில முக்கியக் கடமைகள் இருக்கின்றன. அதை நிதிநிலை அறிக்கை வாயிலாகத்தான் நிறைவேற்றியாக வேண்டும்.
- முதலாவது, பெருந்தொற்றால் வேலைவாய்ப்பு, வருமானம் இழந்த பெரும்பான்மை மக்களுக்கு நிரந்தரமான நிவாரணம் கிடைப்பதற்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது – வேலைகளில் அமர்த்துவது.
- இரண்டாவதாக, வரிகளைப் புதிதாகப் போடாமலும் ஏற்கெனவே விதித்த வரி விகிதங்களைக் குறைத்தும் மக்களுக்கும் தொழில்-வர்த்தகத் துறைகளுக்கும் நிவாரணம் அளிப்பது.
- மூன்றாவது, நாட்டின் உள்நாட்டு, வெளிநாட்டுக் கடன் சுமையைக் குறைப்பதற்கான நீண்ட காலத் திட்டங்களை வகுத்து அமல்படுத்துவது.
- நான்காவது, தொழில் துறை உற்பத்தியைப் பெருக்கத் தேவைப்படும் ஊக்குவிப்புகளைத் தொடர்வது. மருந்து-மாத்திரைகள் தயாரிப்பு, மருத்துவக் கருவிகள் தயாரிப்பு, மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் வாகனத் தயாரிப்பு ஆகியவற்றுக்கு வரி விடுமுறை உள்ளிட்ட உதவிகளை அரசு செயல்படுத்த வேண்டும். தகவல் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் முதலீடும் வளர்ச்சியும் பெருக தடைகளாக உள்ள அம்சங்களை நீக்குவது.
- ஐந்தாவது, ஏற்றுமதியை அதிகப்படுத்தவும் புதிய தயாரிப்புகளை ஏற்றுமதிசெய்யவும் தனிக் கவனம் அளிப்பது.
- ஆறாவது, சீனா உள்ளிட்ட நாடுகளின் தயவை மட்டுமே நம்பியிருக்கும் நிலையைக் களைய, முடிந்தவரை உள்நாட்டில் தயாரிக்க முற்படுவது.
- ஏழாவது, நாட்டின் வேலைவாய்ப்பு, உற்பத்திக்கு முக்கியப் பங்களிப்பு செய்யும் மத்திய தர வர்க்கத்தினரின் வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பதை உணர்ந்து வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவது, ஆண்டுதோறும் அனுமதிக்கும் நிலையான கழிவு வரம்பை இரு மடங்காக்குவது (ரூ.50,000-ஐ ஒரு லட்சமாக்குவது). இது மிக முக்கியமானது ஆகும்.
வீட்டுக்கடன் வட்டி
- சாமானிய மக்களிடம் பல எதிர்பார்ப்புகள் உள்ளன.
- வீடமைப்புத் துறையானது அரசுக்கு வரி வருவாயைப் பெருக்குவது. அத்துடன் வேலைவாய்ப்பு, சிமென்ட் - உருக்கு உள்ளிட்ட துறைகளுக்கு வளர்ச்சிகளைத் தருவது. எனவே வீடு கட்டுவதற்கான கடன் வரம்பை உயர்த்துவது, வருமான வரியில் விலக்கு தர ஆண்டுதோறும் அசல் – தவணை ஆகியவற்றைக் கழித்துக் கொள்ள வரம்பு எதையும் நிர்ணயிக்காமல் முழுச் செலவையும் கழித்துக்கொள்ள அனுமதிப்பது போன்ற நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். அரசு தரும் இந்தச் சலுகைக்காக யாரும் தங்களுடைய நிதிநிலைமையை மிஞ்சிய அளவுக்கு வீடு கட்டக் கடன் வாங்கிவிட மாட்டார்கள்.
- சுற்றுச்சூழலைக் காப்பதற்காக சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரத் தயாரிப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும். வீடுகளில் மொட்டை மாடிகளில் அல்லது கூரைகளில் சூரியஒளி மின்னுற்பத்தி அலகை ஏற்படுத்தும் வீடுகளுக்கு எளிய தவணைகளில் குறைந்த வட்டிக்குக் கடன் தரும் திட்டங்களை அரசுத் துறை வங்கிகள் மூலம் நிறைவேற்ற வேண்டும்.
- மின்னுற்பத்திக்கு உதவும் சூரிய ஒளித்தகடுகள், மின்சார சேமிப்பு மின்கலம், இருவழி மின்கணக்கீட்டுமானி போன்றவற்றுக்கு முழு வரிச்சலுகை அளித்து விற்பனையை ஊக்குவிக்க வேண்டும். அடுக்ககங்களில் இப்படி உற்பத்தியாகும் மின்சாரத்துக்கு, மின் வாரியம் வசூலிக்கும் அதே அளவுக்கு விலையை நிர்ணயித்து சலுகை வழங்குவதால் அரசுக்கு இழப்பு ஏதும் இல்லை.
- அதிகாரிகளின் குறுகிய மனப்போக்கு காரணமாக, அந்த உற்பத்தியைச் சீர்குலைக்கும் வகையில் சில மாநிலங்களில் அடுக்ககங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்துக்கு குறைந்த கொள்முதல் விலைதான் தருவோம் என்று நெருக்குகின்றனர். அடுத்து, அடுக்ககங்களில் கார் நிறுத்தம், விளையாட்டுத் திடல், உடல்பயிற்சிக் கூடம் போன்ற பொதுப் பயன்பாட்டுக்கான மின்சார நுகர்வுக்கு வணிக நிறுவனங்களுக்கு இணையான மின்சாரக் கட்டணத்தை அடுக்ககங்கள் கட்ட வேண்டும் என்றும் சில பெருநகரங்களில் நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இவையெல்லாம் தாராளப் பொருளாதாரவாதக் கொள்கைகளே அல்ல. யாரோ விதைத்த வெள்ளரிக்கு, விற்பனை விலை நிர்ணயித்த வெள்ளைக்காரத் துரைத்தனமே இது.
- பொதுப் போக்குவரத்தை மேலும் ஊக்குவிக்கும் வகையில் பேருந்துகள், சுமை லாரிகள், வாடகைக் கார்கள் போன்றவற்றை வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையில் இயக்க, இருக்கை அடிப்படையிலான நுழைவு வரி போன்றவற்றை ரத்துசெய்ய வேண்டும். தனியார் வாகனத்துக்கு உள்ள உரிமையை பொது வாகனங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். இது வாகனப் பற்றாக்குறையைப் போக்குவதுடன், இருக்கும் வாகனங்கள் மூலம் அதிகபட்ச சரக்குகளையும் பயணிகளையும் தேவைப்பட்ட இடங்களுக்குக் கொண்டுசெல்ல உதவும். நாடு முழுமைக்கும் நோ பெர்மிட் என்று அமல்செய்யலாம். அரசுகளுக்கும் வருவாய் அதிகரிக்கும். மக்களுக்கும் அலைச்சல் குறைந்து வசதிகள் பெருகும்.
மருத்துவக் கட்டமைப்புகள்
- கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்ட பிறகு குறுகிய காலத்தில் கவச உடைகள், ஆக்சிஜன் உற்பத்திப் பிரிவுகள், படுக்கை வசதிகள், ஆம்புலன்ஸ் வசதிகள், மருத்துவமனைகள், சிறப்பு படுக்கைப் பிரிவுகள் ஆகியவற்றை ஏற்படுத்தியதன் அடிப்படையில், நாட்டின் சுகாதாரக் கட்டமைப்புகளை அரசின் நிதி மட்டுமல்லாது, உலக அமைப்புகளிடம் கடன் வாங்கியும் விரிவுபடுத்த வேண்டும். ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு ஆகியவற்றை அரசுத் துறை நிறுவனம் மூலமே நிர்வகித்து அதில் கிடைக்கும் வருமானத்தைப் பயன்படுத்தியே மருத்துவக் கட்டமைப்புகளை விரிவுபடுத்த நிதி நிபுணர்களைக் கொண்டு தனித் திட்டம் வகுக்க வேண்டும். மாநில அரசுகளின் ஆலோசனை, ஒத்துழைப்புடன் அரசு இதை மேற்கொள்ள வேண்டும்.
- நாடு முழுவதற்கும் பொருந்தும் குறைந்தபட்ச ஊதியக் கொள்கை, ஓய்வூதியக் கொள்கை, ஆதரவற்றோர் நலக் கொள்கை ஆகியவற்றுக்கு இதுவே உகந்த நேரம். பெருந்தொற்றுக்காலத்தில் விலையில்லாமல் அரிசி, கோதுமை ஆகியவற்றை வழங்கியதை வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்கள், பழங்குடிகளுக்கு நிரந்தரமாக்க வேண்டும். பொது விநியோக முறையை மேலும் வலுப்படுத்தி ஸ்மார்ட் கார்டுகள் மூலம் எந்த நியாய விலைக் கடையிலும் எப்போது வேண்டுமானாலும் பொருள்களை வாங்கிச் செல்ல வழிசெய்ய வேண்டும்.
பணிப் பாதுகாப்பு
- புலம்பெயர் தொழிலாளர்களைப் பற்றிய விவரங்களை மாநில, மாவட்டவாரியாக முறையாகப் பதிவு செய்து எந்தெந்த துறைகளுக்கு எங்கெங்கு தொழிலாளர்கள் செல்கிறார்கள் என்பதைக் கணக்கிட்டு அவர்களுக்குத் தேவைப்படும் அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும். அவர்களுடைய ஊதியம், பணிப் பாதுகாப்பு, உடல்நலம் ஆகியவற்றை அரசு உத்தரவாதம் செய்தால் பொருளாதார வளர்ச்சிக்கும் மனித வளத்துக்கும் பேருதவியாக இருக்கும். இதையே வாய்ப்பாகப் பயன்படுத்தி பொது சமையலறைகளைத் திறந்து, பெருநகரங்களில் உழைக்கும் மக்களுக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கும் குறைந்த விலையில் சத்தான உணவு மூன்று வேளையும் கிடைப்பதையும் அரசு சிந்திக்க வேண்டும். மகளிர் சுய உதவிக் குழுக்களை இதற்குப் பயன்படுத்தலாம்.
- மெய்நிகர் செலாவணிகளைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் வேண்டும். 'கிரிப்டோ கரன்ஸி'க்கு ஒட்டுமொத்தமாகத் தடை விதிப்பதற்குப் பதிலாக அதை நம்முடைய தொழில், வர்த்தகத் துறைகளுக்குச் சாதகமாகப் பயன்படுத்த ஊக்குவித்து வரி விதிப்பையும் மேற்கொள்ள வேண்டும்.
வருமான வரிவிலக்கு வரம்பு
- வருமான வரிவிலக்கு வரம்பில் அரசு கஞ்சத்தனம் காட்டுவது இரு வழிகளில் அரசுக்குத்தான் இழப்பு. மாத வருமானம் ஒரு லட்ச ரூபாய் வரையில் (ஆண்டுக்கு 12 லட்ச ரூபாய்) வருமான வரி இல்லை என்று அறிவிப்பதால், முதல் நோக்கில் வருமான வரியே செலுத்த யாரும் இருக்க மாட்டார்கள் என்ற பிரமையே ஏற்படும்.
- உண்மையில் இப்போது இந்த ஊதியம் ஆறு பேர் கொண்ட நடுத்தர குடும்பத்துக்கு ஓரளவுக்குத்தான் வசதியாக வாழ உதவுகிறது. அந்த நிலையில் இருப்பவர்கள் வீட்டுக் கடன், வாகனக் கடன், கல்வி, சுகாதாரச் செலவுகள் என்று மாதந்தோறும் செலவுகளைப் பெருக்கிக் கொண்டுவிடுகின்றனர். இப்போதைய விலைவாசிக்கும் வாழ்க்கை முறைக்கும் இந்த ஊதியம்தான் இப்போது நடுத்தர குடும்பங்களுக்கான சுமாரான வருமானம்.
- அரசு அதிகாரிகள் இதை உணர்ந்து வருமான வரி விலக்கு வரம்பை அரைகுறையாக உயர்த்தி, செலவுகளையும் நுகர்வுகளையும் சீரழிக்கும் மடமையைக் கைவிட வேண்டும். நடுத்தர வர்க்கம் மட்டுமே செலவு செய்யத்தெரிந்த - முடிந்த வர்க்கம், செலவு செய்வதற்கான வாய்ப்புகளைப் பெற்ற நகர்ப்புற, பெருநகர மக்களாலான வர்க்கம். அவர்களிடம் விட்டுவைக்கும் வருமானம் கல்வி, சுகாதாரம், சுற்றுலா, உணவகங்கள், விடுதிகள், வாகனங்கள், வீடமைப்பு, பொழுதுபோக்கு ஆகிய துறைகளுக்குத்தான் போய்ச் சேரும். இது பொருளாதாரப் பெருக்கல் விளைவுகளையே ஏற்படுத்தும்.
- ஆண்டுக்கு 12 லட்ச ரூபாய் வருமானம் வரை பெறுகிறவர்களுக்கு முழு வருமான வரி விலக்கு அளித்தால் அதை அவர்கள் மிச்சம் செய்து சுவிஸ் வங்கிகளில் முடக்க மாட்டார்கள். இந்த அடிப்படை உண்மையை அரசுக்கு ஆலோசனை கூறும் பொருளாதார நிபுணர்களும் நிதித் துறை, ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் பரிசீலிப்பது அவசியம். கோடிக்கணக்கானவர்கள் ரிட்டர்ன்களைத் தாக்கல் செய்வதாலும், பிறகு அவர்களுடைய கோரிக்கைகளை ஏற்று ஆண்டுக்கு 3 லட்சம் கோடி ரூபாய்களைத் திருப்பித் தருவதாலும் வருமான வரித் துறை அடையும் லாபம்தான் என்ன?
வங்கி டெபாசிட்டுகளுக்குக் கூடுதல் வட்டி
- வங்கிகளில் போடப்படும் டெபாசிட்டுகளுக்கு கிடைக்கும் வட்டியானது, எதிர்மறையானது என்று அனைவருக்குமே தெரியும். வேறெங்கு முதலீடு செய்தாலும் அசல் திரும்புமோ என்ற அச்சத்தில்தான் ஏராளமான முதியவர்கள், ஓய்வூதியதாரர்கள் அப்பாவித்தனமாக வங்கிகளில் டெபாசிட் செய்கிறார்கள். அவர்களைத் தண்டிக்கும் விதமாக வட்டியைக் குறைப்பது மட்டுமல்லாமல், அந்த வட்டி வருமானத்துக்கும் வருமான வரி பிடித்தம் செய்யும் அரசின் மனப்பாங்கை என்னவென்று சொல்வது? பிரிட்டிஷ் காலத்து காலனி அதிகாரிகளின் மனோபாவம் சிறிதும் குறையாமல், கிடைத்தவர்களைக் கசக்கிப் பிழியும் இத்தகைய நடைமுறைகளுக்கு நிதியமைச்சர் விடைகொடுக்க வேண்டும்.
- சேவை வரியை வங்கிகளில் வாங்கும் கடன்கள் மீதும் விதிப்பது மற்றொரு கொடுமை. இதையும் அரசு கைவிட வேண்டும். நகை மீதோ, கல்விக்காகவோ, வாகனங்கள், வீடுகள் வாங்கவோ கடன் வாங்குகிறவர்கள் அரசுக்கு நிதிப் பொறுப்பைக் குறைத்து, தங்கள் மீது சுமையை ஏற்றிக்கொள்கிறார்கள். விவசாயக் கடன்போல, கூட்டுறவு வங்கி நகைக் கடன், பயிர்க் கடன் போல இவை தள்ளுபடிசெய்யப்படுவதே இல்லை.
- நேர்மையாக கடனை அடைப்பவர்களுக்கு மேலும் பாரத்தை ஏற்றும் சேவை வரியை நிறுத்துவது மிகவும் அவசியம். வங்கிகளில் வாங்கும் கடன்களைத் தள்ளுபடி செய்வோம் என்பது போன்ற அறிவிப்புகளுக்கு சட்டப்பூர்வமாகவே தடை விதிக்கப்பட வேண்டும். இதை நேர்மையாக கடனை அடைப்பவர்களை ஏமாளிகளாக்குகிறது. வங்கிகளில் மோசடி மூலம் கோடிக்கணக்கில் கடன் வாங்கி வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடுகிறவர்களுடைய சொத்துகளைப் பறிமுதல் செய்வதுடன் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் அல்லது அலட்சியமாக இருந்தவர்களின் சொத்துகளையும் பறிமுதல்செய்ய சட்டமியற்றினால் நல்லது.
- ஆண்டுதோறும் பருத்தி விலை உயர்வு, வரி விதிப்பால் ஏற்படும் சுமை, இறக்குமதியால் உள்நாட்டுத் தொழில்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்று மாறி மாறி செய்திகள் வருவதைப் பார்க்கும்போது இதிலும் அரசுக்கு நிரந்தரமான கொள்கையும் அணுகுமுறையும் இல்லாமலிருப்பது புரிகிறது. இவை போன்றவற்றை அரசு சீர்செய்ய வேண்டும்.
கடல் வளப் பெருந்திட்டம்
- ஆழி சூழ் உலகாக இருக்கும் இந்தியாவில் கடல் வளத்தையும் கடலோர வளத்தையும் பயன்படுத்தும் பெருந்திட்டம் ஏதுமில்லை. சாகர்மாலா திட்டங்கள் பெரு நிறுவனங்களின் முதலீட்டை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளன. கடலோர மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் திட்டங்களை முதலில் அமல்படுத்தினால் முதலீட்டாளர்கள் தானாகவே அங்கு செல்வார்கள். கோல்கத்தா, விசாகப்பட்டினம், சென்னை, கொச்சி, மங்களூரு, மும்பை ஆகிய பெரு நகரங்களுக்கு இடையிலாவது முதலில் சரக்கு, பயணிகள் கப்பல் போக்குவரத்தை அரசு தொடங்க வேண்டும். சொகுசு கப்பல்களாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லாமல் சாதாரண கப்பல்களையே பயன்படுத்தி, ரயில் போக்குவரத்துக்கு இணையாக கட்டணம் வசூலித்தால் அதிகம் பேர் பயன்பெறுவார்கள். முப்பெரும் கடல்கள் பக்கத்தில் இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்தாத ஒரே நாடு இந்தியாதான்.
- ஆட்சியாளர்கள் பெரும்பாலும் கடலையே பார்க்காமல் பிறந்து வளர்வதால் அதைப் பயன்படுத்த வேண்டும் என்ற உணர்வும் இல்லாமல் வீணடிக்கிறார்கள். கப்பல் கட்டும் தொழில், மீன்பிடித் தொழில், கடலுணவு ஏற்றுமதித் தொழில் போன்றவற்றில் இந்தியா மிக மிக பின்தங்கியிருக்கிறது. கடல் வளம், கடல்போக்குவரத்துக்கு தனி அமைச்சகம், அமைச்சர் இல்லை. கூட்டுப் பொறுப்பாகத்தான் இதை அக்கறையின்றி நிர்வகிக்கின்றனர்.
- அரசின் வருவாயைப் பெருக்குவது, செலவைக் குறைப்பது, ஏழைகளுக்கான திட்டங்களை அமல்படுத்த ஏகப்பட்ட விதிகளைப் புகுத்துவது, அளவுக் கட்டுப்பாடுகளை விதிப்பது என்று ஐஏஎஸ் அதிகாரிகளின் அதிகார சட்டகத்துள்பட்ட நிதிநிலை அறிக்கையாகத்தான் மோடி அரசின் அறிக்கைகள் தொடர்கின்றன. இனியேனும் அதற்கு விடை கொடுக்க வேண்டும்.
நன்றி: அருஞ்சொல் (30 – 01 – 2022)