சாலிம் அலியின் முதல் மாணவர்
- நாகர்கோவிலைச் சேர்ந்த பறவை ஆய்வாளர் ராபர்ட் கிரப் செப்டம்பர் 25ஆம் தேதி காலமானார். இந்தியாவின் பறவை மனிதர் சாலிம் அலியின் முதல் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் என்கிற பெருமைக்குரியவர் கிரப். சாலிம் அலி பணிபுரிந்த பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தில் முதன்மை அறிவியலாளராகப் பணிபுரிந்தவர். அதன் பிறகு நாகர்கோவிலில் இயற்கை சுற்றுச்சூழல் மீட்பு நிறுவனத்தை நிறுவி செயல்பட்டுவந்தார்.
- இமயமலை, அந்தமான் -நிகோபார் தீவு உள்ளிட்ட பகுதிகளில் பறவைகளைக் குறித்து இவர் ஆராய்ந்துள்ளார். இந்தியாவின் 22 விமான நிலையங்களில் விமானங்கள் மீது பறவைகள் மோதுவது தொடர்பாக ஆராய்ச்சி நடத்தி, அவற்றை இயற்கையாக எப்படிக் கட்டுப்படுத்துவது என ஆலோசனைகளை வழங்கியுள்ளார். கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் பறவை கட்டுப்பாடு, மலேசியாவின் சராவக் பகுதியில் பறவைகள் பாதுகாப்பு, மலேசிய தேசிய நீர்நிலைப் பறவைகள் பாதுகாப்பு ஆகியவை குறித்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
- கன்னியாகுமரி மாவட்டம், நீர்ப்பறவை சரணாலயமான கூந்தங்குளம் ஆகியவற்றில் நீர்ப்பறவைகள் குறித்து விரிவாக ஆராய்ச்சி நடத்தியுள்ளார். பறவைகள், பறவை வாழிடங்கள் பாதுகாப்பு குறித்து அவருடைய துணைவி ஷைலஜா கிரப் உடன் இணைந்து விழிப்புணர்வுப் பணிகளை கிரப் மேற்கொண்டுவந்தார். சுசீந்திரம்-தேரூர்-மணக்குடி பறவைகள் சரணாலயம் உருவாக்கப்பட இவருடைய பங்களிப்பும் ஒரு காரணம். 'தமிழகத்தின் நீர்ப்புலப் பறவைகள்' என்கிற பறவைகள் வழிகாட்டிப் புத்தகத்தை ஷைலஜா கிரப் உடன் இணைந்து எழுதியுள்ளார்.
நன்றி: இந்து தமிழ் திசை (28 – 09 – 2024)