TNPSC Thervupettagam

சாலைகள் சீரமைப்பில் சமூகக் கண்காணிப்பு

January 24 , 2022 924 days 448 0
  • பெருமழையின்போது சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் நீர் தேங்குவதற்கும் வீடுகளுக்குள் தண்ணீர் நுழைவதற்கும் சாலைகளின் உயரம் தொடர்ந்து அதிகரித்ததும் ஒரு காரணம்.
  • பிரதான சாலைகள் மட்டுமின்றிக் குடியிருப்புப் பகுதிகளின் உட்புறச் சாலைகளும் சீரமைக்கப்படும்போது, பழைய சாலை அகழ்ந்தெடுக்கப்படாமல் அதன் மீதே புதிய சாலை போடப்பட்டுவந்தது.
  • இது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பழைய சாலைகளை அகழ்ந்தெடுத்த பிறகு, அதே மட்டத்திலேயே புதிய சாலைகள் போடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
  • கடந்த ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக தலைமையிலான அரசு இவ்விஷயத்தில் தொடர்ந்து சிறப்புக் கவனம் காட்டிவருகிறது.
  • சாலை அமைக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து கடந்த ஆண்டு மே மாதத்தில் நெடுஞ்சாலைத் துறைக்கு தலைமைச் செயலாளர் கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்.
  • இந்த ஆண்டு ஜனவரியில் தமிழ்நாடு முதல்வரே சென்னையின் சில இடங்களில் நடந்து வரும் சாலைப் பணிகளை நேரடியாகப் பார்வையிட்டார்.
  • அவருடைய உத்தரவின் பேரில், தலைமைச் செயலாளரும் மாநகராட்சி ஆணையரும் அடையாறு பகுதியில் நடந்துவந்த சாலைப் பணிகளை நள்ளிரவில் ஆய்வுசெய்தனர்.
  • முதல்வரும் தலைமைச் செயலாளரும் சாலைச் சீரமைப்புப் பணிகளை நேரடியாகப் பார்வையிட்டது தமிழ்நாடு முழுவதும் இது குறித்த ஒரு விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.
  • சென்னையில், கரோனா தடுப்புப் பணிக்காக மண்டலவாரியாக நியமிக்கப்பட்டிருந்த அதிகாரிகளிடம் சாலை சீரமைப்புப் பணிகளைக் கண்காணிப்பதும் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
  • போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக, இரவு நேரங்களிலேயே பெரும்பாலும் சாலை சீரமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
  • அதுவே, சாலைச் சீரமைப்பில் விதிமுறைகள் பின்பற்றப்படாமல் போவதற்கும் காரணமாக இருக்கின்றன.
  • சமீபத்தில், கிழக்கு தாம்பரம் பகுதியில் நடைபெற்றுவரும் சாலைச் சீரமைப்புப் பணிகளை அப்பகுதியில் குடியிருப்பவர்களே ஒன்றிணைந்து சமூகத் தணிக்கை செய்துள்ளனர். விதிமுறை மீறல்களைச் சுட்டிக்காட்டி, பணிகளைப் பாதியில் நிறுத்தியும் உள்ளனர்.
  • குரோம்பேட்டை பகுதியில் அண்மையில் இத்தகைய புகார்கள் எழுந்ததையடுத்து தலைமைச் செயலாளரே நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்துள்ளார்.
  • சாலைச் சீரமைப்புப் பணிகளில் சமூகத்தின் கண்காணிப்பு என்பது ஆரோக்கியமான விஷயம் தான்.
  • ஆனால், மக்களிடமிருந்து புகார்கள் எழுகின்ற இடங்களிலெல்லாம் தலைமைச் செயலாளரே நேரடியாகக் களத்தில் இறங்கி ஆய்வுசெய்வது அவரது மற்ற பணிகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்திவிடக்கூடிய அபாயத்தையும் கொண்டிருக்கிறது.
  • சாலைச் சீரமைப்புப் பணிகளின் கண்காணிப்பை உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் பொறுப்பேற்றுக்கொள்வதே முறையானதாக இருக்கமுடியும்.
  • மேலும், இரவு நேரங்களிலேயே பெரிதும் சாலைப் பணிகள் நடைபெறுவதால் அப்பகுதியில் உள்ள குடியிருப்போர் நலச் சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகள் அப்பணிகளை நேரில் பார்வையிடும் வாய்ப்புகளும் இல்லாமலாகின்றன.
  • சாலைப் பணிகள் நடக்கவுள்ள இடங்களையும் உத்தேசமான நாட்களையும் பற்றி முன் கூட்டியே மக்களுக்கு தெரிவிக்கும் கடமையும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுக்கு உண்டு.

நன்றி: இந்து தமிழ் திசை (24 - 01 - 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்