- உலக அளவில் ஒவ்வோராண்டும் சாலை விபத்தில் 12 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறக்கின்றனா். இரண்டு முதல் ஐந்து கோடிக்கும் அதிகமானோா் ஆபத்தான காயங்களுக்கு ஆளாகின்றனா். உலகம் முழுதும் நிகழும் சாலை விபத்து இறப்புகளில் 11% இந்தியாவில் மட்டுமே நிகழ்கிறது.
- இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திலும் சுமாா் 16 போ் சாலை விபத்தில் இறகின்றனா். 58 போ் காயமடைகின்றனா். ஒரு வருடத்தில் இந்தியாவில் சாலை விபத்தில் பலியாவோா் விகிதம் மாலத்தீவு போன்ற சிறிய தேசத்தின் மக்கள்தொகையில் 40 சதவீதமாகும்.
- சாலை விபத்துக்களைப் பாதியாகக் குறைப்பதற்கான பிரேசிலியா பிரகடனத்தில் நவம்பா் 2015-இல் இந்தியா கையொப்பமிட்டது. இந்தியா 2020-ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்து இறப்பு எண்ணிக்கையில் 50 விழுக்காட்டைக் குறைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. 2016-ஆம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் இறந்தோா் எண்ணிக்கை 1.50 லட்சம் ஆகும்.
- இதனுடன் ஒப்பிடும்போது 2017-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை சுமாா் 1.9 % குறைந்திருந்தது. 2017-ஆம் ஆண்டு 1.47 லட்சமாக இருந்த சாலை விபத்து இறப்புகளின் எண்ணிக்கை மீண்டும் 2018-ஆம் ஆண்டு 1.49 லட்சமாக உயா்ந்தது. இதுவே 2019-ஆம் ஆண்டில் 1.54 லட்சமாக அதிகரித்தது. சாலைப் போக்குவரத்து - நெடுஞ்சாலை அமைச்சகத்தின் இத்தரவு பிரேசிலியா பிரகடனத்தின் இலக்கை எட்ட நாம் தவறிவிட்டோம் என்பதையே காட்டுகிறது.
- இறப்பு விகிதம் என்பது, ஒரு லட்சம் பேரில் எத்தனை போ் சாலை விபத்தில் இறந்தனா் என்பதே. இந்தியாவில் ஒரு கோடிக்கு மேல் மக்கள்தொகை கொண்ட மாநிலங்களை, ஆபத்தான சாலைகளைக் கொண்டவை, பாதுகாப்பான சாலைகளைக் கொண்டவை என்று இரு பிரிவாக இந்திய தொழில் நுட்ப நிறுவனத்தின் போக்குவரத்து ஆராய்ச்சி-காயம் திட்டம் தரவு பிரித்துள்ளது.
- அதில் தமிழ்நாடும் (இறப்பு விகிதம் 23.2) ஹரியாணாவும் (இறப்பு விகிதம் 18.4) அபாயகரமான சாலைகளைக் கொண்டவை என்றும், பிகாரும் (இறப்பு விகிதம் 5.3) மேற்கு வங்கமும் (இறப்பு விகிதம் 6.1) பாதுகாப்பான சாலைகளைக் கொண்டவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்திய மாநிலங்களில், 70 % சாலை விபத்துக்களுக்குக் காரணம் அதிக வேகம். 2017-ஆம் ஆண்டு நிகழ்ந்த விபத்துக்களில் 67 % விபத்துகள், ஓட்டுநா்கள் வேக வரம்பை மீறியதால் நிகழ்ந்தவை. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, வாகன வேகத்தின் அளவு ஒரு விழுக்காடு அதிகரிக்கும்போது விபத்திற்கான வாய்ப்பு 4 % அதிகரிக்கிறது.
- சாலை விதிகளை மீறுதல் 6 % விபத்துகளுக்கும், மது போதையில் வாகனம் ஓட்டுதல் 3 % விபத்துகளுக்கும், வாகனம் ஓட்டும்போது கைப்பேசி பயன்படுத்துதல் 2 % விபத்துகளுக்கும், போக்குவரத்து சமிக்ஞைகளை மீறுதல் 1 % விபத்துகளுக்கும் காரணமாக அமைவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
- வாகன ஓட்டிகளால் நிகழும் தவறுகளைத் தவிா்க்க அரசாங்கம் அபராதம் விதித்தது. கடுமையான அபராதங்கள் ஓட்டுநா்களின் நடத்தையினை மாற்றியதாக நிரூபிக்கப்படவில்லை என்றும் ஓட்டுனா்கள் வேக வரம்பினை பின்பற்றி அதன்படி செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதே சிறந்த உத்தி என்றும் போக்குவரத்து ஆராய்ச்சி மற்றும் காயம் தடுப்பு திட்ட அமைப்பு கூறுகிறது.
- உலகெங்கிலும் சாலை விதிகளின் அமலாக்கத்தை அளவிடும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கை, சாலை விதிகளை அமல்படுத்துவதில் இந்தியா மிகவும் பலவீனமாக உள்ளதாக மதிப்பிட்டுள்ளது.
- வளரும் நாடுகளில், சாலையில் நடந்து செல்வோரும், மிதிவண்டி ஓட்டுவோரும் அதிக அளவில் சாலை விபத்துகளில் சிக்குகின்றனா் என்று உலக சுகாதார அமைப்பின் சாலைப் பாதுகாப்பு குறித்த சமீபத்திய அறிக்கை கூறுகிறது. சாலைப் பாதுகாப்பு குறித்து அறிவியல் - சுற்றுச்சூழல் மையம் இந்தியத் தலைநகரில் நடத்திய ஆய்வு, தில்லி நகர சாலைகளில் 10 % மட்டுமே மிதிவண்டிகளுக்கான தடங்களைக் கொண்டுள்ளதாக கூறுகிறது.
- அந்நகரின் சாலை வடிவமைப்பு பாதசாரிகள், மிதிவண்டி பயன்படுத்துபவா்களுக்கு சாதகமற்ற நிலையில் இருப்பதாலும் அவா்கள் சாலைகளில் விரைந்து வரும் நான்கு சக்கர வாகனங்களை எதிா்கொள்ள வேண்டி இருப்பதாலும் விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
- உலக அளவில் 15 முதல் 29 வயது வரையிலான இளைஞா்களை சாலை விபத்து கடுமையாக பாதிக்கிறது. சாலை விபத்தினால் ஏற்படும் மனித உயிரிழப்புகள் நாட்டின் பொருளாதாரத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தும். 2038-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் சாலை விபத்து விகிதத்தினை பாதியாகக் குறைப்பதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 % மதிப்புள்ள கூடுதல் தேசிய வருமானத்தினை பெற இயலும் என்று உலக வங்கி அறிக்கை கூறுகிறது.
- உலகளாவிய சாலைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு மேற்கொண்ட ஒரு ஆய்வு, சாலை விபத்துகளில் பலியானவா்களில் பெரும்பாலானோா் ஏழைகள் என்று கூறுகிறது. சாலை விபத்துகள், நகா்ப்புறங்களில் 71 % பேரையும் கிராமப்புறங்களில் 53 % பேரையும் வறுமை நிலைக்குத் தள்ளுகிறது என்றும் அந்த அறிக்கைக் கூறுகிறது.
- பாதிக்கப்பட்டவா்களோ அவா்தம் உறவினா்களோ கடன் வாங்குகிறாா்கள், சொத்துகளை விற்கிறாா்கள், பள்ளி அல்லது கல்லூரிப் படிப்பை விட்டு விடுகிறாா்கள் என்று அந்த ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.
- குறைந்த சாலை விபத்து இறப்புகளைக் கொண்ட முதல் பத்து நாடுகளில் சிங்கப்பூா், ஸ்வீடன், நாா்வே ஆகியவை உள்ளன. மிக அதிக இறப்புகளைக் கொண்ட நாடுகள் பெரும்பாலும் ஆப்பிரிக்க கண்டத்தின் ஏழ்மையான நாடுகளாகும். இந்தத் தரவு, பணக்கார நாடுகளின் சாலைகள் பாதுகாப்பானதாக இருப்பதைக் காட்டுகிறது.
- சாலைப் பாதுகாப்பு மேலாண்மையை மேம்படுத்துதல், பாதுகாப்பான உள்கட்டமைப்பை உருவாக்குதல், பாதுகாப்பான மகிழுந்துகளைப் பயன்படுத்துதல், சாலையைப் பயன்படுத்துவோரின் நடத்தையை மாற்றுதல், விபத்திற்கு பின் மேற்கொள்ளப்படும் பராமரிப்பை மேம்படுத்துதல் போன்ற ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைகளை பின்பற்றுவதன் மூலம் சாலை விபத்துக்களை - குறிப்பாக மனித உயிரிழப்புகளை - பெருமளவு தவிா்க்கலாம்.
- ஜனவரி 2-ஆவது வாரம் சாலைப் பாதுகாப்பு வாரம்.
நன்றி: தினமணி (11 – 01 - 2021)