TNPSC Thervupettagam

சிகரம் தொடும் அபாயம்!

June 6 , 2019 1852 days 920 0
  • உலகெங்கிலுமிருந்தும் நேபாள - சீன எல்லையில் இருக்கும் மிக உயரமான மலைச்சிகரமான எவரெஸ்டில் ஏறி சாதனை படைக்க ஆயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் முனைகிறார்கள்.
  • திறமையான மலையேற்றப் பயிற்சியுடையவர்களுக்கேகூட8,848 மீ. உயரத்தில் இருக்கும் எவரெஸ்ட் சிகரம், பாதுகாப்பற்றதாகவும், ஆபத்தானதாகவும் இருந்து வருகிறது.
எவரெஸ்ட் சிகரம்
  • கடந்த மே 27-ஆம் தேதி எலியா சைக்கலி என்கிற திரைப்பட இயக்குநர் 20,029 அடி உயர எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடையக் காத்திருந்த தனது அனுபவத்தைப் பதிவு செய்திருக்கிறார். நெரிசல், குழப்பம், வரிசையில் காத்திருப்பு, இறந்து கிடந்த சடலங்கள் என்று சிகரத்தின் அருகிலுள்ள நான்காவது முகாம் காட்சியளித்தது என்று பதிவு செய்கிறார் அவர்.
  • எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் மலையேற்றக்காரர்களின்நெரிசல் ஏற்படுவதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. சிகரத்தில் ஏறத் துடிக்கும் மலையேற்ற சாகசக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், நேபாள அரசு எந்த வரைமுறையும் இல்லாமல் சாகசக்காரர்களுக்கு மலையேறுவதற்கு அனுமதி வழங்குவதும் முதலாவது காரணம்.
  • இந்த ஆண்டு மட்டும் நேபாள அரசு 381 நபர்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. சாகசக்காரர்களின் எண்ணிக்கையைப் போல இரண்டு மடங்கு நபர்கள் மலையேற்றச் சரிவுகளில் ஆங்காங்கே உள்ள முகாம்களில் காணப்படுகிறார்கள். அவர்களில் சிலர் வழி காட்டிகள். வேறு சிலர் சுற்றுலாக் குழுவினர்களை அழைத்துச்செல்லும் அமைப்பினர்.
  • இரண்டாவது காரணம், எவரெஸ்ட் மலையேற்றப் பருவகாலம் குறுகிவிடுவது. பானி புயல் காரணமாக ஏப்ரல் கடைசியில் இருந்து மே முதல் வாரம் வரை 10 நாள்களுக்கு எவரெஸ்ட் சிகர மலையேற்றம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. அந்த 10 நாள் தடையால் நான்காவது முகாமிலிருந்து மலையேறுவதற்கான காலம் மே 22, 23 ஆகிய இரண்டு நாள்களாகச் சுருங்கிவிட்டது.
மலையேற்றம்
  • அந்தக் குறுகிய இரண்டு நாள் இடைவெளியில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிவிட வேண்டும் என்கிற பரபரப்பு அனைவரிடமும் காணப்பட்டது. அதனால், கடுமையான குளிரில், எடுத்துச் சென்றிருக்கும் ஆக்சிஜன் வாயுவை வீணாக்கிக் கொண்டு, மூன்று நான்கு மணிநேரம் மலையேற்றக்காரர்கள் வரிசையில் காத்திருக்கமுற்பட்டனர். குளிர் தாங்காமல் சுருண்டவர்கள் பலர்.
  • ஏனைய சாகசங்களுக்கு முறையான பயிற்சி அவசியப்படு வதைப்போல, இமயமலை பயணத்துக்கு பயிற்சி எடுத்துக்கொண்டு வருபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இதற்கென்று தகுதி வரையறுக்கப்படவில்லை. முன்பெல்லாம் ஆண்டொன்றுக்கு ஒரு குழுவினர் மட்டுமே எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
  • இப்போது பணம் இருக்கும் யார் வேண்டுமானாலும் எவரெஸ்ட் சாகசத்தில் ஈடுபட முற்படுவதுதான் பிரச்னைக்குமுக்கியமான காரணம்.
  • மலையேற்ற சாகசம் என்பது ஒரு மிகப் பெரிய வணிகமாக மாறிவிட்டிருக்கிறது. நேபாள அரசு மலையேற்றப் பருவ காலத்தில்ஒவ்வோர் அனுமதிக்கும் 11,000 டாலர்களை கட்டணமாக வசூலிக்கிறது. திபெத் வழியாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது என்றால், அது இதையும்விட அதிகம் செலவாகும்.
  • எவரெஸ்ட் மலையேற்ற சாகசத்துக்கு குறைந்தது ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சம் வரை செலவாகிறது. இந்த அளவிலான பணத்தை செலவழித்துவிட்டு, பாதி வழியில் திரும்புவதற்கு மலையேற்றக்காரர்கள் தயங்குகிறார்கள்.
  • பருவ நிலை மோசமாக இருந்தாலும், பனிப்பொழிவு இருந்தாலும் அது குறித்துக் கவலைப்படாமல் ஏறத் துடிக்கிறார்கள். 60 நாள்கள் கடும் சோதனைகளுக்கு இடையே பயணித்து மூன்றாவது அல்லது நான்காவது முகாமை அடைந்துவிட்ட பிறகு, அடுத்த 10 அல்லது 12 மணி நேரத்தில் எப்படியாவது எவரெஸ்ட் சிகரத்தை எட்டிவிட வேண்டும் என்கிற துடிப்பில்தங்களது பாதுகாப்பு குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை.
  • 1953, மே 29-ஆம் தேதி எட்மண்ட் ஹில்லாரியும், டென்சிங்கும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து வெற்றிக்கொடி நாட்டியது முதல், உலகளாவிய மலையேற்ற சாகசக்காரர்களின் லட்சியமே வாழ்க்கையில் ஒரு முறை எவரெஸ்டில் ஏறிவிட வேண்டும் என்பதுதான். கடந்த 60 ஆண்டுகளில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. சமீபகாலமாக பருவநிலை மாற்றமும், உலக வெப்பமயமாதலும் பனிச்சிகரங்களை உருக வைத்துக் கொண்டிருக்கின்றன.
  • உலகத்தின் கூரை என்று கருதப்படும் எவரெஸ்ட் சிகரத்தில், மனித நெரிசல் ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் ஆபத்தும் அதிகரித்திருக்கிறது. 200 கி.மீ. வேகத்தில் பனிக்காற்று வீசிக்கொண்டிருக்கும். எப்போது சிகரங்கள் உருகி, பனிச்சரிவு ஏற்படும் என்பது தெரியாது. 20 ஆயிரம் அடிக்கும் அதிகமான உயரத்தில் ஆக்சிஜன் வாயு குறைவதால் பலருக்கு உடல் நலம் பாதிக்கப்படும்.
  • இவையெல்லாம் தெரிந்துதான் மலையேற்றக்காரர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முற்படுகிறார்கள் என்றாலும்கூட, அவர்களுக்கு முறையான பாதுகாப்பு அளிப்பதற்கும், மலையேற்றக்காரர்களை ஒழுங்குபடுத்துவதற்கும் போதிய முயற்சிகளை எடுக்காமல் இருந்துவிடமுடியாது.
  • மலையேற்றம் வணிகமாகிவிட்டதில் தவறில்லை. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதிக்க விழைவதிலும் தவறில்லை. சென்ற வாரம் புதன்கிழமை மட்டும் 200 பேர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரிந்திருக்கிறார்கள். ஒரு நாளில் இத்தனை பேர் எவரெஸ்டில் ஏறியது இதுதான் முதல் முறை. கடந்த ஆண்டு 807 பேர் சிகரம் ஏறினர். 2012 புள்ளிவிவரப்படி, 2012-இல் எவரெஸ்டில் ஏற முற்பட்ட மலையேற்றக்காரர்களின் எண்ணிக்கை 26,000. இப்போது அது பல மடங்கு அதிகரித்திருக்கக் கூடும். அவர்களுக்கு பாதுகாப்புஅளிக்காமல், அனுமதி வழங்குவது எந்த வகையில் நியாயம்?

நன்றி: தினமணி (06-06-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்