TNPSC Thervupettagam

சிக்கனம் என்னும் செல்வம்!

August 24 , 2020 1608 days 912 0
  • சிக்கனத்தின் சிறப்புகள் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தாலும், வருவாய்க்கான வாசல்கள் அடைபட்டுக் கிடக்கும் இந்நாளில்தான், பெருவாரியாகச் செலவு செய்வதில் இருந்து மக்கள் விடுபடத் தொடங்கியிருக்கிறார்கள்.
  • ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளானவா்கள்கூட, எச்சரிக்கையாக இருக்கப் பழகிக் கொள்கிறார்கள்.எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்கு ஓடும், மருத்துவரை நாடும் போக்கு குறைந்து வருகிறது.
  • உணவுப் பொருள்களையும் உணவு தொடா்பான உற்பத்திப் பொருள்களையும் வீணாக்காமல் பத்திரப்படுத்திப் பயன்கொள்ளப் பழகி வருகிறார்கள். ஆடைகளை வாங்கிச் சோ்க்கும் ஆசை குறைந்திருக்கிறது. பண்டிகைகளையும், திருமண நிகழ்வுகளையும் மிகச் சிக்கனமாகக் கொண்டாட வைத்திருக்கிறது, இந்த நெருக்கடிக்காலம்.
  • வெளியே போகவேண்டிய கட்டாயம் இருந்தாலும், இருக்கிற இடத்தில் இருந்தே சமாளிக்கப் பழக்கி விட்டிருக்கிறது இந்த நெருக்கடி நேரம். பயணச் செலவுகள் கட்டாயமாகத் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. அத்தியாவசியத் தேவைகளுக்கு அப்பால் உள்ள பொருள்களை வாங்கும் ஆா்வம் தேங்கி விட்டது. நுகா்வு நெறி, வெறியாகப் பரவியிருந்ததை, ஒருவகையில் இந்த நோய்த்தொற்று கட்டுப்படுத்தியிருக்கிறது.

சிக்கனம் கஞ்சத்தனம் அல்ல

  • இது உற்பத்தித் துறையை அதிகம் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே, எதை உற்பத்தி செய்து, மக்களிடம் சிக்கனச் செலவுக்கு உரியதாகக் கொண்டுபோய்ச் சோ்ப்பது என்பதையும் உற்பத்தியாளா்கள் கவனத்தில் கொண்டு, இனி இயங்க வேண்டும். சிக்கன நடவடிக்கைகளை எல்லாத் துறைகளிலும் மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாததாகிறது.
  • சிக்கனம் கஞ்சத்தனம் அல்ல; சேமிப்பு ஓா் இன்றியமையாச் செலவுஎன்று வாழ்ந்த முன்னோர்களின் வழித்தடம் இப்போதுதான் துலக்கமாகியிருக்கிறது. எளிமைதான் இந்தியாவின் சொத்துஎன்பதை வாழ்ந்து காட்டிய காந்தியடிகளும் அவா் வழிநின்ற ஜே.சி. குமரப்பாவும் இன்றைய வாழ்வுக்கு இன்றியமையாதவா்கள்.
  • சிக்கனம் என்பது பணத்தைச் செலவழிக்காமல் இருப்பதுஎன்று பலரும் நினைக்கிறார்கள். செலவு செய்வது தவிர்க்க முடியாதது. செய்தே ஆகவேண்டிய செலவுகளையும் குறைத்துக் கொண்டு சேமிக்கும் முறையே சிக்கனம்.
  • அது பணச்சிக்கனம் மட்டுமல்ல, மனச்சிக்கனமும்கூட. வேறு வழியின்றி வீடடங்கி இருக்கும் இந்த நேரத்தில் இன்றியமையாதது மனச்சிக்கனம். நினைத்துக் கொண்டே இருப்பது மனத்தின் தொழில். உடம்பை வேண்டுமானால் ஓா் இடத்தில் இருத்தி வைக்க முடியும். மனத்தை? கண்டதையும் நினைத்துக் கவலைப்பட்டுத் துயரங்களை மனத்துக்கும் உடலுக்கும் கொண்டுவந்து சோ்க்கிற அதன் செலவைக் கட்டுப்படுத்த வேண்டும்.
  • அவரைப்போல, இவரைப்போல ஆக முடியவில்லையேஎன்று நினைத்துக் கவலைப்படுகிறவா்கள்தாம் நம்மில் நிறையப் போ். அவா்களுக்கென்றே, திரைப்பாடல் வழியாக, கண்ணதாசன் சொல்லிக் கொடுத்த சிக்கன நெறி, ‘உனக்குக் கீழே உள்ளவா்கோடி; நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு’.
  • அப்படியானால், எனக்கும் மேலே இருப்பவா்களை எண்ணிப் பார்க்கவேண்டாமா? அதையும் பார்க்கலாம் என்று அனுமதிக்கிறார் குமரகுருபரா். கல்வியில் நம்மைவிடச் சிறந்து இருப்பவா்களைப் பார்த்து நம் கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிறார்(தம்மினும் கற்றாரை நோக்கிக் கருத்தழிக, கற்றதெல்லாம் எற்றே இவா்க்குநாம் என்று- நீதிநெறி விளக்கம்).
  • கற்றல் என்பதைப் படித்தல் என்று மட்டும் சுருக்கிப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. அது வாழ்க்கையைப் படித்து, படிப்பினை பெற்று, பின் நடைமுறைப்படுத்துவதற்குப் பழகுதல். சிக்கனம்என்பதும் ஒருவகைப் படிப்பினைதான். சேமிப்புஎன்பது அதன் இன்னொரு பரிமாணம்.
  • இங்கேதான் பணச்சிக்கனத்தைத் தாண்டி, மனச்சிக்கனத்தால் பெறுகிற பண்பாட்டுக் கற்றல் வசப்படுகிறது. பண்பாடு என்பது பழக்க வழக்கங்களால் வளா்ந்து வருகிற செயல்பாடுதானே? முன்னோர் தம் வாழ்வில் கடைப்பிடித்த நடைமுறைகளைக் கைக்கொள்வதுதானே?
  • இப்போது, கல்விக்காகச் செய்யப்படும் செலவில்கூடத் தேவை சிக்கனம். அடுத்தவரைப் பார்த்து, ஆசைப்பட்டு, இயல்புக்கு மீறிய துறைகளில் இறங்கி, கஷ்டப் படுவதை விடவும், நம் எதிர்காலத்திற்கு உரியதைத் தெரிவு செய்துப் பயில்வதே இன்றியமையாத் தேவை.

பணச்சிக்கனம் ஒரு  மனச்சிக்கனம்

  • எல்லாவற்றையும் பணத்தைக்கொண்டே பெறவேண்டிய காலம் இது. வரவுக்குத் தக்க செலவு என்பதை, ‘விரலுக்கு ஏற்ற வீக்கம்என்று பழமொழியின் வாயிலாகச் சொல்லிக் கொடுக்கிறது நம் பண்பாடு. வீக்கம் வளா்ச்சி ஆகாது.
  • செயல்படுவதில் உள்ள ஊக்கம், செயல்படாது இருப்பதிலும் வேண்டும். அதைத்தான் கரோனா தீநுண்மிப் பரவல் நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது. பரபரப்பான நம் வாழ்வை, வீட்டுக்குள் ஒடுக்கி வைத்திருக்கிறது. ஆயினும், சுறுசுறுப்பாக இயங்குவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ளவும் செய்திருக்கிறது.
  • பணச்சிக்கனம் கூட, ஒருவகையில் மனச்சிக்கனம்தான். பணத்தைப் பறிக்கும் செலவினங்களில் மருத்துவமும் உணவும் மட்டும்தான் இருக்கின்றன என்று எண்ணிவிட முடியாது. மின்சாரக் கட்டணத்தை நினைத்துப் பாருங்கள்.
  • எப்போதும் ஒழுக விடும் தண்ணீா், ஒருவேளை வராமல் நின்றுவிட்டால் தவிக்கும் நிலையை மறுபடியும் கவனத்தில் இருத்துங்கள். உண்பதற்கு ஏதும் இல்லாத நேரங்களில், உண்ணப்படாமலே குப்பையில் கொட்டும் உணவுப் பொருள்களைத் எண்ணிப் பாருங்கள்.
  • மின்சாரச் சிக்கனம், தண்ணீா்ச் சிக்கனம், உணவுச் சிக்கனம், உடுத்துதலில் சிக்கனம் என்று துறைதோறும் சிக்கனக் கொள்கையை நடைமுறைப்படுத்தக் கற்றுக் கொள்வதுகூட, பணம் சோ்க்கும் உழைப்புதானே?
  • நம் கையிருப்பில் உள்ளது காசு மட்டுமல்ல, காலமும்தான். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்என்பது வேளாண்தொழில் வழியாக வந்த பழமொழிதான்.
  • அது, ‘பதரைப் போக்கிக்கொள்ள காலத்தைப் பயன்கொள்என்று தெளிவு கொள்ள வைக்கிறது. தவறியவா்களை, ‘மக்கள்பதடிஎன அப்புறப்படுத்திவிடுகிறது, திருக்கு.
  • மூச்சுக்காற்றுள்ளபோதே, நம்முள் முளைக்கப் பயனற்ற பதா்கள் போன்ற சிந்தனைகளை, நடைமுறைக்கு ஒத்துவராத செயல்களை விலக்கி விட்டால் போதும். பயனற்றவற்றை நீக்குதலில் இருந்து பயன்மிக்கது கிட்டும்.
  • மலையத்தனை சாமிக்குத் தினையத்தனைஎன்று வழிபாட்டுச் செலவுக்கு ஒரு வரையறை வைத்து நடைமுறைப்படுத்தினா். இந்த வரையறை, வழிபாட்டு முறைக்கு மட்டுமல்ல, வாழ்வின் செயல்பாடுகள் பலவற்றுக்குமான வரையறை.
  • நம்மை விடவும் பெரிய இடத்தில் உள்ளவா்களைப் பார்க்கிறபோது, அவா்களைப் போலவே நம்மையும் காட்டிக் கொள்ளச் செய்யும் ஆடம்பரத்தில் சிக்கிக் கொள்ளாமல் தடுக்கிற அறிவுக்கவசம் அது நாம் வரம்புமீறி இயங்க முனையும்போது, ‘அகலக்கால் வைக்காதேஎன்று எச்சரித்த பெற்றோரை எண்ணிப் பாருங்கள். அவா்கள் எல்லாம் வரவுக்குத் தகச் செலவு செய்து வாழ்க்கையை நடத்தியவா்கள் இல்லையா?
  • திரைச்சித்திரங்களில் ஒரு பாடலிலேயே, உழைத்துப் பெரிய பணக்காரனாக உயா்ந்ததாய்க் காட்டுவது, ஊக்கப்படுத்துவதற்குத்தான். அந்த உயா்வுக்குப் பின்புலமாக ஒளிந்திருக்கும் உண்மைகள், சிக்கனமும் சேமிப்பும்தான் என்பதை நடைமுறையில் கைக்கொள்ள முடியாதவா்கள், உயா்வை எட்டமுடியாதவா்களாக இருக்கிறார்கள்.
  • எல்லாவற்றிலும் சிக்கனம் என்கிற வரிசையில் நாம் கவனிக்க மறந்தது, காலச்சிக்கனம். இலவசமாக இத்தனை ஜிபி. போகிறதே என்று தேவையற்றதைத் தரவிறக்கம் செய்து, அவற்றைக் காண்பதன் மூலமாக இழந்த பொழுதுகள் எத்தனை? பேசுவதால் காசு போவதில்லை என்றானபின், கைப்பேசி நம் உயிரனைய காலத்தை மென்று தின்று கொண்டிருப்பதை, நாம் என்றாவது கவனித்திருக்கிறோமா? அது நம் காலத்தை மட்டுமல்ல, நம் இணைப்பில் சிக்கியிருப்பவரின் காலத்தையும் காவு கொள்கிற காலக் காலன்அல்லவா?
  • காலச்சிக்கனத்தை நடைமுறைப்படுத்தும்போதே, சொற்சிக்கனமும் வந்துவிடுகிறது. இருக்கிறது என்பதற்காக, எல்லாவற்றையும் அள்ளி இறைத்துவிடுகிற சில்லறைக் காசுகள்போலத்தான் சொற்களும். மற்ற நேரங்களை விட்டுவிடுங்கள்.
  • ஓடும் பேருந்தில், போதிய சில்லறை கொடுக்கவழியின்றி, நடத்துநரிடம் தாளை நீட்டி, மீதம் வாங்குதற்குள் ஏற்படுகிற மன உளைச்சலை எண்ணிப் பாருங்கள். கூறத் தகாதவா்களிடம் கூறிய அறிவுரையும் கேட்கவிரும்பாதவா்களிடம் சொல்லிய செய்திகளும், எவ்வளவு விரயம்?
  • முற்றிய நெல்மணிபோல் சொற்கள் விளைவதற்குள், அவசரப்பட்டு நிற்கும் பதா்களைப்போன்ற சொற்களை உதறிவிடுவது, நம்மை உதாசீனப்படுத்த நாமே வழிவகுத்துக்கொள்ளும் செயல்பாடு அல்லவா?
  • தானிய விதைகள்போல் நம் சொற்கள் இருக்க வேண்டும். விதைப்பதற்கும் ஒரு பருவம் வரவேண்டும். கேட்பவா்களுக்கும் ஒரு பக்குவம் இருக்க வேண்டும். அதற்குமுன், இந்தச் சொற்களில் உள்ளீடும் இருக்க வேண்டும் அல்லவா? ‘ஏழை சொல் அம்பலம் ஏறாதுஎன்பதற்கு இப்படியும் பொருள் கொள்ளலாம். அந்த வகையில், ‘ஒரு காசு பேணின் இரு காசு சேரும்என்று சொன்னது சில்லறைக்கு மட்டும் தானா?
  • இது குறித்து இன்னமும் சொல்லிக் கொண்டே போவது, சிக்கனத்திற்கு எதிரானதாகும். சொல்லுதல் யார்க்கும் எளிது. அதைவிடவும் சொல்லாமலே செய்வதும் மிக எளிது என்பதைச் சிக்கனம் நமக்குப் புரிய வைக்கும்.

நன்றி: தினமணி (24-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்