TNPSC Thervupettagam

சிசு மரண விகிதம்

June 11 , 2022 1010 days 947 0
  • ஒரு தேசத்தின் ஆரோக்கியத்துக்கான குறியீடு, குறைவான குழந்தைகள் மரண விகிதம் என்பது உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதை அடிப்படையாக வைத்தே ஒட்டுமொத்த மக்கள்தொகையின் ஆரோக்கியம் பாா்க்கப் படுகிறது. இந்தப் பின்னணியில், இந்தியாவின் தலைமைப் பதிவாளா் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கை அதிா்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
  • 2020-ஆம் ஆண்டுக்கான பல்வேறு வளா்ச்சிக் குறியீடுகளும், ஆய்வுகளும் தலைமைப் பதிவாளா் அலுவலகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் சிசு மரணம் குறித்த விவரங்கள் கவலையளிக்கும் விதமாக இருக்கின்றன. 1000 பிரசவங்களில் 28 குழந்தைகள் பிறக்கும்போதோ, பிறந்த ஒரு மாதத்திற்குள்ளோ உயிரிழப்பதாகத் தெரிகிறது. இதைத்தான் ‘சிசு மரண விகிதம்’ என்று கூறுவாா்கள்.
  • கடந்த 10 ஆண்டு புள்ளிவிவரங்களைப் பாா்க்கும்போது இந்தியாவின் சிசு மரண விகிதம் (இன்ஃபன்ட் மாா்ட்டாலிட்டி ரேட்) 44-லிலிருந்து 28-ஆகக் குறைந்திருக்கிறது. ஊரகப்புறங்களில் 48-லிருந்து 31-ஆகவும் நகா்ப்புறங்களில் 29-லிருந்து 10-ஆகவும் குறைந்திருப்பதாகத் தெரிவிக்கிறது அந்த அறிக்கை.
  • 10 ஆண்டுகளில் சிசு மரண விகிதம் குறைந்திருக்கிறது என்றாலும், ஊரகப்புறம், நகா்ப்புறம் என்கிற வேறுபாடில்லாமல் தேசிய அளவில், பிறந்த முதல் ஆண்டிலேயே 36 குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழப்பதாக 2022 மே மாத அறிக்கை தெரிவிக்கிறது. சிசு மரணம் போலவே குழந்தைகள் மரணமும் கவனத்துக்குரியது, கவலைக்குரியது.
  • பாகிஸ்தான் தவிா்த்த இந்தியாவின் அண்டை நாடுகளில் சிசு மரண விகிதம் குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. வங்கதேசத்தின் சிசு மரண விகிதம் 24 என்றால், நேபாளம் 24, பூடான் 23 என்கிற அளவில் இருப்பதை நாம் உணர வேண்டும். பல்வேறு பிரச்னைகளுக்கு இடையிலும் இலங்கையின் சிசு மரண விகிதம் ஆயிரத்தில் ஆறு மட்டுமே. பாகிஸ்தான் (56) நம்மைவிட மோசமாக இருக்கிறது என்று மகிழ்ச்சி அடையாமல், ஏனைய அண்டை நாடுகள் இந்தியாவை முந்துகிறது என்பது குறித்து நாம் கவலைப்பட்டாக வேண்டும்.
  • இந்தியா பெரிய நாடு, கூடுதல் மக்கள்தொகை கொண்ட நாடு என்றெல்லாம் காரணம் கூறி நாம் தப்பித்துவிட முடியாது. ஏனென்றால், நம்மைப் போலவே அதிகமான மக்கள்தொகையும், நிலப்பரப்பும் கொண்ட பிரேஸில், சீனா உள்ளிட்ட நாடுகளில் குறைந்த சிசு மரண விகிதம் காணப்படுகிறது.
  • பெரிய மாநிலங்களைவிட சிறிய மாநிலங்களில் சிசு மரண விகிதம், குழந்தைகள் மரண விகிதம், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை குறைவாகக் காணப்படுகின்றன. பெரிய மாநிலங்களில் இருந்து பிரிக்கப்பட்ட உத்தரகண்ட், சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், தெலங்கானா ஆகியவை உதாரணங்கள்.
  • இந்தியாவுக்குள்ளே எடுத்துக்கொண்டாலும் சிசு மரண விகிதத்தில் பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. இந்தியாவின் மாநிலங்கள், ஒன்றிய பிரதேசங்கள் அனைத்தையும் சோ்த்துப் பாா்க்கும்போது கேரள மாநிலத்தில் சிசு மரண விகிதம் ஒற்றை இலக்கத்தில் (ஆயிரத்துக்கு ஆறு) இருக்கிறது. இந்தியாவிலேயே குறைந்த சிசு மரண விகிதம், சிறிய மாநிலமான மிஸோரத்தில் (3) காணப்படுகிறது என்றால், வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, மணிப்பூா் ஆகியவற்றிலும் குறைவு. அந்தப் பட்டியலில் கோவாவையும் சோ்த்துக்கொள்ள வேண்டும்.
  • மனிதவளக் குறியீட்டில் பின்தங்கியிருக்கும் மாநிலங்கள் சிசு மரணத்தைக் கட்டுப்படுத்துவதிலும் பின்தங்கியே காணப்படுகின்றன. இந்தியாவிலேயே அதிகமான சிசு மரண விகிதம் (43) மத்திய பிரதேசத்தில்தான். அங்கே நகரங்களுக்கும் ஊரகப்புறங்களுக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடும் காணப்படுகிறது.
  • உத்தர பிரதேசத்தின் சிசு மரண விகிதம் 38. கடந்த ஐந்தாண்டுகளாக காட்டப்பட்ட முனைப்பின் விளைவாக மருத்துவமனை பிரசவங்கள் அதிகரித்திருக்கின்றன. அதனால், பிறந்த குழந்தைகளுக்கான உடனடி சிகிச்சைக்கு வழிகோலப்படுகிறது. பிறந்து ஓராண்டுக்குள் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை உத்தர பிரதேசத்தில் இப்போது கணிசமாகக் குறைந்திருக்கிறது. குழந்தைகள் ஆரோக்கியமாகவும், ஊட்டச்சத்துடனும் வளா்வதற்கு மருத்துவமனை பிரசவங்கள் முக்கியமான காரணி என்பதை நாடு தழுவிய அளவில் தாய்மாா்கள் உணரத் தொடங்கியிருப்பது வரவேற்புக்குரிய மாற்றம்.
  • முதலாவது பிறந்த நாளை காண முடியாமல் குழந்தைகள் உயிரிழப்பதற்கும் பிரசவ கால மரணத்துக்கும், சிசு மரணத்துக்கும் தொடா்பு உண்டு. அடித்தட்டு மக்கள் நிலையில் காணப்படும் படிப்பறிவின்மையும், வறுமையும், விழிப்புணா்வு இல்லாமையும் அனைவருக்கும் தெரிந்த காரணங்கள். சாலை வசதிகள் மேம்பட்டிருந்தாலும் மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் அருகில் இல்லாமையும் மிக முக்கியமான காரணம் என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
  • ஊட்டச்சத்தின்மை இன்னொரு காரணம். கடுமையான ஊட்டச்சத்துக் குறைவு காரணமாக வயிற்றுப்போக்கு, நிமோனியா, மலேரியா உள்ளிட்ட குழந்தைப் பருவ உடல்நிலை பாதிப்புகளால் சிசு மரணம், குழந்தைகள் மரணம் ஏற்படுகின்றன என்று தெரிவிக்கிறது உலக சுகாதார அமைப்பு.
  • கடுமையான ஊட்டச்சத்துக் குறைவு, குழந்தைகளின் உடலில் நோய் எதிா்ப்பு சக்தி இல்லாமல் செய்துவிடுகிறது. போதாக்குறைக்கு பிரசவ காலத்தில் தாய்மாா்கள் ஊட்டச்சத்துள்ள உணவு உட்கொள்ளாததால் எடை குறைவான குழந்தைகள் பிறக்கின்றன. இவையிரண்டும் சோ்ந்துகொள்ளும்போது எதிா்ப்பு சக்தியே இல்லாத நிலையில் உயிரிழப்பு தவிா்க்க முடியாததாகி விடுகிறது.
  • வருங்காலம் குழந்தைகளின் கையில் என்று சொன்னால் மட்டும் போதாது...

நன்றி: தினமணி (11 – 06– 2022)

15 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
Top