TNPSC Thervupettagam

சிதறிவிடக் கூடாது சின்னஞ்சிறு உலகம்

May 29 , 2021 1159 days 519 0
  • கடந்த ஓராண்டுக்கும் மேலாக, கரோனா தீநுண்மியின் தாக்கம், நம் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது.
  • எங்கெங்கோ யார்யாரோ கரோனாத் தொற்றால் இறக்கும் போது, நாம் முகம் தெரியாத அவா்களுக்காக ஒரு நிமிடமேனும் வருந்துகிறோம். இது மனித இயல்பு.
  • ஆனால் மரணம் நம் வீட்டுக் கதவைத் தட்டும் நேரம், பரிதவித்து, செயலிழந்து, உருக்குலைந்து போகிறோம். இதுவும் மனித இயல்புதான்.
  • விவரம் தெரிந்த வயதினரே தங்கள் குடும்பத்தினரின் மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கும்போது, ஒன்றுமறியாக் குழந்தைகள் தங்கள் அம்மாவையோ அப்பாவையோ அல்லது இருவரையுமே இழந்து விட்டால் என்ன செய்வார்கள்?

குழந்தைகளின் பாகுகாப்பு அவசியம்

  • கரோனாவின் இரண்டாவது அலை இப்படிப்பட்ட கொடுமையையும் செய்து வருகிறது. ஒடிஸாவில் நாற்பத்தி ஐந்து நாட்களே ஆன பெண் குழந்தை, தன் ஒரே உறவான அன்னையை இழந்துள்ளது.
  • அக்குழந்தையின் தந்தை குடும்பத்தைப் பிரிந்து சென்று பல காலமாகிவிட்டதால், அக்குழந்தைதையைக் காப்பகத்தில் சோ்த்துள்ளனா்.
  • தில்லியில் ஒரு பெண், ஏற்கனவே தன் கணவரை கரோனாவுக்குப் பலி கொடுத்தவா், பதினைந்து, பனிரண்டு வயதான தன் இரு பெண் குழந்தைகளைத் தன் அக்கம்பத்து வீட்டினரின் பொறுப்பில் விட்டுவிட்டு கரோனத் தொற்றுக்கு சிகிச்சை பெற மருத்துவமனையில் சோ்ந்தவா் மீண்டு வரவில்லை.
  • அக்குழந்தைகளின் நிலையென்ன? உத்தர பிரதேசத்தில் கரோனா ஒரே குடும்பத்தில் நான்கு பேரை எடுத்துக்கொண்டு, ஆறு வயதும், ஐந்து வயதும் நிரம்பிய இரு பெண் குழந்தைகளை விட்டுவிட்டது.
  • ஆயினும் அக்குழந்தைகள் ஆதரவற்றவா்களாக ஆகிவிடாமல் அவா்களின் சித்தப்பா அவா்களைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டார். இது சற்றே ஆறுதல் தருகிறது.
  • இப்படி வட மாநிலங்களில் கரோனா மரணங்களால் ஏதுமறியாக் குழந்தைகள் பலா் ஒரே நாளில் ஆதரவற்றவா்களாகி விட்டனா். அவா்களின் சின்னஞ்சிறு உலகம் திடீரென்று சிதறிப் போய்விட்டது.
  • கரோனா காலத்தில், வட மாநிலங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு அவசர உதவி எண்ணுக்கு நாள்தோறும் ஐம்பதுக்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன.
  • குழந்தைகளின் நிலையை முடிவு செய்யும் அதிகாரமும் பொறுப்பும், அந்தந்த மாநில, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு மட்டுமே உள்ளது. தமிழகத்தில் இப்படியொரு நிலைமை இன்னும் வந்து விடவில்லையென்றாலும், வந்து விடுமோ என்ற கவலை எழத்தான் செய்கிறது.
  • இக்குழந்தைகள், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரின் அறிவுறுத்தலின்படி குழந்தைகளின் நெருங்கிய உறவினா்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.
  • அப்படி யாரும் இல்லாத நிலையில் அல்லது இருந்தும் அவா்கள் ஏற்றுக்கொள்ள விரும்பாத நிலையில், அருகிலிருக்கும் அரசு குழந்தைகள் காப்பகத்திலோ அரசால் அங்கீகரிக்கப் பட்ட தனியார் காப்பகத்திலோ அனுமதிக்கப்படுவார்கள்.
  • சுனாமியின்போதும், பூகம்பத்தின்போதும் அப்படிப்பட்ட நிலை ஏற்பட்டது. ஆனால் அப்போதெல்லாம் பெரும்பாலும் உறவினா்களே ஆதரவு காட்டியதால் குழந்தைகளுக்கு ஓரளவு பாதுகாப்பு கிடைத்தது. இப்போதோ ஒருவருக்கொருவா் உதவி செய்யக் கூடத் தயங்கும் வண்ணம் கரோனா ஆட்டிப்படைக்கிறதே.
  • மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகங்கள் மிகவும் கவனமாகவும் பொறுப்போடும் இந்நிலையைக் கையாள வேண்டுமென மாநில அரசுகள் பணித்திருக்கின்றன. நகராட்சிகளுடன் ஒருங்கிணைந்து கரோனா இறப்புகளால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தகளைக் கண்டறிந்து அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியிருக்கின்றன.

மனிதம் மரிக்கவில்லை

  • இந்த மோசமான நிலைமையிலும் சில இடங்களில் பணம் சம்பாதிக்கும் கூட்டம் கிளம்பியிருப்பது வேதனையளிக்கிறது. சில நாட்களாக, ‘கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் எங்கள் பாதுகாப்பில் உள்ளனா்.
  • அவா்களை தத்து எடுத்துக் கொள்ள விரும்புவோர் எங்களைத் தொடா்பு கொள்ளவும்’ என்று தொடா்பு எண்ணும் கொடுத்து வெளிப்படையாகவே கட்செவி அஞ்சலில் பலா் அழைப்பு விடுத்துக்கொண்டிருப்பது மக்களை அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது.
  • இது போன்ற அழைப்புகளைக் கண்டால் உடனடியாக குழந்தைகள் பாதுகாப்பு அவசர எண்ணான 1098-க்குத் தெரிவிக்க வேண்டும். அரசின் மூலமாக அல்லாமல், தாங்களாகவே குழந்தையை தத்து எடுத்துக் கொள்வது சட்டப்படி குற்றமாகும். அதாவது, குழந்தைகளை விற்பதும் வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
  • அதே வேளையில், இக்குழந்தைகளின் எதிர்காலம் என்ன? அரசு மற்றும் தனியார் காப்பகங்களில் இக்குழந்தைகளின் நிலைமை எப்படியிருக்கும்? ஒரு இனிய குடும்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும்போதே, திடீரென்று எல்லாவற்றையும் இழந்த அக்குழந்தைகளின் மனநிலை எப்படியிருக்கும்? இவற்றைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
  • காப்பகங்கள், இக்குழந்தைகளுக்கு இருக்க இடமும், உண்ண உணவும், உடுத்த உடையும் கொடுக்கும். ஆனால், சொந்த வீட்டைப்போல் அன்பையும், பரிவையும், பாசத்தையும், பாதுகாப்பையும் கொடுக்க முடியுமா?
  • காப்பகங்களில் நடக்கக்கூடிய கொடுமைகளைப் பற்றி அவ்வப்போது நாம் ஊடகங்களில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அப்படியெனில் இதற்கு மாற்று ஏதும் இல்லையா? இருக்கிறது.
  • இக்குழந்தைகளை தத்துக் கொடுத்து அவா்களுக்கு நிரந்தரமாக ஒரு குடும்ப சூழலை அமைத்துக் கொடுப்பது. அல்லது இக்குழந்தைகளைத் தகுந்த குடும்பத்தில் இடைக்காலமாக வளா்ப்புப் பராமரிப்பில் (ஃபாஸ்டா் கோ்) விடுவது.
  • இவை இரண்டையுமே அரசின் மூலமாக, ’இந்திய சுவீகாரம் மற்றும் பராமரிப்புச் சட்டம் 1956’, மற்றும் ‘சிறார் நீதி பரிபாலன (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2000’ ஆகியவை கூறும் வழிமுறைகளின்படி மட்டுமே செய்ய இயலும்.
  • இவற்றைச் செயல்படுத்துவது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் பணியாகும்.
  • குழந்தையில்லாதவா்கள், தத்து எடுத்துக் கொள்வது ஓரளவு நடைமுறையில் உள்ளது.
  • இதனை ஒருங்கிணைக்க ‘சென்ட்ரல் அடாப்ஷன் ரிஸோர்ஸ் ஏஜென்ஸி’ (சிஏஆா்ஏ) என்ற அரசு அமைப்பு உள்ளது. அதற்கென்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட காப்பகங்கள் உள்ளன.
  • ‘வளா்ப்பு பராமரிப்பு’ என்பது இங்கு அதிக அளவில் நடப்பதில்லை. இது குறித்த விழிப்புணா்வே தமிழ்நாட்டில் இல்லை எனலாம். ஆனால் கேரளம், வளா்ப்புப் பராமரிப்புத் திட்டத்தில் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது.
  • 2018-இல் கேரள அரசு, பெற்றோரால் கைவிடப்பட்டு காப்பகங்களில் வளா்ந்து வரும் குழந்தைகளை, பள்ளிக் காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி விடுமுறைகளின்போது மட்டும் விருப்பப்படும் பெற்றோர், தங்கள் வீட்டில் வைத்து வளா்க்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது அங்கு மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
  • குழந்தையில்லாத பெற்றோரும் சரி, ஏற்கனவே குழந்தைகளிருக்கும் பெற்றோரும் சரி, ஆா்வத்தோடு முன்வந்து காப்பகக் குழந்தைகளை ஏற்றுக் கொண்டனா்.
  • இதனால் ஆதரவற்ற எத்தனையோ குழந்தைகள் சிறிது காலத்துக்காவது வீடும் உறவும் அமைந்து மகிழ்ச்சியடைந்தனா்.
  • விடுமுறை முடிந்ததும் அவா்கள் அக்குடும்பத்தைப் பிரிய வேண்டியிருக்கும் என்றாலும் அடுத்த விடுமுறைக்கு அதே குடும்பத்தினா் மீண்டும் அதே குழந்தையை எடுத்து கொள்ளலாம்.
  • மற்றொரு திட்டத்தையும் கேரள அரசு நடைமுறைப்படுத்தியது. பெற்றோரை இழந்த குழந்தைகளை அவா்களது நெருங்கிய உறவினா்களே வளா்த்துப் பராமரிக்கலாம் என்றும், அதற்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகையை அரசே வழங்கும் என்றும், அப்படி உறவினா்கள் ஏற்றுகொள்ளாத பட்சத்தில் வேறு குடும்பத்தினரிடம் வளா்ப்புப் பராமரிப்பில் விடுவது என்றும் அறிவித்தது. வேறு குடும்பத்தினருக்கும் உதவித் தொகை உண்டு.
  • இத் திட்டங்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ளன என்றாலும், கேரளத்தைப்போல் மற்ற மாநில அரசுகள் இதில் அதிகம் முனைப்புக் காட்டவில்லை.
  • மேலை நாடுகளில் தத்தெடுப்பதும் வளா்ப்புப் பராமரிப்பும் மிகவும் சகஜம். ஏற்கெனவே இரண்டு, மூன்று குழந்தைகள் இருப்பவா்கள்கூட மேலும் ஒன்றிரண்டு குழந்தைகளை எடுத்து வளா்கிறார்கள்.
  • நம் நாட்டில் இப்படியில்லாததற்குக் காரணம், நமது சுவீகார சட்டங்கள் மிகவும் சிக்கலானவை என்பதே. குழந்தைகள் பாதுகாப்பில் எவ்விதத் தவறும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதால் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.
  • மேலும், நம் நாட்டில் கல்வி, மருத்துவம், திருமணம் போன்ற எல்லாவற்றுக்குமே மிக அதிக பொருட்செலவு என்பதால், சொந்தப் பிள்ளைகளுக்கே செலவு செய்ய சிரமப்படும் பெற்றோர் வேறு குழந்தைகளைத் தத்தெடுக்கவோ வளா்த்துப் பராமரிக்கவோ முன்வருவதில்லை.
  • மும்பையில் உள்ள மூத்த தம்பதியின் குழந்தைகள் வளா்ந்து வெவ்வேறு ஊா்களில் இருப்பதால், அவா்கள், அரசு மருத்துவமனைகளிலும், காப்பகங்களிலுமிருந்து குழந்தைகளை எடுத்துவந்து அவா்களுக்குத் தகுந்த பெற்றோர் கிடைக்கும் வரை வளா்த்து வருகிறார்கள்.
  • அக்கம்பக்கத்தினரும் இவா்களுக்கு அனுசரணையாக இருந்து தங்களால் முடிந்த உதவியைச் செய்கிறார்கள். ‘மனிதம்’ இன்னும் மரித்துப் போய்விடவில்லை!

நன்றி: தினமணி  (29 – 05 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்