சிந்துவெளி அகழாய்வு நூற்றாண்டு
- சிந்துவெளி நாகரிகம் கண்டறியப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகின்றன. இந்தியத் தொல்லியல் துறையின் இயக்குநராகப் பொறுப்பு வகித்த ஜான் ஹுபெர்ட் மார்ஷல், 1924இல் ஹரப்பாவில் ஆய்வுசெய்து, ஒரு புதிய பண்பாடு கண்டறியப்பட்டது குறித்து அறிவித்தார். ஹரப்பாவிலும் மொகஞ்சதாரோவிலும் நடந்த ஆய்வு, அதுவரை முன்வைக்கப்பட்ட இந்திய வரலாற்றையே மாற்றியமைத்தது.
- திராவிட இனம் குறித்த கருத்தியலுக்குச் சிந்துவெளி நாகரிகம் குறித்த அறிதல்கள் கதவைத் திறந்துவிட்டன. இதைக் கொண்டாடும் வகையில் ‘சிந்துவெளி அகழாய்வு நூற்றாண்டுக் கருத்தரங்கம்’, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அண்மையில் நடந்தது. தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பும் பச்சையப்பன் அறக்கட்டளைக் கல்லூரிகளும் இணைந்து இந்நிகழ்வை நடத்தின.
- நிகழ்வில் ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் (ஓய்வு) பேசுகையில் “ஒடிஷா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் பணிபுரிந்தபோது, அங்குள்ள கிராம மக்களையும் பழங்குடி மக்களையும் அடிக்கடி சந்திப்பேன். நம்முடைய சங்க இலக்கியங்களில் கூறப்படுகிற ‘செவிலித்தாய்’ என்கிற உறவுமுறையை அவர்களது சில பண்பாட்டுக் கூறுகள் ஒத்திருக்கின்றன. இது ‘சங்க இலக்கியப் பண்பாட்டுக்கான ஆய்வகங்கள்’ என்கிற புரிதலுக்குப் பல விஷயங்கள் என்னை உந்தித் தள்ளின.
- வணிகத்தில் பெண்களின் பங்களிப்பு இருந்ததைப் பழந்தமிழ் இலக்கியப் பாடல்களின் வழியே அறிய முடிகிறது. சிந்துவெளிச் சமூகத்தில் பெண்கள் ஆளுமையோடு விளங்கியதை, அப்பண்பாட்டுக்குச் சான்றுகளாகக் கிடைத்த பொருள்கள் வெளிப்படுத்துகின்றன. பழந்தமிழரால் காளையும் எருமையும் முக்கியமான கால்நடைகளாக வளர்க்கப்பட்டன. ஆரியருக்கு நன்கு பழக்கமான குதிரை, சிந்துவெளி மக்கள் அறிந்திராதது. முசிறியிலிருந்து அலெக்சாண்ட்ரியாவுக்கு நம்மவர்கள் வணிக ஒப்பந்தம் செய்ததற்கான சான்றுகளை இன்று காண முடிகிறது. சிந்துவெளிப் பண்பாடு நிலவிய லோத்தல், ஹரப்பா போன்ற இடங்களைப் போலவே, கீழடியிலும் ஒரே மாதிரியான பகடைக்காய்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் எங்கு சென்றனர்? தமிழக மக்களின் தொன்மம் எங்கு தொடங்குகிறது? இவ்விரு கேள்விகளும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான். ஒடிஷாவுக்கும் கீழடிக்கும் தொலைவு அதிகமிருக்கலாம். ஆனால், பண்பாட்டு நோக்கில் இடைவெளி இல்லை. பன்றியாறு, வராக நதி எனப் பெயர் மாற்றப்படுகிறது. நம் வரலாற்றை அறிந்துகொள்ளவில்லை எனில், நம் பண்பாட்டுக்கு மற்றவர்கள் பெயர் வைத்துவிடுவார்கள். தொன்மையான சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற வரலாறு வெறுப்புணர்வை அளிக்காமல், நமக்குப் பொறுப்புணர்வை அளிக்க வேண்டும்” என்றார்.
- சங்கம் பீடியா (sangampedia.net) வலைப்பக்கம் நிகழ்வில் வெளியிடப்பட்டது. தமிழ் இலக்கியம் குறித்து அறிஞர் ப.பாண்டியராஜா உருவாக்கிய மூன்று தொடரடைவுகள் இந்த வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன. பாலகிருஷ்ணனின் ஆய்வுரை நூலாகவும் சுபாஷிணியின் ‘மக்கள் வரலாறு: தொடக்கமும் தொடர்ச்சியும்’ நூலும் வெளியிடப்பட்டன. தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் க.சுபாஷிணி, மானுடவியல் ஆய்வாளர் பக்தவத்சல பாரதி, பேராசிரியர் அரசு செல்லையா உள்ளிட்டோரும் ஆய்வுரை வழங்கினர்.
நன்றி: இந்து தமிழ் திசை (01 – 09 – 2024)