TNPSC Thervupettagam

சிப்கோ இயக்கம்: தூற்றப்பட்ட ஒரு பாரம்பரியம்

April 28 , 2023 624 days 400 0
  • அலகநந்தா பள்ளத்தாக்கில் மண்டல் என்ற கிராமத்தில் சாம்பல் மரங்களை வெட்டிக்கொண்டிருந்த மர வியாபாரிகளின் ஆட்களை சாத்வீக முறையில் தடுப்பதற்காக அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சாமானிய விவசாயிகள், மரங்களை மேற்கொண்டு வெட்ட விடாமல் ஓடிச் சென்று தழுவிக்கொண்டனர்; உலக சுற்றுச்சூழல் காப்பு நடவடிக்கைகளில் அதுவரை இருந்திராத அகிம்சை முறையிலான அந்தப் போராட்டம் 1973 மார்ச் 27இல் நடந்தது. ‘சிப்கோ இயக்கம்’ என்ற பெயரில் அது உலகமெங்கும் பின்னாளில் பிரபலமானது. இந்தக் கிராமத்தினர் கடைப்பிடித்த வழிமுறையையே இமாலயத்தின் உத்தராகண்ட் பகுதியைச் சேர்ந்த பிற கிராமவாசிகளும் பின்பற்றினர்.

சிப்கோ உணர்த்தும் பாடம்

  • ‘சிப்கோ ஆந்தோலன்’ என்று அழைக்கப்பட்ட அந்த இயக்கம் தொடங்கி ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. மரத்தைக் கட்டிப்பிடிக்கும் சாதாரண இயக்கமாக நின்றுவிடாமல், வனங்களை, மேய்ச்சல் நிலங்களை, தண்ணீரை தூய்மை கெடாமல் பாதுகாக்கும் இயக்கமாக அது விரிவடைந்தது. இயற்கை வளங்களைப் பணமாக்க நினைக்கும் பேராசைக்காரர்களுக்கும் காப்பாற்ற நினைக்கும் சாமானியர்களுக்கும் இடையிலான இந்த மோதல்தான், இந்தியாவின் வளர்ச்சி திட்டங்கள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற வழியைக் காட்டுகின்றன என்று அறிஞர்கள் சுட்டிக்காட்டினர்.
  • மக்கள் எண்ணிக்கையில் உலகின் இரண்டாவது இடத்திலும், ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் உலக சராசரியைவிடக் கூடுதலான எண்ணிக்கையிலும் மக்கள் வாழும் நாட்டில், வெவ்வேறு காரணங்களுக்காக வெப்ப மண்டலக் காடுகளை அழித்துவிடக்கூடிய வாய்ப்புகளே அதிகம்; இந்த நிலையில் அதிக முதலீடும், அதிக எரிபொருள் ஆற்றலும் (மின்சாரம், நிலக்கரி போன்றவை), அதிக இயற்கை வளங்களும் உற்பத்திக்குத் தேவைப்படும் பொருளாதார வளர்ச்சி முறையை, மேற்கு நாடுகளைப் பார்த்து இந்தியாவும் பின்பற்றுவது தவறு என்று பலரும் வாதிட்டனர்.
  • பிரிட்டிஷாரிடமிருந்து 1947இல் சுதந்திரம் பெற்றது முதலே, கீழிருந்து மேல் நோக்கி வளர்ச்சியை எட்டும் வகையில், மக்கள் சமூகங்களைச் சார்ந்த, சுற்றுச்சூழலுக்குக் கேடு ஏற்படுத்தாத உற்பத்தி வழிமுறைகளுக்கும் தொழில்நுட்பங்களுக்கும் அரசு முக்கியத்துவம் தந்திருக்க வேண்டும் என்பது அவர்களுடைய வாதம்.
  • இந்த விவாதங்கள் இப்படியே நீண்டுகொண்டிருந்தால் இதில் பல திருத்தங்களும் தேவைப்படும். ஆனால், சிப்கோ இயக்கம் உணர்த்தும் பாடத்தை ஏற்று - அரசும் மக்களும் - வளர்ச்சிக்கான பொதுக் கொள்கையையும், சமூக நடத்தையையும் அதற்கேற்ப மாற்றிக்கொள்வது அவசியம். எனவே, கோடிக்கணக்கான ஏழைகளை வறுமையிலிருந்து மீட்கவும் – எதிர்கால சந்ததியினரின் நலன்களையும் தேவைகளையும் உதாசீனப்படுத்திவிடாமல் காக்கவும் ‘புதிய பொருளாதார வளர்ச்சி மாதிரி’ நாட்டுக்கே அவசியமானது.

காற்றில் கலக்கும் நஞ்சு

  • வளர்ச்சி திட்டங்களுக்காக சுற்றுச்சூழலை கெடுத்துவிடக் கூடாது என்ற விவாதம் 1980களில் வெவ்வேறு நிலைகளில், துறைகளில் மிகத் தீவிரமாக நடந்தது. சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட நெருக்கடி பல்வேறு தார்மிகம் சார்ந்த கேள்விகளுக்கு இடம் தந்தது; சுற்றுச்சூழல் கெடாமல் பாதுகாக்கப்பட அரசியல் அதிகாரம் எப்படி வெவ்வேறு அதிகார மையங்களுக்குப் பிரித்தளிக்கப்பட வேண்டும் என்று தேவைப்பட்ட மாறுதல்கள் குறித்தும் பேசப்பட்டது; பொருள் உற்பத்தி, கனிம அகழ்வு, நீர்வளத்தைப் பெருக்குதல் போன்றவற்றுக்கு சுற்றுச்சூழலைக் கெடாமல் காக்கும் சூழல் லட்சியங்களுக்கு ஏற்ற பொருத்தமான தொழில்நுட்பங்களை வடிவமைப்பது குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
  • வனங்கள், தண்ணீர், எரிசக்தியை வழங்கக்கூடிய ஆற்றல், நிலம், பல்லுயிர்ப் பெருக்கம் என்று எல்லா வளங்கள் குறித்தும் கவனம் செலுத்தி விவாதிக்கப்பட்டது. இந்த விவாதங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் ஒன்றிய அரசிலும் மாநிலங்களிலும் சுற்றுச்சூழல் (காப்பு) துறையை அரசு உருவாக்க வேண்டியதாயிற்று. புதிய சட்டங்களும் புதிய ஒழுங்காற்று அமைப்புகளும் உருவாகின. சுற்றுச்சூழல் தொடர்பான அறிவியல் ஆய்வுகளும் நம்முடைய உயர்கல்வி, ஆராய்ச்சி மையங்களில் உருவானது.
  • இவ்வாறு 1980களில் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வாலும் அக்கறையாலும் ஏற்பட்ட நன்மைகள் அனைத்தும், பத்தாண்டுகளுக்குப் பிறகு 1991இல் ஏற்கப்பட்ட பொருளாதார தாராளமயக் கொள்கையால் தேயத் தொடங்கியது. ‘பொருளாதார தாராளமயம்’ என்பது அவசியமாகவும், எப்போதோ மேற்கொண்டிருக்க வேண்டிய கொள்கை என்பதும் உண்மையாக இருந்தது. நேரு, இந்திரா பிரதமர்களாக இருந்த காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ‘லைசென்ஸ் – கோட்டா - பர்மிட் ராஜ்’ தொழில் கொள்கை காரணமாக தொழில் முதலீடுகளில் ஆர்வம் குறைந்து வளர்ச்சியில்லாமல் தேக்கம் ஏற்பட்டது.
  • சந்தைகளைத் தடையற்ற போட்டிக்குத் திறந்துவிட்ட பிறகு உற்பத்தித் திறனும் வருவாயும் அதிகரித்தன, ஆனால் சுற்றுச்சூழலைக் காக்க வேண்டியதும், மக்களுடைய பொது சுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டியதும் அவசியமாயிற்று. ரசாயனங்களைத் தயாரிக்கும் அல்லது அதிகம் பயன்படுத்தும் துறைகளில் சூழலைக் காக்க வேண்டிய பொறுப்பு அதிகரித்தது. ரசாயனங்கள் காற்றிலும் நீரிலும் கலந்து நச்சுத்தன்மையை அதிகரித்தன.
  • கனிமங்களை வெட்டி எடுக்கப்படும்போது வெளியேறும் தூசு, நாலா புறங்களிலும் மைல்கணக்கில் பரவி தொழிலாளர்களையும் சுற்றியுள்ள குடியிருப்பு மக்களையும் சுவாசக் கோளாறு உள்பட பல்வேறு நுரையீரல் பிரச்சினைகளுக்கு உள்ளாக்கின. கனிம அகழ்வில் கட்டுப்பாடு விதிகளை அரசால் அமல்படுத்த முடியாததால் காற்று, நிலம், தண்ணீர், வனம், கால்நடைகள் என்று அனைத்துக்கும் அது பெரும் சேதத்தை விளைவித்துவிடுகிறது.
  • பொருளாதார தாராளமயம் காரணமாகவும், தடையற்ற தொழில் முதலீட்டுக் கொள்கை காரணமாகவும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகி, அதிக வருவாய் ஈட்டும் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துவருகிறது. இதன் துணை விளைவாக, சொந்தப் போக்குவரத்துக்கு அவர்கள் பயன்படுத்தும் 2 சக்கர, 4 சக்கர மோட்டார் வாகனங்களாலும் பெட்ரோல் - டீசல் பயன்பாட்டாலும் காற்றில் நஞ்சு கலப்பதும் பல மடங்காக அதிகரித்துவிட்டது.

லாபவெறிக்கு இரையான சுற்றுச்சூழல்

  • இதில், 1990களிலும் அதற்குப் பிறகும் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது மிகத் தீவிரமாகிவிட்டது, அதனால் சுற்றுச்சூழல் கெடாமல் காக்க வேண்டும் என்று குரல் கொடுப்போரைத் தாக்குவதும் அதிகரித்துவிட்டது. கனிம அகழ்வு நிறுவனங்கள் மரங்களை வெட்டி காடுகளை அழித்து சீரழிக்கத் தொடங்கியதைக் கண்டிக்கவும் தடுக்கவும் முற்படும் தன்னார்வத் தொண்டர்கள், இடதுசாரித் தீவிரவாதிகள் என்றும் நகர்ப்புற நக்ஸல்கள் என்றும் பட்டம் சூட்டப்பட்டு விசாரணையின்றி சிறைவாசம், காவலில் சித்திரவதை என்று கொடுந்தண்டனைகளை அனுபவிக்கின்றனர். (ஸ்டேன் சுவாமி என்ற பாதிரியார் சிறையிலேயே உயிரிழந்தார்).
  • கனிம அகழ்விலும் இயற்கை வளங்களை உற்பத்திக்குப் பயன்படுத்துவதிலும் ஈடுபடும் பெருந்தொழில் நிறுவனங்கள் எல்லா அரசியல் கட்சிகளிலும் உள்ளவர்களுக்கு நிறைய கையூட்டு கொடுக்கின்றன; சூழலை நாசப்படுத்தும் தங்களுடைய லாபவெறிச் செயல்களை மக்கள் அறியாமல் திரைபோட்டு மறைப்பதற்கு இப்படிக் கையூட்டுகளையும் தேர்தல் நன்கொடைகளையும் அளிக்கின்றன.
  • பெருந்தொழில்களுக்கு ஆதரவான பத்திரிகையாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறித்து மக்களுடைய மனங்களில் ஐயங்களை விதைத்தும், இந்தத் தொழிலால் சேதம் அதிகமில்லை என்றும், வேலைவாய்ப்பு - வருமானம் உள்ளிட்டவை அதிகரித்து நாடு வளர்ச்சி காண்கிறது என்றும் எழுதுகின்றனர்.
  • ‘சிப்கோ’ இயக்கம் தொடங்கி ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுச்சூழல் குறித்து அக்கறையுடன் யாராவது பேசுகிறார்கள் என்றால் அது பருவநிலை மாறுதல் பற்றித்தான் இருக்கிறது. எதிர்பாராத வகையில் ஏற்படும் ஒவ்வொரு வறட்சியும், சூறாவளியும், வரலாறு காணாத அளவுக்கு மழையும் – அதனால் திடீர் வெள்ளப்பெருக்கும், காடுகளில் ஆங்காங்கே திடீர் திடீரென தீப்பற்றி எரிவதும் - சூழல் கெடுவதால்தான் பருவநிலை மாறுகிறது என்பதைக் கேலி செய்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டேவருகிறது.
  • இரண்டுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை சாமானியர்கள்கூட இப்போது உணர்ந்துவிட்டனர். ஆனால், பருவநிலை மாறுதலால் ஏற்படும் நெருக்கடி குறித்து இளம் தலைமுறைக்குப் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை; இன்றைய இளம் தலைமுறையினருடைய வாழ்வின் பெரும்பகுதி இனி இந்தப் பருவ மாறுதல் விளைவுகளை நேரில் காணப்போகிறது.

சுற்றுச்சூழல் எதிர்கொள்ளும் துயர்

  • மனிதர்களின் நடவடிக்கைகளால், வளிமண்டலத்தில் பல்வேறு நச்சுவாயுக்கள் சேருவது அதிகமாவதால் விபரீத விளைவுகள் ஏற்படப்போகின்றன என்பதுதான் சுற்றுச்சூழல் எதிர் கொள்ளவிருக்கும் மிகப் பெரிய துயரமாகும். ஆனால், இது ஒன்று மட்டுமே சவால் அல்ல. உலக அளவில் காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்கள் இந்தியாவின் வடக்கில்தான் உள்ளன. தண்ணீர் அசுத்தமாவது அதற்குச் சற்றும் குறைவாக நடந்திருக்கவில்லை.
  • இந்தியாவின் பெரிய நதிகள் அனைத்துமே தண்ணீரில் கலந்துவிட்ட ரசாயன மற்றும் அங்கக – அனங்கக நச்சுக்களால் உயிரினமே இல்லாமல் செத்து நாற்றமடிக்கின்றன. ரசாயன நஞ்சு, வரம்பற்ற உரப் பயன்பாட்டாலும் ஆலைகளின் தண்ணீர்க் கழிவாலும் நிலங்களில் ஆழ ஊறிவிட்டன. இந்தியக் கடற்கரையோரங்களில் கட்டுப்பாடில்லாத கட்டிட மற்றும் நகர்ப்புற கட்டுமானங்களாலும் மண் அரிப்பாலும் மரங்கள் அழிப்பாலும் கடல் அலைகளால் கரை அரிக்கப்படுவதும் குடியிருப்புகளை நோக்கி கடல்நீர் புகுவதும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
  • நிலக்கரிச் சுரங்கங்களில் நிலக்கரியை வெட்டி எடுக்கும்போது, வெப்பமண்டலக் காடுகள் ஏக்கர் கணக்கில் அன்றாடம் அழிக்கப்படுகின்றன. கனிம வளம் ஏதுமில்லாத வனங்களில்கூட இருக்கும் மரங்களும் லாபத்துக்காக வெட்டி அகற்றப்பட்டு கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. அப்படி வெட்டப்படும் நிலங்களில் நஞ்சு கலந்த பிறநாட்டுக் களைச் செடிகளும் கொடிகளும் படர்ந்து வளர்கின்றன.
  • இப்படிப் பட்டியலிடப்படும் சுற்றுச்சூழல் சேதங்கள் அனைத்தும் ஏதோ அழகியல் நோக்கில் மட்டும் கூறப்படுவன அல்ல; இந்தச் சேதங்கள் அனைத்தும் நாட்டின் இன்றைய – எதிர்காலப் பொருளாதாரங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புக்கு சேதத்தை ஏற்படுத்த வல்லவை. காற்றும் நீரும் நஞ்சாவதால் மக்கள் - அதிலும் குறிப்பாக ஏழைகள் - உடல் நலிவுற்று வேலை செய்ய முடியாமல் வருவாயை இழக்கின்றனர்.
  • மண்ணில் வெவ்வேறுவிதமான நஞ்சும் ரசாயன உப்பும் கலப்பதால் இதற்கு முன் செழிப்பான விளை நிலமாக இருந்தவைகூட பயிர் ஏதும் வளர முடியாத கரம்பாகிவிடுகின்றன. காடுகளும் புல்தரைகளும் சுருங்கிவிடும்போது கிராமப்புறங்களில் அவற்றை நம்பி வாழும் கோடிக்கணக்கான மக்கள் வேலையையும் வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் ஒரு சேர இழக்கின்றனர்.

சூற்றுச்சூழலும் சுகாதாரக் கேடும்

  • சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பதால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புக்குப் பொருளாதார இழப்புகள் ஏற்படுகின்றன என்பது இந்தியப் பொருளாதார அறிஞர்களின் கவனத்தை – அவர்களில் சிலர் நோபல் விருது பெற்றவர்களும்கூட – இன்னமும் பெரிதாக ஈர்க்கவில்லை என்பது வேதனை தருகிறது. ஆனால், அவர்களைவிட அதிகம் அறியப்படாத, இந்திய மண்ணோடு பின்னிப்பிணைந்த பலர் இந்த ஆபத்து குறித்து தொடர்ந்து எழுதியும் பேசியும் எச்சரித்துவருகின்றனர். ஆண்டுதோறும் 3.75 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதிப்பு இருக்கிறது, இது இந்திய ஜிடிபி மதிப்பில் 5.7% என்று பத்தாண்டுகளுக்கு முன்னால் அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
  • ‘பார்க்க: கிரீனிங் இந்தியாஸ் குரோத்: காஸ்ட்ஸ், வேல்யூவேஷன்ஸ் அண்ட் டிரேட்-ஆஃப்’ (See Muthukumara Mani, editor, Greening India’s Growth: Costs, Valuations and Trade-Offs, New Delhi: Routledge, 2013). அதற்குப் பிறகும் மண், நீர், காற்று ஆகியவற்றின் மாசு குறையாமல் மேலும் பல மடங்காக உயர்ந்திருக்கும் நிலையில் இந்தச் சேத மதிப்பும் எத்தனை மடங்கு உயர்ந்திருக்கும் என்று ஊகித்துக்கொள்ளலாம்.
  • சுற்றுச்சூழல் கெடுவதால் ஏற்படும் தீய விளைவுகள் அனைத்தும் ஏழைகள் மீதுதான் விடிகின்றன என்பதை ஒப்புக்கொள்வது அவசியம். சிங்ரௌலி பகுதியில் வாழும் கிராம மக்கள் வீடுகளுக்கு மின்சார இணைப்பே கிடையாது; அதைவிடக் கொடுமை நிலக்கரி வெட்டி எடுக்கப்படும்போதும் லாரிகளிலும் ரயில் வேகன்களிலும் ஏற்றப்படும்போதும் காற்றில் கலக்கும் பொடி தூசானது அவர்களுடைய மூச்சுக்காற்றில் இடைவிடாமல் கலந்து அவர்களுக்கு சுவாசக் கோளாறுகளையும் பல்வேறு நுரையீரல் பிரச்சினைகளையும் ஏற்படுத்திவிடுகின்றன.
  • இந்த வயல்தான் தில்லிக்குத் தேவையான மின்சாரத்தை வழங்க நிலக்கரியை அனுப்பிக்கொண்டிருக்கிறது. ‘பார்க்க: டார்க் அண்ட் டாக்ஸிக் அண்டர் த லேம்ப்: இண்டஸ்ட்ரியல் பொல்யூஷன் அண்ட் ஹெல்த் டேமேஜ் இன் சிங்ரௌலி’ (See A.Vasudha, ‘Dark and Toxic Under the Lamp: Industrial Pollution and Health Damage in Singrauli’, Economic and Political Weekly, 4th March 2023). தலைநகர் தில்லியில் வாழும் பெரும் பணக்காரர்கள், தங்கள் வீட்டின் வாயிலிலேயே, காற்றிலிருந்து துகள்களையும் கிருமிகளையும் உறிஞ்சி வெளியேற்றும் சாதனத்தைப் பொருத்திக்கொண்டு வீட்டுக்குள் தூய்மையான காற்றை சுவாசிக்கிறார்கள். இதை வாங்குவதற்கும், மாதந்தோறும் இதற்கு மின் கட்டணம் செலுத்தவும் ஏழைகளிடம் பணம் கிடையாது.

அபாயத்தின் விளிம்பில் ஜோஷிமடம்

  • மனிதர்கள் வாழவும், வளம் பெறவும் இயற்கையை மதித்து, அதைக் கெடுக்காமல் – பாதுகாத்து வாழ வேண்டும் என்று ‘சிப்கோ’ இயக்கம் உணர்த்திய பாடத்தை, இந்தியாவின் எல்லா பகுதிகளுமே இன்று அலட்சியப்படுத்திவிட்டன. இது மற்ற இடங்களைவிட ‘சிப்கோ’ இயக்கம் உருவான இமாலய மண்ணிலேயே நடப்பது மிகவும் வருந்தத்தக்கது. ஜோஷிமடத்தில் ஏற்பட்டுள்ள நிலப்பிளவும் கட்டிட சேதங்களும் சமீபத்திய அடையாளச் சின்னம்.
  • இமயமலையில் வரம்பின்றிப் பாறைகளை வெடிவைத்து பிளக்காதீர்கள், நெடுஞ்சாலைகள், ஹோட்டல்கள், யாத்ரிகர்கள் தங்குவதற்கான இடம், நீர்த் தேக்கங்கள், பாலங்கள், மின்சாரம் தயாரிக்க அணைகள் போன்ற கட்டுமானங்களை மேற்கொள்ளாதீர்கள் என்று ‘சிப்கோ’ இயக்கத் தந்தையான சண்டி பிரசாத் பட் உள்ளிட்ட இயற்கை ஆர்வலர்கள் 1970கள் முதலே அரசை எச்சரித்துக்கொண்டிருக்கின்றனர்.
  • ஒன்றியத்திலும் மாநிலங்களிலும் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசுகள் இந்த எச்சரிக்கைகளைப் புறக்கணித்தன. உச்ச நீதிமன்றம்கூட, அதுவே நியமித்த நிபுணர்குழு மிக விரிவான ஆய்வை மேற்கொண்டு ‘சார் தாம்’ நெடுஞ்சாலைத் திட்டத்தால் பாதிப்புகள்தான் அதிகம் எனவே அனுமதிக்க வேண்டாம் என்று தடுத்தும்கூட, அனுமதி வழங்கியது.
  • ஜோஷிமடம் என்ற ஊரே நாளுக்கு நாள் பூமியில் புதைந்துவருவது இனி வரப்போகும் பேரழிவுகளைச் சுட்டிக்காட்டும் கெட்ட சகுனமாக இருந்தாலும் ‘ஜோஷிமத்: ஏன் அவாய்டபிள் டிசாஸ்டர்’ (See Ravi Chopra, ‘Joshimath: An Avoidable Disaster’, The Indian Forum, 7th March, 2023) அரசோ அதன் தோழர்களான ஒப்பந்ததாரர்களோ தங்களுடைய ‘வளர்ச்சிப் பணி’களைக் கைவிடும் மனநிலையில் இல்லை!

தாகூரின் எச்சரிக்கை

  • இந்த வளர்ச்சிப் பணிகளைத் தடையில்லாமலும் சேதமில்லாமலும் மேற்கொள்வதற்கு நம்மிடையே நவீன அறிவியல்பூர்வ மாற்றுத் தொழில்நுட்பங்கள் இருக்கின்றன என்ற நிலையிலும், அவற்றை நாடாமல் இருக்கிறோம் என்பதுதான் மிகுந்த துயரத்தைத் தருகிறது; சுற்றுச்சூழலை கெடுக்காமல் மின்சாரத்தைத் தயாரிக்கவும் நெடுஞ்சாலைகளை அமைக்கவும் உரிய திட்டங்களை வடிவமைக்கவும் செயல்படுத்தவும் உரிய தொழில்நுட்பங்களைத் தருவதற்கு நம்முடைய ஐஐடிக்களிலும், தேசிய அறிவியல் கழகங்களிலும், அரசு – சாராத ஆய்வு மையங்களிலும் நிபுணர்களும் அறிவியலாளர்களும் தொழில்நுட்பம் தெரிந்தவர்களும் ஏராளமாக இருக்கின்றனர்.
  • இவர்கள் இருப்பது தெரிந்தும் எப்போதாவதுதான் அபூர்வமாக அரசு இவர்களுடன் ஆலோசனை கலக்கிறது. ஆனால், வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவழிக்க ஒப்பந்ததாரர்களுடனும் தொழிலதிபர்களுடனும் கூட்டு ஒப்பந்தங்களைச் செய்துகொள்வதிலேயே கவனமாக இருக்கின்றனர் அரசியலர்கள்.
  • கவியரசர் ரவீந்திரநாத் தாகூர் 1922இல், நவீன இயந்திரங்கள் குறித்து உரையாற்றியது நினைவுகூரத்தக்கது. “இயற்கை தன்னைப் புதுப்பித்துக்கொள்ள நேரமோ, வாய்ப்போ தருவதற்கு வழியின்றி, வளர்ச்சிக்காக என்ற பெயரில் நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன; புவிக்கோளம் பல்லாண்டுகளாகச் சேர்த்து வைத்த இயற்கை வளங்களை லாபநோக்கம் கொண்டவர்கள் கொள்ளையடித்துவிடுகிறார்கள். இயல்புக்கு மாறான விருப்பங்களுக்காக, இயற்கை வளத்தை வலுக்கட்டாயமாக அழித்து தேவையை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். இந்தப் போக்கு வரம்பின்றித் தொடர்ந்தால் குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இருக்காது, பலன்தரும் மரங்கள் அடியோடு வெட்டப்பட்டுவிடும், பூமியின் பெரும்பரப்பு வறண்ட பாலைவனம் போல வெட்ட வெளியாகிவிடும், அதில் பெரும் பள்ளங்களே ஏற்படும், அதன் விலைமதிப்பற்ற வளங்கள் களவுநோக்கில் துருவி எடுக்கப்பட்டுவிடும்” என்று எச்சரித்தார்.
  • அவருடைய எச்சரிக்கையை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்; இப்போதுகூட தாமதமாகி விடவில்லை!

நன்றி: அருஞ்சொல் (28 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்