TNPSC Thervupettagam

சிறார் இலக்கியத்துக்கு உதவுமா ‘துரித உணவு' பாணி?

April 21 , 2024 258 days 256 0
  • நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் சமீப ஆண்டுகளாக சமூகத்தின் கவனத்தைப் பெறத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாகக் கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் குழந்தைகள் பள்ளி செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்தனர். அந்தக் காலத்தில் குழந்தைகளுக்கான கதை சொல்லுதல்/செயல்பாடுகள் சார்ந்து தமிழ்நாட்டில் சில குழுக்கள் செயல்படத் தொடங்கின. இணையம் வழியே சந்திப்பது பரவலாகத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஏற்கெனவே இயங்கிவருபவர்களுடன் மேலும் இரண்டு தரப்பினர் தமிழ்ச் சிறாா் இலக்கியத் துறையில் இயங்கத் தொடங்கினர். அவர்களில் முதல் தரப்பினர் கதைசொல்லிகள்/ஆசிரியர்கள்/புதிய எழுத்தாளர்கள். மற்றொரு தரப்பினர் குழந்தைகள்.
  • சிறார் எழுத்து மரபு நமக்கு உண்டு. குழந்தைகளுக்குப் புதிய விஷயங்களையும், அடிப்படை விஷயங்களையும் சுவாரசியமாகக் கூறுதல் என்கிற வகையிலேயே தமிழ்ச் சிறார் இலக்கியம் கடந்த நூற்றாண்டின் இறுதிவரை பயணித்து வந்தது. தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் கால்பதிக்கும் ஒருவர் கடந்த நூற்றாண்டில் தீவிரமாக இயங்கிய அழ.வள்ளியப்பா, வாண்டுமாமா, பெ.தூரன், பூவண்ணன், ஆர்.வி., ரேவதி உள்ளிட்டோரது காலத்தில் தமிழ்ச் சிறார் இலக்கியம் எப்படி இயங்கியது, அவர்கள் முன்வைத்த மதிப்பீடுகள், குழந்தைகளை அவர்கள் புரிந்துகொண்ட விதம், கையாண்ட மொழிநடை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பற்றி அடிப்படை நிலையிலாவது அறிந்திருக்க வேண்டும்.
  • அதே நேரம், தமிழ்ச் சிறார் இலக்கியம் நவீனப் புரிதலுடன் தொடர்ச்சியாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கவில்லை. உலகமயமாக்கம், தொழில்நுட்ப வளர்ச்சிகள், சமூகத்தின் தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்திய ஆங்கிலச் சிறார் இலக்கியம், மலையாளச் சிறார் இலக்கியத் துறைகள் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சியைக் கண்டுள்ளன. அறிவியல், வரலாறு போன்ற துறைகள் சார்ந்தும் படைப்பாக்க ரீதியிலும் ஆங்கில, மலையாளச் சிறார் புத்தகங்கள் பல படிகளைத் தாண்டிவிட்டன. இப்படி நமது அண்டை மொழிகள் சார்ந்த சிறார் இலக்கிய முயற்சிகள் குறித்த அறிமுகமும் இன்றைய எழுத்தாளர்களுக்கு அவசியமாகிறது. இந்த அடிப்படைகளைக் கற்ற பிறகே குழந்தைகளுக்கு எழுதத் தொடங்க வேண்டும். அதுவே ஓர் எழுத்தாளருக்குத் தனித்தன்மையான அடையாளத்தை உருவாக்கும் வகையிலும், அவர் இயங்க நினைக்கும் சிறார் வாசகர்களுக்குப் பயன்தருவதாகவும் அமையும்.

எதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்?

  • மாறாக இன்றைக்கு எழுத வரும் சிறார் எழுத்தாளர்கள் பலரிடமும் விரைவில் பெயர்பெற்றுவிட வேண்டும் என்கிற ஆவல் அதிகம் இருக்கிறது. இன்றைய குழந்தைகளுக்கு முன்வைக்கப்பட வேண்டிய மொழிநடை, மதிப்பீடுகள், புதுமை பற்றியெல்லாம் பெரிய கவலைகள் ஏதும் தென்படவில்லை. பலரும் வகைதொகையில்லாமல் எழுதிக் குவிக்கிறார்கள். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உயிரின நேயம், அறிவியல், வரலாறு எனத் தங்களுக்கு நேரடிப் பழக்கம் இல்லாத துறை சார்ந்த அம்சங்களைக் கொண்டு கதைகளை எழுதுகிறார்கள். பெரும்பாலும் நுனிப்புல் புரிதலை மட்டுமே கொண்ட கதைகள், படைப்புகள். அறிவியல்-வரலாற்றுப் பிழைகள், கற்பிதங்கள், புரிதல் குறைபாடுகள் போன்றவை இந்தக் கதைகளில் மலிந்திருக்கின்றன.
  • தமிழ்ப் புத்தக உருவாக்க நடைமுறையில் பதிப்பக ஆசிரியர் / ஆசிரியர் குழுவின் செம்மையாக்க நடைமுறையைப் பெரும்பாலான பதிப்பகங்கள் கடைப்பிடிப்பதில்லை என்பதால், அரைகுறை சிறார் நூல்கள் பல பதிப்பிக்கப்பட்டுவிடுகின்றன. மீறிப் பதிப்பாளர் கிடைக்காத எழுத்தாளர்கள், தாங்களே பி.ஓ.டி. முறையில் புத்தகமாக்கி விற்றுக்கொள்கிறார்கள். நாம் எழுதும் ஒவ்வொரு படைப்பும் அடுத்த தலைமுறையின் வாசிப்பு ஆர்வத்துக்குத் தீனி போடக்கூடியது, அவர்கள் சிந்தனைக்கு உருவம் கொடுக்கக்கூடியது, இது மிகவும் கவனம் எடுத்துச்செய்ய வேண்டிய பணி என்கிற புரிதல் புதிய எழுத்தாளர்களின் சிந்தனையில் இருப்பதில்லை. புத்தகமாக்கிச் சமூக ஊடகங்களில் அறிவித்துவிட வேண்டும் என்கிற அவசரம் மட்டுமே தூக்கலாக இருக்கிறது.
  • இப்படி அவசர அவசரமாக உருவாக்கப்படும் புத்தகங்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுவரும் விருதுகள் மட்டுமல்லாமல், புதிய புதிய விருதுகளும் முளைக்கின்றன. ரூ.5,000 கொடுத்தால் நாம் விரும்பும் பெயரில் விருதுகள் வழங்கச் சில அமைப்புகள் தமிழ்நாட்டில் தயாராக இருக்கின்றன. புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பெயரில் வழங்கப்படும் இந்த விருது அறிவிப்புகளுக்கு சமூக ஊடகங்களில் பெரும் ஆரவாரமும் வரவேற்பும் கிடைக்கிறது. இவ்வளவு ஆர்ப்பாட்டமும் வாசிப்பின் வாசலில் காலடி எடுத்துவைக்கும் குழந்தைகளை மையமிட்டு நடப்பதுதான் மிகப் பெரிய சிக்கல்.

‘எழுத்தாளர்' குழந்தைகள்

  • குழந்தைகளுக்கு எழுதும் சிறார் எழுத்தாளர்கள் ஒரு பக்கம் என்றால், மற்றொரு புறம் தங்கள் குழந்தையை ஏதாவது துறையில் சாதனையாளர் ஆக்கியே தீருவது என்று பெற்றோர் பலரும் தீர்மானம் எடுத்துக்கொள்கிறார்கள். இப்படிச் சாதிக்க வைக்க அவர்கள் தேர்ந்தெடுக்கும் துறைகளில் புதியது, புத்தக வெளியீடு. பதின் வயதுக்கும் குறைந்த பல குழந்தைகளை எழுத்தாளர்களாக முன்னிறுத்தும் போக்குத் தமிழில் சிறிதுசிறிதாக அதிகரித்து வருகிறது. இந்தப் புத்தகங்களை அந்தக் குழந்தைகள் சுயமாக எழுதினார்களா என்பது மிகவும் அடிப்படையான கேள்வி.
  • ஒவ்வொரு குழந்தையும் அதன் அளவில் எப்படி எழுதுமோ, அப்படித்தான் நூல்கள் அமைய வேண்டும். எழுத்துப்பிழை, வாக்கியப் பிழைகளை வேண்டுமானால் திருத்தலாம். உள்ளடக்கம் முழுக்க முழுக்கக் குழந்தையுடையதாகவே இருக்க வேண்டும். மாறாகக் குழந்தைகள் பேசியதை, சொன்னதைப் பெற்றோரோ ஆசிரியரோ பெரியவர்களுக்கான மொழியில் எழுதி, அதைக் குழந்தையின் எழுத்து என்று அடையாளப்படுத்துவது மிக ஆபத்தானது.
  • இதுபோன்ற குழந்தை எழுத்தாளர்களைப் பிரபல இலக்கியவாதிகள், பேச்சாளர்கள், சமூகப் பிரபலங்களிடம் அறிமுகப்படுத்துவதும், அவர்கள் மூலமாகக் குழந்தை எழுத்தாளர்களைப் பிரபலப்படுத்தும் நோக்கத்தையும் பார்க்க முடிகிறது. குழந்தைகள் எழுதும் புத்தகங்களுக்கு அணிந்துரை, முன்னுரை, வாழ்த்துரை போன்றவையும் வாங்கப்படுகின்றன; கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. யாரையும் மனம் புண்பட வைத்துவிடக் கூடாது என்கிற எண்ணத்துடன் பிரபலங்களும் எழுத்தாளர்களும் ஒரு படைப்பை மதிப்பிடாமலேயே பாராட்டிவிடுகிறார்கள். பெரும்பாலும் பி.ஓ.டி. முறையிலேயே இதுபோன்ற புத்தகங்கள் வெளியாகின்றன. பெற்றோரே செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள். சில பதிப்பகங்கள் இதைத் தொழிலாகவே செய்கின்றன.

இயல்பாக மலர வேண்டாமா?

  • நம் குழந்தைக்குப் பேச்சிலோ, எழுத்திலோ ஆர்வமும் திறமையும் இருக்கலாம். அந்தத் திறமையை மேலும் பட்டைதீட்ட இயல்பான/உயிரோட்டமான வகையில் ஆர்வத்தைத் தூண்டி வளர்த்தெடுக்கலாம். மாறாக, பிராய்லர் பண்ணைக் கோழிகளைப் போல குறிப்பிட்ட நாளில் இவ்வளவு புஷ்டியாக்க வேண்டும் என்று ஊட்டமருந்து கொடுப்பதுபோலக் குழந்தைகளிடையே திணித்து வளர்ப்பது நிச்சயமாக இயல்பான ஒன்றாக இருக்காது.
  • உரிய காலத்துக்கு முன் கனியவைக்க மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிகள் அந்தக் காய்களை வெம்பிப்போக வைக்கக்கூடும். அந்தக் குழந்தைகள் வளர்ந்த பிறகு, உளவியல்ரீதியில் இது சிக்கல்களை உருவாக்கலாம். இளம் வயதிலேயே பிரபலத்தைப் பெற்ற பலரும் வளர்ந்த பிறகு அதே போன்ற புகழுக்காக ஏங்கி உளவியல் சார்ந்த சிக்கல்களை எதிர்கொண்டது பதிவாகியிருக்கிறது.
  • ஒரு குழந்தை பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களை இயல்பாகக் கடந்து, வளர்ந்த பிறகு குறிப்பிட்ட துறையிலோ, வேலையிலோ புதுமையையும் சாதனையையும் படைக்கும் போது கவனிக்கப்படும். அப்படி இயல்பாக வளர்வதற்கும் மலர்வதற்குமான வாய்ப்பைக் குழந்தைகளுக்கு நாம் அளிக்க வேண்டும், உரிய காலம் வரை காத்திருக்க வேண்டும். மாறாக, இளம் வயதிலேயே ‘சாதனைக் குழந்தை’ என்று அடையாளப்படுத்தி, அவர்கள் வளர்ந்த பிறகு சாதிப்பதற்குத் தடைக்கல்லாக முந்தைய பிரபலமே மாறிவிடக் கூடாது.
  • சமூகத்துக்கு அவசியமான எல்லாத் துறைகளுக்குமே புதியவர்களும் இளம் ரத்தமும் தேவை. சிறு வயதுக் குழந்தை எழுத்தாளர்களும், சிறார் இலக்கியத்தில் இயங்க முன்வரும் புது எழுத்தாளர்களும் தங்கள் இயல்பையும் இலக்கையும் தெளிவாக உணர்ந்துகொண்டு இயங்கத் தொடங்கினால் சிறார் இலக்கியத் துறை நிச்சயம் வளப்படும். அவர்களும் உரிய அடையாளத்தைப் பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி: இந்து தமிழ் திசை (21 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்