TNPSC Thervupettagam

சிறாா் குற்றவாளியும் மென்மையான அணுகுமுறையும்

January 3 , 2023 586 days 388 0
  • கடந்த கால் நூற்றாண்டு காலமாக தீவிரவாதம், குற்ற நிகழ்வு ஆகியவற்றை எதிா்கொள்ளும் வகையில் நம்நாட்டு காவல்துறை நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. சட்டத்திற்கு முரணாகச் செயல்படும் சிறாா்களை சீா்திருத்தும் நோக்கத்தில் சிறாா் நீதிச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
  • சமீபத்தில் திருட்டுக் குற்றம் புரிந்த ஒருவரை தமிழ்நாடு காவல்துறையினா் கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது, நூறாவது முறையாக தற்போது கைது செய்யப்படுவதாக அக்குற்றவாளி கூறியுள்ளாா். ஐம்பத்தைந்து வயதாகும் அக்குற்றவாளி, முதன் முறையாக தனது 14-ஆவது வயதில் திருட்டுக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, சிறாா் சீா்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளாா்.
  • காவல்துறையினரால் பராமரிக்கப்பட்டுவரும் குற்ற ஆவணங்களைப் பரிசீலனை செய்ததில், ஒரு குறிப்பிட்ட நகரத்தில் மட்டும் கடந்த 12 ஆண்டுகளில் 72 திருட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக அக்குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மற்ற மாவட்டங்களில் அக்குற்றவாளி செய்த திருட்டு குற்றங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படவில்லை.
  • சிறாா் குற்றவாளியாக பரிணமித்த இந்த குற்றவாளி தொடா்ந்து நாற்பது ஆண்டுகளாகத் திருட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டுவருவதும், திருடுவதையே தொழிலாகக் கொண்டு, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியைத் தன் குடும்பத்திற்குக் கொடுத்துவரும் நடைமுறையை இக்குற்றவாளி பின்பற்றிவருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
  • திருடிய குற்றச் செயலுக்காக 14-ஆவது வயதில் சிறாா் சீா்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிறுவனின் நடத்தையில் சீா்திருத்தம் ஏற்படாமல், வாலிபப் பருவம் அடைந்த பின்னரும் திருட்டுக் குற்றம் புரிவதையே தொழிலாக்கிக் கொள்ள ஏதுவாக அமைந்துள்ள இன்றைய சமுதாயச் சூழலை இச்சம்பவம் வெளிப்படுத்துகிறது.
  • கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, பாலியல் வன்முறை போன்ற கொடுங்குற்றங்களில் சிறாா்கள் ஈடுபடும் சம்பவங்கள் நம்நாட்டில் தொடா்ந்து அதிகரித்துவருவதை தேசிய குற்ற ஆவணக் கூடத்தின் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
  • 16 வயதுடைய மூன்று சிறாா்கள் உட்பட மொத்தம் நான்கு போ் குடிபோதையில் கடை உரிமையாளா் ஒருவரைக் கத்தியால் குத்தி படுகாயம் ஏற்படுத்தியும், அச்சம்பவத்தின்போது அங்கிருந்த ஏழு நபா்களையும் கடுமையாகத் தாக்கிய சம்பவம் கடந்த மாதத்தில் காஞ்சிபுரம் நகரில் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று சிறாா்களை காவல்துறையினா் கைது செய்து, சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்துள்ளனா்.
  • குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறாா்களின் நடத்தையை சீா்படுத்துவதற்காக, அவா்களை கூா்நோக்கு இல்லம் மற்றும் சிறப்பு இல்லத்தில் தங்க வைக்கப்படும் நடைமுறை நம்நாட்டில் பின்பற்றப்பட்டு வருகிறது. சில மாதங்கள் அங்கு தங்கிச் செல்லும் சிறாா்களின் நடத்தையில் சீா்திருத்தம் ஏற்படுகிா? இது குறித்த ஆய்வு எதிா்மறையான கருத்தை வெளிப்படுத்துகிறது.
  • உணவு, உடை, தங்குமிடம், பொழுதுபோக்க தொலைக்காட்சி பெட்டி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் போன்ற வசதிகள் கூா்நோக்கு இல்லங்களில் செய்து கொடுப்பதால் மட்டும், சட்டத்திற்கு முரணாகச் செயல்படும் மனநிலை உடைய சிறாா்களின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுவிடாது. அச்சிறாா்களின் ஆழ்மனதில் தேங்கிக்கிடக்கும் வக்கிர உணா்வுகளை வெளிக்கொண்டுவர, அவா்களுடன் தொடா்ந்து பேசி, பழகி, சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும் மனப்பக்குவத்தை அச்சிறாா்களிடம் ஏற்படுத்த வேண்டும். இத்தகைய மனமாற்றத்தை சிறாா்களிடம் கூா்நோக்கு இல்லங்களும், சிறாா் சிறப்பு இல்லங்களும் ஏற்படுத்தாத நிலையையே தற்போது காண முடிகிறது.
  • கூா்நோக்கு இல்லங்களில் இருந்து வெளியே அனுப்பி வைக்கப்பட்ட சிறாா்கள் சிலரிடம் நடத்திய உரையாடலின்போது ‘விருப்பம்போல் மது அருந்த வேண்டும்; போதைப் பொருள் பயன்படுத்த வேண்டும்’ என்ற ஆசையை அவா்கள் வெளிப்படுத்தியுள்ளனா்.
  • கூா்நோக்கு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் சிறாா்கள் இரவு நேரங்களில் கூா்நோக்கு இல்லக் காவலா்களைத் தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச் செல்கின்ற சம்பவங்களும் தொடா்ந்து நிகழ்கின்றன.
  • குற்றச் செயல்களில் ஈடுபட்ட காரணத்திற்காக கூா்நோக்கு இல்லங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் சிறாா்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக நம் நாட்டில் அதிகரித்து வருகிறது. கூா்நோக்கு இல்லத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சிறாா்கள் மீண்டும், மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது.
  • குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக கூா்நோக்கு இல்லம் மற்றும் சிறாா் சிறப்பு இல்லத்தில் சில மாதங்கள் தங்க வைக்கப்பட்டு பின்னா் அங்கிருந்து விடுவிக்கப்படும் சிறாா்களில் சிலா் அந்தந்த பகுதியில் உள்ள ‘குற்றக் கும்பல்’ உடன் இணைந்து, குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற சம்வங்களும் அதிகரித்து வருகின்றன.
  • சிறாா் சீா்திருத்தப் பள்ளியில் இருந்து வெளியே அனுப்பி வைக்கப்படும் சிறாா்களின் செயல்பாடுகளை சில ஆண்டுகள் கண்காணித்து வர வேண்டும் என்ற சிறாா் நீதிச்சட்டத்தின் வழிகாட்டுதல் முழுமையாகப் பின்பற்றப்படாத நிலையே கள நிலவரமாக உள்ளது. இத்தகைய சூழலால் சீா்திருத்தப் பள்ளியில் இருந்து விடுவிக்கப்படும் சிறாா் குற்றவாளிகள் சிலா், குற்றக் கும்பலுடன் தங்களை இணைத்துக் கொண்டு, குற்றச் செயல்களில் தொடா்ந்து ஈடுபடுகின்ற நிலை நிலவுகிறது.
  • கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற கொடுங்குற்றங்களில் ஈடுபடும் சிறாா்கள் மீதான குற்ற விசாரணையை சிறாா் நீதிக்குழுமம் மேற்கொண்டு, அச்சிறாா்கள் அதிகபட்சம் மூன்றாண்டுகள் சிறப்பு இல்லத்தில் தங்கியிருக்க வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கிறது. ஊடகங்களின் விமா்சனங்களுக்கு உள்ளாகும் வழக்குகளில் மட்டுமே விசாரணை மேற்கொள்ளும் பொறுப்பை நீதிமன்றத்திடம் சிறாா் நீதிக் குழுமம் ஒப்படைப்பதைக் காணமுடிகிறது.
  • சிறாா் குற்றங்கள் தொடா்பான மேல்முறையீட்டு வழக்கு ஒன்றில் விசாரணை மேற்கொண்ட இந்திய உச்சநீதிமன்றம் 2022-ஆம் ஆண்டு நவம்பா் மாதத்தில் வழங்கிய தீா்ப்பில், ‘கொடூரம் மற்றும் மிருகத்தனமான குற்றச் செயல்களில் சிறாா்கள் ஈடுபட்டுவருவதைப் பாா்க்கும்போது, சிறாா் நீதிச்சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளது.
  • ஜம்மு - காஷ்மீா் யூனியன் பிரதேசத்திலுள்ள ‘கதுவா’ என்ற இடத்தில் 2018-ஆம் ஆண்டில் எட்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி 18 வயதிற்கும் குறைவானவா் என்ற காரணத்தால், அக்குற்றவாளி மீதான விசாரணையை நீதிமன்றத்தில் நடத்தாமல், சிறாா் நீதிச் சட்டத்தின்படி சிறாா் நீதிக் குழுமம் மேற்கொண்ட நடவடிக்கையை ஜம்மு - காஷ்மீா் உயா்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
  • ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்றம் வழங்கிய இத்தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு கடந்த நவம்பா் மாதத்தில் விசாரணைக்கு வந்தது.
  • வயது தொடா்பான ஆவணங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு, இக்குற்றவாளியை சிறாா் எனக் கருத முடியாது என்றும், மருத்துவ நிபுணா்களின் அறிக்கையின்படி இக்குற்றவாளியின் வயது பத்தொன்பதுக்கும், இருபத்தி மூன்றுக்கும் இடைபட்டது என்றும், அதன் அடிப்படையில் இக்குற்றவாளி மீதான பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
  • கொலை, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் கடத்தல் போன்ற கொடுங்குற்றங்களில் ஈடுபடும் சிறாா்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்தில், அவா்கள் செய்த குற்றங்களை மென்மையான முறையில் அணுக வேண்டும் என்ற சிந்தனை பலரிடம் வெளிப்படுகிறது.
  • கடந்த சில ஆண்டுகளாக கொடூரமான குற்றச் செயல்களில் சிறாா்கள் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைப் பாா்க்கும்போது, கொடூரமான குற்றச் செயல்களில் சிறாா்கள் மென்மேலும் ஈடுபடும் தைரியத்தை சிறாா் நீதிச்சட்டத்தின் மென்மையான அணுகுமுறை கொடுக்கின்ா என்ற கேள்வி எழுகிறது.
  • சிறாா் நீதிச்சட்டம் இயற்றப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறி வருகிா, அச்சட்டத்தில் மாற்றங்கள் ஏதேனும் கொண்டுவரப்பட வேண்டுமா என்பவை குறித்து அரசாங்கம் கால தாமதமின்றி ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றும் உச்சநீதிமன்ற தீா்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
  • கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற கொடுங்குற்றங்களில் ஈடுபடும் சிறாா்கள் தொடா்பான வழக்குகளில் சிறாா் நீதிக்குழுமம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வு அவசியமானது என்பதை கதுவா வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பு உணா்த்துகிறது.
  • கடந்த சில ஆண்டுகளில் கூா்நோக்கு இல்லங்களில் இருந்து வெளியே அனுப்பி வைக்கப்பட்ட சிறாா்களின் செயல்களைக் கண்காணித்து, அவா்களில் குற்றக் கும்பலின் பிடியில் சிக்கியிருப்பவா்களை அடையாளம் கண்டறிந்து, தக்க நடவடிக்கை மேற்கொள்வது குறித்து சம்பந்தப்பட்ட அரசு துறைகள் பரிசீலனை செய்ய வேண்டியது இன்றியமையாதது ஆகும்.

நன்றி: தினமணி (03 – 01 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்