TNPSC Thervupettagam

சிறுதானியங்களின் சர்வதேச மையமாக மாறும் இந்தியா

April 2 , 2023 483 days 291 0
  • பிரதமரின் கோரிக்கையை ஏற்று 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா. அறிவித்துள்ளது. சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் அதன் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் ஐ.நா. இந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்தச் சூழலில் சிறு தானியங்களின் சர்வதேச மையமாக இந்தியாவை மாற்றும் பணியில் மாநில அரசுகளோடு இணைந்து மத்திய அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது.
  • சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மத்திய அரசு சார்பில் சர்வதேச சிறுதானிய மாநாடு டெல்லியில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வேளாண் அமைச்சர்கள், அதிகாரிகள், சுகாதார மற்றும்ஊட்டச்சத்து நிபுணர்கள் பங்கேற்றனர்.
  • மேலும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள் ஏற்றுமதி வளர்ச்சிஆணையம் சிறுதானிய ஏற்றுமதியை ஊக்குவிக்க காணொலிவர்த்தக கண்காட்சியை நடத்தி வருகிறது. இது ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் இணையவழியில் நடைபெறுகிறது.
  • கரோனாவுக்குப் பிறகு சிறுதானியங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஆரோக்கியம் கருதி மக்கள் சிறுதானியங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். காலை உணவாக சிறுதானியங்களை உண்பது பரவலாகியுள்ளது. இதன் காரணமாக சிறுதானியங்களுக்கான சந்தை அதிகரித்துள்ளது. உலகளவில்2020-ஆம் ஆண்டு நிலவரப்படி ரூ.82,000 கோடியாக இருந்த சந்தை மதிப்பு 2028-ஆம் ஆண்டில் ரூ.1.16 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  • நெல் மற்றும் கோதுமைக்கு அதிக அளவிலான இடுபொருட்கள் தேவை. அதற்கான செலவினமும் அதிகம்.ஒரு கிலோநெல் உற்பத்தி செய்வதற்கு 5,000 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. அதுவே சிறுதானியங்கள் வறட்சியைத் தாங்கி வளர்வதுடன், 650 முதல் 1200 லிட்டர் வரையிலான தண்ணீரே போதுமானது. சிறுதானியங்களின் வளர்ச்சிக்கு உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் தேவை மிகக் குறைவு. இதனால் சிறுதானிய சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ள முனைவார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
  • ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சிறுதானிய உற்பத்தி மற்றும் நுகர்வில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. வெளிநாடுகளில் உணவகங்கள் நடத்தும் இந்திய வம்சாவளியினர் பலரும் சிறுதானிய உணவு வகைகளை விற்பனை பட்டியலில் சேர்த்து வருகின்றனர். இதற்கு வாடிக்கையாளர்களிடையே வரவேற்பும் அதிகரித்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
  • இந்தியாவில் ராஜஸ்தான், கர்நாடகா, மகாரஷ்டிரா, உத்தர பிரதேசம் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் பிரதானமாக சிறுதானியங்கள் பயிரிடப்படுகின்றன.
  • அதிக விளைச்சல் தரும் ரகங்கள் மற்றும் வீரிய ரகங்களின் வரவு மூலம் சிறுதானியங்களின் உற்பத்தித்திறன் 228 சதவீதம் அதிகரித்துள்ளது. 1970 வரை சிறுதானியங்கள் மொத்த உணவு தானிய பங்களிப்பில் 20 சதவீதம் என்று இருந்த நிலையில் தற்போது வெறும் 6 சதவீதம் மட்டுமே உள்ளது.
  • மீதமுள்ள பங்களிப்பை முறையே நெல் மற்றும் கோதுமை ஆக்கிரமித்துள்ளது. எனினும் ஊட்டச்சத்து என்று வரும்போது சிறுதானியங்களோடு மற்ற பயிர்கள்போட்டியிட முடியாது. குறிப்பாக அரிசியும் கோதுமையும் சிறுதானியங்களின் நார்ச்சத்துக்கு ஈடாக போட்டியிட முடியாது என்கின்றனர் மருத்துவர்கள். நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உண்டபின் சர்க்கரையை இரத்தத்தில் மிகச்சீராக வெளியிடுவதற்கு இவை வழிவகை செய்கிறது. அத்துடன் நீண்ட நேரம் பசியை தாங்கும் தன்மையையும் சிறுதானியங்கள் வழங்குகின்றன.
  • செலவு குறைவு:
  • சிறுதானியங்கள் எப்படி அளவில் சிறியதோ அதேபோல் அதனை சாகுபடி செய்ய சிறியதொரு தொகையை செலவழித்தால் போதும். உதாரணத்துக்கு, நெல் உற்பத்திக்கு ஹெக்டேருக்கு ரூ.60,000 முதல் ரூ.70,000 வரை தேவைப்படுகிறது என்றால் அதுவே ராகிக்கு அதிகபட்சம் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை மட்டுமே செலவாகும். உற்பத்திச் செலவு முதல் வருமானம் வரை சிறுதானியங்கள் என்றைக்குமே போடும் முதலுக்கு மோசத்தை ஏற்படுத்தாது.
  • மத்திய அரசு சிறுதானியங்கள் சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொண்டு வருகிறது.கடந்த ஐந்து ஆண்டுகளில் உற்பத்தித்திறன் மற்றும் ஏற்றுமதியை மத்திய அரசு அதிகரித்துள்ளது.தரமான 154 ரகங்களை வெளியிட்டது. சிறுதானியங்கள் சார்ந்து தொழில்புரிய தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது.
  • சில மாநிலங்களும் சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.ஒடிசா மாநிலம், மில்லட் மிஷன் மூலம் சிறுதானியங்களின் சாகுபடியை அதிகரித்துள்ளதுடன், ராகியை பொது விநியோக திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு கொடுத்து வருகிறது.
  • கர்நாடகா மாநிலம் சிறுதானியங்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.10,000 உதவித் தொகையாக தருகிறது. தெலங்கானா மாநிலம் சிறுதானியங்களுக்கு என்று தனித்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை நிறுவ வழிவகை செய்துள்ளது.

ரேஷனில் 2 கிலோ ராகி:

  • தமிழ்நாடு அரசு சிறுதானிய இயக்கத்தின் மூலம் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. ரேஷனில் 2 கிலோ ராகி வழங்கப்படும் என்றும் சிறு தானியங்களை பயன்படுத்தி மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரிக்க மானியம் வழங்கப்படும் என்றும் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தனிநபர்களாக சிறுதானியத்தை முன்னிலைப்படுத்திய இருவர் பற்றி இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ஒருவர் அண்மையில் மறைந்த தெலங்கானா மாநிலத்தின் ‘டெக்கான் டெவலப்மென்ட் சொசைட்டி’(டிடிஎஸ்) நிறுவனர் பிவி சதீஷ் ஆவார். வறட்சியான மேடக் மாவட்டத்தின் பின்தங்கிய பகுதிகளில் சிறுதானியப் பயிர் சாகுபடி மூலம் அங்குள்ள பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் காட்டியவர்.
  • மற்றொருவர் முனைவர் மகாலிங்கம் கோவிந்தராஜ். இவர், ஆய்வுகள் மூலம் உயிர்ச் செறிவூட்டப்பட்ட பயிர்களை வலுப்படுத்தியதுடன், குறிப்பாக கம்பில் அதனை கையாண்டு இந்தியா மற்றும் ஆப்ரிக்கா நாடுகளின் விவசாயிகள் மற்றும் மக்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில் வழிவகை செய்தமைக்கு உலக உணவு அமைப்பின் நார்மன் போர்லாக் பரிசை வென்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
  • அரசும் தனிநபர்களும் சிறுதானியங்கள் சார்ந்து குறிப்பிடத்தக்க முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்தபோதிலும், சிறுதானிய பயன்பாட்டை மக்களிடம் பரவலாக செல்ல வேண்டிய சூழலில் இருக்கிறோம்.
  • சர்வதேச அளவில் சிறுதானியங்களுக்கு மிகப் பெரும் சந்தைவாய்ப்பு உருவாகி வருகிறது. இந்த வாய்ப்பை இந்தியா சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உள்நாட்டு பயன்பாட்டை அதிகரிப்பதுடன் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான முயற்சிகளை திட்டமிடலுடன் மேற்கொள்ள வேண்டும்.

சிறுதானிய பயன்பாட்டை பெருக்கும் வழிகள்

  • # தரமான விதைகள் விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும்.
  • # விவசாயிகள் சிறுதானியங்களின் அறுவடையின்போது சிரமங்களை சந்திக்காத வகையில் எளிதாக கையாளக்கூடிய இயந்திரங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்.
  • # உணவுத் திருவிழாக்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், அங்கன்வாடி மையங்கள் மூலம் சிறுதானியங்களின் மகத்துவத்தை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்.
  • # சிறுதானியங்களில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள், நிலையான விற்பனைச் சங்கிலியின் மூலம் சந்தைப்படுத்துதல், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வழியே விற்பனை செய்தல், சமையற் கலைஞர்கள் மூலம் புதிய உணவு வகைகள் கண்டறிதல், வாரம் ஒரு வேளை உணவில் சிறுதானியங்கள் எடுத்துக் கொள்ள அறிவுறுத்துதல் போன்றவை மூலம் சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்கலாம்.

நன்றி: தி இந்து (01  – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்