TNPSC Thervupettagam

சிறுதானியங்கள் எனப்படும் அருந்தானியங்கள்

August 27 , 2023 503 days 901 0
  • முல்லை நிலத்தில் வாழும் தோழி ஒருத்தி தன் தலைவியை மணக்க வேண்டி தலைவனிடம் சேதி சொல்லும்போது வரகு அரிசிச் சோற்றின் மாண்பைக் கூறுகிறாள்:
  • புளித்த களாக்காய் உள்ளது, விளாம்பழம் பழுத்துள்ளது, சிறிய தலையை உடைய செம்மறியாட்டுத் தயிர் பழுப்பு நிறத்தில் உள்ளது, வரகு அரிசி புதிதாக விளையில் இருந்து குற்றி எடுத்து வந்துள்ளது, மழை பெய்து ஓய்ந்தபின் புற்றில் இருந்து வெளிவரும் ஈசல் சேர்த்துச் செய்த இனிய வெண்மையான புளிச்சோறு உள்ளது, அதன் மீது செவலைப் பசுவின் நெய் ஊற்றப்பட்டு வெப்பத்தினால் உருகி வரும்’
  • இப்படியான நாவில் எச்சில் ஊறும் இனிய விருந்து உணவை அகநானூறின் 394ஆவது பாடல் விளக்குகிறது.
  • தினைப்புனம் காத்தல் பற்றிய ஏராளமான செய்திகள் சங்க இலக்கியங்களில் உள்ளன. நமது பண்டைய நாடக மரபில்கூட வள்ளி திருமண நாடகத்தில் தினைப்புனம் காத்தலே முருகன், வள்ளியை மணங்கொள்ளும் நிகழ்வாக இருக்கும். இப்படி உணவும் உழவும் உணர்வும் கலந்த திணை வாழ்வில் ‘சிறுதானியங்கள்’ என்று அழைக்கப்படும் அருந் தானியங்களே புஞ்சைத் தவசங்கள். இவை அரிய தானியங்கள், அருமையான தானியங்கள் என்கிற முறையில் அருந்தவ சங்கள் என்றே இவற்றை அழைக்கலாம்.

பயிரிடும் பரப்பு

  • வரகையும் தினையையும் மாங்குடிக் கிழார், தமிழ்க்குடிகளின் உயர்ந்த உணவாகக் காட்டுகிறார்:
  • கருங்கால் வரகே இருங்கதிர்த்தினையே
  • சிறுகொடிக்கொள்ளே பொறிகிளர் அவரையொடு
  • இந்நான்கல்லது உணவும் இல்லை’
  • வரகு, தினை, சாமை, குதிரைவாலி போன்ற தவசங்கள் தமிழகத்தின் வானவாரி (மானாவாரி) நிலத்தில் விளைந்து மிகுந்த பயனைத் தந்தவை. இன்றைய காலகட்டத்தில் மறுமலர்ச்சி பெற்று வருகின்றன. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இவை கேட்பாரற்றுக் கிடந்தன. ஆனால், பல பன்னாட்டு நிறு வனங்களால் ஊட்ட மாவுக்காகவும் ஊட்டச்சத்து பானங்களுக்காகவும் விரும்பி வாங்கப்படுகின்றன.
  • தவசங்களைப் பொறுத்த அளவில் நஞ்சை (நன்செய்) நிலத்தில் விளைபவை என்றும் புஞ்சை (புன்செய்) நிலத்தில் விளைபவை என்றும் பொதுவாகப் பிரிக்கப் படுகின்றன. ஆறுகள், குளங்களின் வழியே நீரைப் பெற்று உறுதியான பாசன வசதியைக் கொண்ட நிலங்களே நஞ்சை நிலங்கள். இங்கு விளையும் தவசங்கள் மிகுந்த நீரை எடுத்துக்கொண்டு அதிக அளவு விளைச்சலைக் கொடுக்கும். நெல், கோதுமை, மொக்கைச் சோளம் எனப்படும் மக்காச் சோளம் சிறிதளவு ஆகியன நஞ்சைக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுப் பன்னெடுங்காலமாக விளைவிக்கப்படுகின்றன.
  • வீரிய விதைகள் எனப்படும் ஒட்டு விதை ஆராய்ச்சியும் இந்தப் பயிரினங்களில்தான் நடந்தேறியுள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டுமல்லாது உலகம் முழுமைக்கும் பெருமளவு உணவை வழங்கு வது வானவாரி வேளாண்மைப் பயிர்களே. குறிப்பாக இந்தியாவில் 65 விழுக்காடு உணவு வானவாரி நிலப்பரப்பில் இருந்தே கிடைக்கிறது. அதாவது இந்தியாவில் மொத்த உணவுத் தவச விளைச்சல் பரப்பான 142 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் 85 மில்லியன் ஹெக்டேர், அதாவது 65 விழுக்காடு நிலத்தில் இந்த உணவுத் தவசங்கள் விளைகின்றன (National Watershed Development Project For Rainfed Areas– NWDPRA).

எளிமையும் செலவும்

  • வானவாரி நிலங்களுக்கே உரிய பயிரான புஞ்சைத் தவசங்களான சோளம், கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, காடைக் கண்ணி போன்றவை மிகக் குறைந்த மழைநீரில் வளர்ந்து விளைச்சல் தருபவை. இவற்றில்கூட வரகு, சாமை, தினை, குதிரைவாலி, காடைக் கண்ணி ஆகிய ஐந்தும் சிறுபுஞ்சைத் தவசங்கள் (minor millets) என்று அழைக்கப்படுகின்றன. உண்மையில் இவை பெருமைக்குரிய தவசங்களாகும். ஏனெனில் இவற்றில் இருக்கும் ஊட்டங்கள் மிகச் சிறப்பானவை. மிகக் குறைந்த நீர், மிக எளிய தொழில்நுட்பம், மிகக் குறைந்த இடுபொருள் செலவு, மிக அதிக ஊட்டம் என்று எல்லா வகையான சிறப்புக் கூறுகளைக் கொண்டிருக்கும் இந்தத் தவசங்களை மிகக் கேவலமாக நமது வேளாண் அறிவியலாளர்களும் அரசுத் துறையும் புறக்கணித்துள்ளன.
  • குறிப்பாக ஒரு கிலோ நெல் விளைவிக்கத் தேவைப்படும் நீர் 1,550 லிட்டர், அதேபோல ஒரு கிலோ கோதுமை விளைவிக்க 750 லிட்டர் நீர் தேவைப்படுகிறது (www.clw.csiro.au). ஆனால், புஞ்சைத் தவசங்களுக்கு இதில் பத்தில் ஒரு பங்கு நீர்கூடத் தேவையில்லை. பெரிய அணைகள் தேவையில்லை. காடுகளும் பழங்குடிகளும் அழிய வேண்டியதில்லை. ஒரு கிலோ தினை சாகுபடி செய்ய எவ்வளவு நீர் தேவைப்படும் என்கிற ஆய்வுகூட இல்லை என்பதுதான் வேடிக்கை.

பயன்பாடு அழிவு

  • பசுமைப் புரட்சியால் பெரிதும் பாதிக்கப் பட்டவை இந்தப் புஞ்சைப் பயிர்களே. குறிப்பாக நெல்லையும் கோதுமையையும் குறிவைத்தே ஆராய்ச்சிகள் நடந்தேறின. அத்துடன் அரிசிச் சோறு உண்பதே உயர்ந்த பண்பாடு என்கிற பரப்புரையும் விரிவாக்கப்பட்டது. குறிப்பிட்ட மேட்டுக்குடி மக்களின் உணவாக இருந்த அரிசி யாவருக்குமான உணவாக மாற்றப்பட்டது. பள்ளி உணவுத் திட்டம், பொது விநியோகத் திட்டம் என்று யாவற்றிலும் அரிசியும் கோதுமையுமே கொடுக்கப்பட்டன.
  • ஆராய்ச்சிக்கான ஒதுக்கீடுகள், சாகுபடிக்கான ஒதுக்கீடுகள் என்று அளவற்ற பணம் முதலீடு செய்யப்பட்டது. இதன் விளைவாக மக்களின் பயன்பாட்டில் இருந்து புஞ்சைத் தவசங்கள் முற்றிலுமாக ஒதுக்கப்பட்டன. பழங்குடி மக்கள், ‘நாகரிகம்’ தொடாத பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் மட்டுமே இவற்றின் பயன்பாடு எஞ்சியுள்ளது. தமிழகத்தில் நாமக்கல், தருமபுரி, மதுரை போன்ற அரிதாக மிகச் சில இடங்களில் மட்டுமே சாமை, குதிரைவாலி, தினை போன்றவை பயரிடப்படுகின்றன. மதுரைப் பகுதியில் பலர் விளைவித்த தவசங்களை விற்றுவிட்டு நியாய விலைக் கடைகளில் அரிசி வாங்கிச் சமைக்கின்றனர்.
  • இப்படிக் புறக்கணிக்கப்பட்ட தவசங்களால் ஏற்பட்ட சூழலியல், திணையியல், பொருளியல், பண்பாட்டியல் கேடுகளை இதுவரை யாரும் கணக்கில் கொள்ளவில்லை என்பதுதான் வேதனைக்குரியது. முதலில் புறக்கணிக்கப்பட்ட புஞ்சைத் தவசங்களால் நீரின் பயன்பாடு அதிகமானது. காரணம், அந்த இடத்தில் வீரிய விதைகள் வந்து அமர்ந்தன. இவை அதிக உப்பு உரம், அதிக நீர் என்கிற முறையில் உருவாக்கப்பட்டவை. அதன் பிறகு மண்ணின் வளம் பல்வகைப் பயிர்ச் சாகுபடியால் பாதுகாக்கப்பட்டு வந்தது.
  • அதாவது தினை, வரகு போன்றவற்றைத் தனியாகச் சாகுபடி செய்ய மாட்டார்கள். அத்துடன் பல பயறு வகைகள், காய்கறிகள் என்று கலப்புப் பயிர்ச் சாகுபடியைச் செய்வார்கள். இதனால், பயறுவகைப் பயிர்கள் மண்ணில் நைட்ரஜன் என்கிற தழை ஊட்டம் சேமிக்கப்படக் காரணமாக அமைந்தன. இதன் விளைவாக மண் வளம் காக்கப்படும். ஆனால், பசுமைப் புரட்சி முன்வைத்த ஓரினச் சாகுபடி (monoculture) என்பது முற்றிலும் வேதி உப்புக்களை அடிப்படையாகக் கொண்டதும் வெளி இடுபொருள்களுக்கு வழிகோலியதும் ஆகும். எனவே, மண் வளம் தொடர்ந்து குறைந்துகொண்ட போகும்.

உயிர்ப் புதையல்

  • தவசங்களுக்கோ எவ்விதமான பாசன வசதியும் தேவையில்லை. பெய்யும் மழையே போதுமானது. காடைக்கண்ணி என்றொரு தவசம், இன்றைய தலைமுறையினர் இதைப் பார்த்திருக்கக்கூட மாட்டார்கள். இது அறுபது நாளில் அறுவடையாகிறது. ஒன்று அல்லது இரண்டு மழை போதும். மிகவும் சிறப்பான ஊட்டங்களைக் கொண்டது. மண்ணின் வளத்தைப் பெருக்குவதற்கு அடுத்ததாக திணையியல் நோக்கில் பார்த்தால் புஞ்சைத் தவசங்கள் பெருமளவு வைக்கோல்களைக் கொடுப்பவை, இதனால் கால்நடைகளுக்கான உணவு உறுதிசெய்யப்பட்டுவிடுகிறது.
  • எண்ணற்ற பறவையினங்கள் இந்தத் தவசங்களை உண்டு வாழ்வதோடு, அங்கே வரும் பூச்சிகளைப் பிடித்துத் தின்று பூச்சிக் கட்டுப்பாட்டுக்கும் உதவுகின்றன. ஆனால், மக்காச் சோளச் சாகுபடியிலோ, சீமைக் கருவேல மரத்திலோ பறவைகளுக்கான உணவு கிடைப்பதில்லை. பல்வேறு வகையான பயிர்கள் ஒரு நிலத்தில் பயிரிடப்படும் உயிரியல் பன்மயம் (Biodiversity) இப்போது மறைந்துவிட்டது. இதன் மூலம் பல்வேறு சூழலைத் தாங்கி வளரும் பயிரினங்கள், நுண்ணுயிர்கள் போன்றவை மறைந்துவிட்டன. வெப்பமண்டல வானவாரி நிலத்தில் உயிர்மக் கூளத்தை அதிகரிக்கச் செய்வதன் மூலம் பெருமளவு கரிமத்தை மண்ணில் நிலைநிறுத்த முடியும். இந்தக் கரிம கிரகித்தல் (Carbon sequestration) காலநிலை மாற்றத்துக்கான தீர்வுகளில் ஒன்றாக முன்னுரைக்கப்படுகிறது.
  • புஞ்சைத் தவசங்கள் உள்ளூர் பொருளியலில் மிக முதன்மையான பங்கை வகிக்கின்றன. உணவுக்கான பணமும் உழைப்பும் உள்ளூரி லேயே சுழன்றுவருகிறது. வெளிச்சந்தைக்கு இவை போவதில்லை. இந்தப் பயிர்களுக்கு வெளி இடுபொருள்களான உப்பு உரங்களோ பூச்சிக்கொல்லிகளா தேவையில்லாததால் பணம் வெளியேறுவதில்லை. அது மட்டுமல்ல புஞ்சைத் தவசங்கள் மிகச் சிறந்த ஊட்டங்களைக் கொண்டவை. குறிப்பாக, குதிரைவாலி எனப்படும் தவசம் நார் ஊட்டத்தைப் பொருத்த அளவில் கோதுமையைவிட 6.8 மடங்கு கூடுதலாகக் கொண்டுள்ளது. அத்துடன் அரிசியைவிட 13 மடங்கு கூடுதலாகக் கொண்டுள்ளது. தினை அரிசியைவிடக் கூடுதல் புரதத்தைக் கொண்டுள்ளது. இரும்பு ஊட்டம் குதிரைவாலியில் கோதுமையைவிட 5.3 மடங்கு கூடுதலாக உள்ளது, அரிசியைவிட 10 மடங்கு கூடுதலாக உள்ளது. (Hulse. Laing and Pearson. 1980: United States National Research Council/National Academy of Sciences. 1982. USDA/HNIS. 1984). இதேபோல பல ஊட்டங்கள் நிறைந்து காணப்படுகின்றன. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நமது மருத்துவர்களின் பரிந்துரை வரகரிசிச் சோறுதான்!
  • புறக்கணிக்கப்பட்ட புஞ்சைத் தவசங்கள் இன்று புதியதொரு சந்தையைப் பெற்றுவருகின்றன. குறிப்பாக நார் ஊட்டம் குறைவாக உள்ள உணவு வகைகளால் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது என்பதும் நீரிழிவு போன்ற நோய்களுக்குக் காரணம் தீட்டிய வெள்ளை அரிசி என்பதும் இன்றைய மருத்துவ உலகம் கூறும் முடிவுகள்.
  • இதற்கு மாற்றாக இருப்பவை தினை, சாமை, வரகு போன்ற புஞ்சைத் தவசங்கள். எனவே, இன்று நகர்ப்புற மேட்டுக்குடி மக்களுக்கான உணவாக இது மெல்ல மெல்ல மாறிவருகிறது. ஒரு காலத்தில் உடல் உழைப்பாளிகளின் உணவாக இருந்து மேட்டுக்குடிகளால் புறக்கணிக்கப்பட்ட இவை இன்று உடலுழைப்பாளிகளால் மறக்கப்பட்டு, மேட்டுக்குடிகளின் ‘ரெசிபி’யில் இடம்பிடித்திருப்பது ஒரு வரலாற்று முரண்!

நன்றி: தி இந்து (27 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்