- இன்றைய வாழ்வியல் முறையும், உணவு முறையும் பல்வேறு சிறுநீரக நோய்களுக்கு வழிவகுக்கின்றன. அதனால் சிறுநீரக நோய்களும், சிறுநீரக செயலிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றன.
- முன்பெல்லாம் பெருநகரங்களில் மட்டும் இருந்த டயாலிசிஸ் மையம் இன்று சிறு நகரங்களுக்கும் வந்து விட்டது என்பதை மருத்துவத்துறையின் வளர்ச்சியாகப் பார்க்க முடியவில்லை.
- சிறுநீரகப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இரண்டாம் வியாழக்கிழமை உலக சிறுநீரக விழிப்புணர்வு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
- உலக மக்கள்தொகையில் 850 மில்லியன் (85 கோடி) பேர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சி அளிக்கும் தகவல்.
- சிறுநீரகங்களின் முக்கியமான வேலை ரத்தத்தில் உள்ள நச்சு தன்மையுள்ள யூரியா, கிரியாட்டினின், யூரிக் அமிலம் போன்ற வளர்ச்சிதை மாற்றக் கழிவுகளை, ரத்தத்தில் இருந்து பிரித்து சிறுநீராக வெளியேற்றும்.
- ரத்த அணுக்கள் உற்பத்திக்குத் தேவையான எரித்ராபோய்டினை உற்பத்தி செய்கிறது. எலும்புகளின் வலிமைக்குத் தேவையான வைட்டமின்-டி உற்பத்திக்குக் காரணமாகிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. உடலில் உள்ள நீர், கனிம உப்புகளின் அளவை சரி செய்கிறது.
கவனம் வேண்டும்
- ஆரோக்கியமான உணவை உண்பது, புகை பிடித்தலையும் மதுப்பழக்கத்தையும் தவிர்த்தல், உடல் பருமனைக் குறைத்தல், ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதித்தல், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்தல், தினசரி உடற்பயிற்சி, தேவையான அளவு நீர் அருந்துதல், மருந்து மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்படி மட்டுமே எடுத்தல் போன்ற பழக்கங்கள் சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கும்.
- பல்வேறு நாடுகளில், மனிதர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் காரணங்களில் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு ஐந்தாவது இடத்தில் உள்ளது.
- இதுவே இந்தியாவில் எட்டாவது காரணமாக உள்ளது. சர்க்ரை நோயும் ரத்த அழுத்தமும் உயிரிழப்புக்கான முக்கிய காரணிகளாக உள்ளன.
- சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் மூன்று பேரில் ஒருவர் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுகிறார்.
- உடல் பருமன் உள்ளவர்களுக்கு சிறுநீரக நோய் வருவதற்கான வாய்ப்பு 83 % அதிகம் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
- அதனால் உடல் எடையினை சரியான அளவில் பராமரிக்க வேண்டியது அவசியம்.
- சிறுநீரக நோய்களில் முக்கியமானதும், உயிர் இழப்பை ஏற்படுத்தக்கூடியதுமானது சிறுநீரக செயலிழப்பு.
- சிறுநீரகத்தின் அடிப்படை அலகுகளான நெப்ரான்கள், தவறான உணவு பழக்கங்களால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும்.
- இதனால் ரத்தத்தில் யூரியா அதன் இயல்பான அளவான 40-ஐ விட அதிகமாகவும், கிரியாட்டினின் 1.4-ஐ விட அதிகமாகவும் காணப்படும்.
- குளோமெருளார் வடிகட்டும் விகிதம் நிமிடத்திற்கு 90 மில்லியைவிடக் குறைவாகக் காணப்படும் . இதனால் சிறுநீர் குறைந்த அளவே வெளியேறும். இது 30 மில்லியை விடக் குறைவாக இருப்பது நோயின் முற்றிய நிலை.
- மேலும், சிறுநீரில் அல்புமின் எனும் புரதம் அளவுக்கதிகமாக வெளியேறும். சிறுநீரக செயலிழப்புக்குப் பின்னர் டயாலிசிஸ் செய்வது என்பது கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் செய்வதை போலத் தான்.
சிறுநீரகத்தைக் காப்போம்
- சித்த மருத்துவத்தில் பல்வேறு மூலிகைகள் சிறுநீரக செயலிழப்பை தடுக்கும் படியாகவும், சிறுநீரக செயல்பாட்டை இயல்பு நிலையில் வைத்திருக்கும்படியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
- மூக்கிரட்டை, நெருஞ்சில், தண்ணீர்விட்டான் கிழங்கு, கடுக்காய்-நெல்லிக்காய்-தான்றிக்காய் சேர்ந்த திரிபலா, சீந்தில் கொடி, மாவிலங்கப்பட்டை, நாயுருவி, கீழாநெல்லி போன்ற மூலிகைகள் சிறுநீரக செயலிழப்பைப் பெரிதும் குறைக்கும். அத்துடன், யூரியா, கிரியாட்டினின் அளவை குறைத்து நெப்ரோன்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரும்.
- முற்றிய சீந்தில் கொடியின் வேதிப்பொருள், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பதோடு சிறுநீரக செயலிழப்பு வராமலும் தடுக்கும். நீரிழிவு நோயாளிகள் அவர்கள் எடுக்கும் மருந்துடன் இதையும் சேர்த்து எடுக்கலாம்.
- திரிபலா சூரணத்தை தினமும் இருவேளை எடுக்க சிறுநீரகம் புத்துணர்வு பெறும். நீரிழிவு, ரத்த அழுத்தம், உடல் பருமன், ரத்தத்தில் அதிக கொழுப்பு உள்ளவர்கள் இந்த திரிபலாவை எடுக்க சிறுநீரக பிரச்னை வராமல் தடுக்கலாம்.
- எளிதில் கிடைக்கும் மூக்கிரட்டை கீரையின் வேரினை கஷாயமாக எடுக்க, யூரியா, கிரியாட்டினின் அளவு குறையும்.
- அதில் உள்ள புனர்னவின் எனும் வேதிப்பொருள் அதன் மருத்துவதன்மைக்குக் காரணமாக உள்ளது. நெருஞ்சி முள் கஷாயத்தையும் எடுக்கலாம்.
- சித்த மருத்துவர்கள் ஆலோசனைப்படி நண்டுக்கல், சிலாசத்து போன்ற மருந்துகளை எடுக்கலாம். புற்றுநோய் மருந்தினால் ஏற்பட்ட நெப்ரான்களின் நச்சுத்தன்மையை, நெய்சிட்டிக்கீரை போக்குவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- சிறுநீரக செயலிழப்பினால் அவதிப்படுபவர்கள் முறையான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
- உப்பில்லா பத்தியம், புரதப் பொருட்கள் சேர்ந்த உணவினை தவிர்த்தல், குடிக்கும் நீரின் அளவை மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்தல் ஆகியவை மிகவும் அவசியம்.
- பதப்படுத்தப்பட்ட ஊறுகாய், உப்பிட்டு வறுத்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சோடா மற்றும் நிறமூட்டப்பட்ட, இனிப்பூட்டப்பட்ட பானங்களைத் தவிர்ப்பதும் நல்லது.
- அசைவ உணவினைத் தவிர்ப்பது நல்லது. சீரகத்தைத் தண்ணீரிலிட்டு காய்ச்சி அடிக்கடி பருக சிறுநீரகம் பலம் பெறும். கோடைக் காலத்தில் நன்னாரி சேர்த்த நீரையும், வெட்டிவேர் சேர்த்த நீரையும் எடுப்பது நல்ல பலன் தரும்.
- முக்கியமாக, மருந்துகளை மருத்துவர்களின் ஆலோசனை பேரில் எடுத்துக்கொள்வது மிகவும் சிறந்தது.
(இன்று உலக சிறுநீரக விழிப்புணர்வு நாள்)
நன்றி: தினமணி (11-03-2021)