TNPSC Thervupettagam
December 26 , 2024 16 days 68 0

சிறுமைத்தனம்!

  • தென்மண்டலத் பசுமைத் தீா்ப்பாயத்தைத் தொடா்ந்து கேரள உயா்நீதிமன்றமும் மாநில எல்லையைத் தாண்டி மருத்துவக் கழிவுகளையும், இதர குப்பைகளையும் கேரளம் அண்டை மாநிலங்களில் கொட்டுவதை வன்மையாகக் கண்டித்திருக்கிறது. கேரள மாநிலத்திலிருந்து மருத்துவக் கழிவுகள், நெகிழிக் குப்பைகள், வீணான உணவுப் பொருள்கள் உள்ளிட்டவை மாநில எல்லையை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் கொண்டுவந்து கொட்டப்படுவது வழக்கமாகவே மாறிவிட்டு இருக்கிறது.
  • கேரள எல்லையை ஒட்டிய கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, கோயம்புத்தூா் மாவட்டங்களில் தொடா்ந்து மருத்துவக் கழிவுகள், இறைச்சி, மீன் கழிவுகள், நெகிழிக் கழிவுகள் லாரிகளில் கொண்டுவரப்பட்டு இரவோடு இரவாக நீா்நிலைகளுக்கு அருகிலும், மனித நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளிலும் கொட்டப்படுவது நீண்டகாலமாகவே நடந்து வருகிறது. இதேபோல, கேரள எல்லையை ஒட்டிய கா்நாடக மாநிலப் பகுதிகளிலும் கேரளத்திலிருந்து குப்பைகள் கொண்டுபோய் கொட்டப்படுகின்றன.
  • சமீபத்தில் சென்னையில் உள்ள தென்மண்டல பசுமைத் தீா்ப்பாயம் இந்தப் பிரச்னையைக் கையில் எடுத்ததைத் தொடா்ந்து, இதுகுறித்த விழிப்புணா்வு ஏற்பட்டிருக்கிறது. பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவுக் காரணமாக நெல்லை மாவட்டத்தின் நடுக்கல்லூா், பழவூா், கொண்டாநகரம் உள்ளிட்ட பகுதிகளின் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள், நீா்நிலைகளில் நூற்றுக்கணக்கான மூட்டைகளில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் 30 லாரிகளில் கேரளத்துக்குத் திரும்ப எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன. அவை திருவனந்தபுரத்திலுள்ள மண்டல புற்றுநோய் மையத்திலிருந்து கொண்டுவரப்பட்டதைக் கைப்பற்றப்பட்ட ரசீதுகள் உறுதிப்படுத்துகின்றன.
  • இதற்கு முன்னாலும் இதுபோல மருத்துவ, இறைச்சிக் கழிவுகள் தமிழக எல்லைக்குள் கொட்டப்பட்டபோது, ரூ.70,000 செலவில் அவை தரம் பிரிக்கப்பட்டு முறையாக அப்புறப்படுத்தப்பட்டன. அதற்கான செலவை கேரளம் தமிழகத்துக்கு இதுவரை வழங்கவில்லை.
  • பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவைத் தொடா்ந்து நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டக் கழிவுகள் அகற்றப்பட்டன என்றால், இப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் கழிவுகள் கொட்டப்படுவது தெரியவந்திருக்கிறது. உணவுக் கழிவுகள் மட்டுமல்லாமல், மனிதக் கழிவுகளும் கன்னியாகுமரிக்கு அருகில் கொட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
  • உணவுக் கழிவுகள் தமிழகத்தில் இருக்கும் பன்றிப் பண்ணைக்குக் கொண்டுச் செல்லப்படுவதாக லாரி ஓட்டுநா் தெரிவித்ததை ஏற்றுக்கொள்ளலாம். மனிதக் கழிவுகள் குறித்தும், மீன் கழிவுகள் குறித்தும், நெகிழிக் கழிவுகள் குறித்தும் கேரளம் என்ன காரணத்தை தெரிவித்துவிட முடியும்?
  • தமிழகத்திலிருந்துதான் கேரளத்துக்கு மணல், அத்தியாவசிய உணவுப் பொருள்கள் உள்பட லாரிகளில் எடுத்துச் செல்லப்படுகின்றன. அந்த லாரிகள் திரும்ப வரும்போது அதிகக் கட்டணம் வழங்கி குப்பை கூளங்களை தமிழகத்தில் கொண்டுவந்து கொட்டுவது கடந்த பல ஆண்டுகளாக நடந்து வருவது இப்போது தெரியவந்திருக்கிறது. கேரள உயா்நீதிமன்றம் இதுபோன்ற நிகழ்வுகளில் அரசு என்ன நடவடிக்கை, யாா் யாா் மீது எடுக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெளிவுப்படுத்த கேரள அரசுக்கு உத்தரவிட்டிருப்பது வரவேற்புக்குரியது.
  • கேரளத்தில் உள்ள உணவு விடுதிகள், மருத்துவமனைகள், குப்பைகளைக் கையாள வேண்டிய உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகள் உள்ளிட்டவை அனைத்துமே அண்டை மாநிலங்களில் குப்பைகளைக் கொண்டுபோய் கொட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றன. விழிப்புணா்வு இல்லாத கிராமங்களிலும், மனித நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும், ஏரிகள், குளங்கள், ஆற்றுப் படுகைப் பகுதிகளிலும் அவை அண்டை மாநிலங்களில் கொட்டப்படுகின்றன.
  • குப்பை கூளங்களை முறையாக சேகரித்து சுத்திகரிக்கவோ, அகற்றவோ கேரள மாநிலத்தில் சரியான கழிவு மேலாண்மை இல்லாமல் இருப்பதுதான் இதற்கு முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது.
  • மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேரளத்தின் திடக்கழிவு மேலாண்மை முறையில் குறைபாடுகள் இருப்பதை பல முறை சுட்டிக்காட்டி இருக்கிறது. மருத்துவக் கழிவுகளை சேகரிப்பதிலும், கையாள்வதிலும் முறையான நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதுடன், அவற்றைக் கையாள்வதற்கான வசதிகளும் மாநில அரசால் போதுமான அளவு ஏற்படுத்தப்படவில்லை என்பதை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கை பலமுறை சுட்டிக்காட்டிவிட்டது.
  • கேரளத்தில் உருவாகும் 30% கழிவுகளைக் கையாள்வதற்கான திறன்தான் அந்த மாநிலத்தில் இருக்கிறது. தற்போது இரண்டு மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் மட்டுமே ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் இருக்கும் நிலையில், சட்டவிரோதமாக அவை அகற்றப்படுவதும், அண்டை மாநிலங்களில் கொட்டப்படுவதும் வியப்பை ஏற்படுத்தவில்லை.
  • குப்பை கூளங்களையும், திடக்கழிவுகளையும் கையாள்வது உலகளாவிய பிரச்னையாக மாறியிருக்கிறது. ஒவ்வொரு விநாடியிலும் உலகில் 20,000 நெகிழி பாட்டில்கள் விற்கப்படுகின்றன. ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் என்று சா்வதேச அளவில் கழிவுகள் பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கின்றன.
  • பணக்கார நாடுகள் ஏழை நாடுகளில் தங்களது கழிவுகளைக் கொண்டுபோய் கொட்டுவதும், அந்த மக்களின் மண்ணையும், நீரையும், காற்றையும் மாசுப்படுத்துவதும் அதிகம் பேசப்படாத நிஜங்கள்.
  • அண்டை மாநிலங்களில் கழிவுகளைக் கொட்டுவதை நிறுத்திவிட்டு, அவற்றைக் கையாள்வது எப்படி என்பதில் கேரளம் கவனம் செலுத்த வேண்டும். அண்டை மாநிலங்கள் கேரளத்தின் குப்பைத் தொட்டிகள் அல்ல!

நன்றி: தினமணி (26 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்