சிலி
- - - - - - - -
- சிலி அலுவல் ரீதியாக சிலிக் குடியரசு என அழைக்கப்படுகிறது. இது கிழக்கில் ஆண்டிஸ் மலைத்தொடரையும் மேற்கில் பசுபிக் பெருங்கடலையும் பெற்ற நீண்ட குறுகிய தென் அமெரிக்க நாடு ஆகும்.
- இது வடக்கில் பெரு, வடகிழக்கில் பொலிவியா, கிழக்கில் அர்ஜென்டினா மற்றும் தெற்கில் ட்ராகே பாசேஜ் ஆகியவற்றை எல்லைகளாய் கொண்டுள்ளது.
- 3 பசிபிக் தீவுகளும், ஓசனியாவில் அமைந்த ஈஸ்டர் தீவும் சிலியின் ஆட்சிப்பகுதிக்கு உட்பட்டது.
- சிலி 1,250,000 ச.கி.மீ. பரப்புள்ள இடத்தை அண்டார்டிகா பகுதியில் கோருகிறது. இது ஏற்கெனவே அண்டார்டிகா ஒப்பந்தத்தின் மூலம் நிராகரிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
- சிலி நாட்டின் பெயர் அதன் உள்நாட்டு மாபூச் மொழியின் ‘சில்லி’ என்ற சொல்லிருந்து வந்திருக்கலாம். ‘சில்லி’ என்ற சொல்லுக்கு அம்மொழியில் நிலம் முடிவடையும் இடம் என்று பொருள்.
- சிலி ஐ.நா.வின் நிறுவன கால உறுப்பினர் ஆகும். மேலும் தென் அமெரிக்க நாடுகளின் ஒன்றியம் (UNASUR), லத்தீன் அமெரிக்க மற்றும் கரிபீயன் நாடுகளின் கூட்டமைப்பு (CELAC) ஆகியவற்றிலும் உறுப்பினராகும்.
சிலி குடியரசு சில தகவல்கள்
தலைநகர் மற்றும் மிகப்பெரிய நகரம் |
சான்டியாகோ |
தேசிய மொழி |
ஸ்பானிய மொழி |
பாரம்பரிய இனங்கள் (2012) |
88.9 % மெஸிடிசோ மற்றும் வெள்ளையர்
9.1% மாப்பூச்
0.7% அய்மாரா
1% பிற இனத்தவர் |
அரசு |
ஒற்றை குடியரசு அரசியலமைப்பு பெற்ற மக்களாட்சி |
அதிபர் |
மைக்கேல் பாச்செட் |
பாராளுமன்றம் |
தேசிய காங்கிரஸ் |
மேல்அவை |
செனேட் |
கீழ்அவை |
சேம்பர் ஆப் டெப்யூட்டிஸ் |
மக்கள் தொகை 2015 கணக்கீடு |
18,006,407 (62வது) |
மக்களடர்வு |
24/ சதுர கிலோமீட்டர் (62.2/ச.மைல்) (194வது) |
பணம் |
பீஸோ (Chilean Peso - CLP) |
புவியியல் - உயிரியல் தகவல்கள்
- சிலி ஆண்டிஸ் மலைத்தொடரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. ஆண்டிஸ் மலைத்தொடர் நாட்டின் மொத்த நீளத்திற்கும் வடக்கு முதல் தெற்கு நோக்கி பரவியுள்ளது.
- உலகின் நீளமான நாடு சிலி. இதன் நீளம் வடக்கு முதல் தெற்கு வரை 2647 மைல்கள் (4620 கி.மீ.) ஆகும். மேலும் சிலி நாடு 38 டிகிரி அட்சரேகை அளவு பரவியுள்ளது.
- வடக்குப்புற அடகாமா பாலைவனம் மிகுந்த தாதுவளம் மிக்கது. முக்கியமாக தாமிரம் மற்றும் நைட்ரேட் வளங்கள் நிறைந்துள்ளது.
- சிலியின் லாகோலான்குயுஹி தென்அமெரிக்காவின் இரண்டாவது பெரிய ஏரியாகும். பெருவின் டிடிகாகா ஏரி 330 ச.மைல் (860 சதுர கிலோமீட்டர்) அளவில் தென் அமெரிக்காவின் முதல் பெரிய ஏரியாகும். லாகோலான்குயுஹி எனும் சொல்லிற்கு ஆழமான பகுதி என்று மாப்பூச்சி மொழியில் பொருள்.
- சிலி நாடு பன்முகப்பட்ட பருவநிலைகளை உடையது ஆகும். சிலியின் வடக்கு பகுதியில் உலகின் வறண்ட பகுதியான அட்டகாமா பாலைவனம் அமைந்துள்ளது, சிலியின் நடுப் பகுதிகளில் மத்திய தரைக்கடல் பருவநிலை நிலவுகிறது, சிலி நாட்டின் ஈஸ்டர் தீவுகளில் ஈரப்பதமான வெப்பநிலை நிலவுகிறது. பல பகுதிகளில் கடல் சூழலும், தெற்கு பகுதிகளில் பனிப்பாறைகளும் பனிப்பிரதேச டன்ட்ரா (Tundra) காலநிலையும் நிலவுகின்றன.
- சிலி நாட்டின் தனித்துவமான பருவநிலை மற்றும் புவியியல் அமைப்பின் காரணமாக பல்வேறு பருவநிலைகளில் அவற்றிற்கேற்ப தாவரங்களும், விலங்குகளும் வாழ்கின்றன.
- சிலியின் பிரதான நிலப்பகுதியின் வடக்கில் அட்டகாமா பாலைவனமும் கிழக்கு எல்லைப் பகுதியில் ஆண்டிஸ் மலைத் தொடரும் இருவேறு காலநிலைகளை அமைத்துத் தருவதால் பன்முகப்பட்ட தாவரங்களும் விலங்குகளும் சிலி நாட்டில் வாழ்கின்றன.
- இவ்வாறு பல காலநிலைப் பகுதிகளாக சிலி பிரிந்து இருப்பதால், விலங்குகள் பெரும்பாலும் புலம் பெயர்வதில்லை. தென் அமெரிக்காவின் தனித்துவம் வாய்ந்த விலங்குகளில் சிலவற்றை மட்டுமே சிலி பகுதியில் காண முடியும்.
- இங்கு காணப்படும் பெரிய வகை விலங்கினங்களாக புமா/கவுகார் என்று குறிப்பிடப்படும் மலைச்சிங்கங்கள், நரியைப் போன்ற சில்லா, ஒட்டகத்தை போன்ற குனானாகே போன்றவற்றைக் குறிப்பிடலாம். காடுகளுக்குள் பல்வேறு வகையான மார்சுபில்கள் எனும் கங்காரு போன்ற சிற்றின வகைகளும், புடு எனும் சிறிய மான் வகையும் காணப்படுகின்றன.
- சிலியின் படகோனியா பகுதி உலகிலேயே தூய்மையான பகுதிகளுள் ஒன்று ஆகும்.
- சிலியின் ஆண்டிஸ் மலைப்பகுதியில் சுமார் 2000-ற்கும் மேற்பட்ட உயிர்ப்புள்ள எரிமலைகள் உள்ளன. இவற்றுள் மிகப்பெரியது லுல்லாய்லாகோ எனும் எரிமலை ஆகும். இது 22,104 அடிகள் உயரம் உடையது.
- சிலியின் உயரமான பகுதி, நெவாடா ஒஜஸ் டெல் சாலாடே ஆகும். இதன் உயரம் 22,572 அடிகள் (6,880 மீட்டர்). இதுவே உலகின் உயர்ந்த எரிமலை ஆகும்.
தேசிய சின்னங்கள்
- தேசிய மலர் - காபிஹியு (இது மணி வடிவத்தில் இருப்பதால் Chilean Bellflower) என்றும் அழைக்கப்படும். இது சிலியின் தெற்கு வனப்பகுதிகளில் மிகுந்து காணப்படுகின்றன.
- சிலி நாட்டின் பாரம்பரியச் சின்னம் இரண்டு விலங்குகளை தேசிய விலங்குகளாக காட்டுகிறது.
- கான்டோர் எனப்படும் பெரிய கழுகு போன்ற பறவை (Vultur Gryphus)
- ஹியூமல் எனப்படும் வெள்ளை மான்
- கியுவேகா (Cueca) என்பது சிலி நாட்டின் தேசிய நடனம் ஆகும். சிலி நாட்டின் பாரம்பரிய இசை டோனடா (Tonada) ஆகும்.
- சிலி நாட்டின் தேசிய விளையாட்டு – ரோடியே (Rodeo) எனும் குதிரை ஏற்ற விளையாட்டு. இது முக்கியமாக சிலி நாட்டின் கிராமப் பகுதிகளில் விளையாடப்படுகிறது.
- சிலியின் பணம், "சிலியன் பீஸோ"
மக்கள்தொகை சார்ந்த புள்ளிவிவரங்கள்
- சிலியில் பல்வேறு உள்ளூர் மொழிகள் வழக்கில் உள்ளது. மபுடங்கன், க்யுசேவா, அய்மரா, ராபா நூய் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ஆனால் முக்கியமான மொழி ஸ்பானிஷ் ஆகும்.
- மாப்பூச்சே மக்கள், தெற்கு மற்றும் மத்திய சிலியின் பூர்வீகமான குடிகளாவர்.
- சாண்டியாகோ நகரம் சிலி நாட்டின் மத்திய பள்ளத்தாக்கில் அமைந்துள்ள நகரம் ஆகும். இதுவே நாட்டின் பெரும்பான்மை மக்கள்தொகை மற்றும் வேளாண்மை மூலவளப் பகுதியாகும்.
- சிலியின் மக்கள் தங்கள் நாட்டினை கவிஞர்களின் நாடு (Pais de Poetas) என அழைக்கின்றனர்.
- காபிரியலா மிஸ்ட்ரல், லத்தீன் அமெரிக்காவில் முதல் இலக்கிய நோபல் பரிசு பெற்றவராவார்.
- சிலியின் மிகப்புகழ்பெற்ற கவிஞர் பாப்லோ நெருடா, 1971-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். இவரது காதல், இயற்கை மற்றும் அரசியல் சார்ந்த எழுத்துக்கள், மிக பிரசித்தி பெற்றவை.
- சிலியின் மிகப்புகழ்பெற்ற விளையாட்டு கால்பந்து ஆகும்.
- சிலியில் கணவன் மற்றும் மனைவிக்கு வெவ்வேறு பின்பெயர்கள் பயன்படுத்தப்பட்டு வழக்கு. அங்கு பெண்கள் தாய்வழி பெயரை தங்கள் பெயருக்கு பின் இணைத்துக் கொள்கின்றனர். ஒரே பின்பெயர் கொண்டவர்கள் அங்கு சகோதர சகோதரிகளாக கருதப்படுவர்.
பொருளாதார தகவல்கள்
- தென் அமெரிக்காவின் வளர்ந்த, வளம் நிறைந்த நாடாக சிலி விளங்குகிறது.
- லத்தீன் அமெரிக்க நாடுகளுள் மனிதவள மேம்பாடு, போட்டித்தன்மை, தனி நபர் வருமானம் உலகமயமாக்கல், அமைதியின் நிலை, பொருளாதார சுதந்திரம், குறைந்த ஊழல் அளவு போன்ற அனைத்துக் கூறுகளிலும் சிலி முன்னணியில் உள்ளது.
- தென் அமெரிக்க நாடுகளுள் அதிக பொருளாதார சுதந்திரம் பெற்ற நாடு சிலி ஆகும் (உலக அளவில் 7வது இடம்). இதற்கு முக்கிய காரணம் சுதந்திரமாக செயல்படும் திறமான நீதித்துறையும், விவேகமுள்ள பொது நிர்வாகமும் ஆகும்.
- மே 2010-ல் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பில் (OECD) இணைந்த முதல் தென் அமெரிக்க நாடு சிலி ஆகும்.
- 2006-ல் லத்தின் அமெரிக்க நாடுகளுள் அதிகபட்ச பெயரளவு தனிநபர் வருமானம் பெற்ற நாடு சிலி எனும் பெருமையைப் பெற்றது.
- சிலியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20% தாமிர சுரங்கங்களில் இருந்து கிடைக்கப் பெறுகின்றது. 60% மொத்த உற்பத்தியானது ஏற்றுமதியில் இருந்து பெறப்படுகிறது.
- எஸ்காண்டிடா உலகின் மிகப்பெரிய தாமிர சுரங்கமாகும். இது உலக தாமிர உற்பத்தியில் 5% பங்கினை வகிக்கிறது.
- - - - - - - - - - - - -