- இராக் தலைநகர் பாக்தாதிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள் அந்தப் பிராந்தியத்தில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
- தமிழர் வாழ்வோடு இரண்டறக் கலந்தவை கோயில்கள். கோயில் திருவிழாக்கள், வழிபாட்டு முறைகள் போன்றவை தமிழர்களின் வாழ்வியல் கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்தவை. ஆன்மிக நூல்கள் தமிழ் இலக்கியப் பொக்கிஷங்கள். கோயில்களை மையமாகக் கொண்டும் அங்கு வீற்றிருக்கும் இறைவனை முதற் பொருளாகக் கொண்டும் பல இலக்கியங்கள் தமிழ் சான்றோர்களால் படைக்கப்பட்டுள்ளன.
- அந்த வகையில் இறைவனின் அடையாளமாகத் திகழும் கோயில் சிலைகள் போற்றி பாதுகாக்க வேண்டியவை. அடுத்த தலைமுறையினருக்குத் தமிழரின் பெருமையைப் பறைசாற்றும் சின்னங்களாகக் கோயில்களும் சிலைகளும் உள்ளன. பல்வேறு காலகட்டங்களில் மன்னர்களாலும் செல்வந்தர்களாலும் வழங்கப்பட்ட ஐம்பொன் சிலைகள், கடந்த காலத்தில் வெளிநாடுகளுக்கு அலங்கார கலைப்பொருள்கள் என்ற பெயரால் கடத்தப்பட்டுள்ளன.
- உள்ளூரில் சிலைகளை புகைப்படம் எடுத்துத் தருபவர் தொடங்கி, வெளிநாடுகளில் அந்தப் புகைப்படத்தைக் காட்டி பேரம் பேசி சிலைகளைக் கடத்தும் கும்பல் வரை சிலை கடத்தல் தொழில் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இவர்கள் கடத்தும் சிலைகள் வெளிநாடுகளில் பல கோடி ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.
- தமிழகத்தில் கடந்த 2012 முதல் நிகழாண்டு செப்டம்பர் மாதம் வரை 1,539 சிலைகள் மீட்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிகழாண்டில் இதுவரை 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 199 சிலைகளும் கலைப்பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன. இவை அரசால் தெரிவிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள். உண்மையான எண்ணிக்கை சற்று கூடுதலாகவும் இருக்கலாம்.
- தமிழக சிலை கடத்தல் வழக்கில் நிழல் உலக குற்றவாளிகள் சிலர் கைது செய்யப்பட்டிருந்தபோதும் பலர் தலைமறைவு குற்றவாளிகளாக உள்ளனர். கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மட்டுமே கைது செய்யப்படுகின்றனர்.
- இவர்களைப் பின்னிருந்து இயக்குபவர்கள், அதனால் பயன் பெறுபவர்களைப் பற்றிய விவரங்கள் வெளிவருவதில்லை. சமீபத்தில் திருச்சி, தங்கச்சிமடம் கோயிலுக்குச் சொந்தமான கிருஷ்ணர் சிலை, அமெரிக்க அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன அச்சிலையை தற்போது மீட்டெடுக்கும் பணி நடைபெறுகிறது.
- இதேபோல, 1972-இல் திருடப்பட்ட கயத்தாறு கோதண்டராமேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான, 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் சிலை பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஏலமிடுவதற்கு முன் தமிழக அரசின் முயற்சியால் தடுக்கப்பட்டது.
- வெளிநாடுகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் தமிழக கோயில் சிலைகள் புதுச்சேரி, இந்தோ- பிரெஞ்சு கலாசார மையத்தின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. இம்மையத்தின் உதவியால் தற்போது வரை கண்டறியப்பட்ட சிலைகளில் தமிழகத்தைச் சேர்ந்த 69 சிலைகளும் அடங்கும்.
- வெளிநாடுகளில் சிறைவைக்கப்பட்டுள்ள அனைத்துச் சிலைகளையும் மீட்டெடுக்க வேண்டுமெனில், அந்தந்த நாடுகளின் அருங்காட்சியகம் கேட்கும் தொகையை இந்திய அரசு செலுத்த வேண்டியிருக்கும். இருநாட்டு நல்லுறவு அடிப்படையில் சிலைகள் தாமாகவே முன்வந்தும் தரப்படலாம்.
- கோயில் சிலைகளைப் பாதுகாப்பதற்கென்றே திருவாரூர் உள்ளிட்ட சில ஊர்களில் கோயில் சிலை பாதுகாப்பு மையங்கள் உள்ளன. அங்கெல்லாம் ஆயிரக்கணக்கான சிலைகள் உள்ளன. ஆனால் இந்த மையங்களிலும் கடந்த காலங்களில் போலி சிலைகள் வைக்கப்பட்டு உண்மையான சிலைகள் களவாடப்பட்டது மத்திய தொல்லியல் தணிக்கையாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டது.
- கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில், அறநிலையத்துறை சார்பில் சிலைகளைப் பாதுகாக்க ரூ. 157 கோடி மதிப்பில் 1,835 பாதுகாப்பு அறைகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.
- முதல் கட்டமாக சில கோயில்களில் பாதுகாப்பு அறைகள் கட்டும் பணிகளை மேற்கொள்ள தற்போது ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இந்தப் பாதுகாப்பு அறைகள் விரைந்து கட்டப்பட வேண்டும். தவிர இன்னமும் திறக்கப்படாமல் உள்ள 11 சிலை பாதுகாப்பு மையங்களும் திறக்கப்பட வேண்டும். பயன்பாட்டில் இல்லாத சிலைகள் அங்கு பாதுகாக்கப்பட வேண்டும்.
- 1972-இந்திய தொல்லியல் சட்டம், நூறு ஆண்டு பழைமையான சிலைகளை வைத்திருப்பவர்கள் முறைப்படி அவற்றைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்; பழைமையான சிலைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது எனக் கூறுகிறது. சிலைக் கடத்தலைத் தடுக்க அதிகபட்ச தண்டனை விதிப்பதற்கு சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
- பழைமையான கோயில்கள் தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளன. தமிழகத்தில் உள்ள 47,000 கோயில்களில் 8,450 கோயில்கள் பல நூறு ஆண்டுகளுக்கும் முற்பட்டவை. தவிர சிதிலமடைந்த நிலையில் 700-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. சிதிலமடைந்த கோயில்களின் பழங்காலச் சிலைகள் பாதுகாப்பாக உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
- தற்போது சென்னை அரசு அருங்காட்சியகத்தில் மட்டும் 2,500 உலோகச் சிலைகள் உள்ளன. தவிர அனைத்து மாவட்ட துணைக் கருவூலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. எந்தெந்தச் சிலை எந்தெந்தக் கோயிலைச் சேர்ந்தது என்பதையும் ஆவணப்படுத்தி கணினிமயமாக்க வேண்டும்.
- தற்போது தமிழகக் கோயில்களில் உள்ள 3.5 லட்சம் சிலைகள் பதிவு செய்யப்படவில்லை என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கூறியுள்ளார். கோயில் சிலைகளைப் பாதுகாக்கவும் ஆண்டுதோறும் தணிக்கை செய்யவும் வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாதது.
நன்றி: தினமணி (20 – 12 – 2022)