- வருகிற மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் கூட்டணி மட்டும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப்போவதில்லை. அதில், சிவில் சமூகம் எனப்படும் குடிமைச் சமூக அமைப்புகளும் முக்கியப் பங்காற்றவுள்ளன என்பதற்கான காட்சிகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன.
- சிவில் சமூகம் என்பது மக்களின் தேவைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. அரசுசாரா நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், பழங்குடிக் குழுக்கள், அறக்கட்டளைகள் போன்ற பல்வேறு வகையான சமூகங்களையும் குழுக்களையும் உள்ளடக்கியது இது.
- வலிமையற்ற மக்களின் வாழ்வுரிமைக்காக ஜனநாயக வழியில் சமரசமின்றித் தொடர்ந்து போராடுகின்ற சுதந்திர அமைப்புகள் இவை. பல்வேறு சமூகச் சவால்களை எதிர்கொள்வதிலும் சமூக வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் சிவில் சமூகம் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைக் கொண்டுள்ளது.
வரலாற்றுப் பின்னணி
- பண்டைய ரோமானிய அரசியல்வாதியும் எழுத்தாளரும் பேச்சாளருமான சிசரோ (பொ.ஆ.மு. (கி.மு.) 106 முதல் பொ.ஆ.மு. 42 வரை) காலத்திலேயே, ஒன்றுக்கு மேற்பட்ட நகரங்களை உள்ளடக்கிய ஒரு அரசியல் சமூகத்தைக் குறிக்கும் சொல்லாக, ‘சிவில் சமூகம்’ எனும் பதம் பயன்பட்டது. 17ஆம் நூற்றாண்டில் தாமஸ் ஹோப்ஸ், ஜான் லாக் போன்ற ஆங்கிலேயச் சிந்தனையாளர்கள், அரசியல் அதிகாரம் நிறுவப்படுவதற்கு முன்பே சிவில் சமூகம் உருவானது என்கின்றனர்.
- 18ஆம் நூற்றாண்டின் ஸ்காட்லாந்து பொருளாதார நிபுணர் ஆடம் ஸ்மித், ஒரு சுதந்திரமான, ஒழுங்கின் வளர்ச்சியிலிருந்து சிவில் சமூகம் உருவானது என்கிற கருத்தை முன்வைத்தார். 19ஆம் நூற்றாண்டின் ஜெர்மானிய தத்துவஞானி ஹெகல், சிவில் சமூகத்தை அரசியல் சாராத சமூகமாக அடையாளப்படுத்தினார்.
- அலெக்சிஸ் டி டோக்வில்லே தனது ‘டெமாக்ரசி இன் அமெரிக்கா’ நூலில் சிவில்-அரசியல் சமூகங்கள் - சங்கங்களுக்குத் தனித்தனி வித்தியாசங்களை எடுத்துரைத்தார். ஹெகல், சிவில் சமூகத்தை ஒரு தனிப் பகுதியாகக் கருதினார். 1960களில் அரிதாகவே விவாதிக்கப் பட்ட சிவில் சமூகம் பற்றிய கருத்தாக்கம் பின்னர், 1980களில் அரசியல் சிந்தனையில் முக்கியத்துவம் பெற்றது.
- 1989இல் பெர்லின் சுவர் வீழ்ச்சி, 1991இல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி ஆகியவற்றுக்குச் சிவில் சமூகமும் முக்கியக் காரணியாகக் கருதப்பட்டது. 1990களுக்குப் பின்னர், குறிப்பாக, வளர்ந்துவரும் நாடுகள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு சிவில் சமூகம் தீர்வாக இருக்கும் எனப் பலரும் கருதினர்.
- தமிழ்நாட்டில், 2024 மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அரசியல் கட்சிகளுக்கு முன்னரே குடிமைச் சமூக அமைப்புகள் தொடங்கிவிட்டன. அக்டோபர் 17 அன்று மதுரையில் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து நடத்திய ‘மக்கள் அரசியல் மாநாடு’ கவனிக்கத் தக்கதாக அமைந்தது.
- பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாட்டில், சிவில் சமூக அமைப்புகளின் தேவை குறித்துப் பேசப்பட்டது. அரசியல் கட்சிகளின் மெத்தனப்போக்கு குறித்தும் இந்த மாநாட்டில் பேசிய சிலர் விமர்சித்தனர். வரும் தேர்தலை மையப்படுத்தி இந்தியாவில் நடந்த முதல் சிவில் சமூக மாநாடு இது எனலாம்.
ஆர்வம் காட்டாத அரசியல் கட்சிகள்
- இது குறித்து, ‘நாட்டைக் காப்போம்’ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.சே.இராசன் பேசுகையில், “அரசியல் கட்சியினர் இன்னும் குடிமைச் சமூகங்களோடு இணைந்து செயல்பட முன்வரவில்லை, அவர்கள் பார்வையாளர்களாகவே உள்ளனர். இவர்களோடு உரையாடினால் வாக்கு வங்கி உயருமா, சாதி-மத வாக்குகள் கிடைக்குமா எனப் பல்வேறு லாபக் கணக்கைப் போட்டுக் குடிமைச் சமூகத்திலிருந்து விலகியே நிற்கின்றனர்.
- சாதியச் சங்கங்கள், மத அமைப்புகளோடு இவர்களுக்கு இருக்கும் இணக்கம் குடிமைச் சமூகங்களான ஜனநாயக அமைப்புகளோடு இல்லை என்பதுதான் யதார்த்தம். தமிழ்நாட்டின் பெரிய கட்சிகளிடம் புதிய மாற்றுச் சிந்தனை, செயல்பாடுகள் இல்லை. பணம் கொடுத்தால் வாக்கு கிடைக்கும், பணம் இருந்தால் கூட்டம் கூடும் எனக் குடிமக்களைக் குறைத்து மதிப்பிடும் போக்குதான் உள்ளது. இது ஆபத்தானது” என்று குறிப்பிட்டார்.
- “அரசியல் புரிதல்கொண்ட குடிமைச் சமூக அமைப்புகளோடு அரசியல் கட்சிகள் உரையாட வேண்டும். காரணம் எங்களுக்கு அரசியல் சார்ந்த எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. அதேநேரத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கானப் பயணம் எளிதான ஒன்றல்ல. திடமான, அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய மக்கள் சக்தியால்தான் சாத்தியம்” என்றார் சி.சே.இராசன்.
சிவில் சமூகத்தால் என்ன பலன்
- “சிவில் சமூகக் குழுக்களால், அரசு, ஆட்சியாளர், அரசியல் கட்சிகள் ஆகியவற்றுடன் மக்களுக்கு பரஸ்பர உறவுகளை வலுப்படுத்தலாம். அரசின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவது தான் சிவில் சமூகத்தின் அடிப்படையான பணி. அரசாங்கத்தின் கொள்கைகள்-செயல்களைக் கண்காணித்து, அரசாங்கத் தலைவர்களைப் பொறுப்பேற்க வைக்கவும், ஏழைகள்-பின்தங்கியவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் சிவில் சமூகத்தால் முடியும். ஊழலுக்கு எதிரான சட்டங்களும் அமைப்புகளும் இருந்தாலும், சிவில் சமூகத்தின் தீவிரப் பங்கேற்பு இல்லாமல் அவற்றைத் திறம்படச் செயல்படுத்த முடியாது.
- மக்களின் அரசியல் பங்கேற்பை ஊக்குவிப்பதும் சிவில் சமூகத்தின் முக்கியச் செயல்பாடு. பொதுப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பது - தீர்வுகாண்பது, தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவது, ஒருவரோடு ஒருவர் இணைந்து பணியாற்றுவதற்கான திறன்களை வளர்ப்பது போன்றவையும் சிவில் சமூகத்தின் பணிகள். பல்வேறு மதங்கள்-இன அடையாளங்களைச் சேர்ந்தவர்கள், பொதுவான நலன்களின் அடிப்படையில் ஒன்றிணைந்தால், குடிமை வாழ்க்கை நிச்சயம் வளமானதாக மாறும்.
- சகிப்புத்தன்மை, நிதானம், சமரசம், எதிர்க் கருத்துக்களுக்கு மரியாதை போன்ற ஜனநாயகத்தின் மதிப்புகளை வளர்க்க, சிவில் சமூக அமைப்புகள் உதவலாம். புதிய தலைவர்களை அடையாளம் காணவும், அவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் சிவில் சமூகத்தால் இயலும். தேர்தல்கள் நடத்தப்படுவதைக் கண்காணிப்பதில் சிவில் சமூக அமைப்புகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. இந்தப் பணியினைச் சிவில் சமூகக் குழுக்கள் மேற்கொள்ளாத வரை, ஜனநாயகத்தில் நம்பகமான, நியாயமான தேர்தல்களை நடத்துவது மிகவும் கடினம்.
- சிவில் சமூகம் என்றால் அரசை விமர்சிக்க வேண்டும், எதிர்க்க வேண்டும் என்று அர்த்தமல்ல. அனைத்து நிலைகளிலும் அரசைப் பொறுப்பானதாக்கவும் பதிலளிக்கக்கூடியதாகவும் ஆக்க வேண்டும். ஜனநாயக அரசுக்கும் அதன் குடிமக்களுக்கும் இடையிலான நேர்மறையான உறவுக்கான தேடலில் சிவில் சமூகம் ஒரு முக்கியப் பங்காளியாகும்” என்கிறார் சி.சே.இராசன்.
சிவில் சமூகத்தின் முக்கியத்துவம்
- அமெரிக்க அரசியல் விஞ்ஞானி ராபர்ட் டி.புட்னம், தனது ‘Bowling Alone: America's Declining Social Capital’ (1995) என்கிற ஆய்வுக் கட்டுரையில், சிவில் சமூகம் ஜனநாயகத்துக்கு இன்றியமையாதது என்றார். ஏனெனில் அவை கலாச்சார, நம்பிக்கை, மதிப்புகளை உருவாக்குகின்றன. அரசியல்-சமூகத்தை ஒன்றிணைக்க உதவுகின்றன. சிவில் சமூகத்தின் கருத்து ஜனநாயகம்-பிரதிநிதித்துவத்துடன் நெருங்கிய தொடர்புடையது என்கிறார் புட்னம்.
- சிவில் சமூக அமைப்புகள் நம்ப முடியாத அளவுக்கு முக்கியப் பங்குவகித்து வருவதை மறுக்க முடியாது. உதாரணமாக, பேரிடர் கால மீட்புப் பணிகளில் இந்த அமைப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சமூகத்தின் குரலற்ற பிரிவினருக்காகக் குரல் கொடுக்கின்றன. சிவில் உரிமைகள், பாலினச் சமத்துவம் போன்றவற்றுக்காகக் குரல் கொடுத்து அதிகார அமைப்புகளில் மாற்றங்களைக் கொண்டுவர சிவில் சமூகம் முயல்கிறது.
- குடிமை அமைப்புகள் பொதுக் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்லும்போது, அரசியல் கட்சிகளையும் பொறுப்பேற்க வைக்க முடியும். ஆரோக்கியமான அரசியல் சமூகமயமாக்கலுக்குச் சிவில் சமூகங்கள் உதவுகின்றன; சமூக நீதியை ஊக்குவிக்கின்றன. அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றுக்கு அவசியமான ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு வலுவான சிவில் சமூகத்தின் இருப்பு அவசியம்!
நன்றி: இந்து தமிழ் திசை (27 – 10 – 2023)