TNPSC Thervupettagam

சீர்திருத்தச் செம்மல் ஸ்ரீமத் ராமானுஜர்

May 8 , 2019 2028 days 1569 0
  • ஜாதி பேதமற்ற சமுதாயத்தைப் படைத்த நவயுக சிற்பி. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த திருக்கச்சி நம்பியை தனது குருவாக ஏற்றுக் கொண்டவர். உறங்காவில்லி தாசர் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவரை தனது சீடராக ஏற்றுக் கொண்டவர். இப்படி சமூக மாற்றத்துக்கு வித்திட்ட தளராத சிங்கம்தான் ஸ்ரீமத் ராமானுஜர்.
ராமானுஜர்
  • புகழ் பெற்ற வைணவ ஆச்சார்யர்களில் முதன்மையானவர். வைணவர்கள் இன்றும் போற்றி மகிழ்ந்து பாராட்டி கண்களில் ஒற்றிக் கொள்ளும் வேதார்த்த சங்ஹிரகம், வேதாந்த சாரம், வேதாந்த தீபம், கீதாபாஷ்யம், கத்யக்ரயம் ஆகியவற்றை உலகுக்கு வழங்கி, விஷ்ணுதாசர்களின் உள்ளத்தில் நீக்கமற இடம் பிடித்தவர்.
  • திருவாராதனத்தை ஒழுங்குபடுத்தும் நித்யம் என்ற கிரந்தத்தையும் வகுத்துத் தந்தவர். இப்படி எண்ணற்ற காணக்கிடைக்காத காலப்பெட்டகத்தை எக்காலத்துக்கும் பொருந்தும் விதமாக முக்காலமும் உணர்ந்த ராமானுஜர் தந்தார். ஆகவேதான், அடியார்களும், பக்தர்களும் தெய்வம் என்றே இவரைக் கொண்டாடினர்.
  • ஒரு மாபெரும் நாட்டையே பரிபாலனம் செய்வதைப் போல, திருவரங்கனின் சாம்ராஜ்யத்தைப் பரிபாலனம் செய்து வந்தார். அரங்கன் ஆலயத்துக்கு வந்து, கோயிலொழுகு ஏற்படுத்தி, ஒரு மன்னரைப் போல் விளங்கி யதிராஜர் என்ற சிறப்புப் பெயர் பெற்று வாழ்ந்திட்ட மகான்தான் ராமானுஜர்.
சாதிப் பாகுபாடு
  • ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த பிராமணர்கள் மிகுந்த ஆச்சார சீலராக தங்களைக் காட்டிக் கொண்டதை ராமானுஜர் கண்டித்தார். நீங்கள் அத்தனை பேரும் உயர்ந்தவர்களாக இருந்தால் ஸ்ரீரங்கநாதனை நீங்கள் சேவிக்கக் கூடாது. அவருக்கு நிவேதனம் செய்யும் பிரசாதத்தையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஏனென்றால், தீண்டத்தகாதவரான திருப்பாணாழ்வாரை தம்முடன் இணைத்துக் கொண்டதால், கருணையே வடிவான அரங்கத்துநாதனும், தீட்டுப் பட்டவர்தானே! ஆகவே, அவர் அருகே நீங்கள் செல்லாதீர்கள் என்று ஜாதி பாகுபாடற்ற சமுதாயத்தைப் படைத்த ஒரு மறுமலர்ச்சியின் மன்றம் என்றே சொல்லலாம்.
  • தென்றலாய் உலவி வந்த ஆன்மிகவாதிகள், பீடாதிபதிகள், மடாதிபதிகளின் மத்தியில் புயலாய்ப் பிறந்து வந்த புரட்சி கீதம் இசைத்து வந்த பூவுலகின் பாவலன் மற்றும் காவலன் ஸ்ரீமத் ராமானுஜர். ஜாதி இரண்டொழிய வேறில்லை என்று சொன்னாரே ஒளவை. அதேபோன்று ஜாதி வித்தியாசங்கள் பாராமல், அனைவரும் சமம் என்று அரவணைத்துக் கொண்ட நல் உள்ளம் படைத்த ராமானுஜரை, ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறது இந்தச் சமூகம். ஆகவேதான், உலகில் இணையற்ற ஒரு மதத்தை ஸ்தாபித்து அருளிய ராமானுஜரின் புகழ் நாடு முழுவதும் பரவியது. வைணவமும் பரவித் திளைத்தது.
  • பெற்ற தாயினும் ஆயின செய்யும்; நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் என்று கூறுவார் திருமங்கையாழ்வார்.
  • அத்தகைய நாராயண மந்திரத்தின் பொருள் அறிவது குறித்து தீராத வேட்கை உடையவராகத் திகழ்ந்தார் ராமானுஜர். இதற்காக ஆளவந்தாரின் சீடரான திருக்கோஷ்டியூர் நம்பியிடம் சரணடைந்தார். ஆனால், ராமானுஜரின் ஆர்வத்தைப் பரிசோதிக்க விரும்பி, உடனடியாக மந்திரத்தின் பொருள் கூற நம்பி மறுத்து விட்டார். மந்திரம் என்பது மறைபொருள்.
இறைவன்
  • மறைபொருளில் இறைவன் வசிக்கிறான். இது தத்துவார்த்தத்தின் நிலை. இது தவயோகத்தின் பலன். மேலும், மந்திரத்தை நாம் மந்தனமாக (ரகசியம்) வைத்திருக்க வேண்டும் என்று அந்த மந்திரத்தைக் கூற மறுத்து விட்டார்.
  • திருவரங்கம் திரும்பிய ராமானுஜர், சற்றும் மனம் தளராது 17 முறை தொடர்ந்து திருவரங்கத்திற்கும், திருக்கோஷ்டியூருக்கும் நடையாய் நடந்தார். நாராயணனின் மந்திரத்தின் மறைபொருள் என்ன என்பதை உணர்ந்தே தீருவது என்று உள்ளத்தில் உறுதி கொண்டார். தொடர்ந்து யாத்திரை சென்றதன் பலனாக 18-ஆவது சந்திப்பில், ஸ்ரீமத் ராமானுஜரின் உள்ள உறுதியை அறிந்து அவருக்கு விடை கிடைத்தது.
  • ராமானுஜர் மீது இரக்கப்பட்டு திருமந்திரத்துக்கு விளக்கம் சொன்னார். அத்துடன் இதை வேறு யாருக்கும் வெளியிடக் கூடாது என்ற நிபந்தனையும் விதித்தார். குருவின் கருத்தைப் புறக்கணித்த ராமானுஜர், நேராக திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் மீதேறி, திருமந்திரத்தின் பொருளை இந்த உலகமே அறியும்படி உரக்க உரைத்தார்.
  • அது ஊருக்கே கேட்டது. இதனால் ஆத்திரமடைந்த திருக்கோஷ்டியூர் நம்பி, ராமானுஜரிடம் விளக்கம் கேட்டார். இந்த மந்திரத்தை அறிந்து கொள்வதால் லட்சக்கணக்கானோர் வைகுண்டம் செல்ல வாய்ப்பு கிடைக்குமானால், அதைவிட ஆனந்தம் எனக்கு வேறொன்றுமில்லை. அதுவே எனக்கு ஒரு பரமானந்தம், ஆனந்தம், பேரானந்தம், ரங்காநந்தம் என்றார். இந்த ரகசிய மந்திரத்தைச் சொன்ன காரணத்தினால், நான் நரகம் செல்ல வேண்டும் என்று பணிக்கப்பட்டால், அது குறித்து எனக்குக் கவலையில்லை.
  • நான் நரகத்துக்குப் போவதன் மூலம் பல லட்சம் பேர் வைகுண்டம்செல்ல வாய்ப்பு ஏற்படுமேயானால்,  அதுவே என்  பிறப்பின் அர்த்தமாகும் என்று உரைத்த சமூகச் சீர்திருத்த ஞானியாய், பரம்பொருளாய் நின்ற ஸ்ரீமத் ராமானுஜருக்கு ஆயிரம் கோடி சமர்ப்பணங்கள்.
ஆழ்வார்கள்
  • ஆழ்வார்களின் தமிழ்ப் பாசுரங்களை வடமொழி வேதங்களுக்கு இணையாகக் கருதும்படி செய்திட்ட பெருமை இவரையே சாரும். பக்தி இலக்கிய காலகட்டங்களில் பாசுரங்கள் தமிழைச் செழுமை பெறச் செய்தன. சம்ஸ்கிருதத்திலும், தமிழிலும் தேர்ச்சி பெற்ற மதிநுட்பம், வினைத்திட்பம் படைத்த பண்டிதர்களை ஒன்றுதிரட்டி வேத உபநிடதங்கள் குறித்தும், பிரபந்தம் குறித்தும் விவாதங்கள் செய்து, தொடர் ஆராய்ச்சிகளின் மூலம் பல்வேறு கருத்துகளை உலகுக்கு வெளிக்கொண்டு வந்தார். அவற்றில் சிலவற்றுக்கு அவரே உரைகளும் செய்தருளினார்.
  • பிரம்மசூத்திரத்துக்கும், கீதைக்கும் அவர் செய்த உரைகள் புகழடைந்த ஒன்றாகும். உலகம் அளந்த ஓங்கு புகழ் பெருமாளின் பக்தன் என்று ஒருபுறமும், அடித்தட்டு விளிம்புநிலை மக்களின் கண்ணீரைத் துடைத்த கரங்களுக்குச் சொந்தக்காரர் எமது ராமானுஜர் என மறுபுறமும் ஜாதிப் பாகுபாடற்ற சமத்துவத்தை மலரச் செய்து, வீதிகளிலும் வீசச் செய்த தெம்மாங்குத் தென்றல் அவர்.
  • ஸ்ரீமத் ராமானுஜரின் நூற்றந்தாதி, திருவரங்கத்து அமுதனார் என்று ஒரு சீடரால் உருவாக்கப்பட்டு, அதுவும் ராமானுஜருடைய முன்னிலையிலேயே அரங்கேற்றப்பட்டு, அவருடைய அருளாசியுடன், நாலாயிர திவ்யப்பிரபந்ததத்தின் முடிவில் சேர்க்கப்பட்டது. வைணவ சம்பிரதாயம் நீடித்து வளர வேண்டியதற்கான சிறந்த ஏற்பாடுகளை ஸ்ரீமத் ராமானுஜர் செய்தார்.
  • நாராயணனின் சேவைக்கென 74 தலைவர்களை நியமித்து, பக்திமார்க்கமான பணிகளில் தன்னை கரைத்துக் கொள்ள அந்தக் கடமைகளையெல்லாம் செவ்வனே செய்து முடித்தார். இவர்களை 74 சிம்மாசனாதிபதிகள் என்றும் அழைத்தனர். அத்வைதம் என்றால் இரண்டற்றது என்று பொருள்.
  • இது பிரம்ம சூத்திரத்தில் உள்ள அபேத சுருதி என்னும் வாக்கியங்களின் மூலம் விளக்கப்படும் தத்துவமாகும். இந்தத் தத்துவம் ஸ்ரீ ஆதிசங்கரரால் எடுத்தாளப்பட்டது. அதே போன்று, பிரம்ம சூத்திரத்திலுள்ள பேத சுருதி வாக்கியங்களின் மூலம் த்வைதம் ( இரண்டானது ) என்ற தத்துவம் உருவாக்கப்பட்டது. இதனை வலியுறுத்தியவர் ஸ்ரீமத்வாசாரியார் ஆவார். ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்பை இரண்டு விதமாக இந்தத் தத்துவங்கள் விளக்குகின்றன. ஆனால், பேத சுருதி, அபேத சுருதி இரண்டையும் தவிர்த்த கடக சுருதி வாக்கியங்களின் அடிப்படையில் விசிஷ்டாத்வைதம் (விசேஷமான - சிறப்பான - அத்வைதம்) என்ற மூன்றாவது தத்துவத்தைத் தெள்ளத் தெளிவாக விளக்கியதுடன், எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனிடம் சரணாகதி அடைவதையே மோட்சம் அடைவதற்கான எளிய உபாயமாக ஸ்ரீமத்ராமானுஜர் உபதேசித்தார்.
  • தொண்டர்களுக்கு அரசரான இளையபெருமாளின் அவதாரம் என்று தனது சீடர்களால் கொண்டாடப் பெற்றவரும், ஆதியும், அந்தமும் ஆன பரம்பொருளை பெருங்கருணையோடும், அன்பு பொருந்திய உள்ளத்தோடும், அளவற்ற அறிவாற்றலோடும் அணுகிய ஸ்ரீமத் ராமானுஜர், சங்கர பகவத் பாதரின் அசைக்க முடியாத அத்வைதக் கொள்கைகளை மறுப்பதற்கு, வரிசை வரிசையாக மிகவும் நுட்பமான ஆழ்ந்த நுண்மான் நுழைபுலத்தோடு, பெரிதும் நம்பத்தகுந்த சான்றுகளை உறுதிபடத் தந்தார்.
  • பல்வேறு நூற்றாண்டில் வாழ்ந்திட்ட ஆத்திகவாதிகளும், எதிர்க்கருத்து சொன்ன நாத்திகவாதிகளும் தத்தமது வாதங்களை எடுத்து வைத்த நிலையிலும், மனித சமுதாயத்தின் சமத்துவத்தை மலரச் செய்த சமதர்ம ஞானி ராமானுஜர். உயிர்களிடத்தின்பால் அன்பும், பெருங்கருணையும் வேண்டும் என்று உணர்த்தினார். தமது உடலைக் காப்பாற்றுவதற்கு, பிற உயிர்களைக் கொன்று உண்பது இழிவான பெரும்பாவம் அல்லவா என்பதை உணர்த்துகிற உள்ளம், தூய தாவர உணவை உண்ண வேண்டும் என்று உரைக்கிற உன்னத கருணை உள்ளம் ராமானுஜரின் உள்ளம் என்பதை அவரது அவதார மேன்மை மேடை போட்டுக் காட்டுகிறது.
  • ஏழை, பணக்காரர், கற்றவர், கல்லாதவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடற்ற சமுதாயம் மலர வேண்டும் எனப் பாடுபட்ட  ஸ்ரீமத் ராமானுஜர் நிலையற்ற, அற்பமான பலன்களைத் தராத, நிலையான பெரும் பயன்களைத் தரும் குணங்களையே வலியுறுத்தினார்.

நன்றி: தினமணி

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்