TNPSC Thervupettagam

சுகாதாரத் துறையின் செயல்பாடு நலமாக இருக்கிறதா

May 7 , 2023 426 days 257 0
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சுகாதாரத் துறை கொண்டுவந்த ‘இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48 திட்டம்’, ‘மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்’ போன்ற திட்டங்கள் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதே வேளை, சுகாதாரத் துறை சார்ந்த பல வாக்குறுதிகள், எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

குலைந்த நம்பிக்கை

  • பணியில் சேர்ந்த 13ஆம் ஆண்டில் ஊதியப்பட்டை நான்கை வழங்க வேண்டும், காலமுறைப் பதவி உயர்வு வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த அதிமுக ஆட்சியின்போது, அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு போராடியது.
  • எதிர்க்கட்சி எனும் முறையில் அக்கோரிக்கைகளை ஆதரித்த திமுக, தாங்கள் ஆட்சிக்குவந்தால் அவை நிறைவேற்றப்படும் என்றது. அரசுடைமை ஆக்கப்பட்ட சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில், ஏற்கெனவே படித்துவரும் மாணவர்களின் கல்விக் கட்டணம் குறைக்கப்படும்; மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான நிதி ஒதுக்கீடு மூன்று மடங்காக உயர்த்தப்படும் என்றும் அக்கட்சி உறுதியளித்திருந்தது. ஆனால், அந்த வாக்குறுதிகள் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.

பணிநீக்கமும் ஊதியக் குறைப்பும்

  • தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுக்குப் பணிநிரந்தரம் வழங்கப்படும் என, திமுக தேர்தல் அறிக்கை உறுதியளித்தது. ஆனால், அதற்கு நேர்மாறாக, மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றிபெற்று, தரவரிசை - இடஒதுக்கீடு அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்ட மருத்துவர்களும் செவிலியர்களும்கூட பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
  • ஆயிரக்கணக்கான மினி கிளினிக் மருத்துவர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களும் வேலையிழந்தனர். எம்.ஆர்.பி. மூலம் 160 டயாலிசிஸ் டெக்னீசியன்கள், 2021 நவம்பரில் நியமிக்கப்பட்டனர். கரோனா காலத்தில் அர்ப்பணிப்போடு பணிபுரிந்த அவர்களுக்கு மாதத் தொகுப்பூதியமாக ரூ.20,000 வழங்கப்பட்டது. ஆனால், அவர்களைப் பணிநிரந்தரம் செய்வதற்குப் பதில், பணிநீக்கம் செய்தது அரசு. மீண்டும் ஒப்பந்த முறையில் அவர்களைப் பணியமர்த்திய அரசு, வெறும் ரூ.8,000 மட்டுமே தொகுப்பூதியமாக வழங்குகிறது.
  • ரேடியோ தெரபிஸ்ட்டுகளும் இதர ஊழியர்களும் இது போன்ற ஊதியக் குறைப்புக்கு உள்ளாகியுள்ளனர். சுகாதார ஆய்வாளர்கள் 2,000 பேர், ரூ.20,000 தொகுப்பூதியத்தில் பணியாற்றிவந்தனர். அவர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டு, ரூ.11,000 தொகுப்பூதியத்தில் மீண்டும்ஒப்பந்தப் பணியில் அமர்த்தப்பட்டனர். இதில் இடஒதுக்கீடும் பின்பற்றப்படவில்லை.
  • ஆஷா பணியாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம்கூட வழங்கப்படவில்லை. பல் மருத்துவர்கள், ஆயுஷ் மருத்துவர்கள், செவிலியர்கள், பன்னோக்கு மருத்துவப் பணியாளர்கள், நடமாடும் மருத்துவமனை ஓட்டுநர்கள், மருந்தாளுநர்கள் போன்றோர், குறைந்த தொகுப்பூதியத்தில் நீண்டகாலமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு விடியல் கிட்டவில்லை.

தூய்மைப் பணியாளர்களின் துயரம்

  • ஆரம்ப சுகாதார நிலையங்களில், 3,140 தூய்மைப் பணியாளர்கள் ஆர்.சி.எச்.திட்டத்தின்கீழ் 2005ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றிவருகிறார்கள். இவர்களில் பலர் அடித்தட்டு சாதிகளைச் சேர்ந்த பெண்கள். இவர்களுக்கு மாதத் தொகுப்பூதியமாக வெறும் ரூ.1,500 வழங்கப்படுகிறது. எந்த விடுப்பும் இன்றி நாள்தோறும் 12 மணி நேரம் வேலைசெய்கின்றனர்.
  • மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி 2010இல் வெளியிட்ட அரசாணையின் அடிப்படையில் இவர்களுக்குப் பணிநிரந்தரம் இன்னும் வழங்கப்படவில்லை. குறைந்தபட்ச தினக்கூலி வழங்க வேண்டும் என்ற 2017ஆம் ஆண்டு அரசாணையும் நிறைவேற்றப்படவில்லை. இவர்கள் கடும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகியுள்ளனர்.

வேலையின்மையைப் போக்கவில்லை

  • தமிழ்நாட்டில் 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான எம்.ஆர்.பி. தேர்வை 25 ஆயிரம் மருத்துவர்கள் அண்மையில் எழுதியுள்ளனர். இக்கடும் போட்டி, மருத்துவர்களின் வேலையின்மைக் கொடுமையை உணர்த்துகிறது. ஒருபக்கம் வேலையின்மை; மறுபக்கம் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் இல்லை.
  • இந்த முரணுக்கு அரசே காரணம். இந்நிலையில், முதுநிலை மருத்துவ மாணவர்கள், மூன்று மாத காலம் மாவட்ட மருத்துவமனைகளில் கட்டாயச் சேவை செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டத்தை, தமிழ்நாடு அரசும் நடைமுறைப்படுத்துகிறது. இது வேலையின்மையை மேலும் அதிகரிக்கும். செவிலியர்கள், மருந்தாளுநர்கள், அறுவை அரங்க உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் மத்தியிலும் வேலையின்மை கடுமையாக அதிகரித்துள்ளது.
  • ஒப்பந்த, தற்காலிகப் பணிநியமனங்களில் இந்தஅரசு ஈடுபடாது” என்ற மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. குறைவான எண்ணிக்கையில் நடக்கும் பணிநியமனங்களும்கூட ஒப்பந்த - தற்காலிக அடிப்படையில் குறைந்த ஊதியத்திலேயே நடைபெற்றுவருகின்றன.

மருத்துவக் கல்விப் பிரச்சினைகள்

  • அகில இந்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீட்டைப் பெற்றதும், அரசு மருத்துவர்களுக்கு உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளிலும் இடஒதுக்கீட்டைப் பெற்றதும் வரவேற்புக்கு உரியவை. ஆனால், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதில் திமுக அரசு இதுவரை வெற்றிபெறவில்லை.
  • நெக்ஸ்ட்’ என்ற தேசிய தகுதித் தேர்வை முதுநிலை மருத்துவப் படிப்புக்கு மத்திய அரசு திணிக்கிறது. மாநில மருத்துவப் பல்கலைக்கழகங்களின் உரிமைகளைப் பறிக்கும் இத்தேர்வைத் தடுக்க திமுக அரசு முயலவில்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையையும் தடுக்கவில்லை.

தடுமாறும் தமிழகம்

  • தமிழகத்தில் பேறுகாலக் கர்ப்பிணிகளின் இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் தொடர்ந்து சுணக்கம் நீடிக்கிறது. மகாராஷ்டிரம், தெலங்கானா, ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் இதில் சிறப்பாகச் செயல்பட்டுத் தமிழகத்தை இரண்டாம் இடத்திலிருந்து, ஐந்தாம் இடத்துக்குத் தள்ளிவிட்டன.
  • ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாதுகாப்பற்ற சூழலில் பிரசவிக்க ஊக்குவிப்பது, கர்ப்பிணிகளிடையே நிலவும் ரத்தசோகை பிரச்சினையைக் குறைக்காதது, ‘சிசேரியன்’ அறுவைசிகிச்சைகளைக் குறைக்க வேண்டுமென வற்புறுத்துவது போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம். திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டுக்கொண்டு, மருத்துவக் காப்பீட்டை அடிப்படையாகக் கொண்டதாக மருத்துவத் துறையை மாற்றிவருகின்றன.
  • இது இலவச சேவையை ஒழிப்பதோடு, ஊழல் முறைகேடுகளை அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும். இந்த ஆண்டு, இத்திட்டத்துக்காக ரூ.1,200 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது தனியார் மருத்துவமனைகள், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களின் லாபத்தையே அதிகரிக்கும். அந்த வகையில் உலக வங்கி, மத்திய அரசின் வணிகமயமாக்கல் கொள்கையைத் தமிழ்நாடு அரசும் நடைமுறைப்படுத்துகிறது.

பறிக்கப்படும் மாநில உரிமைகள்

  • தேசிய சுகாதார இயக்கம் மூலம் மருத்துவத் துறையில் மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மருத்துவக் கல்வியிலும், சேவையிலும் இந்தி, சம்ஸ்கிருதம், இந்துத்துவக் கருத்துகள் திணிக்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு அவற்றை எதிர்க்கவில்லை.
  • பாரம்பரிய மருத்துவ முறைகளை ஊக்கப்படுத்துதல் என்ற பெயரில், மத்திய அரசுடன் போட்டி போட்டுக்கொண்டு, அறிவியல் அடிப்படையிலான நவீன மருத்துவத்தின் மீதான மக்கள் நம்பிக்கையைத் தமிழ்நாடு அரசு நீர்த்துப்போகச் செய்துவருகிறது. மருத்துவ அறிவியலை அடையாள அரசியல் மோதல்களுக்கான ஆயுதமாக்குவதே இதற்குக் காரணம். இது மக்கள் நலனுக்கும் மருத்துவ அறிவியல் வளர்ச்சிக்கும் எதிரானது.

என்ன செய்ய வேண்டும்?

  • நோய்த் தடுப்புத் துறைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். பன்னோக்கு உயர் சிறப்புமருத்துவமனைகள், சென்னையைச் சுற்றியே உருவாக்கப்படுகின்றன. மாறாக, அவற்றைத் தெற்கு மாவட்டங்கள் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்க வேண்டும். மருத்துவக் கல்வித் தரத்திலும், மருத்துவ ஆராய்ச்சிகளிலும் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகளிலும் தமிழ்நாடு பின்தங்கிவிட்டது.
  • இதைச் சரிசெய்ய வேண்டும். முப்பரிமாண அச்சிடுதல், செயற்கை நுண்ணறிவு, மனித இயந்திர அறுவைத் தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றை அரசு மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்த வேண்டும். சுகாதார உரிமைச் சட்டத்தை (Right to Health Act) கொண்டுவர வேண்டும். அப்போதுதான் அரசின் செயல்பாடுகள் முழுமை பெறும்!

நன்றி: தி இந்து (07 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்